நிமித்தம் விழா

நேற்று எனது புதிய நாவல் நிமித்தம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, விழாவில் தோழர்  டி. லட்சுமணன் நாவலை வெளியிடதென்னக ரயில்வே உயர்அதிகாரி இளங்கோவன் அதைப்பெற்றுக் கொண்டார், எழுத்தாளர் சா. கந்தசாமி சிறப்புரை ஆற்றினார்,

மாற்றுதிறனாளிகள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவராகச் செயல்பட்டு வரும் தோழர் டி.லட்சுமணன் தனது களஅனுபவங்களின் பின்புலத்தைக் கொண்டு நாவலை வாசித்து ஆற்றிய உரை முக்கியமானது, எளிமையும் நேர்மையும் கொண்ட அவரது உரை மிகுந்த வரவேற்பை பெற்றது

தென்னக ரயில்வே உயரதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் பெரியார் சிந்தனைமரபில் உருவானர், சிறந்த சமூக ஆய்வாளர், இலக்கிய வாசகர், அவர் நாவல் குறித்த தனது வாசிப்பு அனுபவங்களைச் சிறப்பாகப் பேசினார்,

என் அன்பிற்குரிய எழுத்தாளர் சா. கந்தசாமி நாவலை முன்வைத்து உரையாற்றும் போது நிமித்தம் என்ற தலைப்புத் தொல்காப்பியத்தில் எப்படி இடம்பெற்றுள்ளது எனத் துவங்கி சமகால அரசியல் நிகழ்வுகள் வரை பல்வேறு முக்கிய அம்சங்களை எடுத்துக்காட்டிப் பேசினார்

நிகழ்வின் துவக்கத்தில் நாவலில் இருந்து சில பக்கங்களை மிகச்சிறப்பாக நடித்துக் காட்டினார் தியேட்டர் லேப் குழுவினை சேர்ந்த ப்ரியுதிக் ஷா,

நாவல் குறித்த விவாத அரங்கினை ஒருங்கிணைத்து சூடான விவாதங்களை நெல்சன் சேவியர் உருவாக்கினார், இதில் நானும் மனுஷ்யபுத்திரனும் கலந்து கொண்டோம், வெளியீட்டுவிழாவில் நாவல் குறித்து வாசகர் முன்னிலையில் இது போன்ற ஒரு பொதுவிவாதம் நடைபெறுவது இதுவே முதன்முறை.

நிகழ்வினை கவிஞர் சுகிதா நேர்த்தியாக ஒருங்கிணைத்தார், வரவேற்புரையில் நாவலை அறிமுகம் செய்து உணர்ச்சிபூர்வமாகக் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அரங்கு நிரம்பிய கூட்டம், நிறைய இளைஞர்கள், அதிலும் குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் வந்திருந்தது சந்தோஷம் தருவதாக இருந்தது.

நாவலை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கும் இதற்குக் காரணமாக இருந்த செல்விக்கும் எனது மனம் நிரம்பிய நன்றி, சிங்கப்பூரில் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த நண்பர் பரணிக்கு அன்பும் நன்றியும்,

என் அழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும் மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

0Shares
0