நோய்மையை விசாரிக்கும் துயில்


நோய்மையை விசாரிக்கும் துயில்


ந.முருகேசபாண்டியன்
மதங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு காலந்தோறும் தொடர்கின்றது. உடல்ரீதியிலும் மனரீதியிலும் வாடி வதங்கிடும் மனிதனுக்கு ஆறுதல் அளிக்க கடவுள் தேவைப்படுகிறார். உடல்கள் அனுபவிக்கும் இன்பங்கள் கீழானவை என்ற கருத்தை வலியுறுத்துகிறது மதம்.
இந்நிலையில் ஏதோவொரு காரணத்தால் உடல் நலிவடைந்து நோய்க்குள்ளாகும்போது, கடவுள் தந்த தண்டனையாகக் கருதுவது வழக்கினில் உள்ளது. தங்கள் நோயைப் போக்க கடவுளிடம் மன்றாடுவது உலகமெங்கும் நடைபெறுகிறது. இத்தகைய துயில்தரு மாதா ஆலயம் உள்ள தெக்கோடு கிராமத்தில் ஆனி மாதம் திருவிழா நடைபெறுகின்றது. அங்குள்ள ஊசிக்கிணற்றில் குளித்தால் எல்லா நோய்களும் தீரும் என நோயாளிகள் கூட்டமாகச் செல்வதுடன் எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவல் தொடங்குகின்றது.
துயில்தரு மாதா தேவாலயத்தை முன்வைத்து 1873-1982 காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், முடிவற்ற கதைகளின் தொகுப்பாக நாவலில் இடம்பெற்றுள்ளன.அமெரிக்கா விலிருந்து இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த மருத்துவரான ஏலன்பவர் எனும் பெண் 1873 –இல் தமிழகத்திலுள்ள தெக்கோடு கிராமத்திற்கு வந்துசேர்கின்றார்.
நோய் என்பது இறைவன் தந்த சாபமெனப் போதிக்கும் கிறிஸ்தவ பாதிரியார்கள், நோயைப்போக்கிட மருத்துவர் ஏலன்பவரை அனுப்புவது முரணானது. மதம்-நோய்-கடவுள் என்ற இணைப்பினில் ஆண்டவன் கிருபைதான் குணமடைவதா? என்ற எளிய கேள்வியை ஏலன்பவர் முன்வைக்கின்றார். மருத்துவத்துடன் கல்வியையும் தெக்கோட்டைச் சுற்றியுள்ளவர்களுக்கு அளிக்க விரும்பித் தொண்டாற்றிய ஏலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். எங்கிருந்தோ தமிழகம் வந்து சமூக அக்கறையுடன் செயல்பட்டவர் ஏன் துர்மரணம் அடைந்தார்?
ஏலனின் மருத்துவ உதவியாளர் சீயாளி கன்னியாஸ்திரியாகி செய்யும் சேவையினால் ஏற்கனவே அங்கிருந்த மாதா கோவில் பிரபலமடைகின்றது.மாதாவின் கருணையினால், அங்குவந்து ஜெபிக்கும் ரோகிகளின் பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் நோய்களும் குணமடைகின்றன என்ற நம்பிக்கை பரவுகிறது. போக்குவரத்து வசதி பெருகியபின்னரும் நடந்து செல்வது புனிதமானது என்ற நம்பிக்கையில் நோயாளிகள் மாதா கோவிலுக்கு நடந்துவருகின்றனர்.வேடிக்கை காட்டுவோர்,பொருட்கள் விற்போர் எனப் பலரும் திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.
போகும் வழியிலுள்ள எட்டூர் மண்டபத்தில் ஒர் இரவு தங்கிச் செல்கின்றனர் ரோகிகளுக்கு அங்கிருக்கும் கொண்டலு அக்கா உணவு வழங்குவதுடன் ஆறுதலாகப் பேசுகின்றார். இரவுவேளையில் நோய்மைக்குள்ளானவர்கள் தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.பல்வேறு மருத்துவமுறைகள், மருந்துகளினால் குணமடையாதவன் மனவேதனைக்குள்ளாகித் தீராத நோயாளியாகிறான்; மரணம் நிழல்போலத் தொடர்வதாக நம்புகிறான்.
இவற்றின் மூலம் ராமகிருஷ்ணன் நோய் பற்றிய புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளார். உடலின் உபாதைகள் ஒருபுறம் எனில், குற்றமனம் உருவாக்கும் குமைச்சல்கள் இன்னொரு புறம். அரவணைப்பு, சத்தான உணவு, சூழல் போன்றவை நோயைத் தீர்க்க அவசியமானவை என்பது சம்பவங்களின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது .
உடலே துயரமான நோயாளிகள் ஒருபுறம் எனில் உடலையே காட்சிப்பொருளாக்குகின்ற சின்னராணி-அழகர்இன்னொருபுறம்.திருவிழாவின்
போது திடலில் சின்னராணிக்குக் கடற்கன்னிபோல ஒப்பனையிட்டுக் கூண்டுக்குள் வைத்துக் காட்சி நடத்தும் அழகரின் இளவயது வாழ்க்கை துயரமானது. தந்தையின் அடி தாங்காமல் வீட்டைவிட்டுக் கிளம்பும் அழகர் ஹோட்டலில் எடுபிடி வேலை, பின்னர் விபசார விடுதியில் குற்றேவல் பணி. உடலைத் துச்சமாகக் கருதும் பெண்கள் மூலம் கிடைத்த பாலியல் உள்ளிட்டஅனுபவங்கள் அவனது அகத்தைச் சிதைக்கின்றன.
மதிப்பீடுகளின் சிதைவில் போதைப் பழக்கத்திற்குள்ளாகும் அழகர் எப்படியும் வாழலாம் என்ற மனநிலையை அடைகின்றான்.குழந்தையும் மனைவியும் பசியால் வாடும்போதுகூடச் சுயநலத்துடன் புகைக்கப் பீடி கிடைக்குமா எனத் தேடியலையும் அழகரை நம்பிவாழும் சின்னராணிக்கும் வேறு போக்கிடமெதுவுமில்லை.
பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரிந்துள்ள நாவலின் மூலம் ராமகிருஷ்ணன் தேர்ந்த கதைசொல்லியாக வெளிப்பட்டுள்ளார்.ஏகப்பட்ட கதைகளின் வழியே துயில் நாவல் நிரம்பி வழிகின்றது. டெய்லர் ராஜப்பா தொடங்கிப் பல்வேறு நபர்கள் தம்மளவில் முழுமை பெற்றவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான உடலில் திடீரென ஏற்படும் நோயினால் மனதில் ஏற்படும் விளைவுகள் முக்கியமானவை.நோயினை முன்வைத்துத் துயில் நாவல் உருவாக்கும் பேச்சுகள் செவ்வியல்தன்மையுடன் விரிந்துள்ளன.
துயில் (நாவல்). எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், சென்னை.
நன்றி  : http://tamil.thehindu.com/general/literature/article5640739.ece
Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: