நடையால் வென்ற உலகம


இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார்.

முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து கூர்ந்த அவதானிப்பும் எதிர்வினைகளையும் செய்து வரும் தீவிரமான இளைஞர். இவரது கட்டுரைகள் உயிர்மை, தலித் முரசு, தமிழினி உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அன்றைய பயணத்தில் படித்த புத்தகங்கள், பயணங்களில் கண்டவை, நாட்டார்தெய்வங்கள் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். நீங்கள் சதீஷ்குமாரின் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். அவர் நாடோடியாக உலகை சுற்றிவந்தவர் என்று சிறிய அறிமுகம் ஒன்றை தந்தார் முத்துகிருஷ்ணன். பயணத்திலிருந்து வீடு திரும்பிய பிறகும் சதீஷ்குமாரின் பெயர் நினைவில் ஆழமாகப் பதிந்து போயிருந்தது.

தற்செயலாக டெல்லியின் சாலையோரப் புத்தக கடையில் அந்தப் புத்தகம் கைக்கு கிடைத்தது. சென்னை திரும்புவதற்காக டெல்லி ரயிலில் ஏறி உட்கார்ந்தவுடன் படிக்கத் துவங்கினேன். பின்னிரவு வரை படித்து மறுநாள் முழுவதும் வாசித்து முடிக்கும் போது என்னால் நம்பவே முடியவில்லை.

இது நிஜமாக ஒரு மனிதன் மேற்கொண்ட பயணம் தானா இல்லை, ஏதாவது கற்பனைக் கதையா? எப்படி சாத்தியமானது. எது ஒரு மனிதனை இப்படி உந்திக் கொண்டு சென்றிருக்கிறது என்று புத்தகத்தின் முகப்பில் இருந்த சதீஷ்குமாரின் புகைப்படத்தை பார்த்தபடியே இருந்தேன்.

புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தவை அத்தனையும் நிஜம். ஒரு மனிதன் தேடி அலைந்து கண்ட தன் வாழ்நாளின் அனுபவத்தை எழுதியிருக்கிறான். எத்தனை பகலிரவுகள், எவ்வளவு மனிதர்கள். எத்தனை நிலப்பரப்புகளை அவன் கால்கள் கடந்து போயிருக்கின்றன. அவன் கண்களில் எத்தனை சூரிய உதயம் தோன்றி மறைந்திருக்கின்றது. கண்டம் விட்டு கண்டம் போகும் பறவை அதிசயமானது. ஆனால் அது தான் வழியில் கண்ட எதையும் எவரிடமும் சொல்வதில்லை. ஆனால் சதீஷ்குமார் தான் கண்ட உலகின் காட்சிகளை சித்திரம் போல பதிவு செய்திருக்கிறார்.

புத்தகத்திலிருந்து விடுபட முடியாமல் மூடி வைத்துவிட்டு வெளியே பார்க்கத் துவங்கினேன். கண் களை விட்டு மறைந்து போய் கொண்டிருக்கும் கடுகு பூத்த நிலப்பரப்பையும் தொலை தூர ஆகாசத்தையும் பார்க்கும் போது மனதில் விவரிக்கமுடியாத ஏக்கமும், வியப்பும் உண்டாகியது. பின்னோக்கி ஒடிக்கொண்டிருக்கும் மரங்கள் பச்சை தெறித்து மறைந்தன. சதீஷ்குமாரின் புத்தகம் மூடி வைக்கபட்டிருந்த போதும் மனதில் புரண்டு கொண்டேயிருந்தது.

சதீஷ்குமார், ராஜஸ்தானில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் சமணக்குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான குடும்பம். சமணபற்று அதிகம் கொண்டவர்கள். அவரது அம்மா ஒரு நாள் சாப்பிடுவதும் மறுநாள் பட்டினியாக இருப்பதுமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார். சாப்பிடும் நேரங்களில் கூட கீரை, பால், போன்ற இயற்கையான உணவுகளை மட்டுமே சாப்பிடக்கூடியவர்.

எளிமையான உடை, தேவைக்கும் குறைவான உணவு, கோபம், ஆத்திரம், வெறுப்பு தவிர்த்து அன்பும் கருணையும் நிரம்பிய வாழ்வு முறை என்று வளர்ந்த சதீஷ்குமார் சிறுவயதில் மதப்பற்று மிகுந்து துறவியாவது என்று முடிவு செய்தார். வீட்டிலும் அனுமதிக்கவே சமண துறவியாகி ஒன்பது ஆண்டுகள் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

அப்போது காந்தியின் சீடரான வினோபாவே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பூமிதான் என்றொரு இயக்கம் நடத்துவதைப் பற்றி அறிந்தார். அதிக நிலம் வைத்திருப்பவர்கள் நிலமற்ற ஏழைகளுக்காக ஒரு பங்கு நிலத்தை தானமாகத் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தியா முழுவதும் நடந்து திரிந்து 50 லட்சம் ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்ற பெருந்தகை வினோபாவே. இவரது காலடி படாத இடங்கள் இந்தியாவில் இல்லை. ஊர் ஊராக போய் நிலப்பிரபுக்களைச் சந்தித்து நிலங்களைத் தானமாகப் பெற்று அதே ஊரில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு உழைத்து பாடுபடத் தந்தவர் வினோபாவே. என்வரையில் இந்தியாவில் நடைபெற்ற மாபெரும் தனிநபர் புரட்சி இதுவே என்பேன். தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்கள் வரை வினோபாவின் பூமிதான் இயக்கம் வேர் ஊன்றியிருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய அதிசயம்.

மக்களைச் சந்தித்து அவர்களுக்காக ஊழியம் செய்வதே உண்மையான அகப்புரட்சி என்ற வினோபாவேயின் வாசகம் சதீஷ்குமாரை ஈர்த்தது. துறவுவாழ்வை விட்டுவிலகி வினோபாவின் பாதயாத்திரையில் தன்னை இணைத்துக் கொண்டார். மூன்று ஆண்டுகாலம் வினோபாவின் கூடவே பயணம் செய்து இந்தியாவின் உண்மையான முகத்தையும் மக்களின் எளிய வாழ்வையும் நேரடியாக அறிந்து கொண்டார் .

லண்டனில் 1961-62 ஆண்டில் அணுஆயுதங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று போராடிய எழுத்தாளர் பெட்ரண்ட் ரஸ்ஸல் தனது 90வது வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். இந்த செய்தி சதீஷ்குமாருக்குள் ஆழமான கேள்வியை எழுப்பியது.

90 வயதில் ஒரு மனிதர் உலக அமைதிகாக்க சிறை சென்றிருக்கிறார். 26 வயதான நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? ஏன் வாழ்வை வீண் அடிக்கிறோம் என்ற கேள்வி அவருக்குள் கரையான் புற்று போல வளரத் துவங்கியது. சில நாட்களில் அவர் சமாதானம் மற்றும் அணுஆயுத எதிர்ப்பிற்காக உலகம் முழுவதும் நடைபயணம் செல்வது என்று முடிவு செய்து வினோபாவிடம் தெரிவித்திருக்கிறார்.

வினோபாவே அதைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதோடு இரண்டு நிபந்தனைகளுடன் உன் பயணத்தை ஒத்துக் கொள்கிறேன் என்று சொன்னார். அவரது நிபந்தனைகளில் முதலானது பயணத்திற்காக கையில் காசோ, பணமோ வைத்துக் கொள்ளக்கூடாது.

காரணம் கையில் பணம் இருந்தால் உடனே வீடு திரும்பும் மனநிலை வந்துவிடும். ஆகவே பணமே இல்லாமல் தான் பயணம் தொடர வேண்டும். பணம் இல்லாதவன் எங்கே தங்குவது. எங்கே சாப்பிடுவது என்று தனது அடிப்படைத் தேவைகளுக்காக நிச்சயம் மற்றவர்களை அணுகுவான். அப்போது தான் மனிதர்களின் இயல்பும் சுபாவமும் எப்படி பட்டது என்று அவனால் புரிந்து கொள்ளமுடியும், அடுத்த நாளை பற்றிய கவலையில்லாத போது தான் பயணம் சாத்தியம் என்றார்.

இரண்டாவது நிபந்தனை எங்கே சென்றாலும் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும். ஏன் சைவ உணவு வேண்டும் என்கிறாய் என்று கேள்வியை உன்னிடம் கேட்பார்கள். அப்போது உயிர்கொலை செய்வது தவறு என்பதில் துவங்கி பயணத்தின் முக்கிய நோக்கமான அணுஆயுதம் வரை எல்லாவற்றையும் விரிவாக எடுத்துச் சொல்லலாம். ஆகவே இந்த இரண்டு நிபந்தனைகளுடன் நீ பயணம் மேற்கொள் என்று வாழ்த்துக் கூறினார்.

சதீஷ்குமாரும் அவரது நண்பர் மேமோனும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்கள். டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் இருந்து தங்களது நடைபயணத்தைத் துவக்கினார்கள். அவர்கள் கண்முன்னே பாதை விரிந்து கிடந்தது. நடக்க நடக்க நினைத்தது போல பயணம் எளிமையான தாகயில்லை என்பது புரியத் துவங்கியது. பிச்சை எடுத்து வாழ்வது போல ஆங்காங்கே கிடைத்தை சாப்பிட்டு வழியில் தூங்கி நடந்து சென்றனர். பயணத்திற்கு எதிரி சுமை என்பதால் இரண்டே மாற்று உடைகளுடன் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

தனது நடைபயணம் பற்றி சதீஷ்குமார் பெட்ரெண்ட் ரஸ்ஸலுக்கு ஒரு கடிதம் எழுதி தெரிவித்தார். உடனே ரஸ்ஸல் உலக அமைதிக்காக நடைபயணம் செய்யும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் எனக்கு 90 வயதாகிறது. உலகம் மிகப்பெரியது. எப்படியாவது என் சாவிற்கு முன்னால் உன்னை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வேகமாக நடந்து வா என்று பதில் எழுதியிருந்தார். அது சதீஷ்குமார் மனதில் இன்னும் ஆர்வத்தை அதிகமாக்கியது.

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர் கையில் விசா, பாஸ்போர்ட் எதுவுமில்லை. அத்தோடு இந்தியா பாகிஸ்தான் இரண்டும் யுத்த நெருக்கடியில் இருந்த நாட்கள் அவை. பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கும் முன்பாக அவரது நண்பர்களில் ஒருவர் நாலைந்து பொட்டலங்கள் சாப்பாடு தந்து நீங்கள் பாகிஸ்தானிற்குள் போகிறீர்கள். அது எதிரியின் தேசம் உங்களுக்கு சாப்பாடு கூட கிடைக்காது இதைக் கொண்டு செல்லுங்கள் என்று தந்திருக்கிறார்.

சதீஷ்குமார் அதை மறுத்தபடியே இந்த சாப்பாட்டை வாங்கிக் கொண்டால் இன்னொரு மனிதன் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை என்றாகிவிடும். ஆகவே எனக்கு வேண்டாம். பட்டினியால் சாவதாக இருந்தால் கூட பரவாயில்லை பாகிஸ்தானில் செத்துப் போகிறேன் என்று நடக்கத் துவங்கினார்.

எல்லை காவலர்கள் அவரைப் பற்றி நாளிதழில் வெளியான செய்தியால் தடை செய்யாமல் அனுமதி தந்தார்கள். பயமும் தயக்கமுமாக பாகிஸ்தானினுள் நடக்க துவங்கிய போது ஒரு கார் அருகில் வந்து நின்று பாகிஸ்தானியர் ஒருவர் இறங்கி வந்து நீங்கள் தானா சதீஷ்குமார் என்று கேட்டிருக்கிறார்.

ஆமாம் என்றதும் உங்களைப் பற்றி ஒரு மாலை செய்தியேட்டில் வாசித்தேன். அப்போது இருந்து நீங்கள் பாகிஸ்தான் வருவதற்காக காத்திருந்தேன். மிக நியாயமான காரணத்திற்காக நடைபயணம் செல்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்னோடு காரில் வாருங்கள் என்று அழைத்தார்.
அறியாத உலகில் எதிர்படும் முதல்மனிதனே இவ்வளவு அன்பாக நடத்துகிறானே என்று வியந்தபடியே தாங்கள் காரில் வர முடியாது, முகவரியை தாருங்கள் வீட்டிற்கு வந்து சேர்கிறோம் என்றார்கள். அவரோ விடாப்பிடியாக, இல்லை வழியில் யாராவது அழைத்தால் போய்விடுவீர்கள் அதனால் உங்கள் பைகளை என்னிடம் தாருங்கள். அதை மட்டுமாவது நான் கொண்டு செல்கிறேன் என்று அவரது உடைமைகளை வாங்கி கொண்டு சென்றுவிட்டார்.

அன்றிரவு அந்த பாகிஸ்தானியர் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கியிருக்கிறார்கள். அப்போது சதீஷ்குமாருக்கு தோணியது. நண்பர் தன்மீதான அக்கறையில் தந்த பொட்டலத்தில் இருந்தது உணவு அல்ல பயம். அடுத்த மனிதனை நம்பமுடியாமல் போன பயம் தான் சாப்பாட்டை கட்டி கொண்டு போகச் செல்கிறது என்ற உண்மை புரிந்திருக்கிறது

பாகிஸ்தானில் பயணம் செய்து புகழ்பெற்ற கைபர் கணவாய் வழியாக அவர்கள் ஆப்கானிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்போது காரில் வந்த ஒரு நபர் அருகில் காரை நிறுத்தி ஏன் நடந்து செல்கிறீர்கள் ஏறிக் கொள்ளுங்கள் என்று உதவ முன்வந்தார்.

இல்லை நாங்கள் பாதயாத்திரை செல்கின்றவர்கள் என்றதும், எங்கே என்று கேட்டிருக்கிறார். சதீஷ்குமார் அமெரிக்காவிற்கு என்றதும் காரிலிருந்தவர் இவர்கள் என்ன முட்டாள்களா என்றபடி அமெரிக்கா எங்கேயிருக்கிறது. எப்படி நடந்து செல்வீர்கள் என்றதும், ரஷ்யா, போலந்து, ஜெர்மனி பெல்ஜியம் பிரான்ஸ், இங்கிலாந்து வழியாக அமெரிக்கா போகத் திட்டம் என்றதும் இவர்கள் பைத்தியக்காரர்கள் என்பது போல திகைத்து பார்த்துவிட்டு, உங்கள் நம்பிக்கையை பாராட்டுகிறேன். ஒருவேளை நீங்கள் அமெரிக்கா வந்தால் என்னைச் சந்தியுங்கள் என்று டாக்டர் ஸ்கார்ப் என்ற தனது முகவரியை தந்து சென்றிருக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் அமெரிக்கா சென்று கைபர் கணவாயில் பார்த்த நபரை அவரது வீடு தேடி சந்தித்தார்கள். டாக்டர் ஸ்கார்ப்பால் நம்பவே முடியவில்லை. எப்படி நடந்தே அமெரிக்கா வந்து சேர்ந்தீர்கள் என்று வியந்து பெரிய விருந்து தந்து கொண்டாடியிருக்கிறார்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான். அங்கிருந்து ஆப்கானிஸ்தான், பெர்சியா, ஈரான் வழியாக ருஷ்யாவிற்குள் சென்றிருக்கிறார். அங்கேயிருந்து போலந்து, கிழக்கு ஜெர்மனி, பெல்ஜியம் வழியாக பிரான்ஸ் சென்று படகில் டோவர் துறைமுகம் பயணம்செய்து அங்கிருந்து லண்டன் சென்று, சவுத்ஹாம்டனில் இருந்து மீண்டும் ஒரு படகு பயணம்மேற்கொண்டு நியூயார்க், அங்கிருந்து நியூ ஜெர்சி பிலடெல்பியா என்று அமெரிக்க தேசத்திற்குள் பிரவேசம் செய்திருக்கிறார்கள்.

இந்த நடைபயணத்திற்கு இரண்டரை வருடங்கள் ஆகியிருக்கின்றன. வழிப்பயணத்தின் ஊடே அந்தந்த தேசங்களின் பிரதமர்கள், மததலைவர்களை சந்தித்து உலக சமாதானம் குறித்து பேசியிருக்கிறார்கள். போகின்ற இடத்தில் எல்லாம் மக்களோடு கலந்து பேசி அஹிம்சையின் வலிமையை எடுத்து சொல்லியிருக்கிறார்கள். பெர்சியாவில் மன்னரே அவர்களை வரவேற்று தங்கச் செய்திருக்கிறார்.

யூதம், இஸ்லாமியம், கிறிஸ்துவம், இந்துமதம், ஜொராஷ்டிரியம், சமணம் என்று அனைத்து மதங்களை சார்ந்த மக்களையும் அவர்களின் தனித்துவமான கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் நேரில் கண்டிருக்கிறார்கள். ரஷ்ய அரசாங்கம் அவர்களை வரவேற்று ராஜமரியாதை செய்திருக்கிறது.

ரஷ்யாவில் நடைபயணம் மேற்கொண்ட போது தேயிலை தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களை வரவேற்று தங்களோடு தேநீர் அருந்திவிட்டு போகும்படியாக சொல்லியிருக்கிறார்கள். சதீஷ்குமாரும் அந்த அழைப்பை ஏற்று அவர்களுடன் தேநீர் அருந்தியிருக்கிறார்.

அவர் புறப்படும் சமயம் ஒரு பெண் மூன்று தேயிலைப் பொட்டலங்களை எடுத்து வந்து தந்து இதில் ஒன்றை பிரான்ஸ் ஜனாதிபதிக்கும், மற்றொன்றை அமெரிக்க ஜனாதிபதிக்கு, மூன்றாவதை இங்கிலாந்து பிரதமருக்கும் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறாள்.

எதற்காக என்று புரியாமல் சதீஸ்குமார் தயங்கிய போது இவர்கள் அணுஆயுதங்கள் வைத்திருப்பவர்கள். கோபம் தலைக்கு ஏறி இந்த ஆயுதங்களை பிரயோகம் செய்வற்கு முன்பாக இந்த தேயிலையில் இருந்து ஒரு கோப்பை தேநீர் தயாரித்து சாப்பிடச் சொல்லுங்கள். அது அவர்களை இயல்பான மனநிலைக்கு கொண்டுவந்துவிடும். உலகிற்கு நாங்கள் சொல்லும் சேதி உங்கள் கோபத்தால், பகையால் மனிதர்களை உயிர்பலிகொடுக்காதீர்கள் என்பதே என்றிருக்கிறாள்.

சதீஸ்குமார் இந்த செய்தியோடு அந்த தேயிலைப் பொட்டலங்களை அவள் குறிப்பிட்ட ஜனாதிபதிகளிடம் நேரில் ஒப்படைத்திருக்கிறார். தான் ஆசைப்பட்டபடியே லண்டன் சென்று ரஸ்ஸலை நேரிலும் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். இந்த நடைபயணத்தில் தான் கண்டு கொண்ட உண்மை மனித நம்பிக்கை மகத்தானது என்பதையே.

எட்டாயிரம் மைல் தூரத்தை கையில் பணமே இல்லாமல் கிடைத்தை சாப்பிட்டு கொண்டு உறக்கம் வந்த இடத்தில் படுத்து எழுந்து கொண்டு பயணம் சென்று வெற்றிபெற்றிருக்கிறார் சதீஷ்குமார். காந்தி சமாதியில் துவங்கிய அவரது பயணம் அமெரிக்காவின் கென்னடி சமாதியில் முடிவுற்றிருக்கிறது.

கையில் காசு இல்லாதவன் எல்லா மனிதர்களையும் நம்ப துவங்குவான். அவனுக்கு பிடித்தது பிடிக்காதது என்ற பேதமிருக்கிறது. அத்தோடு காரணமில்லாமல் நமக்குள் வளர்ந்து போயிருக்கும் பயம் வெறுப்பு துவேசம் யாவும் வடிந்து போய்விடும். எவ்வளவு மாறுபட்ட நிலக்காட்சிகள், இயற்கையின் வண்ணங்கள், வேறுபட்ட வாழ்வை மேற்கொள்ளும் மக்கள் என்று அறிந்து கொள்ள முடியும். இது தான் என் பயணத்தில் கண்டு அடைந்த சாராம்சம் என்கிறார் சதீஷ்.

சூழலியல் மற்றும் இயற்கையோடு சேர்ந்த எளிமையான வாழ்க்கைமுறை இரண்டிலும் அதிக கவனம் எடுத்து வரும் சதீஸ்குமார் இதற்காக இங்கிலாந்தில் சூமேக்கர் சூழலியல் கல்லூரி ஒன்றையும் மாதிரி பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார். அத்தோடு சூழலியல் குறித்த தீவிர கவனம் கொண்டு செயல்படும் Resurgence என்ற இதழின் ஆசிரியராகவும் உள்ளார்

இயந்திரமயமாகிப் போன வாழ்க்கையை உதறி இயற்கையோடு கூடிய எளிய வாழ்வு தேவை என்பதை வலியுறுத்தும் இவர், பன்னாட்டு நிறுவனங்கள் நம் இயற்கை செல்வங்களை கொள்ளையடிக்கின்றன. பெப்சி கோக் போன்ற குளிர்பானங்களைத் தவிர்த்து இளநீர் பழச்சாறு போன்றவற்றை அருந்துங்கள், நேரமில்லை என்ற சொல்லைத் தவிருங்கள். நேரம் முடிவற்று இருந்து கொண்டேயிருக்கிறது. எப்படி நேரத்தை பயன்படுத்துவது என்று யோசனை செய்யுங்கள், இயற்கையை , நுண்உயிர்களை காப்பாற்றுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்

சமீபத்தில் வெளியான அவரது நேர்காணல் ஒன்றில் தனது அனுபவத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கு தேவையான மூன்று விஷயங்கள் உள்ளன என்று குறிப்பிடுகிறார்

அவை 1) caring 2) sharing 3)daring.

தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் மீதும் தன்மீதும் காட்ட வேண்டிய அக்கறையே ஒரு மனிதனின் முதல்பணி. இது உடல்நலம் சாந்தது மட்டுமல்ல. மனிதனின் சிந்தனை செயல்பாடு, சமூகமாற்றம் யாவற்றோடும் தொடர்பு உடையது. அக்கறையில்லாத மனிதன் அரை மனிதனே.

இரண்டாவது தன்னிடமிருப்பதை பங்குபோட்டுக் கொள்வது. உடனே பணத்தையா என்று தான் கேள்வி உருவாகிறது. பணமில்லை. பங்கு போட்டுக் கொள்வது என்பது பகிர்ந்து கொள்வது. இந்தியாவின் செல்வங்கள் இங்குள்ள மனிதர்களின் ஆசையைப் போக்கி கொள்ள போதுமானது ஆனால் மனிதர்களின் பேராசையை போக இதனால் இயலாது என்று காந்தி குறிப்பிடுகிறார். அது தான் நிஜம்.

காரணமற்ற பேராசையும், அளவிற்கு மீறி சேர்த்து வைத்து முடக்கிக் கொள்ளும் அதிகார வேட்கையும் மாற வேண்டும். ஆப்பிள் மரம் தன்னிடமிருக்கும் ஆப்பிளைத் தர எவரிடமும் காசு கேட்பதில்லை. கீரை தன்னை பூமியிலிருந்து பறித்து உணவாக்கிக் கொள்ளும் மனித செயலுக்கு ஒரு நாளும் எதிர்ப்பு கொள்வதில்லை. அவை தன் வாழ்வை மனிதர்களோடு பகிர்ந்து கொள்கின்றன. அது போல தனது தேவைகளை வரையறை செய்து கொண்டுவிட்டு முடிந்தவற்றை பகிர்ந்து கொள்வது மிக முக்கியமானது.

மூன்றாவது துணிச்சல். நம்மை சிறு செயல்கூட செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருப்பது நமக்குள் உள்ள பயமே. தோல்வியைப் பற்றியே எப்போதும் சிந்திக்கின்றவர்களாக இருக்கிறோம். துணிச்சல் ஒன்றால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். எல்லா பயணங்களும் முதலடியில் இருந்தே துவங்குகின்றன. ஆகவே

துணிச்சல் இல்லாத மனிதன் நடைபிணம் போன்றவன். எனக்குள் இருந்த துணிச்சல் மட்டுமே உலகை சுற்றி வர செய்தது என்கிறார்.
எண்பது நாட்களுக்குள் சுற்றிவந்த உலகம் என்றொரு புனைகதையை என் பள்ளிநாட்களில் வாசித்திருக்கிறேன். அது எல்லாம் நிஜம் தானா என்று ஆச்சரியமாக இருக்கும். பிறகு 1980களில் உண்மை மனிதனின் கதை என்று ஒரு ரஷ்ய நாவல் வெளியானது. அது யுத்தகைதி ஒருவன் பல மாதங்கள் நடந்தே கடும்பனிபிரதேசத்தைக் கடந்து வருவதை பற்றியது. யாருமற்ற பனிப் பிரதேசத்தில் ஒரு மனிதன் படும் அவதியை விவரித்தது.

அதன் பிறகு எனக்குள் பெரிய மாற்றத்தை உருவாக்கியது சதீஷ்குமாரின் புத்தகம். ஒருவகையில் நடை என்பது வெறும்உடற்பயிற்சி மட்டுமல்ல, அது ஒரு எதிர்ப்பு உணர்வு. ஒரு கலாச்சார அடையாளம், ஒரு கருவி என்பதை புரிந்து கொள்வதற்கும், என்றோ சரித்திரத்தில் படித்த யுவான்சுவாங்கும் அல்பெரூனியும் மட்டுமே யாத்ரீகர்கள் அல்ல. இது போன்ற சமூகமாற்றத்திற்கான முன்குரல் எழுப்புகின்றவர்கள் மேற்கொள்ளும் பயணங்களும் கொண்டாடப்பட வேண்டியது என்பதையும் உணர செய்தது.
தனது நடைபயணத்தில் பெர்சியா போன போது அங்கே சதீஷ்குமார் மக்களிடம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார்.

ஐநூறு வருசத்தின் முன்பாக ஒரு மாமன்னரின் அரண்மனைக்கு பௌத்த துறவி ஒருவர் வந்திருக்கிறார். மன்னர் அவரை வரவேற்று தனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள் என்று சொன்னார்.

உடனே துறவி நன்றாக உறங்குங்கள் என்று ஆசி தந்திருக்கிறார். மன்னர் என்ன இது உறங்க சொல்லி ஆசி தருகிறாரே என்ற தயக்கத்துடன் தான் ஏற்கனவே நிறைய நேரம் உறங்குவதாகவும், அதனால் தான் கவனிக்கபட வேண்டிய பல பணிகள் தாமதமாகின்றன என்பதால் தான் அதிகாலையில் எழுந்து பின்னிரவு வரை விழித்து வேலை செய்ய வேண்டியிருப்பதாக சொன்னார்.

உடனே துறவி இல்லை மன்னர் எவ்வளவு அதிகமான நேரம் தூங்குகின்றாரோ அவ்வளவு மக்களுக்கு நல்லது என்றார். மன்னருக்கு கோபம் வந்துவிடவே முட்டாள் போல பேசாதீர்கள் என்று கண்டித்தார்

அதற்கு துறவி சிரித்தபடியே மன்னா. விழித்திருக்கும் நேரத்தில் உங்களோடு சேர்ந்து கோபமும் விரோதமும், அதிகாரம் செய்யும் ஆசையும் விழித்து கொண்டுதானிருக்கிறது. அதனால் பாதிக்கபடுகின்றவர்கள் மக்களே. ஆகவே நீங்கள் உறங்கும் போது மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்

இந்த கதையை மக்கள் ரசித்து பாராட்டியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் அணுஆயுதம் கையில் வைத்திருப்பவர்கள் இந்த மன்னரைப் போல நீண்ட நேரம் உறங்க வேண்டியவர்கள். அவர்கள் விழித்திருப்பது உலகிற்கு ஆபத்தானது என்று சொல்கிறார் 70 வயதைக்கடந்த சதீஷ்குமார்

இவரது A Path Without Destination புத்தகம் பாடமாக வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மண்புழுக்கள் கூட தன் உடலை இழுத்து இழுத்துக் கொண்டு ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் ஊர்ந்து கொண்டுதானிருக்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் தன் இருப்பிடத்திற்கு வெளியில் உலகமில்லை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அத்தோடு சுயலாபங்களுக்காக இயற்கை வளங்களையும் காரணமின்றி அழித்து கொண்டிருக்கிறார்கள்.

தொலைக்காட்சி பெட்டியின் வழியாக மட்டுமே உலகை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சற்றே வெளியே வந்து பார்க்கவும் நடக்கவும் சுற்றியலையவும் ஆசைப்படுகின்றவர்கள் கட்டயாம் வாசிக்கவும் கற்றுக் கொள்ளவும் வேண்டிய முக்கிய நூலிது.

நடந்து பாருங்கள் உலகம் மிகப்பெரியது.

**

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: