இணையதளங்கள் – 3

கொட்டிக் கிடக்கும் கோடானு கோடி இணைய தளங்களில் தரமானதும் பயனுள்ளதும் தான் விரும்பி உலாவுவதுமான இணைய தளங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்


ஆசிய சினிமா

http://www.slantmagazine.com

சமீபத்தைய ஆசிய சினிமாவினை அறிய விரும்புகின்றவர்களுக்கான சினிமா இதழ். இளம் இயக்குனர்களுக்கென தனியான பகுப்பு உள்ளது. இதில் இடம் பெறும் திரைவிமர்சனங்களை வாசித்து வருவதன்வழியே எவை தற்போது வெளியான முக்கியபடங்கள் என்று அறிந்து கொள்வது சுலபம். இயக்குனர்களின் நேர்முகம் மற்றும் விரிவான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன

தமிழ்மரபு

http://www.tamilheritage.org/

தமிழக கோவில்களின் ஸ்தலபுராணங்கள். அரிய தமிழ் நூல்கள், மற்றும் அழிந்துவரும் தமிழக மரபுசின்னங்களை பாதுகாக்க உருவாக்கபட்டுள்ள இந்த இணையதளத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு, முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் உள்ளிட்ட பல முக்கிய முக்கிய நூல்கள் வாசிக்க கிடைக்கின்றன. அத்தோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

காற்றின் பாதை

http://www.uoregon.edu/~kohl/basho/

ஜப்பானிய பௌத்த துறவியும் கவியுமான பாஷோ மேற்கொண்ட பயணத்தின் முழுமையான பதிவு இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. பாஷோ ஜென் கவிஞர்களில் முக்கியமானவர். இயற்கையோடு இணைந்த இவரது பயணம் கவிதைகளை போலவே மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கவித்துவமனதுடைய ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய முக்கிய பதிவு.

தேவாரம் ஒதுதல்

http://www.shaivam.org/gallery/audio/audio.htm

தேவாரப்பாடல்களை சைவசமய ஒதுவார்கள் முறையாக பாடி பதிவு செய்திருக்கிறார்கள். தேவாரத்தை கேட்பது உணர்ச்சிபூர்வமான அனுபவம். மரபான தேவாரம் ஒதும் முறை தற்போது பெரும்பான்மை திருத்தலங்களில் நடைபெறுவதில்லை. தேவாரப்பாடல்களின் மொழியும் கவித்துவமான உணர்ச்சிவெளிப்பாடும் கேட்டு அறியப்படவேண்டியவை.

திரையும் கதையும்

http://www.all-story.com/
.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கபோலா சிறுகதைகளின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். புதிதாக சிறுகதை எழுத விரும்புகின்றவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இவரது இணையதளம் ஆண்டு தோறும் போட்டிகள் நடத்துகின்றன. கதைகளை வெளியிடுகின்றன. இந்த கதைகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து படமாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. 1997 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதளம் இன்று அமெரிக்காவின் முக்கியமான இலக்கிய வெளியாக உருக் கொண்டிருக்கிறது.

உலககவிதைகள்.

http://plagiarist.com/

Matsuo Basho, Guillaume Apollinaire, Charles Bukowski, Seamus Heaney ,Jorge Luis Borges, Joseph Brodsky, Wislawa Szymborska, Li-Young Lee, Yusef Komunyakaa , Yusef Komunyakaa   என உலகப்புகழ் பெற்ற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உதவும் இணையதளமிது. கவிதை குறித்த கட்டுரைகளும். புதிய அறிமுகங்களும் இதன் சிறப்பு. சமகால உலக கவிதைகளை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் அவசியம் காண வேண்டிய இணையதளம்.

தென்கிழக்காசிய இலக்கியம்

http://dsal.uchicago.edu/books/mahfil/

சதத் ஹசன் மண்டோ, பெய்ஸ் அகமது பெய்ஸ், பகவான் சரண் சர்மா, மானசி என புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும், சமஸ்கிருத இலக்கியம், பக்தி இலக்கியம் குறித்த மிக முக்கிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ள காப்பகம் இது. மக்பில் என்ற இதழின் மொத்த தொகுப்பும் இதில் இடம் பெற்றிருக்கிறது.

சமகால இந்திய கவிதைகள்.

http://www.museindia.com/pissue.asp

இந்திய மொழிகளின் படைப்பிலக்கியத்திற்கான இதழ். இதில் தமிழ், கன்னடம். வங்காளம், ஒரியா மணிப்பூரி அஸ்ஸாமி, உருது மைதிலி மலையாளம் உள்ளிட்ட பல முக்கிய மொழிகளின் சமகால கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து சிறப்பிதழாக வெளியாகி உள்ளன. ஆத்மநாம் தேவதச்சன் துவங்கி இளம்பிறை, ராணிதிலக், தேன்மொழி வரையான தேர்வுசெய்யப்பட்ட 35 கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டிருப்பது இதன் சிறப்பு. கவிஞர் பிரம்மராஜன் இதை தொகுத்திருக்கிறார்.

ஹிட்ச்காக்கின் திரைமொழி

http://www.hitchcockonline.org/

ஹிட்ச்காக்கின் திரைப்படங்களை பற்றிய விரிவான கட்டுரைகள் இடம் பெற்றுள்ள இணையதளமிது. அவரது திரைப்படங்களின் இசை பயன்படுத்தப்படும் விதம் மற்றும் குடும்பத்தின் சிதைவை அவர் எவ்வாறு தனது திரைப்படங்களில் சித்தரிக்கிறார் என்பதை பற்றிய ஆழமான ஆய்வுகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஹிட்ச்காக்கின் முக்கிய திரைப்படங்களை பற்றிய பல்வேறு இணையதளங்களின் முகவரிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

பௌத்த வழிகாட்டி

http://www.buddhanet.net/

பௌத்த மதம் குறித்த முக்கிய மின்புத்தகங்கள். மற்றும் புத்தரின் வாழ்க்கை வரலாறு, அவரது போதனைகள், புத்தரின் சீடர்கள், தம்மபதத்திற்கான விளக்கங்கள் என்று புத்தசாரத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கான சிறப்பான இணையதளம் இது. இங்கே புத்தம் குறித்த நூற்றுக்கணக்கான மின்புத்தகங்கள் உள்ளன. அவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 


 


 


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: