ஹோமியோபதியின் மகத்துவம்

நேற்று டாக்டர் விகடன் இதழுக்காக நேர்காணல் செய்ய வந்திருந்தார்கள், அப்போது எனது அண்ணன் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதையும் அவரது மருத்துவசெயல்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த போது ஏன் சார் இந்த அனுபவங்களைப் பற்றி எழுதவேயில்லை எனப் பத்திரிக்கையாளர் ஆதங்கத்துடன் கேட்டார், அதற்கென்ன எழுதிவிடுகிறேன் என்று சொன்னேன்
நேற்று இரவு யோசித்த போது தோன்றியது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நான் எவ்வளவோ பயணங்கள் செய்திருக்கிறேன், கண்டபடி ஊர் சுற்றியிருக்கிறேன், எது எனது பயணத்தின் உறுதுணை என்றால் ஹோமியோபதி மருந்துகள் என்றே சொல்வேன்
இன்றுவரை எனது உடல்நலத்திற்காக நான் பெரிதும் ஹோமியோபதி மருத்துவத்தைத் தான் பயன்படுத்தி வருகிறேன், குறிப்பாக வெளிநாட்டு பயணங்களின் போது சந்திக்கும் உணவு ஒவ்வாமை, அதிகக் குளிர், அதிக வெப்பம், சுவாசப்பிரச்சனைகள், சருமபிரச்சனைகள், உடல்வலி போன்றவற்றை ஹோமியோபதி மருத்துவம் மூலமாக மட்டுமே சரி செய்து கொண்டிருக்கிறேன்,
எனது அண்ணன் டாக்டர் வெங்கடாசலம் ஒரு ஹோமியோபதி மருத்துவர், இருபத்தைந்து ஆண்டுகாலமாக மருத்துவம் செய்து வருபவர், அண்ணியும் ஹோமியோபதி மருத்துவரே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் இவரது மருத்துவமனை இயங்கிவருகிறது,
தீவிர இலக்கியவாசகரான எனது அண்ணன் தான் எங்கள் வீட்டில் முதலில் எழுத துவங்கியவர், அவரது கல்லூரி நாட்களில் நிறைய எழுதியிருக்கிறார், தேர்ந்த ஒவியர், சிறந்த பேச்சாளர், ஆனால் மருத்துவம் படிக்க முனைந்த காரணத்தால் இலக்கியத்தைத் தொடர முடியவில்லை, ஆனால் இப்போதும் மருத்துவ நூல்களை எழுதிவருகிறார், மாற்றுமருத்துவம் என்ற மாதஇதழை நடத்திக் கொண்டு வருகிறார்.
நான் இலக்கிய நூல்களை வாசிக்கவும், கதைகள் எழுதவும் இவர் தான் முக்கியக் காரணம், ஹோமியோபதி மருத்துவம் செய்வதுடன் அதை மக்களிடம் கொண்டு செல்லும் இலவசமுகாம்கள், மற்றும் குறுகிய கால இலவச பயிற்சிகளையும் தொடர்ச்சியாகச் செய்துவருகிறார், இவரது தொடர்ந்த முயற்சியால் ஹோமியோபதி மீது ஆர்வம் கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைந்து ஒரு அமைப்பாகச் செயல்பட்டுவருகிறார்கள்
இவரது மருத்துவமனையில் பெரிய நூலகம் ஒன்றிருக்கிறது, மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள் வாசிப்பதற்கெனத் தீவிர இலக்கிய இதழ்களில் துவங்கி குழந்தைகள் பத்திரிக்கை வரை அத்தனையும் கிடைக்கின்றன, கிராமங்களில் இருந்து வரும் நோயாளிகளில் சிலர் இவரிடம் சிகிட்சை பெற்றுவிட்டுப் பஸ் செலவிற்குக் காசு வாங்கிக் கொண்டு போவது இன்றும் நடந்து வருகிறது
ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படை நோயை மட்டும் குணமாக்குவதில்லை, நோயாளியை அது ஆராய்கிறது, நோயுற்ற மனிதனின் மனம், உடல், பல்வேறு அறிகுறிகளைத் தெளிவாக உணர்ந்து அதற்கேற்ப மருந்தை தருகிறது, பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் என்பதாலும் மனதை முதன்மைபடுத்திச் செயல்படுவதாலும் ஹோமியோபதி மருந்து சிறப்பாகச் செயல்படுகிறது,
எனது ஒவ்வொரு பயணத்தின் முன்பாகவும் இவரிடம் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வேன், ஜப்பானில் கொட்டும் பனியை சந்திக்கப்போகிறேன் என்று சொன்ன போது அதைப்பற்றிக் கவலைப்படாதே என ஹோமியோபதி மருத்துகளில் ஒன்றை எனக்குத் தந்து இதைக் கையோடு வைத்துக் கொள், குளிர் உன்னை ஒன்றும் செய்யாது என்றார், அந்த மருந்தை ஜப்பானில் பயன்படுத்தினேன், ஆச்சரியம் அதைச் சாப்பிட்ட மறுநிமிசம் உடல் நடுக்கம் குறைந்து போனதுடன், குளிரின் தாக்குதலையும் உடல் சமாளித்துவிட்டது, இப்படி எனது கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு இந்தியப்பயணங்களில் இவரது மருத்துவம் எனக்குப் பேருதவி செய்திருக்கிறது
மலர் மருந்துகள் எனப்படும் அரியவகை மருத்துவம் ஹோமியோபதியோடு இணைந்த ஒன்று, மலர்களுக்கு எவ்வளவு மருந்துவகுணம் இருக்கிறது என்பதை இந்த மருந்துகளின் வழியாகவே முழுமையாக உணர்ந்தேன், ரெஸ்க்யூ ரெமடி எனப்படும் மலர் மருந்துகளின் கூட்டுகலவையில் உருவாக்கபட்ட மருந்து எதிர்பாராத பயம், பதற்றம், கவலை, நோய் குறித்த அச்சம், உறக்கமின்மை என எதையும் உடனே போக்கிவிடக்கூடியது, பலமுறை இதை நான் பயன்படுத்தி உணர்ந்திருக்கிறேன்,
எனது நண்பர்களில் ஒருவருக்குத் திடீரெனக் காரணமற்ற பயம் பிடித்துக் கொண்டது, அவரால் அன்றாடப் பணிகளைக் கூடச் செய்யமுடியவில்லை, சரியான உறக்கமில்லை, ஒருவாரத்தில் அவரது முகம் இருண்டுவிட்டது, பேச்சில் நடுக்கம், பசியின்மை, அவரால் எதையும் கோர்வையாகச் சொல்லக்கூட முடியவில்லை,
எனது அண்ணனிடம் தொலைபேசியின் வழியாகப் பேசவைத்தேன், அந்த நண்பருக்கு ஹோமியோ மருந்துகளை அனுப்பி வைப்பதாகச் சொன்னார், ஹோமியோ மருந்துகளைச் சாப்பிட்டு மூன்றே நாட்களில் அந்த நண்பர் தனது பயத்திலிருந்து விடுபட்டு இயல்புவாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார், இவரைப்போலப் பலருக்கும் தீவிர மனப்பிரச்சனைகளில் இருந்தும், உடல்உபாதைகளில் இருந்தும் ஹோமியோபதியின் வழியே முழுமையான நலம் கிடைத்திருக்கிறது,
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமப்புறங்களில் முறையான மருத்துவசிகிட்சையின்றி நோயில் அவதிப்படும் முதியவர்களுக்கும், மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கும் தொடர்ந்து இலவச சிகிட்சைகள் செய்து வருகிறார், இதற்காகக் கிராமங்களைத் தேடிப்போய் மருத்துவ முகாம்களை நடத்திவருகிறார், மருத்துவத்தில் தனக்கென ஒரு அறத்தை கொண்டிருக்கிறார் என்பதே இவரது சிறப்பு
மருத்துவராக மட்டுமின்றி ஒரு களச்செயல்பாட்டாளராக அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு
என்து அண்ணன் வழியாக எங்களது மொத்த குடும்பமும் ஹோமியோபதியை சார்ந்திருக்கிறது, எங்கள் வீட்டிலும் அலோபதி மருத்துவர்கள் இருக்கிறார்கள், நிறைய அலோபதி மருத்துவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள், அந்த மருந்துகளை நான் முற்றிலும் புறக்கணிக்கவில்லை, மாறாக அதை எதற்கு எப்படிப் பயன்படுத்துவது, என்பதை அறிந்திருக்கிறேன்,
ஹோமியோபதி மருத்துவம் குறித்து இன்னும போதுமான விழிப்புணர்வு மக்களிடம் உருவாகவில்லை, ஹோமியோபதிக்கென மருத்துவகல்லூரிகள் இருக்கின்றன, நிறையப் புத்தகங்கள் வெளியாகி வருகின்றன, ஆனாலும் மக்களிடம் ஹோமியோபதி குறித்த தவறான எண்ணங்கள், குழப்பங்கள் இருந்து வருகின்றன,
அலோபதி மருத்துவமனைகள் வணிகசந்தையாகிப் போன இன்றைய சூழலில் சித்தவைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, மலர்மருத்துவம் போன்றவை சிறப்பான மாற்றுமருத்துவமுறைகள் ஆகும், இவற்றின் வழியே நமது பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளை எளிதாகத் தீர்த்துக் கொள்ளமுடியும்
எனது அனுபவத்தில் ஹோமியோபதியை ஒரு மகத்தான மருத்துவம் என்பேன், இதன் வழியாக நான் அடைந்த நன்மைகள் ஏராளம்,
எழுத்தாளர் முருகேசபாண்டியன், உதயசங்கர், எனப் பலரும் தாங்களே ஹோமியோபதி கற்றுக் கொண்டு இன்று தங்களுக்கான சுயமருத்துவம் செய்து கொண்டுவருகிறார்கள், நானும் ஹோமியோபதி குறித்து ஆழ்ந்து வாசித்திருக்கிறேன், அதன் வழியே தான் துயில் நாவல் எழுதுவதற்கான உத்வேகம் உருவானது.
Dr. S Venkatachalam
29/9- A, Old Trunk Road, Sattur- 626203, virudhunagar dist. தொலைபேசி 9443145700,
Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: