மில்லேயின் ஒவியங்கள்

பிரெஞ்சு ஒவியர் பிரான்ஸுவா மில்லே (Jean-François Millet) ஒவியங்களை நியூயார்க்கில் பார்த்திருக்கிறேன், அவரை எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கியக் காரணம் “no teacher other than nature” என்ற அவரது ஒரு வாசகம், அந்த வரியை எனது நாட்குறிப்பின் முதல்பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறேன்,

மில்லே விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர், பாரீஸில் தங்கி ஒவியம் கற்றுக் கொண்டிருக்கிறார், இவரது ஒவியங்களை ஹென்றி ரூசோ மிகவும் பாராட்டியிருக்கிறார், கிராமப்புற விவசாய வாழ்க்கையை ஒவியமாக வரைந்தவர்களில் மில்லே முக்கியமானவர், இவரது ஒவியங்களில் வான்கோவின் பாதிப்புகளைக் காணமுடிகிறது,

பிரான்சின் கிராமப்புற மனிதர்களையும் இயற்கை காட்சிகளையும் யதார்த்தபாணியில் வரைந்திருக்கிறார், இவரை மிகச்சிறந்த நேச்சுரலிச ஒவியராகக் கொண்டாடுகிறார்கள்

இவரது மூன்று முக்கிய ஒவியங்களை நான் வியந்து ரசித்திருக்கிறேன், ஒன்று The Sheepfold, Moonlight

தனிமை தான் ஒவியத்தின் மையப்பொருள், மயக்கமூட்டும் நிலவொளிரும் இரவு, மேய்ப்பன் தனது ஆடுகளுடன் நிற்கிறான், அருகில் ஒரு நாய் பின்தொடர்கிறது, ஒவியத்தின் ஒரு புறம் சிறிய குடிசை காணப்படுகிறது, அது தங்குவதற்கான இடம், ஆடுகளின் முகம் தெரியவில்லை, வானில் நட்சத்திரங்கள் எதுவுமில்லை, விரிந்து கிடக்கும் தொலைவு மயக்கமூட்டுகிறது,நிலவு வெளிச்சம் ஆடுகளின் மேல் பட்டு அழகு பீறிடுகிறது, தூரத்து மரங்கள் கனவில் தோன்றுவது போலக் காட்சியளிக்கின்றன, பார்க்க பார்க்க ஒவியம் மனதை களிப்பூட்டுகிறது, ஹென்றி ரூசோவின் நட்பால் தான் மிலே இது போன்ற நிலக்காட்சிகளை வரையத்துவங்கினார் என்கிறார்கள்,

இவரது The Gleaners (1857), ஒவியம் அறுவடைக்குப் பின்பு விடுபட்டுப் போன தானியங்களைச் சேகரிக்கும் பெண்களைப் பற்றியது,

கோதுமைகளைச் சேகரிப்பதற்காகக் குனிந்து வேலை செய்யும் மூன்று பெண்களின் தோற்றமும் வசீகரமாக இருக்கிறது, அந்தப் பெண்களின் தோள்களில் வெளிச்சம் பட்டுத் தெறிக்கிறது, மூவரும் கடின உழைப்பாளிகள் என்பது அவர்களின் உடற்வாகிலே தெரிகிறது, அவர்கள் தனது அங்கியில் உதிர்ந்த கோதுமைகளைச் சேகரிக்கிறார்கள், அவர்களின் உடை மற்றும் தலையில் கட்டிய துணி மண்ணின் நிறத்தை ஒத்தேயிருக்கிறது

இந்த ஒவியத்தின் சிறப்புப் பின்புலத்தில் உள்ள ஆகாசம், அதுவும் சூரியன் மறையும் நேரத்தில் உள்ள ஆகாசம், அதன் ஊடாக நடைபெறும் அறுவடைப்பணி, மூன்று பெண்களும் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளாக முன்னிறுத்தப்படுகிறார்கள், அறுவடை களத்தில் ஒருவன் குதிரையில் அமர்ந்தபடியே வேலையைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான், களம் அடிப்பவர்கள் துரிதமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், 1857ல் வரையப்பட்ட இந்த ஒவியம் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதே மகத்தானது என்பதைக் குறிப்பது போலவே உள்ளது,

மூன்றாவது ஒவியம் Hunting Birds at Night, விவசாயிகள் இரவில் மரங்களில் அடைந்திருக்கும் புறாக்களைத் தீப்பந்தங்களைக் கொண்டு வேட்டையாடும் காட்சியைச் சித்தரிக்கிறது, நான்கு பேர் பறவைகளை வேட்டையாடுகிறார்கள், நெருப்பின் வெளிச்சத்தில் பறவைகள் திசைதெரியாமல் தடுமாறுகின்றன, கையில் உள்ள தடியை கொண்டு அடித்துப் பறவைகளை வீழ்த்துகிறார்கள், ஏதோவொரு விபரீதமான கனவுக்காட்சியைப் போல உள்ளது, எது நெருப்பு எது பறவை எனத் தெரியவில்லை, சிறகொடிந்து ஒரு பறவை தரையில் வீழ்ந்து கிடக்கிறது, இப்படிப் புறாக்களை இரவில் வேட்டையாடுவது விவசாயிகளின் வழக்கம், தனது வழக்கமான ஒவியபாணியில் இருந்து விலகி சர்ரியலிச ஒவியம் போல இதை மில்லே வரைந்திருக்கிறார், இந்த ஒவியம் எனக்கு ஏனோ பிளேக்கை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.

•••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: