நிலவும் நாணயங்களும்

நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞனுக்குக் காலடியில் கிடக்கும் நாணயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள்

உலகெங்கும் கலைஞர்கள் தனது கற்பனையுலகோடு, தனது படைப்பாற்றலின் முழுவீச்சோடு இயங்கவே ஆசைப்பட்டிருக்கிறார்கள்

தன் விருப்பபடி வாழ்வதற்கு உலகம் அனுமதிக்காது என்பதை உணர்ந்து கொண்டு, அதை மீறிச் செயல்பட்டிருக்கிறார்கள்,  பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரது வாழ்வும் நாடோடிகளின் வாழ்க்கைமுறையைக் கொண்டதே

வாழ்க்கையை அதன் தீவிரத்தோடு எதிர்கொண்டு தன்னைப் பலிக் கொடுத்த ஒவியர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், நாவலாசிரியர்கள் என நிறையப் பேர் என் நினைவில் வந்து போகிறார்கள்,

ஒவியர் பால் காகின் அப்படியான தீவிர மனநிலை கொண்ட ஒவியர், தாஹிதி தீவிற்குப் போய் அங்குள்ள பழங்குடி மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து ஒவியம் வரைந்தவர், ஒவிய உலகில் காகின் சிவப்பு என்றே ஒரு வண்ணம் குறிப்பிடப்படுகிறது, வான்கோவின் நண்பரான காகின் நவீன ஒவியத்தில் மிக முக்கியமானவர், அவரது வாழ்க்கை நிகழ்வுகளின் சாயலில் எழுதப்பட்டதே சாமர்செட் மாமின் The Moon and Sixpence நாவல்.

ரயில் பயணத்தில் வாசிப்பதற்கு எடுத்துச் சென்ற இந்த நாவலை படித்து முடித்த பிறகு உறங்க முடியவில்லை, முழு இரவும் இதைப்பற்றி நினைத்தபடியே படுக்கையில் கிடந்தேன்,

மனதில் சொல்லமுடியாத துக்கம், வலி, காலம் காலமாகக் கலைஞர்களின் மனம் புரிந்து கொள்ளபடாமலே தான் போகிறது என்ற வேதனை என்னைத் தீவிரமாக ஆக்ரமித்துக் கொண்டது,

ஒவியர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானது இதுவென்பேன், 1919ல் இந்நாவல் வெளியாகியிருக்கிறது

சார்லஸ் ஸ்ட்ரிக்லாண்ட் என்ற மனிதர் பங்குச்சந்தை தரகராக இருக்கிறார், அவருக்கு ஒவியத்தின் மீது அதீதமான விருப்பம், அவராக ஒவியம் வரையக்கற்றுக் கொண்டிருக்கிறார், தன் வாழ்க்கையை முழுமையாக ஒவியத்திற்கு அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார், ஆனால் குடும்பம், அதற்கான சம்பாத்தியம், பிள்ளைகள், மனைவி என நிறையக் கட்டுபாடுகள், தேவைகள், அவரது கனவுகளை ஒடுக்கியே வைத்திருக்கிறது.

ஒரு நாள் இந்த அலுப்பூட்டும் வாழ்க்கையை உதறித்தள்ளி ஸ்ட்ரிக்லாண்ட் வீட்டை விட்டு வெளியேறிப் போகிறார், ஒரு பெண்ணோடு பாரீஸிற்கு ஒடிவிட்டார் என்று மனைவி புகார் சொல்கிறாள்.

அதற்காகத் தனது எழுத்தாளர் நண்பரை அழைத்துத் தேடிப்பார்த்துவிட்டு வரச்சொல்கிறாள், பாரீஸில் ஸ்ட்ரிக்ட்லாண்ட் வறுமையில், தனிமையில் வசிக்கிறார், தனது ஒவியத்திறனை மேம்படுத்திக் கொள்ள மட்டுமே அவர் பாரீஸ் வந்திருப்பதாகக் கூறுகிறார்.

எழுத்தாளரும் ஒவியரும் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள், அப்போது ஸ்ட்ரிக்லாண்ட் மீது எந்தத் தவறையும் எழுத்தாளரால் காணமுடியவில்லை.

காலப்போக்கில் வறுமையும் குடியும் தனிமையும் ஸ்ட்ரிக்லாண்ட்டினை உருக்குலைத்து விடுகிறது, அவரது ஒவியங்களை எவரும் வாங்க விரும்பவில்லை, ஆனால் தனக்கு விருப்பமான ஒவியங்களை அவர் தொடர்ந்து வரைந்து கொண்டேதானிருக்கிறார், விற்பனைக்கு வைக்கபட்ட ஒவியங்களைத் திடீரெனத் திரும்பி வாங்கிவந்து அழித்துவிடுகிறார், தன் ஒவியங்கள் ரசிப்பதற்கானவை அல்ல, சிந்திப்பதற்கானவை என்கிறார் ஸ்ட்ரிக்லாண்ட்

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ட்ரிக்லாண்ட் எப்படியிருக்கிறார் என எழுத்தாளர் தேடிய போது அதே வறுமையில் இன்னும் மோசமான கஷ்டத்தில் இருப்பதை அறிய நேர்கிறது,

டிக் என்ற ஒவியன் ஸ்ட்ரிக்லாண்ட் போலத் திறமையான ஒவியரை காண்பது அரிது என வியந்து பேசுகிறான், அவரைத் தனது மானசீக குருவாக நினைக்கிறான், உடல் நலமற்றுப் போன ஸ்ட்ரிக்லாண்ட்டை தனது வீட்டில் வைத்து பராமரிக்க நினைக்கிறான் டிக், அவன் மனைவி அதை அனுமதிக்க மறுக்கிறாள்.

மனைவியோடு சண்டையிட்டு ஸ்ட்ரிக்லாண்டை தனது வீட்டிற்கு அழைத்து வந்து சிகிட்சை தருகிறான்,

நலம் பெற்ற ஸ்ட்ரிக்லாண்ட் டிக்கின் மனைவியை நிர்வாணமாக ஒவியம் வரைய முற்படுகிறார், அவளோடு பாலுறவு கொண்டுவிடுகிறார், அவள் இனி டிக்கோடு வாழ தனக்கு விருப்பமில்லை என ஸ்ட்ரிக்லாண்ட் உடன் வெளியேறி போய்விடுகிறாள்.

டிக் மனம் உடைந்து போய் அழுகிறான், அப்போதும் அவனுக்கு ஸ்ட்ரிக்லாண்ட் மீது கோபம் வரவேயில்லை, தன்னை நம்பி வந்த டிக்கின் மனைவியை மோசமாக நடத்துகிறார் ஸ்ட்ரிக்லாண்ட், முடிவில் அவள் தற்கொலை செய்து கொண்டு இறந்தும் போகிறாள், டிக் மனம் உடைந்து அழுகிறான், ஆனால் ஸ்ட்ரிக்லாண்ட் அந்த இழப்பினை இயல்பான ஒன்றாக நினைக்கிறார்.

ஸ்ட்ரிக்லாண்ட் வரைந்த தனது மனைவியின் நிர்வாண ஒவியம் ஒரு மகத்தான படைப்பு என்கிறான் டிக், அதை அழிக்காமல் பாதுகாத்து வைக்கிறான்

மனவெறுமையைப் போக்கிக் கொள்ளத் தாஹிதி தீவிற்குச் செல்லும் ஸ்ட்ரிக்லாண்ட் அங்கே அட்டா என்ற பழங்குடி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனது வீட்டுச் சுவர்களில் அற்புதமான ஒவியங்களை வரைந்து தள்ளுகிறார், அந்தத் தீவின் அன்றாட வாழ்க்கையை அரிய ஒவியங்களாக வரைகிறார், முடிவில் அவருக்குத் தொழுநோய் பற்றிக் கொள்கிறது.

யாருமற்ற ஒற்றை மனிதனாக குடிசையில் அடைந்தே கிடக்கிறார், கண்பார்வை பறிபோகிறது, ஆனாலும் ஒவியம் வரைந்து கொண்டேயிருக்கிறார், ஒருமுறை சிகிட்சை தர வந்த மருத்துவர் சுவரில் வரையப்பட்ட ஒவியங்களைப் பார்த்து இப்படியான ஒவியங்களை  கண்டதேயில்லை என வியந்து போகிறார்

முறையான சிகிட்சை இன்றி ஸ்ட்ரிக்லாண்ட் இறந்து போகிறார், அவரது உடலை புதைத்த கையோடு தனது குடிசையை எரித்துவிடச் சொல்கிறார் ஸ்ட்ரிக்லாண்ட், அதன்படி அரிய ஒவியங்கள் கொண்ட அந்தக் குடிசையும் எரிக்கபட்டுவிடுகிறது.

எவராலும் புரிந்து கொள்ளபடமுடியாத, புதிரான வாழ்க்கையை மேற்கொண்ட ஸ்ட்ரிக்லாண்ட்டின் வாழ்வு முடிந்து போகிறது, ஆனால் அதன் பிந்திய ஆண்டுகளில் அவரது ஒவியங்கள் புகழ்பெற துவங்குகின்றன, உலகம் அவரைக் கொண்டாட ஆரம்பிக்கிறது, ஸ்ட்ரிக்லாண்ட்டின் தாஹிதி தீவு வாழ்க்கையைப் பற்றி அவரது மனைவி அறிந்து கொள்வதுடன் நாவல் நிறைவு பெறுகிறது

நாவலின் மையப்பொருள் ஒரு கலைஞனின் வாழ்க்கையை நாம் எப்படி மதிப்பிடுவது, அவனது நிறைகுறைகளை அவனது படைப்புகளுடன் இணைத்து பார்க்க வேண்டுமா, அவனது தனிப்பட்ட துயரங்கள், அவமானம் அவன் படைப்பை எப்படிப் பாதிக்கிறது என்பதே.

ஸ்ட்ரிக்லாண்ட் உறவுகளைப் ஒரு போதும் பெரிது படுத்துவதேயில்லை, தன்னைப் பெரிதாக நினைப்பவனைக் கூட விரட்டிவிடுகிறார், பெண், குடி, பசி இந்த மூன்றுமே அவரை இயக்குகிறது,

தான் ஒரு மோசமான மனிதன், ஆனால் அபூர்வமான கலைஞன் என்று தன்னை உணர்கிறார்,இவரைப் போன்ற மனிதர்களைச் சமூகம் எப்படி நடத்துகிறது, எங்கோ ஒரு தீவிற்குத் தப்பி ஒடி வாழும் போதும் உலகை அவரை நிம்மதியாக ஏன் வாழவிடுவதில்லை, இப்படி நிறையக் கேள்விகள், விவாதங்களை நாவல் முன்வைக்கிறது

நாவலில் வரும் டிக் ஒரு முக்கியமான கதாபாத்திரம், அவனது ஒவியங்கள் நிறைய விற்பனை ஆகின்றன,  ஆனால் தான் ஒரு இரண்டாம்தரமான ஒவியன், தன்னால் ஒரு போதும் ஸ்ட்ரிக்லாண்ட் போல வரையமுடியாது என்பதை டிக் ஒத்துக் கொள்கிறான், டிக்கின் மனைவி ஸ்ட்ரிக்லாண்ட் மீது காதல் கொள்வது அவனது கலையின் மீதான ஆளுமையால் மட்டுமே ஏற்படுகிறது, அவள் பித்துப் பிடித்தவள் போல மாறிவிடுகிறாள்

பால் காகின் (Paul Gauguin) பிரெஞ்சு ஒவியர், ஸ்ட்ரிக்லாண்ட் போலவே காகினும் பங்குவர்த்தகம் செய்திருக்கிறார், ஒரு டேனிஷ் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஐந்து பிள்ளைகள் அவருக்கு இருந்தன, 11 வருஷ குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறினார், பாரீஸிற்குச் சென்று ஒவியர்களுடன் வாழ்க்கை நடத்தினார், அப்போது ஒன்பது வாரங்கள் வான்கோவோடு சேர்ந்து தங்கியிருக்கிறார், வான்கோவை ஒரு ஒவியம் வரைந்திருக்கிறார்,

பெருநகர வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து தப்பித் தீவினை தேடி பயணம் செய்திருக்கிறார், இந்த அனுபவங்களைப் பற்றி Noa Noa என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார், குடிகாரன், கோபக்காரன், முரடன் என வர்ணிக்கபட்ட காகின் தாஹிதி தீவில் வசிக்கும் போது அவர் மீது நீதிவிசாரணை நடைபெற்று அபராதம் விதிக்கபட்டது, பால்வினை நோயின் காரணமாக அவர் உடல் நலிந்து போனார், போதை மருந்துகளும், குடியும் ஒன்று சேர தனது 54 வயதில் இறநது போனார் காகின்

தாஹிதி தீவில் அவர் வரைந்த ஒவியங்கள் இன்றளவும் நவீன ஒவிய உலகில் கொண்டாடப்படும் ஒவியங்களாக இருக்கின்றன, காகினின் பெரும்பான்மை மூல ஒவியங்களை நான் பார்த்திருக்கிறேன், அடர் வண்ணங்களை அப்படிப் பயன்படுத்தவே முடியாது, என்னவொரு வசீகரம், குறிப்பாகத் தாஹிதி பெண்களைக் காகின் வரைந்த்து போல யாரும் வரையவே முடியாது, தாஹிதி தீவிற்குக் கிறிஸ்துவச் சமயம் வந்த விதம், பழங்குடி மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், அன்றாடச் செயல்கள் என அத்தனையும் காகின் ஒவியம் வரைந்திருக்கிறார்

காகின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் சாமர்செட் மாமின் நாவல் ஒவியர்களின் மனதை, உலகை, தீவிரமான மனத்துயரத்தை, அதை தாண்டிய அவர்களின் கொண்டாட்டத்தை, வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தைப் புரிந்து கொள்ள வைக்கிறது.

ஸ்ட்ரிக்லாண்ட் ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரம், இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது

கலைஞன் தனது ஆன்மாவை வேதனைப்படுத்திக் கொண்டே அழகைப் படைக்கிறான், அதை உலகம் அங்கீகரிப்பதில்லை, காரணம் கலைஞனைப் போல கூர்மையான உணர்ச்சிகளும், கற்பனையும் அதை ரசிப்பவனுக்கு இருப்பதில்லை, அழகு இந்த உலகிலே விலைமதிப்பற்ற பொருள், அதை உருவாக்குவது எளிதானதில்லை என்று டிக் ஒரு இடத்தில் கூறுகிறான்

இந்த நாவல் அப்படியானதொரு அழகை கொண்டிருக்கிறது, அதற்காகவே இன்றும் கொண்டாடப்படுகிறது

**

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: