கடலில் ஒருவன்

எனக்கு ராபர்ட் ரெட்போர்டை பிடிக்கும், ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர், அவரது இயக்கத்தில் வெளியான A River Runs Through It எனது விருப்ப பட்டியலில் எப்போதும் இருக்கும் படம், பலமுறை பார்த்திருக்கிறேன்,

நேற்றிரவு ராபர்ட் ரெட்போர்ட் நடித்த All Is Lost படம் பார்த்தேன், கிராவிட்டி படம் பார்த்த போது அடைந்த கிளர்ச்சியும் புத்துணர்ச்சியும் இந்தப் படத்திலும் உருவானது, சென்ற ஆண்டு வெளியான படங்களில் இப்படம் முக்கியமான ஒன்று, ஏன் கவனம் பெறாமல் போனது என்று தெரியவில்லை,

படத்தில் ஒரேயொரு நடிகர் மட்டுமே நடித்திருக்கிறார், ஆம், 106 நிமிசங்கள் ஒடக்கூடிய இப்படத்தில் ராபர்ட் ரெட்போர்ட் ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறார், வேறு நடிகர்கள் எவரும் கிடையாது, கடைசிக்காட்சியில் ஒரேயொரு கை உதவிக்கு நீள்கிறது, அப்போதும் கூட அந்தக் கை யாருடையது என்று காட்டப்படுவதில்லை,

ஒரேயொரு நடிகர் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலான படத்தைத் தாங்கி நிறுத்துகிறார் என்பதே இப்படத்தின் அற்புதம்

இந்தியப்பெருங்கடலில் எதிர்பாராமல் ஒரு பாய்மரப்படகு  கைவிடப்பட்ட கண்டைனர் ஒன்றின் மீது மோதிவிடுகிறது,  அதனால் என்னவிளைவுகள் உண்டாகின்றன என்பதே படத்தின் கதைக்கரு.

இப் படகின் மாலுமியாக ராபர்ட் ரெட்போர்ட் நடித்திருக்கிறார், மொத்த படத்திலும் உள்ள வசனம் ஒரு பக்கம் கூட இருக்காது, தனக்குத் தானே பேசிக் கொள்கிற வசனங்கள் இவை, சில நேரம் வேதனை தாளமுடியாமல் ஆகாசத்தைப் பார்த்து கத்துகிறார், அவ்வளவு தான் மொத்த படத்தின் உரையாடல்

நான் அயர்ந்து போயிருக்கிறேன் என்ற வாசகத்துடன் படம் துவங்குகிறது, படத்தில ராபர்ட் ரெட்போர்டிற்குப் பெயர் கிடையாது, அவரது படகின் பெயர் Virginia Jean. கண்டைனர் மீது மோதி விபத்திற்குள்ளான படகின் ஒருபக்கம் ஒட்டை விழுகிறது, இந்த ஒட்டையின் வழியே கடல் தண்ணீர் குபுகுபுவென உள்ளே புகுந்து  படுக்கை வரை நிரம்புகிறது,

இந்த ஒட்டையை அடைத்துப் படகை மீட்பதற்காக முயற்சி செய்யத்துவங்குகிறார், வயதான ஒற்றை ஆள், பிரம்மாண்டமான கடல், கொந்தளிக்கும் அலைகள், இவற்றின் ஊடே படகை காப்பாற்று முயற்சிகள் நம்மைக் கண்இமைக்காமல் பார்க்க தூண்டுகின்றன,

ஒருவழியாகப் படகின் ஒட்டையை அடைத்துவிடுகிறார், இனி ஒன்றும் பயமில்லை என்று வழக்கம் போலப் படகில் சமைக்கிறார், சாப்பிடுகிறார், குடிக்கிறார், உறங்குகிறார், ஆனால் அவரோடு சமர் செய்ய விரும்பிய இயற்கை அவரை ஒய்வெடுக்க விடுவதில்லை,

இரவில் சூறைக்காற்றுடன் மழை பிடித்துக் கொள்கிறது, படகு ஆட்டம் காணத் துவங்குகிறது, இப்போது படகின் மேல்பக்கம் திறந்து கொள்ள மழை கொட்டுகிறது, மழையை ராபர்ட் ரெட்போர்ட் முதன்முறையாக எதிர் கொள்ளும காட்சி இருக்கிறது, அவரது மனநெருக்கடியில் இருந்து மீட்சி தருவதற்கு வருவது போல மழை துவங்குகிறது,  ஆனால் அம்மழை தன்னை வீழ்த்தி விடத் துடிக்கிறது என்பதை அவர் சில மணி நேரங்களிலே உணர்ந்து கொள்கிறார்,

மழையோடு போராடுகிறார், சிறிய படகு, அதன் உள்ளே நடக்கும் காட்சிகள், எத்தனை அற்புதமான ஒளிப்பதிவு, ஒரு காட்சிக்கோணம் கூட மறுபடி வருவதில்லை, இரவும் மழையும் மங்கிய வெளிச்சமும் முற்றிய இருட்டும் கலந்த ஒளிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்பு மற்றும் சிறந்த இசை, இந்த மூன்றும் படத்தை  தூக்கி நிறுத்துகின்றன

மழையோடு இரவு முழுவதும் போராடி களைத்துப் போய் அயர்ந்து தூங்குகிறார்,

படகு கடலில் மிதந்து கொண்டேயிருக்கிறது, விடிகாலையில் நல்ல வெளிச்சம் உருவாகிறது, கடல் அடங்கியிருக்கிறது, வெளியே வந்து கடலை பார்க்கிறார், அந்தக் காட்சியைப் பார்க்கும் நாமே கடலில் தனியாக இருப்பது போலத் தோன்றுகிறது, அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்கிறார், இயல்பாக சவரம் செய்து கொள்கிறார், உணவு சாப்பிடுகிறார், படகின்  தொலைத்தொடர்பு கருவியை இயக்கி முதலுதவிக்கு முயற்சி செய்கிறார்,

மழைத்தண்ணீர் புகுந்து கருவி பழுதடைந்து போயிருக்கிறது, படகிலும் நிறையச் சேதம், இனி எப்படிக் கரைக்குப் போவது என்று தெரியவில்லை, நாள் முழுவதும் கடலோடு போராடுகிறார்,

கடலில் யாருமேயில்லை, ஒரு கடற்பறவையைக் கூடக் காணமுடிவதில்லை, பெரும்கடல் மட்டுமே நீண்டு கிடக்கிறது, அதை வெறித்துப் பார்த்தபடியே நிற்கிறார், ஆனால் அவர் மனம் தளர்ந்து போகவில்லை, போராடி கப்பலை மீட்க முயற்சிக்கிறார்,

மீண்டும் மழை பிடித்துக் கொள்கிறது, அலைகள் சீறுகின்றன, கப்பலை புரட்டிப் போடுகின்றன,அடிபட்டு ரத்தகாயம் அடைகிறார், உயிருக்காகப் போராடி முதலுதவிக்காக உள்ள காற்று ஊதி மிதக்கும் படகை வெளியே எடுத்து மிதக்கவிடுகிறார், அதில் இரவை கழிக்கிறார்,

இனி தன் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்று உணர்ந்தவர் போலக் குடிநீரை ஒரு கலனில் சேகரிக்கிறார், மீதமிருக்கும் உணவை பாதுகாத்து வைத்துக் கொள்கிறார், மிதக்கும் படகில் ஒற்றை ஆளாக மிதந்து கொண்டிருக்கிறார், அவரது படகு கண்முன்னே கடலில் மூழ்கிப்போகிறது, அமைதியாக, வெறித்த கண்களுடன் அதைப்பார்த்தபடியே இருக்கிறார்,

எங்கே போகிறோம், எப்படிக் கரை சேர்வது, எத்தனை நாட்களுக்கு இந்த உணவு தாங்கும் எதுவும் தெரியவில்லை, தனியாகக் கடலில் மிதக்கிறார், நீருக்கடியில் ஒளிப்பதிவு செய்து எடுக்கபட்ட காட்சிகள் இப்படத்தின் தனிப்பலம், மிதவைப் படகு மிதக்கும் போது மீன்கள் அதன் அடியில் எப்படி சுற்றி வட்டமிடுகின்றன என அவரது துயரத்தின் ஊடாக இயற்கை தன்போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறதை காட்சிபடுத்தியிருக்கிறார்கள்,

குடிநீர் தீர்ந்து போகிறது, உணவு இல்லாமல் மீன்பிடிக்கும் நிலை உருவாகிறது, அவர் உயிரை காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறார், உதவிக்கு வரும் கப்பலின் கவனத்தைத் திருப்ப முயன்று தோற்றுப்போகிற காட்சியில் நம் மனம் உடைந்து போகிறது,

இயற்கையின் பிரம்மாண்டம் குறித்து இவ்வளவு நுட்பமாக, நெருக்கமாகத் திரையில் நாம் கண்டதேயில்லை, அவர் எப்படிக் காப்பாற்றபடுகிறார் என்பது தான் படத்தின் உச்சபட்ச நிகழ்வு,

அந்த நிமிசம் நாமே கடலில் இருந்து காப்பாற்றப்பட்டது போல ஆசுவாசம் கொள்கிறோம்,

விறுவிறுப்பும் வேகமும் கொண்ட படம், ஆனால் படத்தில் வேறு ஒரு சம்பவமும் கிடையாது, திருப்பங்கள் கிடையாது, இயற்கையும் ஒரு மனிதனும் மட்டும் தான், ஹெமிங்வேயின் நாவலான கிழவனும் கடலில் ஒரு மீனோடு சாண்டியாகோ போராடுவான், இதில் அது போன்ற சாகசமும் கிடையாது,

வயதான ராபர்ட் ரெட்போர்ட்டின் ஆகச்சிறந்த நடிப்பு தான் படத்தினைத் தூக்கி நிறுத்துகிறது,J.C. Chandor இப்படத்தை இயக்கியிருக்கிறார்,

கடல்விபத்து பற்றி நிறையப் படங்கள் வெளியாகி உள்ளன, Cast Away போன்ற ஒற்றை நபர் படத்தில் கூட தீவு வாழ்க்கை ஆறுதல் தருகிறது, இப்படத்தில் கடல் காட்சிகள் மட்டுமே இடம்பெறுகின்றன, நாம் கரையைக் காண்பதேயில்லை,

ஒரு மனிதன் கடலில் உயிருக்கு தத்தளிக்கும் போது பிரம்மாண்டமான வணிகக் கப்பல் ஒன்று அவனைக்கடந்து போகிறது, இன்றைய வணிகச்சூழல் கடலையும் முழுமையாகக் கைப்பற்றிவிட்டது, அந்த வணிகர்களுக்குத் தனிநபர்களின் மீது எந்த அக்கறையும் கிடையாது என்பதன் குறியீடு போலவே அந்தக் காட்சி எனக்குப் பட்டது

ஒரு நடிகர், ஒரேயொரு படகு இரண்டையும் வைத்துக் கொண்டு இவ்வளவு பிரம்மாண்டமான படம் தர முடியும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம், இதே போன்ற ஒரு அனுபவத்தைத் தான் கிராவிட்டியும் தந்தது,

கிராவிட்டி படம் இப்படத்தை விட மேலான ஒன்று, காரணம் அதன் ஊடாடும் மனித இருப்பின் அர்த்தம், அர்த்தமின்னை குறித்த உரையாடல்கள், பூமி குறித்த புதிய பார்வை, மற்றும் விண்வெளியை ஒரு சாமானிய மனிதன் உணரச்செய்த விதம், இதுவே கிராவிட்டியை இன்று ஏழு ஆஸ்கார் விருதுகளுக்குச் சொந்தமாக்கியிருக்கிறது,

All Is Lost படம் சொல்லும் செய்தி, மனஉறுதி கொண்ட மனிதன் இயற்கையோடு போராடிக் கொண்டேதானிருப்பான்,வாழ்க்கையின் கடைசி நிமிசம் வரை அவன் போராடுவான் என்பதையே, அதற்குத் தேவை அச்சமற்ற மனநிலை, விடாப்பிடியாத உறுதி, மனவலிமை இவை மட்டுமே, இந்த மூன்று கொண்ட மனிதர்கள் தோற்றுப்போவதில்லை, நெருக்கடியால் எல்லாவற்றையும் இழந்தாலும் மீண்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையயைத் தருகிறது,

அதுவே இப்படத்தை எனக்கு மிகவும் நெருக்கமாக்கியது

•••

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: