ஹசர் தினார்


 


 


 


 


 


 


அவனுக்குப் பெயர் கிடையாது.அவனை விலைக்கு வாங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவனது பெயர் மாறிக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவனை விலைக்கு வாங்கிய வணிகன் ஆயிரம் தினார் விலை கொடுத்து வாங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனை ஹசர் தினார் என்று அழைக்கத் துவங்கினார்கள்.


அந்த வணிகனிடம் அவனைப் போல இருபதுக்கும் மேற்பட்ட இளவயது ஆண்களிருந்தார்கள்.தேசம் முழுவதுமே ஆண் மோகம் கொண்டவர்கள் அதிகமாகியிருந்தார்கள்.அழகான பெண்களை அடைவதை விடவும் ஆண்களோடு உடல் உறவு கொள்வதற்கே ஆசைபட்டார்கள்.


ஹசர் தினாரின் உரிமையாளன் விசித்திரமான பழக்கங்கள் கொண்டவன். அவன் பருவ வயது ஆண்களோடு சல்லாபம் செய்தபடியே குளிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். இதற்காகவே குளியலின் போது எப்படியெல்லாம் களிப்பை உண்டாக்க முடியும் என்பதை அவனிடமிருந்த அடிமைகள் யோசிக்க வேண்டியதிருந்தது.


ஹசர் தினாரின் பால்யம் முழுவதும் வேசைகளோடும், வேலைக்காரப் பெண்களோடுமே கழிந்தது. ஆகவே அவனால் உடல் உணர்ச்சிகளை எளிதாக மீட்டி மேலேற்ற முடிந்தது.அதற்காகவே ஒரு குளியல் தொட்டியை உருவாக்கியிருந்தான்.அதில் வேளைக்கு ஒரு நறுமணமும்,குளியல் முறையையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தான் ஹசர் தினார்.


டெல்லியில் அப்போது சுல்தான் கில்ஜியின் ஆட்சி நடந்தது கொண்டிருந்தது. வேசையர் விடுதிகள் யாவையும் தடை செய்துவிட்ட  கில்ஜி நகரமெங்கும் ஒருபால் புணர்ச்சிக்கான ஆண்களையும் பால்திரிபு கொண்ட அரவாணிகளையும் மட்டுமே அனுமதித்திருந்தார்.விலக்கபட்ட வேசைகள் பிச்சைகாரர்களை விடவும் கேவலமாக பசியோடு தெருவில் அலைந்து திரியத் துவங்கினார்கள். 


இளவயது பையன்களை புணர்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் கேளிக்கை கூடங்கள் நகரமெங்கும் உருவாகின. கில்ஜி வெளிப்படையாகவே தனக்கு பிடித்தமான ஆண்களோடு ஒன்றாக பவனி வரவும் பொது இடங்களில் அவர்களது அந்தரங்க உறுப்புகளோடு விளையாடவும் செய்கின்றவராகயிருந்தார். டெல்லி நகரமே மோகத்தின் கொந்தளிப்பில் இருந்தது.


ஹசர் தினார் தன் பெயரை எப்படியாவது தன்னிடமிருந்து விலக்கி விட வேண்டும் என்ற வெறியோடு இருந்தான். பெயரே இல்லாமலிருந்தால் கூட பரவாயில்லை  இந்த பெயர் ஒரு கறைபடிந்த அடையாளமாக இருந்தது. தனிமையில் அவன் தனக்கு உரிய பெயர்  எதுவாக இருக்கும் என்று யோசித்து கொண்டேயிருப்பான். வேசையின் பிள்ளையாக பிறந்து ஒரு பெயரைக் கூட தனக்கு சொந்தமாக்கி கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்குள் கொதித்து கொண்டிருந்தது


அவனுக்கு சொந்தமானது ஒரு அறை மட்டுமே. அந்த அறையில் இருந்த  கூண்டில் ஒரு குருட்டு கிளி மட்டுமே துணையாக இருந்தது.  அது தான் கற்று வைத்திருந்தசில வார்த்தைகளை திரும்பத் திரும்ப கத்திக் கொண்டேயிருந்தது. சில வேளைகளில் அந்த குருட்டு கிளியை தன் கைகளில் இறுக்கி கொன்றுவிடலாமா என்று ஆத்திரப்படுவான்.


அந்த கிளியும் இல்லாமல் போய்விட்டால் தனது கோபத்தை கொட்டுவதற்கு கூட ஆள் இருக்கமாட்டார்கள் இல்லையா? பகலும் இரவும் அவன்  யார் யார் மீதோ இருந்த வெறுப்பை அந்த கிளியிடம் காட்டிக் கொண்டிருந்தான். கிளி பயந்து கூண்டில் ஒண்டிக் கொண்டிருந்தது.


வணிகனின் வீட்டிலிருந்து அவனுக்கு இரண்டு வேளை பரிமளம் மிக்க உணவு வந்து சேர்ந்துவிடுகிறது. பகல் நேரங்களில் அறையை ஒட்டியிருந்த வீதியை கடந்து செல்லும் ஒசைகளை கேட்டுக் கொண்டிருக்கலாம். அதைத் தவிர வேறு இயக்கம் கிடையாது.  எப்போதாவது படைவீரர்களின் ஏதாவது ஒரு நகரத்தை கைப்பற்ற செல்லும் ஒசை கேட்கும். தானும் அவர்களை போல குதிரையேறி சென்று சண்டையிட முடியாத என்று யோசித்தபடியே இருப்பான் ஹசர் தினார்.


அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உலகின் மீது வெறுப்பும் ரௌத்திரமும் அதிமகாகிக் கொண்டே வந்தது.  தனது நீண்ட தலைமயிரையும் மழிக்கப்பட்ட முகத்தையும் தானே சிதைத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான்.


இந்தூரில் அப்போது எதிர்பாரத கலகம் உருவானது . அதை அடக்குவதற்காக கில்ஜியின் தளபதிகளில் ஒருவன் வந்திருந்தான். ஆறாயிரம் குதிரைபடைகளும் அவனோடு வந்திருந்தன. அந்தப் படைகள் கடந்து போன இரவில் ஹசர் தினார் குதிரைகளின் குளம்படி ஒசையை கேட்டுக் கொண்டேயிருந்தான். விட்டில் பூச்சியைப் போல பிறந்திருந்தால் கூட தன்னிச்சையாக கண்காணாத இடத்திற்கு சென்று விடலாமே என்று நினைத்து கொண்டிருந்தான்.


இரண்டு நாட்களில் கலவரம் ஒடுக்கபட்டிருந்தது. வெற்றி பெற்று திரும்பும் தளபதிக்கு விருந்து கொடுப்பதற்காக வணிகர்கள் போட்டியிட்டார். ஹசர் தினாரின் உரிமையாளன் தளபதியை மகிழ்விப்பதற்காக அவனை அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தான். 


ஹசர் தினாரோடு உறவுகொள்ளும் போது கில்ஜியின் தளபதி தண்ணீர் உஷ்ணமேறி கொதிக்கையில் இடையுறாது குமிழ்கள் தோன்றி மறைவது போல தன் உடலில் காமம்  கொதித்து குமிழ்விடுவதையும். ரத்த நாளங்களில் ஒரு லாகிரி கலந்துவிட்டது போல இச்சை கரைந்து போவதையும் உணர்ந்தான்.


மறுநாளே கில்ஜிக்கு உரியவன் இந்த அடிமை தான் என்று முடிவு செய்வதவனாக அவனை அரசருக்கான பரிசாக தன்னோடு அழைத்து போவதாக உத்தரவிட்டான். வணிகன் ஹசர் தினாரின் கைகளை பிடித்து கொண்டு ஒரு சிறுவனை போல அழுதான். ஹசர் தினாரின் கண்களில் சலனமேயில்லை. அந்த அறையில் இருந்த குருட்டு கிளியை மட்டும் தன்னோடு கொண்டு செல்வதற்காக எடுத்துக் கொண்டான்.


இரண்டு பகலிரவுகள் பல்லக்கில் கடந்து சென்று டெல்லியை கண்டபோது நகரம் பனிமூட்டத்தினுள் முழ்கியிருந்தது.  கிளி அதன் முன்பு அறிந்திராத குளிர் காற்றை உணர்ந்தபடியே தனக்குத் தானே கத்திக் கொண்டே வந்தது. கோட்டைகளும் காவல்வீரர்களின் நடமாட்டமும் தென்பட்டது. விடிகாலை நட்சத்திரம் ஒன்றை உற்று நோக்கியபடியே ஹசர் தினார் டெல்லிக்குள் பிரவேசிக்க துவங்கினான்.


பதினோறு நாட்களுக்கு பிறகு ஹசர் தினார் நறுமணக் குளியல் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசி, வெண்பட்டு உடுத்தபட்டு, சிகையில் மயிலிறகு சூடி  தோளில் குருட்டு கிளி அமர்ந்து கொள்ள கில்ஜியின் படுக்கையறைக்கு அனுப்பி வைக்கபட்டான். பிரம்மாண்டமான அந்த அறையில் நான்கு முக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அறைகாவலர்களாக கூட பதின் வயது சிறுவர்களே அமர்த்தபட்டிருந்தார்கள்.


டெல்லி நகரமெங்கும் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. அத்தோடு மது கடத்துபவர்கள் உயிரோடு புதைக்கபட்டார்கள். ஆகவே அரண்மனையிலும் மது தடை செய்யப்பட்டிருந்தது. மாறாக போதையேற்றும் புகை குழாய்களும், கல்பங்களும் புழக்கத்திலிருந்தன.


ஹசர் தினார் அந்த அறையின் படுக்கையில் அமர்ந்தபடியே உறக்கமற்று காத்துக் கொண்டிருந்தான்.கிளி பயத்தில் மெதுவான குரலில் கத்திக் கொண்டிருந்தது.  அடிமைகளில் ஒருவன் வெள்ளி சரிகை சுற்றப்பட்ட கோந்து போன்ற  கல்பம் ஒன்றை அவனிடம் தந்து ருசிக்க சொன்னான். அதை நாவிலிட்டதும் உடலில் எறும்புகள் அப்பிக் கொள்வதை போல உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான்.


கொஞ்சம் கொஞ்சமாக உடல் அவிழ்ந்து வெண்ணெய் உருகுவது போலிருந்தது.ஹசர் தினார் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்த போது அறையில் முன்பு இல்லாத சுகந்தம் நுழைந்தது. கில்ஜி அறையில் பிரவேசித்திருந்தார். அவர் தன் இருபுறமும் இரண்டு ஆண்களை அணைத்தபடியே நடந்து வந்தார். அவர்கள்  பிறந்தமேனியாக இருந்தார்கள். 


ஹசர் தினாரின் அருகில் வந்த கில்ஜி அவனது ஆடைகளை அவிழ்த்து எறிந்துவிடும்படியாக சொன்னார். பிறகு அவனிடம் தன்னுடைய உடலில் அவனுக்கு பிடித்தமான இடம் ஒன்றை தேர்வு செய்து தொடும்படியாக சொன்னார். அவரோடு இருந்த அடிமை ஆண்கள் பரிகாசமாக சிரித்தார்கள். 


ஹசர் தினார் தனது சிகையிலிருந்த மயிலிறகை கையில் எடுத்தபடியே அவரது உடலில் மெல்ல ஊர்ந்து செல்ல துவங்கினான். குருடன் தொலைந்து போன தன் கைப்பொருளை தேடுவதை போல மிக கவனமாக உடலின் நரம்புகளைத் தேட துவங்கினான். கில்ஜி சில நிமிசங்களில் அங்கிருந்த மற்ற அடிமைகளை அறையை விட்டு வெளியேறும்படியாக ஆணையிட்டார். அதன் பிறகு இரண்டு பகலிரவுகள் கில்ஜி அந்த அறையை விட்டு வெளியேறி வரவில்லை. வெளிச்சம் வராத அறையில் குருட்டு கிளி மட்டுமே எதையோ கத்திக் கொண்டேயிருந்தது.


அதன் பிறகு கில்ஜியின் நடவடிக்கைகளில் முன்பு இல்லாத மாற்றங்கள் துவங்கின.அவர் காதலில் விழுந்தவரை போல சதா ஹசர் தினாரின் கைகக்குள் தன்னை ஒப்பு கொடுக்கவே துடித்து கொண்டிருந்தார். ஹசர் தினார் தனக்கு என்று தனியாக ஒரு மாளிகை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான். அதன்படியே நடந்தது.


அவனது மாளிகை எங்கும் அரவாணிகள் காவல் ஆட்களாக நியமிக்கபட்டார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் இரவில் அவன் தனியே குதிரையில் சுற்றியலைய துவங்கினான். கண்ணில் தென்படும் யாவையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்ற ஆவேசம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. கில்ஜி அவனது மோகத்திலிருந்து விடுபட முடியாதவராகயிருந்தார்.


ஹசர் தினார் மீதான பொறமை அரண்மனை எங்கும் பீறிட துவங்கியது. பட்டத்து ராணி உள்ளிட்ட யாவரும் அந்தப் புதிய அடிமை பற்றி ரகசியமாக பேசிக் கொண்டார்கள். ஆனால் எவரும் ஹசர் தினாரை நேர் கொண்டு கண்டதேயில்லை. கில்ஜியின் தர்பாருக்கு ஒரு நாள் ஹசர் தினார் கவச உடையணிந்து கம்பீரமாக அவரோடு கைகோர்த்து வந்தபோது அரண்மனையில் இருந்த பெண்களில் பலரும் தங்களை மறந்து அவனைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.


அரண்மனை அதிகாரம் யாவும் தன் கைவசமான போதும் அந்த பெயர் தன்னை விட்டு போக மறுப்பது ஹசர் தினாருக்கு எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. உடனடியாக அவன் தனக்கு ஒரு பெயரை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டான்.அதற்காக அவன் சில பெயர்களை தேர்வு செய்தும் வைத்திருந்தான்.  ஆனால் தன் முதுக்கு பின்னே பல நுறு கண்கள் தன்னை பரிகசரித்து கொண்டிருப்பதையும் வெளிப்டையாகயே அவனை பலரும் ஹசர் தினார் என்று சொல்லி கேலி செய்வதையும் தவிர்க்க முடியவேயில்லை.


தன்னை நிரூபித்து கொள்வதற்காக அவன் காத்து கொண்டேயிருந்தான். கில்ஜியின் உடலில் மேகநோய்கான அறிகுறிகள் தோன்ற துவங்கின. சுல்தான் நோயை கண்டு பயப்பட துவங்கினார். அரண்மனையில் இருந்த தன் படுக்கை அறையை விட்டு வெளியேறி வர மறுத்து உள்ளேயே அடங்கியிருந்தார்.


ஹசர் தினார் தனக்காக கதவுகள் திறக்கபடுகின்றன என்பதை உணர துவங்கினான். அவன் சுல்தானிடம் தன்னை அரசபிரதியாக அறிவிக்க வேண்டும் என்றான்.  சுல்தானின் மோகம் அனுமதித்தது. அதன் சில மாதங்களில் அரண்மனையில் ஹசர் தினாரை எதிர்ப்பவர்கள் பலரும் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள்.


கறுப்பு நிற அராபிய குதிரை ஒன்றில் போர் வீரனை போல உடையணிந்தபடியே பகலிரவாக ஹசர் தினார் டெல்லியின் வீதிகளில் சுற்றியலைந்து கொண்டிருந்தான். அவன் கூடவே குருட்டு கிளியை வைத்திருந்தான்.ஹசர் தினாரின் ஆவேசம் கிளியிடம் பயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அது பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி கொண்டு விட்டது


ஹசர் தினாருக்கு டெல்லி நகரமே  ஒரு பிரம்மாண்டான  கழிப்பறையைப்   போல அசூயை ஊட்டுவதாகயிருந்தது. அவன் தன் உடலில் இருந்த மென்மையை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க துவங்கினான். பாறையை போல அவனது உடல் உரமேற துவங்கியது.


அரண்மனை எங்கும்  அரவாணிகளை முக்கிய பதவியில் அமர்த்தினான். அதிகாரம் அவனது விளையாட்டுப் பகடை போலானது.  அதன் பிறகு அவன் சுல்தானிடம் தனக்கு ஒரு பெயரை சூட்டுமாறு யாசித்தான்.  நோயும் சாவின் மீதான பயமும் கொண்ட கில்ஜி அவனுக்கு ஒரு புதிய பெயரை வழங்கினார்.  மாலிக் கபூர் அதாவது எஜமானனுக்கு அடிமை என்ற அந்த புதிய பெயர் அவனுக்கு முன்பு இல்லாத அதிகாரத்தை உருவாக்கியது.


அவன் ஒராயிரம் தடவை தன் பெயர் மாலிக்கபூர் என்று குருட்டு கிளியிடம் உளறிய போதும் அது அந்த பெயரை திரும்ப சொல்லவேயில்லை. அவன் ஒரேயொரு முறை அந்த கிளி பேசினால் கூட பரவாயில்லை என்று ஆத்திரப்பட்டு அதை வீசி எறிந்தான். அடிப்பட்டு விழுந்த போது அந்த கிளி கத்தவேயில்லை. 


மாலிக் கபூர்  குனிந்து அந்த கிளியை கையில் எடுத்து  தடவிக் கொடுத்தபடியே உன்னை போலவே நானும் என் மனதை குருடாக்கிவிட்டேன். இனி பேசுவதற்கு எனக்கும் எதுவுமில்லை என்றபடியே  தன் மாபெரும் குதிரைபடையோடு டெல்லியை விட்டு புறப்பட்டான்.கண்ணில்படும் நகரங்களையும், தேசங்களையும் சூறையாடியபடியே அந்த அடிமையின் ரத்தம் முன்னறி சென்று கொண்டிருந்தது.


மூர்க்கமும், ஆவேசமும் கொண்ட போர்வீரனாக உருமாறிய மாலிக் கபூர் பல்லாயிரம் பேர்களை கொன்று குவித்த போதும் அவனது மனது சாந்தியடையவேயில்லை. மாலிக் கபூர் என்ற பெயர் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவதை அவன் ரசிக்க துவங்கினான். அந்த பெயர் தன்னோடு ஒட்டிக் கொண்டு விட்டது என்று சந்தோஷமடைந்தான்


எண்ணிக்கையற்ற வெற்றிகளுக்கு பிறகு டெல்லி திரும்பிய மாலிக்கபூர். ஒரேயொரு இரவு கில்ஜியோடு சேர்ந்து உறங்க விரும்பினான். கில்ஜியின் உடலில் நோய் முற்றியிருந்தது.  சாவின் ரேகைகள் அவர் உடலில் ஒட துவங்கியிருந்தன. அறையில் இப்போது சுகந்தமேயில்லை. மரணத்தின் வாசனை மட்டுமே கமழ்ந்து கொண்டிருந்தது,


அவனை தழுவதற்காக கைகளை அருகில் நீட்டபயந்து நின்ற கில்ஜியின் உதடுகளை மாலிக்கபூர் தன் வலிமையான முரட்டு உதடுகளால் கவ்வி முத்தமிட்டான். அவன் கையிலிருந்த மதுக்கோப்பை  கில்ஜியின் உதடுகளை தொட்டது. கில்ஜி அதை விலக்கினார். குழந்தைக்கு மருந்து ஊட்டுவதை போல கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை புகட்டினான். சில நிமிசங்களில் கில்ஜியின் உடல் தளர்ந்து சரிந்தது. இறந்து கிடந்த கில்ஜியின் உடலை அணைத்தபடியே ஒரு இரவு மிக நன்றாக உறங்கினான் மாலிக் கபூர்.


விடிந்து எழுந்த போது ஹசர் தினார், ஹசர் தினார் என்ற குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டு விழிக்க அவனது குருட்டு கிளி அந்த பெயரை திரும்ப திரும்ப  கத்திக் கொண்டேயிருந்தது. ஆத்திரத்தில் அவன் தன் வாளால் கிளியின் தலையை இரண்டாக துண்டித்தான்.  அப்போதும் அந்த குரல் அரண்மனை சுவர்களுக்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருந்தது போலவே இருந்தது.


நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பெயர் திரும்பவும் தன்னிடம் வந்து ஒட்டிக் கொண்டதை போல உணர்ந்த ஹசார் தினார் தன்னை மீறி வெடித்து அழுதான். அந்த கேவல் ஒசையை கேட்க அறையில் யாருமேயில்லை.  ஹசார் தினார் என்ற அவனது பெயரை அறிந்த குருட்டு கிளியும் இறந்து போன பிறகு அப்பெயர் அவனை விட்டு நிரந்தரமாக விலகி போக துவங்கியது.


அதன் பிறகு அவன் தன் சாவின் கடைசி நிமிசம் வரை மாலிக் கபூராகவே வாழ்ந்து இறந்தான்.


**


- காலம் இதழில் வெளியான சிறுகதை.Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: