மூவர் கோவில்.


 


 


 


 


புதுக்கோட்டையிலிருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் குடுமியான்மலை  மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது கொடும்பாளுர். சோழ சரித்திரத்தின் புகழ் பெற்ற ஊர் .கொடும்பாளுரில் நடைபெற்ற யுத்தங்கள் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.


இங்கே இரண்டு முக்கிய கோவில்கள் உள்ளன. வேளிர் மரபின் மிச்சமாக உள்ள மூவர் கோவில் அதில் ஒன்று. மற்றது முசுகுந்தேஸ்வரர் கோவில். இரண்டுமே அதன் கலை எழிலுக்காக மிகவும் பிரசித்தி பெற்றவை.


புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தமிழகத்தில் அதிகமான புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன.குறிப்பாக திருமயம் கோட்டை ,குடுமியான்மலை. நார்த்தா மலை சமண படுகைகள், சித்தன்னவாசல் குகை ஒவியங்கள், சோழர் கால கோவில்களான திருக்கட்டளை,கலியபட்டி.குன்னாந்தார் கோவில், ஆதனக்கோட்டை. கீழாநிலை, மலையடிபட்டி, திருவரங்குளம், சமணர்களை கழுவேற்றம் செய்த ஒவியங்கள் உள்ள ஆவுடையார் கோவில், என்று காலத்தின் அரிய காட்சிக் கூடமாக கண்முன்னே நிற்கின்றன.பலமுறை இந்த மாவட்டத்தினுள்ளாகவே சுற்றியலைந்திருக்கிறேன். குறிப்பாக இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகள் வியக்கவைப்பவை. சில வாரங்களுக்கு முன்பாக திருச்சி சென்றிருந்தபோது ஒரு நாள் முழுவதும் புதுக்கோட்டையைச் சுற்றிய இடங்களில் சுற்றியலைந்தேன்.


கொடும்பாளுர் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது.கோவிலன் கண்ணகியோடு மதுரைக்கு நடந்து செல்லும் வழியில் கொடும்பை என்ற இடத்தைக் கடந்து போனதாக பாடல் குறிப்பிடுகிறது.ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியை வேளிர்மன்னர்கள் ஆட்சி செய்ததாக  சான்றுகள் கூறுகின்றன. நாயன்மார்களில் ஒருவரான இடங்கழிநாயனார் கொடும்பாளுரைச் சேர்ந்தவரே.குறுநில மன்னர்களாக அறியப்பட்ட வேளிர் மரபினரைப் பற்றி அதிகமான சரித்திர குறிப்புகள் இல்லை. சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். பாண்டியர்களுடன் சண்டையிட்டுள்ளனர் என்பது போன்ற வெளிப்படையான சரித்திரச் சான்றுகளைத் தவிர அவர்களின் நுண்கலைகள் பற்றியோ, வேளிர் மரபின் தனித்துவம் பற்றியே அதிகம் இன்றும் அறியப்படவில்லை.


பொதுவாக குறுநில மன்னர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுவிடும் இவர்கள் ஒரு பக்கம் சோழ நாடு மறுபக்கம் பாண்டி நாடு என்று இருபெரும் அரசுகளின் இடையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இவர்கள் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள் என்றும் யாதவர்கள் என்று பட்டம் கொண்டவர்கள் எனவும் அறியப்படுகிறார்கள்.


பூதி இருக்கு வேளிர் என்ற மன்னரால் கட்டப்பட்ட மூவர் கோவில் தனித்துவமான அழகுடையது.இருக்கு வேளிர் மன்னர்கள் பற்றிய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. தன்னுடைய இரண்டு மனைவிகளான வரகுணவதி மற்றும் கற்றலைபிராட்டியார் விருப்பத்திற்கு ஏற்ப இந்தக் கோவில்களை உருவாக்கியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.


இருக்குவேளிர் மன்னர் சுந்தர சோழனின் காலத்தை சேர்ந்தவர் என்று சில வரலாற்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். சிலர் முதலாம் ஆதித்ய சோழன் காலத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களின் கட்டிடகலை மரபானது சோழர்களின் ஆரம்ப கால கற்றளிகளின் வடிவத்தையே நெருக்கமாக கொண்டிருக்கிறது.


மூன்று கோவில்கள் ஒன்று இணைந்து ஒரே மகாமண்டபம் காணப்படுகிறது. மகர தோரணம். முப்பது அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் உள்ள கோபுரம். அதில் காணப்படும் சிவன் உமையின் திருவுருவங்கள். கூத்தாடும் தேவகணங்கள். இன்று இடிபாடுகளாக காணப்படும் இந்த கோவிலை சுற்றிலும் பதினைந்து சிறிய கோவில்கள் இருந்திருக்கின்றன.ஒவ்வொன்றும் ஒரு துணைதெய்வத்திற்கானது.


குறிப்பாக இக்கோவிலில் உள்ள பிட்சானகோலம், மற்றும் அர்த்தநாரீஸ்வர கோலம், கஜசம்ஹார மூர்த்தி, காலாரி , சவுரி வீசும் பெண் மற்றும் இந்திரன்  சிற்பங்கள் சிறப்பானது


தற்போது அகழ்வாய்வு துறையின் கீழ் உள்ள இந்தக்கோவில் அருகிலே இடிந்தும் சிதைந்தும் போன பழங்கால சிற்பங்கள் பாதுகாப்பதற்கான காப்பகம் ஒன்றும் காணப்படுகின்றது.அந்த காப்பகத்தில் தலையற்று போன சிற்பங்களையும் புத்த பிரதிமைகளையும் காணும் போது சிற்பக்கலையின் உன்னத சாட்சிகள் அவை என்று தோன்றியது.இந்தக் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் மிகப்பெரிய நந்தி ஒன்று காணப்படுகிறது. அதன் அருகில் கோவில்கள் எதுவுமில்லை. எதற்காக நந்தி வெட்டவெளியில் இருக்கிறது என்று தெரியவில்லை. விசாரித்த  போது அந்த சிவ ஆலயம் ஒன்றிற்காக கொண்டு செல்லப்படுவதற்காக எடுத்து வரப்பட்டு வழியில் நந்தி வைக்கபட்டுவிட்டது என்கிறார்கள்.


ஆனால் இந்த நந்தி உள்ள இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முசுகுந்தீஸ்வரர் ஆலயம் காணப்படுகிறது. அதற்கும் இந்த நந்திக்கும் என்ன உறவு என்று தெரியவில்லை. ஆனால் தஞ்சை பெரிய கோவிலின் நந்தியை போல மிக அழகாகவும் திருத்தமாகவும் உள்ளது இங்குள்ள நந்தியுருவம்.


மூவர் கோவிலின் பின்னால் இடிபாடுகள் காணப்படுகின்றது ஐவர் கோவில். இதுவும்வேளிர் மரபை சேர்ந்ததே. ஆனால் முழுமையான கோவிலாக இவை காணப்படவில்லை.புதையுண்டசுற்றுசுவர்களும்இடிபாடுகளுமேகாணப்படுகின்றன.நான் சென்றிருந்த பகல்வேளையில் பார்வையாளர்களாக இருந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே. அவர்களும் இங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது போல அவசர அவசரமாக புகைப்படம் எடுத்துக் கொண்டு பக்கத்தில் ஏதாவது ரெசார்ட் இருக்கிறதா என்று விசாரித்து கொண்டிருந்தார்கள்


வேளிர் மரபின் கலைச் சின்னமாக உள்ள மூவர்கோவில் ஆயிரம் வருடப் பழமையானது. புதுக்கோட்டையைச் சுற்றிலுமாக இரண்டு நாட்கள் பார்ப்பதற்கு இடங்கள் உள்ளன. மலையேறுவதும், இடிபாடுகளில் நடந்து திரிந்து சிற்பங்களையும் கலைவேலைப்பபாடுகளையும் காணும் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும்.


தமிழக வரலாற்று சாட்சிகள் நம் கண் முன்னே தான் இருக்கின்றன. தேடிச் சென்று காண்பதற்கு தான் நமக்கு விருப்பமில்லை.அல்லது தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.


பாடப்புத்தகங்களுக்கு வெளியே சரித்திரத்திரத்தை அறிந்து கொள்வதற்கு எளிய வழி இது போன்ற பயணங்களே.
**


 


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: