குயிலியேட்டா மசினா


 


 


 


 


சில முகங்கள் திரையில் தோன்றியதும் நம் கவனம் முழுதுவம் அவர்களில் மீது தன்னியல்பாக குவிந்துவிடும். குறிப்பாக கறுப்பு வெள்ளைப்படங்களின் கதாநாயகிகளாக நடித்தவர்களில் பலரும் தனித்துவமான முகப் பொலிவும் உடலமைப்பும் கொண்டவர்கள். அந்த முகங்கள் மொழி கடந்து பேசக்கூடியவை.


அப்படி என்னை இன்று வரை வசீகரப்படுத்திக் கொண்டிருக்கும் வெகு தனித்துவமான பெண் முகம் குயிலியேட்டா மசினாவுடையது..( Giulietta Masina) உலகப்புகழ் பெற்ற இயக்குரான பெலினியின் மனைவியும் கான்ஸ் விருது பெற்ற நடிகையுமான குயிலியேட்டா இத்தாலியின் சிறந்த நடிகைகளில் ஒருவர்.


இவர் கதாநாயகியாக நடித்த லாஸ்ட்ரடா (La strada ) படத்தை இதுவரை முப்பது முறைகளுக்கும் மேலாகப் பார்த்திருப்பேன். பெலினி இயக்கிய இந்தப் படம் ஆஸ்கார் விருது பெற்றது. உலகின் சிறந்த படங்கள் வரிசையில் எப்போதுமே முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெறும் உன்னத திரைப்படமிது.இப்படத்தில் ஆன்டனி குயின் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.


 
குயிலியேட்டாவிற்குகோமாளியின் சாடை கொண்ட உடல்வாகு. துயரமும் சிரிப்பும் ஒன்று கலந்த குழந்தமை மறையாத முகபாவம்.வசீகரமான கண்கள்.முன்னால் விழும் கத்தரிக்கப்பட்ட கேசம். மெல்லிய உதடுகள், ஆண்களைப் போன்ற உடைகள். சார்லி சாப்ளின் பெண் வேஷமிட்டால் எப்படியிருப்பாரோ அப்படியொரு தோற்றம்.மசினாவைப் பார்த்த மாத்திரத்தில் அவள் மீது நம் முழுகவனமும் போய்விடுகிறது.


 
பார்வையாளர்களை தன்கட்டுக்குள் வைத்திருக்கும் மாய ஈர்ப்பு அவளிடமிருந்தது. பசியில் அவள் வாடும் போது, அடிவாங்கி ஒடும்போது காதலுக்காக ஏங்கும் போது அவள் கூடவே பார்வையார்களும் சேர்ந்து உணர்ச்சிவசப்படுகிறார்கள். மசினா அதுவரை திரையில் கண்டிருந்த நடிகைகளிடம் காணப்படும் உடல் கவர்ச்சியை முற்றிலும் விலக்கி நம்மை கவர்கிறார் என்பதே அவரது சிறப்பம்சம்.


காதல் காட்சிகளில் நெருக்கமாக அவள் உடல் வெளிப்படும் போது கூட பார்வையாளன் கிளர்ச்சியடைவதில்லை. மாறாக எங்கே அவள் ஏமாற்றப்பட்டுவிடுவாளோ என்று கலக்கமே அடைகிறான். மசினா படங்களில் நடித்த வேஷங்கள் யாவும் எளிய மக்களின் பிரதிபலிப்புகளே.வேசையாக, புறக்கணிக்கப்பட்ட மனைவியாக, ஆவிகளுடன் பேசும் அப்பாவி பெண்ணாக, நாடோடியோடு ஊர் சுற்றும் ஏழைப்பெண்ணாக என அவள் ஏற்ற வேஷங்கள் பொதுபார்வையாளர்களின் மனதில் கைவிடப்பட்ட இளம்பெண்ணின் அடையாளப் பிம்பமாக உருக் கொண்டு விட்டதுசாப்ளினை நினைவூட்டுவது போல அவள் செயல்கள் இருந்த போதும் அவள் நினைவூட்டுவது அதிகமும் சர்க்கஸ் கோமாளிகளையே. சர்க்கஸ் கோமாளி வித்தை அறிந்தவன். ஆனால் அறியாதவன் போல தடுமாறி கிழே விழுந்து சிரிக்க வைக்க வேண்டும். கோமாளி முட்டாள் அல்ல, ஆனால் அவன் விரும்பி முட்டாள் போல நடந்து கொள்கின்றவன்.


அத்தோடு அவன் வலியால் அழுவதில்லை மாறாக ஒவ்வொரு முறை அடிவாங்கும் போது சிரிக்கவும், துள்ளி குதிக்கவுமே செய்கிறான். மசினா அதேயே செய்கிறாள். அவள் வேசையாக அலைந்து திரியும் போது கூட அவள் மீது நாம் கொள்வது பரிதாப உணர்ச்சி மட்டுமே.  அவள் செயல்களில் ஆழமாக மறுப்பு வெளிப்படுகிறது. அது நகைச்சுவையான தொனியில், கேளிக்கை போன்றே அடையாளப்படுகிறது.


லாஸ்ட்ரடா  1954 ஆண்டு வெளியானது. இப்படம் ஒரு ஜிப்சிக்கும் அவனால் விலைக்கு வாங்கபட்ட வேலைக்கார பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றியதே. வலுவான தன் உடலால் சாகசம் செய்து காட்டி பிழைப்பு நடத்தும் ஜாம்பினோ என்ற ஜிப்சி தனது நிகழ்ச்சியில் உதவி செய்வதற்காக ஜெல்சோமினா என்ற இளம்பெண்ணை வறுமையில் வாடும் அவளது குடும்பத்திற்கு சில நாணயங்கள் கொடுத்து விலைக்கு வாங்குகிறான்.


தன்னுடைய உடம்பில் இரும்புச் சங்கிலிகளைக் கட்டிக் கொண்டு அதை தன் உடற்பலத்தால் முறித்து காட்டுவதே அவன் சாகசநிகழ்ச்சி.அவன் சாகசம் செய்யும்போது பார்வையாளயர்களிடம் காசு வசூல் பண்ணுவதும், ஜாம்பினோவிற்கு உதவி செய்துவம் ஜெல்சோமினாவின் வேலை.ஜாம்பினோ மிகவும் முரடன்.எவரையும் அடித்து துன்புறுத்தக் கூடியவன்.அவனிடம் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறாள் ஜெல்சோமினா. அவள் தன்னால் ஆடவும் பாடவும் முடியும் என்று இசைக்கருவிகளை கூட வாசித்துக் காட்டுகிறாள். அது ஜாம்பினோவை வசீகரிக்கவேயில்லை. அவளை ஒரு பெண் என்பதைக் கூட மறந்து ஜாம்பினோ அவள் முன்பாகவே வேசைகளுடன் இரவைக் கழிக்கிறான்.


 
தான் ஏன் கூண்டில் அடைக்கபட்ட பறவை போல அவனிடம் மாட்டிக் கொண்டுவிட்டோம் என்று புரியாமல் தடுமாறுகிறாள் ஜெல்சோமினா.இவர்கள் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்கு பழைய வேன் ஒன்றில் பயணம் செய்தபடியே இருக்கிறார்கள். அப்படி செல்லும் வழியில் சர்க்கஸை சேர்ந்த ஒரு முட்டாள் விதூஷகனை சந்திக்கிறாள்.அவன் ஜாம்பினோவை விட்டு அவனோடு வந்துவிடும்படியாக வற்புறுத்துகிறான்.வெளியில் பெரிய உலகம் ஒன்று அவளுக்காக காத்திருக்கிறது என்று நம்ப வைக்கிறான்.


 
இதனால் ஆத்திரமான ஜாம்பினோ அந்த சர்க்கஸ் முட்டாள் மீது விரோதம் கொண்டு அவனைச் சண்டையிட்டுக் கொல்கிறான்.அந்த சம்பவம் ஜெல்சோமினாவை உலுக்கிவிடுகிறது. அவள்  ஜாம்பினோவை விட்டு விலகிப் போக முயற்சிக்கிறாள்.


அதை உணர்ந்த ஜாம்பினோ அவளை சாலையோரத்தில் தனித்துவிட்டு தன் பயணத்தைத் தொடருகிறான். நீண்ட நாட்களுக்குப் பிறகு கைவிடப்பட்ட அவள் இறந்து போனதாக வந்த தகவலை அறிந்து தன்வாழ்நாளில் முதல் முறையாக தன் தவறுகளை உணர்ந்து அவளுக்காக கரைந்து அழுகிறான் ஜாம்பினோ.


ஆன்டனி குயின் நடித்த படத்திலே மிகச் சிறந்தது இதுவே.இதில் ஜெல்சோமினாவாக மசினா குயிலியேட்டா நடித்திருக்கிறார். முரடனுக்கு பயந்து வாழ்வது.பயத்தில் அவனோடு பேச முடியாமல் தடுமாறுவது,யாரும் அறியாமல் அவனது இசைக்கருவியை எடுத்து வாசிப்பது. தான் ஒருபெண் என்பதை அவனுக்கு புரிய வைக்க முயற்சிப்பது.அவனிடமிருந்து தப்பியோட முயற்சிக்கும் போது அவள் கொள்ளும் மனவலிகள் என்று குயிலியேட்டாவின் மிகசிறந்த நடிப்பு படத்தை உன்னதமாக்கியது.இந்த படத்தின் இசை மிக அற்புதமானது. நினோ ரெடோவின் தீம் இசை படத்தின் அடிநாதம் போல நம் மனதில் ஒடிக் கொண்டேயிருக்க கூடியது. பெலினி அந்த இசைத்துணுக்கை மிகசரியாக பயன்படுத்தியிருப்பார்.


இந்த படத்தை உருவாக்குவதற்கு தூண்டுகோலாக இருந்தது ரோம் நகருக்கு வரும்சாலையில் பெலினி எதிர்க்கொண்ட ஒரு சர்க்கஸ்காரனே. பழுதாகிப்போன அவனது வண்டியை அவனது மெலிந்த உடல் கொண்ட மனைவி தள்ளமுடியாமல் தள்ளியபடியே பின்னால் ஒடிவருவதை கண்டதும் இது தான் தங்கள் படத்தின் முக்கிய காட்சி என்று முடிவு செய்திருக்கிறார் பெலினி. இந்த படம் வெனிஸ் திரைப்படவிழாவில் தங்கசிங்கம் விருது பெற்றது.


மசினா ரோமில் பிறந்தவர்.நாடகங்களில் நடிப்பதில் சிறுவயதிலே ஈடுபாடு கொண்டவர்.அத்தையின் வீட்டில் வளர்ந்தவர் என்பதால் வறுமையான சூழலில் படிக்க வேண்டிய நிர்பந்தமிருந்தது.ரேடியோ நாடங்களில் பங்கேற்றத் துவங்கினார்.அப்போது பெலினி எழுதிய ரேடியோ நாடகம் ஒன்றில் பணியாற்றும் போது அவருக்கும் பெலினிக்கும் காதல் உண்டானது.ஒரு வருடத்தில் பெலினி மசினோவைத் திருமணம்செய்து கொண்டார்.1948 சின்னஞ்சிறு வேடங்களில் நடிக்கத் துவங்கி அதன்பிறகு ராபர்ட்டோ ரொசலினி படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கத் துவங்கினார்.இவரை உலகப்புகழ்பெற்ற நடிகையாக்கியது பெலினியின் லாஸ்ட்ரடா.இத்தாலிய சினிமாவின் முக்கிய ஆளுமையாக இருந்த மசினோ 1994 ஆண்டு காலமானார்.பெலினியின் இயக்கத்தில் இவர் நடித்த Nights of Cabiria, Juliet of the Spirits, Ginger and Fred  படங்கள் சிறப்பானவை. குறிப்பாக நைட்ஸ் ஆப் காப்ரியாவில் வேசையாகநடித்திருக்கிறார்.அவரது     முகபாவமும்,அலைச்சல்மிக்கபொழுதுகளும் கனவும் நினைவுமாக உழலும் மனதுமாக அவரைத் தவிர வேறு எவருமே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியாது என்பது போன்ற சிறப்பான பங்களிப்பு செய்திருப்பார்பெலினிக்கும் இவருக்குமான காதல் விசித்திரம் நிரம்பியது.பெலினி பெரும்பான்மையான நேரங்களில் இவரை சர்க்கஸில் உள்ள பெண்களைப் போல உடையண சொல்லி அவளோடு தானும் நடனமாடுவார். பெலினியின் முக்கிய விருப்பங்களில் ஒன்று சர்க்கஸ் மற்றும் விசித்திரமான உடல் அமைப்பு கொண்ட மனிதர்கள். அது அவரது படங்களில் தொடர்ந்து இடம் பெற்றன. பெலினி விசித்திர கனவுகளை உருவாக்க கூடியவர்.


பெலினி எப்படி நடிகர்களை தேர்வு செய்வார் என்பதை பற்றிய ஒரு ஆவணப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.இரண்டு கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தவற்காக அவர் இரண்டாயிரம் விசித்திரமான தோற்றம் உள்ளவர்களை தனது அலுவலகத்திற்கு வரச் செய்திருப்பார். அவர்கள் அத்தனை பேரையும் அவருக்குப் பிடித்து போய்விடவே எல்லோரையும் படத்தில் பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்வார்.


இயல்பில் பெலினி ஒவியர் என்பதால் முகங்களை உடனே சித்திரமாக தீட்டி அதில் என்ன மாற்றங்கள் செய்ய முடியும் என்பதை முடிவு செய்துவிடுகிறார். பெரும்பான்மையான காட்சிகளை அவர் சித்திரமாக வரைந்து காட்டிவிடுவதால் அவரது திரைக்கதை என்பது பெரிதும் காட்சிஒவியங்களால் ஆனதே.


அப்பாவிதனமும் நேசிக்கபடாத துயரமும்,எதையும் சந்தித்து அடிபடும் மனவுறுதியும்,தொடர்ந்து காரணமில்லாமல் புறக்கணிக்கபடும் அவலமுமாக திரையில் குயிலியேட்டா வெளிப்படுத்தியகதாபாத்திரங்கள் திரை வரலாற்றில் மறக்கமுடியாதவை.பெலினியின் படங்கள் குயிலியேட்டாவை மனதில் கொண்டே உருவானவை என்கிறார்கள் விமர்சகர்கள்.


நகைச்சுவை நடிகைகள் என்றாலே  வசீகரமற்றவர்கள் என்ற பொதுகருத்தே பலகாலமாக உள்ளது.அத்தோடு நகைச்சுவை நடிப்பு என்பது இரண்டாம்பட்சமான ஒன்றாகவே மதிக்கபட்டும் வருகிறது.இந்த இரண்டையும் அர்த்தமற்றதாக்கியவர் குயிலியேட்டா.


 
சிரிப்பின் உச்சநிலை அழுகை என்பார்கள். குயிலேட்டா ஏற்ற கதாபத்திரங்களும் சிரிப்பின் உச்சத்தில் தங்களை மீறி கரைந்து அழுகிறார்கள். நாடோடி ஜாம்பினோவின் பின்னால் அலைந்து திரியும் மசினோ கிராமங்களில் நான் கண்டிருந்த பெண்களில் பலரையும் நினைவுபடுத்துகிறாள். ஒருவகையில் லாஸ்ட்ரடா இத்தாலியக் கதையல்ல.அது தமிழ் கலாச்சாரத்தோடும் வாழ்வோடும் மிக நெருக்கமான கதை. அவ்வகையில் மசினா  நெருக்கமான என் கிராமத்துப் பெண்ணே.**


 Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: