அவர்களின் கவிதை : வி.யோகேஷ்

இன்மை என்ற கவிதைக்கான இணைய இதழ் ஒன்றை கவிஞர் அபிலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார், மாதம் இருமுறை வலையேற்றம் செய்யப்படுகிறது, இந்த இணைய இதழில் சிறந்த கவிதைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள் வெளியாகின்றன,  அவசியம் படித்துப்பாருங்கள்

http://www.inmmai.com/p/blog-page.html

••

இன்மை இதழில் வெளியான தீராத நினைவு என்ற வி.யோகேஷ் கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது,  கச்சிதமான, எளிமையான கவிதை.

தலைப்பு ஒன்று தான் பழமையானது, ஆனால் கவிதை தரும் அனுபவம் விரிந்து கொண்டே செல்கிறது.

கடந்தகாலங்களை அப்படியே நாம் நினைவு கொள்வதில்லை, நமக்கு ஏற்றார் போல உருவாக்கி கொள்ளவே எப்போதும் முயற்சிக்கிறோம்,

கடந்தகாலங்களை உருவாக்கி கொள்வது ஒரு ரகசிய விளையாட்டு, மனம் அதில் ஈடுபடும் போது ஆறுதல் கொள்கிறது. விவரிக்கமுடியாத சந்தோஷம் அடைகிறது

நம் நினைவுப்புத்தகம் நம்முடைய விருப்பங்களால் மட்டுமே ஆனது, அதில் சந்தோஷப்படுத்தும் நிகழ்வுகளைக் கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்கிறோம், நமது குறைகளை, பலவீனத்தை, ரகசியங்களை மறைத்துக் கொண்டுவிடுகிறோம்.

இக்கவிதை அதைச்சுட்டிக்காட்டுவதில் தான் துவங்குகிறது.

கவிதையில் தன் கடந்தகாலத்தைப் பற்றிக் கவிஞன் பேசவில்லை, நம் கடந்தகாலங்கள் என்று இல்லாத அந்த இன்னொரு துணையைச் சேர்த்துக் கொள்கிறான், பெயரற்ற அரூப உருவமது.

நினைவுகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபார்ப்பது அவனுக்குப் பிடித்தமானதாகயிருக்கிறது,

யாருக்கு தான் அதில் விருப்பமில்லை.

பழகிய தருணங்கள் பழங்களாக உருமாறுவது தான் இக்கவிதையின் மையப்படிமம். அதை இருவரும் சுமந்தபடியே பிரிகிறார்கள், தனிமைக்கு அப்பழங்களைச் சாப்பிடத் தருகிறார்கள், பழக்கூடை தீர்வதற்குள் மீண்டும் நாம் சந்திக்க வேண்டும் என்ற கடைசிவரியில் தான் பிரிவின் வலி உறைந்திருக்கிறது, அங்கே உள்ள ஆச்சரியக்குறி மிக முக்கியமான ஒன்று.

நேற்று

நாம் பழகிய தருணங்களை

இரு பழக்கூடையில் நிரப்பி

ஒவ்வொன்றையும் இருவரும்

சுமந்த படி பிரிந்தோம்

இதில் வரும் நேற்று வெறும் காலக்குறிப்பு மட்டுமில்லை, அது ஒரு தருணம், உணர்ச்சிப்பூர்வமான தருணம், அந்தத் தருணம் மௌனமானது, வலி தருவது

இது வரை எளிய அனுபவமாக விரியும் கவிதை தனிமைக்கு அதைப் புசிக்கத் தரும் வரியின் வழியாகவே கவிதையின் அரூப உலகிற்குள் நுழைகிறது,  பசித்திருக்கும் தனிமையை எப்படி எதிர்கொள்வது,   தனிமை கூண்டுபறவையா, கானகப்புலியா.

தனிமை ஏன் நினைவுகளை உண்பதில் இத்தனை ஆர்வம் காட்டுகிறது, தனிமைக்கு நினைவுகளைப் புசிக்கத் தரும் பழக்கம் எப்படி ஏற்பட்டது, தனிமை, பழங்களைப் புசிக்கும் கிளியா, அல்லது புழுவா. நினைவுகளின் பழக்கூடையில் இருப்பது அவரவர் நினைவுகள் மட்டும் தானா, இந்த நினைவுகள் தானே உதிர்ந்தவையா, இல்லை ஆசையாக அதைப் பறித்து நிரப்பியிருக்கிறோமா,

தேவதச்சனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது

ஒளி

கவிதை எழுதுவது

என்பது

ஒரு

குண்டு பல்பை

ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது

முழுமையானதின்

அமைதியை ஏந்தி

பல்ப்

ஒளி வீசத் தொடங்குகிறது

ஒரு மெல்லிய இழை

நிசப்தத்தில்

எவ்வளவு

நீல

நன் கணம்

••

யோகேஷின் கவிதையில் இந்த நன்கணம் ஒரு பந்து போலத் துள்ளி எழும்பி உயர்ந்து தன்னளவில் அடங்கிவிடுகிறது,

பழகிய தருணங்களைப் பழங்களாக மாற்றிக் கொள்ளும் சூட்சுமம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது,  யாவரும் நினைவுக்கனிகளைப் பகிர்ந்து கொள்ளவும் புசிக்கவும் விரும்புகிறோம், பழக்கூடை காலியாகும் முன்பு அதில் வேறு கனிகளை நிரப்பிக் கொள்ள முனைகிறோம்,

பிரிவு என்ற சிறுமி, நினைவுகளைச் சேகரம் செய்பவள், அவளுக்கு அது ஒன்று தான் வேலை, அவளால் மட்டுமே நமது பழக்கூடைகளை நிரப்பமுடியும்,  பிரிவின் கரங்கள் நினைவுகளைச் சேகரம் செய்து கொண்டேதானிருக்கும், அதை யாருக்குப் புசிக்கத் தருகிறோம் என்பது மட்டும் தான் நமது வேலை.

••••

தீராத நினைவு – வி.யோகேஷ்

நம் கடந்த காலங்கள்

ஒரு தேர்ந்த ஓவியனின்

வரைபடப் புத்தகம் போன்றது.

தோன்றும் பொழுதுகளில்

எனக்குப் பிடித்த வர்ணம் தீட்டி

அழகு பார்ப்பதும் பின்பு

நினைவு மயிலிறகை அதற்குள்

சொருகி வைப்பதும்

எனக்கு வாடிக்கையானது.

நேற்று

நாம் பழகிய தருணங்களை

இரு பழக்கூடையில் நிரப்பி

ஒவ்வொன்றையும் இருவரும்

சுமந்த படி பிரிந்தோம்.

தனிமை பசித்திருக்கையில்

ஞாபகப் பழக்கூடையிலிருந்து

ஒவ்வொன்றாய்ப் புசிக்கக் கொடுத்தோம்

பழக்கூடை தீர்வதற்குள்

மீண்டும் நாம்

சந்திக்க வேண்டும்!

***

நன்றி  : இன்மை

கவிதைக்கான இணைய இதழ்

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: