மறக்கமுடியாத தருணங்கள்

2005-ம் ஆண்டில் குற்றாலத்தில் நான் நடத்திய இலக்கிய முகாமின் புகைப்படங்களை நண்பர் முரளிமனோகர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்செயலாக அதன் இணைப்பை நேற்று ஒரு நண்பர் அனுப்பியிருந்தார்.

புகைப்படங்களைக் காணும் போது பரவசமாக இருந்தது. குற்றாலச்சாரலில் நனைந்தபடியே இரண்டு நாட்களும் பகலிரவாகத் தொடர்ந்த உரையாடல்கள், வேடிக்கை கதைகள், தீவிர இலக்கிய விவாதங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன, அரிய தருணங்களைப் புகைப்படமாகச் சேகரித்து வைத்துள்ளதற்கு நன்றி முரளி.

அந்த முகாமில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன், பூமணி, சோ,தர்மர், சு.வெங்கடேசன், முருகேச பாண்டியன், என் ஸ்ரீராம், லேனாகுமார், காலபைரவன், இயக்குனர் வசந்தபாலன், கவிஞர் கலாப்ரியா, கவிஞர் முத்துக்குமார், விமர்சகர் சா.தேவதாஸ், கவிஞர் அப்பாஸ், கவிஞர் தேவேந்திரபூபதி மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி , ராஜகோபால், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

கவிஞர் கலாப்ரியா நடத்திய குற்றாலம் கவிதைபட்டறையில் கலந்து கொண்டது அனுபவம் மறக்கமுடியாதது, கலாப்ரியாவும் பிரம்மராஜனும் இணைந்து அதை நடத்தினார்கள், சமீபத்தில் நடைபெற்ற பிரமீள் நினைவுக்கூட்டத்தில் கூட எம்டிஎம் குற்றாலம் பதிவுகள் பற்றிக் கூறினார், நானும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன், குற்றாலம் முகாமில் அமேதியஸ் திரைப்படத்தைப் பற்றிப் பிரம்மராஜன் பேசியதுடன் அதைத் திரையிட்டு காட்டினார், மறக்கமுடியாத அனுபவமது.

சுந்தர ராமசாமி, நகுலன், பிரமீள், விக்ரமாதித்யன், தேவதச்சன், தேவதேவன், ஜெயமோகன், கோணங்கி, நாகார்சுனன், எம்.டி,முத்துகுமாரசாமி, கவிஞர் அப்பாஸ், முருகேசபாண்டியன், சமயவேல், சத்யன், பொதிகைவெற்பன், கௌதம சித்தார்த்தன், உமாபதி யுவன் சந்திரசேகர், மகாலிங்கம் பழமலய், எனப் பலரும் அதில் கலந்து கொண்டார்கள்,

அந்த உத்வேகத்தில் தான் 2005ல் நான் குற்றாலத்தில் இலக்கியமுகாமை ஏற்பாடு செய்திருந்தேன்,

வண்ணதாசன் இலக்கியக்கூட்டங்களில் அரிதாகக் கலந்து கொள்பவர், அவரைக் கல்யாணி அண்ணன் என்று தான் எப்போதும் அழைப்பேன், குற்றாலம் இலக்கியமுகாமின் இரண்டாம் நாள் அவர் வருகை தந்தார், அன்பான அவரது பேச்சும் எழுத்தும் அந்த முகாமை உற்சாகப்படுத்தியது

எழுத்தாளர் பிரபஞ்சன் எனது இலக்கிய ஆசான்களில் முதன்மையானவர், இலக்கியத்திற்காகவே வாழ்பவர், அவரது பீட்டர்ஸ்காலனி வீடு தான் ஒரு காலத்தில் எனது புகலிடம், நிறைய நாட்கள் சாப்பாடு வாங்கித் தந்து, படிக்கப் புத்தகங்கள் தந்து கைமாறில்லாத உதவிகள் செய்திருக்கிறார், இலக்கியக் கூட்டம் என யார் அழைத்தாலும் தயங்காமல் பங்குபெறக்கூடியவர், இளம்படைப்பாளிகளை ஊக்கபடுத்துவதில் இவருக்கு நிகரே கிடையாது,

இயக்குனர் வசந்தபாலன் தீவிர இலக்கியவாசகர், தமிழ் திரையுலகில் இன்று முக்கிய இயக்குனராக உயர்ந்துள்ள அவர் இரண்டு நாட்களும் ஒரு பார்வையாளராக இலக்கியவிவாதங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்,

ஆல்பம் திரைப்படத்தில் அவரோடு நான் பணியாற்றிய நாட்களில் இரவெல்லாம் இலக்கியம், உலகசினிமா எனப் பேசி உறக்கமற்றுக் கிடந்திருக்கிறோம், கவிதாலயா அலுவலகத்தில் கழித்த நாட்கள் பற்றித் தனிப் புத்தகம் எழுதலாம், அவ்வளவு நிகழ்வுகள், ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவை,

விரைவில் அவரது காவியத்தலைவன் படம் வெளிவர இருக்கிறது, அதன் முன்னோட்ட விளம்பரங்கள், புகைப்படங்கள் மிகச்சிறப்பாக உள்ளன, காவியத்தலைவன் முக்கியமான படமாக இருக்கும்,

கடினஉழைப்பும் தனித்துவமும் தீவிரமான கலைமனதும் கொண்ட வசந்தபாலன் அடையும் ஒவ்வொரு வெற்றியும் எனதானது போல எப்போதும் நான் சந்தோஷம் அடையக்கூடியவன்

காவல்கோட்டம் நாவலை எழுதி சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சு.வெங்கடேசன் எனது நண்பர், அவரது நாவலை நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன், அது படைப்பு குறித்த எதிர்வினை, மற்றபடி இப்போதும் நாங்கள் சந்தித்துப் பேசிக் கொள்ளும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம், வெங்கடேசன் இடதுசாரி இயக்கம் சார்ந்து முழுநேர களப்பணியாற்றி வருகிறார்

நண்பர் முருகேச பாண்டியன் போல இலக்கியத்தை நேசிக்கக் கூடிய மனிதரை காண்பது அபூர்வம், நிறைய வாசிக்கவும் விவாதிக்கவும் கூடியவர், சிறந்த விமர்சகர், குற்றாலம் கவிதை பட்டறை துவங்கி பல்வேறு இலக்கியமுகாம்களில் அவரைச் சந்தித்திருக்கிறேன, 25 வருஷமாகப் பழகிவருகிறேன்,

முருகேசபாண்டியன் பொன்னமராவதியில் வசிப்பவர், மேலச்சிவபுரியில் உள்ள தமிழ் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றுகிறார், தமிழகக் கிராமங்களில் உருவான மாற்றங்கள் பற்றி அவர் எழுதிய கிராமத்து தெருக்களின் வழியே முக்கியமான ஆவணப்பதிவாகும் , இது போலவே அற்றைத்திங்கள் என்ற சங்ககாலப் பெண்கவிஞர்களின் தொகைநூலும் முக்கியமானது

மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், அவரது கல்லூரிக்கு சென்று பேசியிருக்கிறேன், நவீன இலக்கியம் குறித்து மாணவர்கள் அக்கறையுடன் விவாதிக்கும் கல்லூரியது.

காலபைரவன் முக்கியமான சிறுகதை எழுத்தாளர், கவித்துவமான மொழிநடை கொண்டவர், கண்டாச்சிபுரத்தில் வசிப்பவர், பள்ளி ஆசிரியர், புலிப்பானி ஜோதிடர், விலகிச் செல்லும் நதி, கடக்க முடியாத இரவு பைசாசத்தின் எஞ்சிய சொற்கள். ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்

தொண்ணூறுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த என்.ஸ்ரீராம், வெளி வாங்கும் காலம், மாடவீடுகளின் தனிமை, அத்திமரச்சாலை ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் ஊடகத்துறையில் பணியாற்றுகிறார், காத்திரமான கதைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

ராஜகோபால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லண்டனில் பணியாற்றிவிட்டுத் தற்போது சென்னை திரும்பியிருக்கிறான், எனது அறைத்தோழன், மிலன்குந்தேரா துவங்கி முரகாமி வரை பல முக்கியப் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறான், இலக்கியத்தை விட்டு சற்று ஒதுங்கிவாழும் இவன் திரும்பவும் பாட்ஷாவாக எப்போது மாறுவான் என ஆவலோடு காத்திருக்கிறேன்

கவிஞர் முத்துகுமாரைப் போலத் தேடித்தேடி புத்தகங்களைப் படிக்கும் ஒருவரை நான் கண்டதில்லை, லேண்ட்மார்க்கில் புதிதாக என்ன இலக்கியப் புத்தகம் வந்திருக்கிறது என்று அவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், அவ்வளவு படிப்பவர், முத்துகுமாரின் அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும், அபூர்வமான மனிதர், பல எழுத்தாளர்களின் முதல்புத்தகங்களை அவர்கள் கையெழுத்துடன் சேகரித்து வைத்திருந்தவர், அதை ஒரு கண்காட்சியாக வையுங்கள் என்று முத்துகுமாரிடம் பலமுறை பேசியிருக்கிறேன்,

தனது தொடர்ந்த திரைப்படப் பணிகளுக்கு இடையிலும் எந்தப் பத்திரிக்கையில் கதை, கட்டுரை, கவிதை எனச் சிறந்த படைப்புகள் எதைப் படித்தாலும் உடனே போனில் அழைத்துப் பாராட்டிவிடும் மனம் கொண்டவர்.

லேனாகுமார் திருநெல்வேலியில் வசிப்பவர், தீவிரமான களச்செயல்பாட்டாளர், யாதுமாகி என்ற இதழை நடத்தியவர், பண்பாட்டு மாற்றங்கள், தலித் அரசியல், மாற்றுக்கல்வி, சுற்றுச்சூழல், தீவிர இலக்கியம் எனப் பலதளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர்,

விமர்சகர் தேவதாஸ் தற்போது ராஜபாளையத்தில் வசிக்கிறார், சிறந்த தமிழ் அறிஞர், உலக இலக்கியங்களை தேர்ந்து கற்றவர், கால்வினோ, காப்கா, நெருதா, ஹென்றி ஜேம்ஸ், உள்ளிட்ட பலமுக்கியப் படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தவர், ராஜபாளையத்தில் உள்ள இலக்கிய நண்பர்களை ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தி வருகிறார்

ஆரணியில் வாழும் ஜி. குப்புசாமி சிறந்த மொழிபெயர்ப்பாளர், ஒரான் பாமுக் துவங்கி ரேமண்ட் கார்வர் வரையான பல்வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார், ஜி.யு.போப்விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்றவர்,  வண்ணதாசனின் தீவிர ரசிகர்.

எழுத்தாளர் பூமணி இலக்கியக்கூட்டம், கருத்தரங்குகளை விட்டு ஒதுங்கிவாழ்பவர், நெருக்கமான நண்பர்கள் அழைத்தால் மட்டுமே இலக்கிய விழாவில் கலந்து கொள்வார், இந்த முகாமிற்கு அவர் வந்திருந்து தனது படைப்புகள் பற்றிப் பேசியது அரியதொரு நிகழ்வு.

சோ.தர்மர், கோவில்பட்டியில் வசிக்கிறார், இலக்கியவிவாதங்களில் அதிகம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத படைப்பாளி, இவரது கூகை நாவல், முக்கியமான படைப்பு, வில்லுபாட்டு பற்றி இவரது ஆய்வு தனிநூலாக வந்துள்ளது, இது பாராட்டிற்குரிய ஆவணப்படுத்துதல் ஆகும்

நண்பரும் கவிஞருமான தேவேந்திரபூபதி தற்போது திருநெல்வேலியில் வணிகவரித்துறை ஆணையராகப் பணியாற்றுகிறார், விருதுநகரில் இவர் பணியாற்ற வந்த நாளில் துவங்கி இன்று வரை அவருடன் இணைந்து நிறைய இலக்கியச் செயல்பாடுகளைச் செய்திருக்கிறேன், அருமையான மனிதர், குற்றாலம் முகாமை ஒருங்கிணைப்பு செய்வதற்கு இவரே முக்கிய காரணம்.

கவிஞர் அப்பாஸ் இப்போது நம்மோடு இல்லை, அவருடன் பழகிய நாட்கள் நினைவில் ஒளிர்கின்றன, அப்பாஸ் நவீன கவிஞர்களில் முக்கியமானவர். அவரோடு பேசிக் கொண்டிருப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும், குற்றாலத்தில் திடீரென இரவு இரண்டரை மணிக்கு ஐந்தருவி வரை நடக்கலாமா எனக் கேட்டார், நாங்கள் மூன்று பேர் நடந்து போய் யாருமற்ற அருவியின் கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம், சட்டெனப் பேச்சு நின்று போய் அருவியின் பேரோசையைக் கேட்டபடியே அமர்ந்திருந்த தருணம் அபூர்வமானது

இந்தப் புகைப்படங்களை எடுத்த முரளிமனோகர் தற்போது இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராகப் பணியாற்றுகிறார், சிறந்த குறும்படத்திற்காக ஜனாதிபதி பரிசு பெற்றவர், திரைப்படக்கல்லூரி மாணவராக அறிமுகமாகி இன்று அவர் வளர்ந்து நிற்கும் உயரத்தைக் காணும் போது பெருமையாக உள்ளது. இவர் எடுத்த கர்ணமோட்சம் குறும்படம் பல்வேறு உலகத் திரைப்படவிழாக்களில் 25க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது.

இந்த முகாமை போலத் திருவண்ணாமலையில் பவா ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுகதை பயிற்சிமுகாம், சாத்தூரில் நடந்த இலக்கியமுகாம்,புதுப்பட்டி நடராசன் அண்ணாச்சியின் வழிகாட்டுதலில் கோணங்கி, நான், முருகபூபதி என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட அர்ச்சுனாபுரம் இலக்கியமுகாம், ஆலங்குளம் சிறுகதை பயிற்சிமுகாம், நெய்வேலியில் வேர்கள் ராமலிங்கம் நடத்திய இலக்கியமுகாம், நாமக்கல்லில் நடைபெற்ற நாவல் பயிலரங்கம், பேச்சிபாறை அணைக்கட்டில் நடைபெற்ற இலக்கிய முகாம், கழுகுமலையில் நண்பர் அப்பாஸ் மற்றும் உமாபதி ஏற்பாடு செய்த இலக்கியமுகாம், என எத்தனையோ இலக்கியமுகாம்கள் எந்தப் பதிவுகளும் அற்றுப் போய்விட்டன.

இந்தச் சந்திப்புகளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகள், விவாதங்கள், என் இலக்கிய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன, இம் முகாம்கள் பல இளம் எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கின்றன,  இலக்கியத்தின் வழியே நான் அடைந்த தோழமை இன்றும் மாறாத நட்பின் அடையாளமாகத் தொடர்வதே இதன் இனிமை.

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: