மதுரைக்காட்சிகள்

தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் வரைந்த மதுரைக்காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன, கோட்டையுள்ள மதுரையைக் காண்பது வசீகரமாகயிருக்கிறது. 200 வருஷங்களில் காலம் எவ்வளவு மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது

டேனியலின் ஒவியத்தில் காணப்படும் மதுரை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது, செடி முளைத்துப் போய்ப் பராமரிக்கபடாத நாயக்கர் காலத்துக் கோட்டை, வேலைப்பாடு மிக்க நுழைவாயில், கிணற்றில் தண்ணீர் இறைப்பவர்கள், சாவகாசமாக உட்கார்ந்திருக்கும் இருவர், கோட்டை மதிலின் உறுதி, வாழை மரம். பொதிமாடு, நாட்டு ஒடு கொண்ட வீடு, வெளிறிய மேகம், ஒவியத்தில் பலரும் தலைப்பாகை கட்டி இருப்பது ஆச்சரியமாகயிருக்கிறது, ஒவியத்தின் சிறப்புக் கோட்டையை வரைந்துள்ள கோணம் மற்றும் நிழல் விழும் அழகு,

1840ல் மதுரை நகரின் விரிவாக்கம் கருதிக் நகரைச் சுற்றிய கோட்டையை இடிக்க உத்தரவிட்டவர் கலெக்டர் ஜான் பிளாக்பெர்ன்,

மாரட் என்ற இன்ஜினியரும் பெருமாள் மேஸ்திரியும் இந்தப் பணியில் முக்கியப் பங்கு ஆற்றியவர்கள், இவர்கள் பெயரில் இன்றும் மதுரையில் வீதிகள் இருக்கின்றன

இரண்டு டேனியல்களும் 1792ல் 10 மார்ச் கல்கத்தாவில் இருந்து கடல் வழியாகப் பயணித்துச் சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள், மாட்டுவண்டி பயணம், பல்லக்கு, சாரட் எனப் பயணித்துத் தமிழகத்தின் பல்வேறு இடங்களைத் தேடிச் சென்று ஓவியங்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

டேனியலின் டயரிக்குறிப்புகள் அந்தக் காலகட்டம் குறித்து நிறையத் தகவல்களைத் தருகின்றன. Oriental Scenery என்னும் ஆறு வால்யூம் கொண்ட ஒவியத்தொகுதி ஒரு காலப்பெட்டகமாகும்

1795ல் 210 பவுண்டிற்கு இந்த ஆறு தொகுதிகள் விற்கபட்டன, இன்று இதன் விலை 393000 பவுண்டு, கிழக்கிந்திய கம்பெனி தனது சேமிப்பிற்காக இந்த ஒவியத்தொதியினை 30 செட் வாங்கியிருக்கிறது,

1980ல் டேனியல்களின் ஓவியங்களில் இடம் பெற்ற அனைத்து இடங்களுக்கும் மீண்டும் பயணம் செய்து அதே இடங்களைப் புகைப்படம் எடுத்துள்ளார் அன்டோனியோ மார்டினெல்லி. இவர் ஒரு இத்தாலியர்,

தாமஸ் டேனியலின் திருச்சி மலைக்கோட்டை உட்பட்ட சில முக்கியமான லித்தோகிராஃப் ஓவியங்கள் பெங்களூரில் உள்ள national gallery of modern art-ல் நிரந்தரக் கண்காட்சி தொகுப்பில் உள்ளன. அவரது நிலக்காட்சி ஓவியங்கள் அத்தனையுமே இருளேறிய foreground ஒளி மிக்க middleground மங்கிய background என்ற அடுக்கு முறையில் வரையப்பட்டிருக்கும்.

இன்னும் பல கலோனியல் ஓவியங்களும், ராஜ்புத்/முகலாய நுண் ஓவியங்களும், வங்க ஓவிய ஆளுமைகள் பலரின் ஓவியங்களும், சதீஷ் குஜ்ரால், அஞ்சலி இலா மேனன், A.P.சந்தான ராஜ், R.B.பாஸ்கரன் போன்ற பல நவீன ஓவியர்களின் ஓவியங்களும் அடங்கிய முக்கியமான ஓவியக் கூடம் இந்தப் பெங்களூர் நேஷனல் ஆர்ட் கேலரி

என்று பெங்களுரில் வசிக்கும் ஒவியரான ரஞ்சித் பரஞ்ஜோதி, எனக்கு அனுப்பிய மெயிலில் டேனியலின் ஒவியங்கள் பற்றிக் கூடுதல் தகவல்கள் தந்திருந்தார், அவருக்கு  மனம் நிரம்பிய நன்றி

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: