கார்வரின் கதையுலகம்

சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான மொழிபெயர்ப்புப் புத்தகம் ரேமண்ட் கார்வரின் வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு.

கார்வரின் முக்கியமான 12 சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், இந்தக் கதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருக்கிறார் செங்கதிர். இவரோடு எம். கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயராகவன் ஆகியோரும் கதைகளை மொழியாக்கம் செய்துள்ளார்கள், இதனைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது

கார்வரை அறிமுகப்படுத்திச் செங்கதிர் நேர்த்தியான முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறார்,  அதில் இன்றைய சூழலில் யதார்த்தவாத எழுத்து ஏன் தேவை என்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்வதுடன் கார்வர் ஏன் தமிழுக்குத் தேவை என்பதையும் சிறப்பாக கவனப்படுத்துகிறார்.

உலகெங்கும் ரேமண்ட் கார்வருக்கு எனத் தனி வாசக வட்டமிருக்கிறது, இவரது சிறுகதைகள் 1970களில் வெளியான அமெரிக்கச் சிறுகதை எழுத்தின் புதிய சாதனைகளாக அறியப்படுகின்றன

சந்தோஷமில்லாத குடும்பங்களைப் பற்றித் தான் ரேமண்ட் கார்வர் அதிகம் எழுதியிருக்கிறார், அவரது வாழ்க்கையும் அத்தகைய ஒன்றே,

குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்கள், மோதல், பிரிவு. மதுப்பழக்கத்தால் ஏற்படும் வீழ்ச்சி, தனிமனித துயரங்கள், இயலாமை ஏற்படுத்தும் குற்றவுணர்ச்சி இவையே அவரது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுகின்றன

சொல்வதற்கு இனிமையற்ற விஷயங்களைக் கூட மிகச் சுவாரஸ்யமாக எழுதுகிறவர் கார்வர் என்கிறார் ஹெரால்டு ப்ளும்

கார்வர் கதைகளின் மையம் வீடு, அதுவும் நிம்மதியற்ற வீடு, நிம்மதியற்றுப் போனதற்கு ஆண் பெண் இருவரில் யார் காரணம் என இருவருமே சுயபரிசோதனை செய்து கொள்கிறார்கள், தனிமையை உணரும் மனிதர்களே இவரது முக்கியக் கதாபாத்திரங்கள், அவர்கள் குடும்பத்திற்குள் உழலும் போதும் தாங்கள் அதில் பொருந்திப்போக முடியாதவர்கள் என்பதைக் கண்டுகொள்கிறார்கள், அதன் காரணமாக உதறிச் செல்லமுற்படுகிறார்கள். முடியாத போது கூச்சலிடுகிறார்கள்.

சாப்பாடும் குடியும் பாலுறவும் அவர்களை வீட்டிற்குள் ஆசுவாசம் கொள்ள வைக்கின்றன, இவற்றையும் அவர்கள் இயந்திரகதியில் தான் செய்து முடிக்கிறார்கள், அவர்களை ஆட்டுவைப்பது காரணம் சொல்லமுடியாத துக்கம், அல்லது வலி, அதை முழுமையாக உணரும் தருணங்களில் நிம்மதியற்றுப் போய்விடுகிறார்கள்,  இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு வடிந்தவுடன் குற்றவுணர்வுடன் மீண்டும் ஒன்று கூடிக் கொள்கிறார்கள்,

சண்டைக்குப் பிறகு கணவன் மனைவி இருவரும் விளையாட்டுச் சிறார்களைப் போல நடந்து கொள்வது அவரது பல கதைகளில் இடம்பெற்றுள்ளது

கார்வர் கதைகளில் வரும் ஆண்கள் வாத்துவேட்டை, குடி, மீன்பிடித்தல்,  என உல்லாசமாக வாழ விரும்புகிறவர்கள், ஆனால் அதை அடைவதற்காகப் போராடுகிறார்கள், மனைவியை அவர்கள் தங்களின் விருப்ப பதுமையைப் போலவே கையாளுகிறார்கள், அதிகாரம் செலுத்துகிறார்கள்,

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு கதை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு, விஜயராகவன் இக்கதையை நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்

மீன்பிடிக்கப் போன இடத்தில் ஒரு இளம்பெண்ணின் இறந்த உடலைக் காணும் ஸ்டூவர்ட் மற்றும் அவரது நண்பர்கள் நடந்து கொள்ளும் முறையும், ஸ்டூவர்ட் அதன்பிறகான நாட்களில் மனைவியிடம் காட்டும் கெடுபிடியும், இறுக்கமும் அவரது மனஅவஸ்தையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன,

ஸ்டூவர்ட்டின் மனைவியின் மனநிலையோ பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது, பாலுறவிற்காகக் கணவனை ஏங்க வைப்பது என்பது பெரிய தண்டனை என்று ஸ்டூவர்ட்டின் மனைவி நினைக்கிறாள், அவள் உடலுறவிற்கு மறுக்கும் தருணத்தில் தோற்றுப்போய் ஸ்டூவர்ட் நடந்து கொள்ளும் விதம் அவனது ஆளுமையின் இன்னொரு தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது

கார்வர் கதைகளில் உடலுறவிற்கான தருணங்கள் யாவும் கதாபாத்திரங்கள் தங்களின் குற்றவுணர்ச்சியை மறைத்துக் கொள்ளும் இடங்களாகவே இருக்கின்றன

குழந்தைகளின் பொருட்டு மட்டுமே கணவனும் மனைவியும், ஒன்றுசேர்ந்து வாழ்கிறார்கள்,  குழந்தைகளே அவர்களின் மௌனசாட்சி, அடுத்த வீடு, அடுத்த மனிதர்களோடு தங்களை ஒப்பிட்டு வாழ்க்கையை நரகமாக்கி கொள்கிறார்கள் என்பதைக் கார்வர் திரும்பத் திரும்பக் கூறுகிறார்.

அற்ப விஷயங்கள் என்ற கதை மிகச்சிறியது, இதுவும் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டை தான் கதை,

வீட்டை விட்டுப் பிரிந்து செல்லும் கணவன் தனக்குக் குழந்தை வேண்டும் என்று மனைவியிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்குகிறான், அந்தப் பலவந்தத்தைப் பொறுக்கமுடியாமல் மனைவி தவிக்கிறாள், கைக்குழந்தை இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது, எப்போதுமே பலவந்தமான நிலையை ஏற்படுத்தி ஆண்கள் வெற்றிகாணுகிறார்கள் என்பதைக் கார்வர் குரலை உயர்த்தாமலே சொல்லிப் போகிறார்

கார்வரின் பேராலயம் அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று, செங்கதிர் இக்கதையைச் மிகநேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

மனைவியின் நண்பராக வீட்டிற்கு வரும் ஒரு பார்வையற்றவரைப் பற்றிய இக்கதை யதார்த்த நிகழ்வுகளில் துவங்கி குடி, உரையாடல் என மனவோட்டங்களில் வளர்ந்து கதைகளின் முடிவில் மாபெரும் எழுச்சி தரும் கலைப்படைப்பாக மாறுகிறது,

அரூபமாக ஒன்றை அறிவது என்பது கதீட்ரல் கதைக்கு மட்டுமானதில்லை, கார்வரின் பலகதைகளிலும் இதே அரூபமான தருணங்கள் இருக்கவே செய்கின்றன

சிறுகதை வடிவத்தை மிகக் கச்சிதமாக, நுட்பமாக, அலங்காரமற்ற நேரடிமொழியில் எழுதியவர் கார்வர். அதுவே அவரது இலக்கியசாதனை.

ஆன்டன் செகாவ் தான் அவரது இலக்கிய ஆசான். செகாவிடம் காணப்படும் பகடி கார்வரிடம் கிடையாது, ஆனால் நடுத்தரவ வர்க்க மனிதர்களின் தடுமாற்றங்களை, தவிப்புகளை, கனவுகளை, செகாவைப் போலவே கார்வரும் துல்லியமாக எழுதியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்,

சின்னஞ்சிறு வேலை என்ற சிறுகதை ஆன்டன் செகாவின் இறுதிநாட்களை விவரிக்கிறது, காசநோயால் பாதிக்கபட்ட செகாவ் ஜெர்மனியில் உள்ள ஆரோக்கிய நிலையம் ஒன்றில் அனுமதிக்கபடுகிறார், அவரது இறுதிநிமிசங்களை விவரிப்பதன் வழியே வாழ்க்கையைச் செகாவ் எவ்வளவு தைரியமாக எதிர்கொண்டார் என்பதைக் கார்வர் சுட்டிக்காட்டுகிறார்,

இக்கதையில் டால்ஸ்டாய் செகாவை பார்க்க வரும் நிமிசங்கள் அத்தனை நெகிழ்வாக இருக்கிறது, தனது ஆசானுக்குத் தான் செலுத்திய நன்றியின் வெளிப்பாடு போலவே இக்கதையைக் கார்வர் எழுதியிருக்கிறார்

அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை சிறுகதையில் வரும் டொரின் உணவகத்தில் வேலை செய்பவள், அவளின் உடல் அழகை அங்கு உணவு அருந்த வருபவர்கள் ரசிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள், அதைக் கவனித்த அவளது கணவன் அவள் உடனடியாக எடையைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான், இதற்காக எடை பார்க்கும் கருவி ஒன்றை வாங்கி வைக்கிறான்,

கணவனின் கட்டாயத்தால் பட்டினி கிடந்து அவள் எடை குறைகிறாள், மெலிந்து போன அவளை உணவகத்திற்கு வருபவர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று கணவன் பரிசோதனை செய்து பார்க்கிறான்,

டொரினோடு வேலை செய்யும் பெண், கோமாளி போல இருக்கும் இவன் யார் எனக் கேட்க தனது கணவன் என்கிறாள் டொரின்.

கதையின் ஒரு இடத்தில், அவர்கள் யாரும் உன் கணவன் இல்லையே என எர்ல் சொல்லும் போது அவள் ஒரு பெண்ணில்லை, அவனது மனைவி, அவனது உடமை, அவன் ரசிப்பதற்காக உருவாக்கபட்ட ஒருத்தி, அவள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும், அதன் பயனை நான் அனுபவிப்பேன், ஆனால் அவளது அழகு தனக்கு மட்டுமேயானது என்ற எண்ணம் ஒட்டுமொத்த ஆண் அதிகாரத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.

கதையின் ஊடாகப் பளிச்சிடும் வரிகள் தான் கார்வரின் தனிப்பலம், அவை கதாபாத்திரங்களின் உரையாடலாகவோ, மனமொழியாகவோ வெளிப்படுகின்றன, ஆனால் இந்த வரிகள் கதையைத் தாண்டி சஞ்சாரம் செய்யக்கூடியவை, அது போலவே கதையின் தலைப்புகளும் வெகு கச்சிதமானவை,

மிகச்சிறந்த தலைப்பே கதையைப் படிப்பதற்கான முதல் தூண்டுதல், அதை நூறு சதவீதம் கார்வரின் கதைகளில் காணமுடிகிறது

கார்வரின் ஆகச்சிறந்த சிறுகதை என்று ஒரு சிறிய, நல்லகாரியம் கதையைச் சொல்வேன்,

இது போன்ற ஒரு கதையை எழுதுவது எளிதானதில்லை, அமெரிக்கச் சிறுகதைகளில் இக்கதை ஒரு சாதனை.

தனது எட்டு வயது மகன் ஸ்காட்டிக்குத் திங்கள்கிழமை பிறந்தநாள் என்று பேக்கரிக்குப் போய் ஆனி வீஸ் என்ற பெண் கேக் ஆர்டர் செய்வதில் கதை துவங்குகிறது,

பேக்கரியில் இருப்பவர் ஆர்வமே இல்லாமல் அவள் சொல்வதைக் குறித்துக் கொள்கிறார், ரொட்டி சுடுவதைத் தவிர வேறு எந்த வேலையாவது இவர் பார்த்திருப்பாரா என ஆனி யோசிக்கிறாள், அந்த ஆள் அவளது அப்பா வயதில் இருந்த போதும் அவரது சிடுசிடுப்பான முகபாவனை அவளை ஒட்டவிடாமல் செய்கிறது, திங்கள்கிழமை கேக்கை டெலிவரி தருவதாகச் சொல்கிறார் பேக்கரி ஆள்

திங்கள்கிழமை காலை, பிறந்தநாள் கொண்டாட வேண்டிய பையன் எதிர்பாராமல் சாலை விபத்திற்கு உள்ளாகிறான், அவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பையன் மீளாத உறக்கத்திலிருக்கிறான், ஆனி பயந்து போய்விடுகிறாள், மருத்துவர் அவளுக்கு ஆறுதல் சொல்கிறார். எங்கே மகன் கோமா நிலைக்கு உள்ளாகி விடுவானோ எனக் கவலைப்படுகிறாள்

அவளது கணவர் ஹாவார்ட் மகனோடு அவளை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீடு திரும்புகிறான், வீட்டிற்கு வந்த போது போன் அடிக்கிறது,

ஆர்டர் கொடுத்த கேக்கை வாங்கவில்லையே எனப் பேக்கரி ஆள் போன் செய்து விசாரிக்கிறார், தனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது என ஹாவார்ட் போனை துண்டித்துவிடுகிறான்

மறுபடியும் அதே போன் வருகிறது, ஆனால் ஹாவார்ட் எடுக்கவில்லை அன்றிரவு மனைவிக்குத் துணையாக மருத்துவமனைக்குப் போகிறான்,

பையன் நீண்டநேரமாகியும் கண்விழித்துக் கொள்ளவேயில்லை என்பதால் ஆனி குழம்பி போயிருக்கிறாள், மருத்துவமனைச் சூழல், காத்திருக்கும் நோயாளிகள்  அவளுக்குள் காரணமற்ற பயத்தை உருவாக்கிவிடுகிறது. இரவில் மீண்டும் பரிசோதனைக்காக டாக்டர் வருகிறார், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கிறார், அவள் மனதிற்குள் பிரார்த்தைனை செய்து கொள்கிறாள்,

மருத்துவமனையில் மாறிமாறி ஏதேதோ பரிசோதனைகள் நமக்கின்றன, ஆனி சோர்ந்து போய்விடுகிறாள், ஏதாவது சாப்பிட்டுவாருங்கள் என்கிறாள் நர்ஸ், சாப்பிட மனதில்லை என்கிறாள் ஆனி

ஆனியிடம் வீட்டிற்குப் போய் ஒய்வெடுக்கும்படி சொல்லும் ஹாவார்ட், யாரோ ஒரு கிறுக்கன் வீட்டிற்குப் போன் செய்கிறான், எடுக்காதே என எச்சரிக்கை செய்கிறான்

அவள் மகன் இப்படியிருக்கிறானே என்ற கவலையோடு படுக்கை அருகிலே இருக்கிறாள்,

நான் பார்த்துக் கொள்கிறேன், நீ வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஒய்வெடுத்துவிட்டு நாய்க்குச் சாப்பாடு வைத்துவிட்டு வா என ஆனியை அனுப்பி வைக்கிறான் ஹோவர்ட்,

காரில் வீட்டிற்கு வந்து சேர்கிறாள், நாய் பசியோடு ஒடிவருகிறது, தேநீர் குடிக்க அடுப்பை பற்றவைக்கிறாள், நாய்க்கு உணவைக் கொடுக்கிறாள். அப்போது காலை ஐந்துமணி, தேநீரை குடிக்கக் கையில் எடுத்த போது திரும்பவும் போன் அடிக்கிறது,

அதே பேக்கரி ஆள், ஸ்காட்டி ஸ்காட்டி என அவர் சொல்வது அவளுக்குப் புரியவில்லை, ஆனால் அதை மருத்துவமனையில் இருந்து வந்த போனாக நினைத்துக் கொண்டு பயந்து போய்க் கணவருக்குப் போன் செய்து மகனின் நலத்தை விசாரிக்கிறாள்,

பயப்படும்படியாக ஒன்றுமில்லை என்று ஆறுதல் சொல்கிறான் கணவன், குளித்து உடைமாற்றி மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறாள், அவளுக்குப் பசிக்கிறது, ஆனால் சாப்பிடக்கூடாது எனப் பிடிவாதமாக இருக்கிறாள்,

அவள் வருவதற்குள் அவளது மகன் ஸ்காட்டி இறந்துவிடுகிறான், வேதனை தாளமுடியாமல் ஆனி நிலைகுலைந்து போகிறாள்

தாங்கமுடியாத துயரத்துடன் கணவனும் மனைவியும் வீட்டிற்கு வருகிறார்கள், காபி குடிக்கக் கெட்டிலை சூடு படுத்துகிறான் கணவன், துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வழியற்று ஆனி வேதனையில் உறவினர்களுக்குப் போன் செய்து அழுகிறாள்

இறந்து போய்விட்ட மகனின் சைக்கிளைத் தூக்கி மார்போடு சாய்த்துக் கொள்கிறான் ஹாவார்ட், பெடல் அவன் மார்பை குத்துகிறது. அப்போது மறுபடியும் பேக்கரியில் இருந்து போன் வருகிறது,

ஸ்காட்டிக்காக ஆர்டர் செய்த கேக்கை எப்போது வாங்கிக் கொள்வீர்கள் எனக் கேட்கிறான் பேக்கரி ஆள்,

ஆத்திரப்பட்டுக் கோபத்தில் அவனைக் கொல்லப்போவதாகக் கண்டபடி திட்டுகிறாள் ஆனி.

ஆனியும் அவளது கணவரும் பேக்கரி ஆளுடன் சண்டை போடுவதற்காக அவரது கடைக்குப் போகிறார்கள், கடை மூடப்பட்டிருக்கிறது, அவர்களை அடையாளம் தெரிந்து கொண்ட பேக்கரி ஆள் இந்த நேரத்தில் எதற்காக வந்திருக்கிறீர்கள் எனக்கேட்கிறார்

அடக்கமுடியாத அவளது கோபம் அங்கிருந்த இரண்டு ஆண்களை விட அவளைப் பலமுள்ளவாகக உணர வைக்கிறது, அவரோடு சண்டைபோட நினைக்கிறாள்

பேக்கரிகடைகாரனுக்கு ராத்திரி எல்லாம் வேலையிருக்கும், ஒரு நாளைக்குப் பதினாறு மணிநேரம் கடுமையாக உழைக்கிறேன் என்றபடியே உங்களுக்குக் கேக் வேண்டுமா, வேண்டாமா எனக்கேட்கிறார் கடைக்காரர்,

சண்டை போட வந்த ஆனி அவரிடம் என் மகன் கார்மோதி இறந்துவிட்டான் என்று சொல்லியவளாக அழத் துவங்குகிறாள்,

உண்மையை அறிந்த பேக்கரி ஆள் தடுமாறிப் போனவராக அவர்களை உட்காரச் சொல்கிறார்,

பிறகு அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார், தனக்குக் குழந்தைகள் கிடையாது, ஆனாலும் உங்கள் துக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்றாடுகிறார்,

அத்துடன் இனி ஆக வேண்டியதை பார்க்க வேண்டும், சாப்பிடுவது இது போன்ற தருணங்களில் ஒரு சிறிய நல்ல விஷயம் என்கிறார்,

அடுப்பில் இருந்த ரோல்களை எடுத்து வந்து அவர்களுக்குச் சாப்பிடத்தருகிறார், அவர்கள் சாப்பிடுகிறார்கள். எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிடுங்கள் என்கிறார் பேக்கரி ஆள்,

ஆனி பசியோடு மூன்று ரோல்கள் சாப்பிடுகிறாள்,

அந்தப் பேக்கரி ஆள் தனது தனிமையான வாழ்க்கையைப் பற்றிப் புலம்புகிறார், மனிதர்களுக்கு உணவிடுவது சிறப்பானது என்று சொல்லியபடியே வெல்லப்பாகில் செய்த ரொட்டி ஒன்றை அவர்களுக்குச் சாப்பிடத் தருகிறார், அவர்கள் அதையும் ருசி பார்க்கிறார்கள், விடிகாலை வரை அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், கிளம்புவதைப் பற்றி அவர்களுக்குத் தோன்றவில்லை எனக் கதை முடிகிறது

மகன் விபத்திற்குள்ளானதை ஆனி ஒருவிதமாகவும் ஹாவார்ட் ஒருவிதமாகவும் எதிர்கொள்கிறார்கள், உண்மையில் ஹாவார்ட் தான் உள்ளுக்குள் உடைந்து நொறுங்கியிருக்கிறான், ஆனால் அவன் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை, ஆனி உணர்ச்சிபெருக்கில் அழுதுவிடுகிறாள், கோபம் அடைகிறாள், ஆனால் ஹாவார்ட் போலின்றித் தனது துக்கத்தை அடக்கி கொள்ள அவளுக்குத் தெரிகிறது, அதனால் தான் அவள் பேக்கரிகாரனுடன் சண்டையிடுவதில்லை,

கதையில் வரும் பேக்கரி ஆள் முக்கியமான மனிதர், அவருக்குத் தனது கடமையைச் சரிவரச் செய்யவேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே இருக்கிறது, தான் கஷ்டப்பட்டுத் தயாரித்த பிறந்த நாள் கேக் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும் என அவர் நம்புகிறார், பணத்தை விட அவர் மற்றவர்களின் சந்தோஷத்தை முக்கியமாக நினைக்கிறார், ஆனால் எதிர்பாராத விபத்துக் காரணமாக ஆனியின் மகன் இறந்துவிட்டான் என்று தெரிந்தவுடன் அவர் வாழ்வின் வெறுமையை உணர்ந்துவிடுகிறார். எல்லாமும் அற்ப சந்தோஷம் என்று அவருக்குப் புரிகிறது

சகல துக்கத்திலிருந்தும் மனிதர்கள் மீண்டுவிடுவார்கள், அப்படி மீளவைப்பதில் முக்கியப் பங்கு உணவிற்கு இருக்கிறது, மகன் இறந்த துக்கம் ஒருபக்கமிருந்தாலும் ஆனி சுவையான ரோலை ருசித்துச் சாப்பிடவே செய்கிறாள், இது தான் மனித வாழ்க்கை

எல்லாத் துயரமும் மறந்து போய்விடத்தான் செய்யும், பசி மனிதர்களைத் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்க வைக்கிறது, சாப்பாடு வெறும் உடலுக்கானது மட்டுமில்லை, அது ஒரு ஆறுதல், ஒரு மருத்துவம் என்பது போலக் கதையில் இடம் பெறுகிறது,

மருத்துவமனையில் ஆனி எதிர்கொள்ளும் பதற்றமும் பயமும் எதிர்பாராத மனிதர்களிடம் கூடத் தனது மகனை பற்றிப் புலம்பும் விதமும் அற்புதம், நிலை கொள்ளாத தவிப்பை இதை விட எப்படி எழுத்தில் வெளிப்படுத்த முடியும்

பரிதவிப்பு தான் கார்வர் கதைகளின் முக்கிய அம்சம், ஆணோ, பெண்ணோ யாராகயிருந்தாலும் பரிதவிப்பான நிலையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையே தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறார், யாராலும் ஒன்று செய்யமுடியாத கையறு நிலை உருவாகும் போது மனிதர்கள் தோற்றுப்போகிறார்கள்,

விட்டுக் கொடுப்பதும் சண்டையிடுவதும், புணர்வதும், கூடி உண்பதும், குழந்தைகளை வளர்ப்பதும் மட்டும் குடும்பமில்லை, அது ஆண் பெண் என்ற இரண்டு தனிமனிதர்கள் ஒன்று சேர்ந்து வாழும்முறை,

அவர்கள் வாழ்க்கை முழுவதும் நிராசையுடனும், கற்பனையான எதிர்பார்ப்புகளுடன், ஏமாற்றங்கள், சந்தோஷஙகளுடன் தான் வாழ்வார்கள், வாழ்க்கை என்பது அவ்வளவு தான் என்கிறார் கார்வார்

எம்.கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், விஜயராகவன், செங்கதிர் நால்வரின் மொழியாக்கமும் சிறப்பாகவே உள்ளது, தேர்ந்த மொழிபெயர்ப்பின் சரளமே இக் கதைகளை வாசிப்பதை மகத்தான அனுபவமாக்குகிறது

தமிழ் இலக்கியச்சூழலுக்கு ரேமண்ட் கார்வரை முறையாக அறிமுகம் செய்து வைத்த செங்கதிருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: