படித்ததும் பிடித்ததும் 1

தளசிங்கமாலை என்ற நூலிலுள்ளது இப்பாடல்.


 


ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ்


வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர


வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத்


தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே


 


இப்பாடலின் பொருள்:


 


சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து


விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய,


தென்றல் வீச, மூங்கிலையத்த அழகிய வளையங்கள், விரக


தாபத்தினால் சோர்ந்து விழ, நான் உன்னை வந்து சேர்வதற்குத்


தாய் குறுக்கே நிற்கின்றாளே என்பதாம்.


இவ்வகைச் செய்யுள்களைநாமாந்திரிகைஎன்னும் யாப்பு வகையில் அடக்குவர்.


 


நன்றி - திரு.சிங்கை கிருஷ்ணன்


 


**


கண்ணாடி வழியாக


 


கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.


 


அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும்.


மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, அம்மா .. வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும்  என்று தீர்மானித்துக் கொள்ளும்.


 


அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம்.


 


இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று,  இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.


 


சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.


 


ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே  செல்லும் முயற்சியை கைவிட்டு விடும்.


 


இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில்,  பிரேக் போட்டது போல் நின்று விடும்.


 


இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை. வலி இல்லை.


 


அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.


 


அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.


 


இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன்,


அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.


 


இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.


 


ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.


 


அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்


 


அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.


 


ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.


 


நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


 


- நன்றி: முத்தமிழ்.காம


 


தமிழர்கள்நகை


 


 


தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டுகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணிகலன்கள் பூணுவதில் இப்போது போல் அப்போது மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டுகளின் படி அப்போது பயன்பாட்டில் இருந்து கோவிலுக்கு அளிக்கப்பட்ட சில நகைகளின் பெயர்கள் :–


 


ஏகவல்லி [கழுத்து அணி - ஒற்றைச் சரமாலை] காறை [கழுத்து அணி ] கச்சோலம் [ இடை அணி] கலாவம் [இடை அணி] காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி] மோதிரம் [இரத்தினம் முத்து ] முத்து மாத்திரை [காது அணி] பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ] பதக்கம்.


 


என்கிறது கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணை. இதில் சிறப்பு என்ன வெனில் ஒவ்வொரு அணிகலனின் முழுவிபரமும் குறிக்கப்பட்டுள்ளது. நகையின் எடை, அது செய்யப்பட்ட தன்மை, அதில் பொருந்திருக்கும் முத்து,பவளம், வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருகின்றன.


 


எடுத்துக்காட்டாக பேரரசர் இராஜராஜன், ஒரு தெய்வத்திற்கு 16 தங்க வளையல்களை அளித்திருந்தார். அவை ஒவ்வொன்றின் எடை ஐந்து கழஞ்சி ஆறு மஞ்சடி. ஒவ்வொரு வளையலிலும் ஏறத்தாழ 316 முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன அவற்றின் எடை 155 கல்.


 


இந்த பதினாறு வளையல்களின் மொத்த மதிப்பு 403 காசுகள். பேரரசரின் பட்டத்து அரசி லோக மகாதேவி 13 வகை நகைகள் அளித்திருந்தார். அவற்றில் 471 முத்துக்களும் 20 பவளங்களும் இருந்தன. பேரரசர் மாத்திரம் கொடுத்திருந்த நகைகள் 42,000 கழஞ்சுப் பொன்.


 


அணிகலன்களில் பயன்படுத்தப்பட்ட தங்கம், முத்து போன்றவை எப்படி எடை போடப்பட்டனஎன்ற செய்திகளும் தரப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட `குடிஞைக்கல்“ முறையில் “ஆடவல்லான் மேரு விடங்கன் “ என்ற பெயர் கொண்ட கல்லாலும் எடை போடப்பட்டன. அணிகலன்களை நிறுக்கும்போது, நகைகளின் சரடு, சட்டம், செப்பாணி, அரக்கு ஆகியவையும் நகைகளின் பகுதிகளாகவே கொண்டு எடை போடப்பட்டன என்கின்றன கல்வெட்டுகள். தங்கத்தின் மாற்று அளவிடப்பட்டது பற்றிய சுவையான செய்தியும் காணப்படுகிறது. பேரரசர் அளித்த பொன் நகையில் தரத்திற்கு கால் மாற்று குறைவாகவே இருந்ததாம்.


 


தண்டவாணிக்கு கால் கால் காந்திகை ( கழுத்து அணி) கடகம்,கொப்பு ( காதணி)


மகுடம், குதம்பை ( காதணி) பட்டம் (மகுடம்) பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்)சப்தசரி ( ஏழு சங்கிலிகள்) சிடுக்கு, சூடகம் (வளையல்) பாத சாயலம் ( கால் அணி)சூரி சுட்டி (நெற்றியில் அணிவது) வீரப்பட்டம் (தலையில் அணிவது) வாளி (காதணி) காறை கம்பி (காதணி) திருகு, மகரம் (காதணி) உருட்டு திரிசரம் ( கழுத்து அணி) தூக்கம் (காதணி)நயனம் (கண்மூடி) பொற்பூ,பொட்டு. பாசமாலை தோள் வளை தாலி தாலி மணிவடம் தாழ்வடம் தகடு திரள்மணி வடம் வளையல் வடுக வாளி வடம் தோடு திருவடிக்காறை கால் வடம் கால் மோதிரம்  சன்ன வடம் திருகு கால் காறை கைக் காறை மாலை


 


பயன் படுத்தப்பட்ட முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும், வைரங்களில் 11 இருந்தன என்று தெரிகிறது. சில நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது.


1. தலையணி:


தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.


 


2. காதணி:


தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,


கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.


 


3. கழுத்தணிகள்:


கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,


நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.


 


4. புய அணிகலன்கள்:


கொந்திக்காய்.


 


5. கை அணிகலன்:


காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.


 


6. கைவிரல் அணிகலன்கள்:


சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.


 


7. கால் அணிகலன்கள்:


மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.


 


8. கால்விரல் அணிகள்:


கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.


 


9. ஆண்களின் அணிகலன்கள்:


வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,


பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,


கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,


முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.


 


நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன்


 


***


பாரதியார் நட்பு தொடங்கியது – பாரதிதாசன்


 


பாரதியார் பாடி வெளியிட்டிருந்த  சுதேச கீதங்கள் புதுச்சேரியில்படித்தவர்களிடையே உலவியிருந்தது. குவளை (குவளை கிருஷ்ணமாச்சாரியார்) அந்தப் பாட்டுக்களில் சிவற்றைக் கூவிப் பாட நான் கேட்டிருக்கிறேன். என்ஆசைக்கு ஒரு புத்தகம் கிடைத்தது ஒரு நாள் – சுதேசக் கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன்.`இந்தியா` பத்திரிகையில்


சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன்தருமராஜா கோயில் தெரு வளைவுகள், குவளையின் கூச்சல் இவை எல்லாம் சுதேசகீதங்களின் உட்பொருளை எனக்கு விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷயமானஉணர்வோடும், `நான் ஓர் இந்தியன்` என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களைப் பாடமுடிந்தது நாளடைவில்!


 


எனது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது. மாலை 3மணிக்குக் கல்யாணப் பந்தல் பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில் நானும்ஒருவன்.


 


கணீரென்று ஆரம்பித்தேன்.


 


“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ!” என்பதை.


அப்போது என் பின் ஒருபுறமாக, இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றில் ஒன்று ரவிவர்மா `பரமசிவம்`.


 


வேணு நாய்க்கர், “இன்னும் பாடு சுப்பு” என்றார். நான், “தொன்று நிகழ்ந்த தனைத்தும்” என்ற பாட்டைப் பாடினேன்.


 


சபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது பேர் இருக்கும். 30 பேர்வழிகளில் சுமார் 25 பேர்கள், நான் பாடும் போது,  அந்த ரவிவர்மா பரமசிவத்தையே பார்க்கிறார்கள்!


 


அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால்அவர் ஒரு குறிப்பிடத் தக்கவராக இருக்கலாம்  என்று தோன்றிற்று.


 


என்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாய்க்கர். பாடினேன்.அப்போது வேணு நாய்க்கர்,


“அவுங்க யார் தெரியுமில்ல?” என்று கேட்டார். தெரியாது என்று கூட நான் சொல்லி


முடிக்கவில்லை. ரவிவர்மா படம்: “நீங்கதமிழ் வாசிச்சிருக்கீங்களோ?” என்று


என்னைக் கேட்டார்.


 


நான்: “கொஞ்சம்.”


 


`படம்`: “உணர்ந்து பாடுகிறீர்கள்.”


 


வேணு நாய்க்கர், அப்போது, “அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது.


சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்களே?”  என்று `பரமசிவப் படத்தை` எனக்கு


அறிமுகப்படுத்தினார்.


 


எனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது என்  மூஞ்சியை நான் கண்ணாடிஎடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான் ஓர் அசல் இஞ்சிதின்ற குரங்கு


 


பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார்,


நான் அப்போது என்ன பதில் சொன்னேன் என்பவைகளைக் கேட்டால் அப்போதே


என்னால் சொல்ல முடியாது. இப்போது என்னால்சொல்ல முடியுமா?


 


கடைசியாக பாரதியார் செல்லிய வார்த்தையை மாத்திரம் நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த  வார்த்தையை அவர்வெளியிட்டவுடன் என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி  விடக் கூடும்என்று அதன் முதுகின் மேல் ஏறி


உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.  அவர் கூறிய வார்த்தைகளாவன:


“வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே?”


 


நான் வீதியில் அடிக்கடி பார்த்து, “இவர் ரவிவர்மா படத்தில் காணும்பரமசிவம்


போல் இருக்கிறார்” எனறு ஒப்புக் கூட்டி நினைத்த  மனிதர்பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று.அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று.


 


அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு  முருகேசம் பிள்ளை முதலியவர்களால்


பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று — அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச்சந்தோஷமயமாக்கிவிட்டன.


 


மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன் பாரதியார் வீட்டுக்குப் போகப்போகிறேன். மறுநாள்


என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான் கவலையாய்க்கிடந்தது.


 


நானும் வேணு நாய்க்கரும் பாரதியார் வீட்டு மாடியில் ஏறிப் போகிறோம்…வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின் உச்சரிப்பு என் காதில்கேட்கிறது. நான் மாடியின்  கூடத்தில் பாரதியாரை, அவர் பக்கத்தில்  பாடிக்கொண்டிருக்கும் சிவா நாயகரை,  வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் தம்பி சாமிநாதஐயரை, கோவிந்த ராஜுலு நாயுடுவைப் பார்த்தேன். நாயகர் பாட்டுக்கு பாரதியார்  `ஆஹா` போடும்போது நான் கும்பிட்டேன்.


பாரதியார் கும்பிட்டு,”வாருங்கோ, உட்காருங்கோ.  வேணு உட்கார். குயில் பாடுகிறது. கேளுங்கோ”என்றார். சிவா நாயகருக்குப் பாரதியார் `குயில்` என்று


பெயர்வைத்திருந்தார்.


 


பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு. அதன் பிறகு என்னைப் பற்றியவிவரம் நடந்தது. கொஞ்ச நேரம். “எனக்கு உத்தரவு கொடுங்கள்” என்றுபாரதியார் அதே கூட்டத்தில் ஒரு புறமாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.மீதியுள்ள நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எனக்குப் பேச்சு அவ்வளவாகப்பிடிக்கவில்லை. அங்கு ஒரு மூலையில் கிடந்த கையெழுத்துப் புத்தகத்தைப்பார்க்க வேண்டும் என்பதிலேயே என் எண்ணம் சென்று மீண்ட வண்ணமிருந்தது. மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின் பக்கத்தில்  உட்கார்ந்தேன். பிறகுஅதைக் கையில் எடுத்தேன்,  விரித்தேன்… வசமிழந்தேன்.


 


நான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே என் காலத்தைக் கடத்தியிருந்தவன்.என் ஆசிரியரும், புதுச் சேரியில் பிரபல வித்துவானுமாகிய பங்காரு பத்தர்,மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை


இவர்களால் நடத்தப்படும் கலைமகள்கழகத்தின் அங்கத்தினன். பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே யாருக்கும்புரியாதபடி எழுதுவதுதான் கவிதை என்ற அபிப்பிராயமுள்ளவன். கடிதம்எழுதும்போதுகூடக் கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்றதப்பெண்ணமுடையவன்.


 


பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர் உலகில் சேர்த்தது.நானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள கையெழுத்துப் புத்தகமும் ஒருபக்கம்; என் அறிவும் அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும் விஷயமும் ஒருபக்கம். என் உள்ளமும் அதில் இனிப்பைச் சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ளஎளிய சொற்களும் ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை,அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள் வார்த்தைகளைக் கவனிக்க என்னிடம்மீந்திருந்த உறுப்புக்கள் ஒன்றுமில்லை. இப்படி வெகு நேரம்.


 


இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த ராஜுலு நாயுடு பீடிபிடித்தாயிற்று. பாரதியாரும் சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று.மணியும் 11 ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர் என்னைப் பாரதியாருக்குச்சுட்டிக்காட்டி, “இவர் தமிழ் வாசித்தவர் சுவாமி” என்றார்.


அதற்குப்பாரதியார், “இல்லாவிட்டால் என் கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்னஇருக்கிறது?” என்றார், அன்புடன், நல்லெண்ணத்துடன்.


 


அதன் பிறகு நான், “போய் வருகிறேன், சுவாமி” என்றேன். பாரதியார், “சரி,நேரமாகிறதா?


நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்” என்றுகுறிப்பிட்டார். அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட முடியவில்லை.”நமஸ்காரம், நமஸ்காரம்” என்று துரிதமாய்ச் சொல்லிப் பிரிய எண்ணமில்லாதுபிரிந்தேன். என்னுடன் மற்றவர்களும் எழுந்தார்கள்.


 


நாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி முழுவதும் பாரதியாரின்குணாதிசயங்களை


விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில் சற்றுநேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள் நூதனமாக ஒன்றும் கூறவில்லை!”


 


இப்படியாகத்தான்அந்த இருபெருங் கவிஞர்களின் சந்திப்பு நல்லதொரு நாளில் நடந்தது.


 


-     நன்றி: பெஞ்சமின் பக்கங்கள் – பேராசிரியர் பெஞ்சமின் லெபோ,பிரான்சு


 


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: