பாஷோவின் பயணங்கள்

பாஷோ மகத்தான ஹைக்கூ கவிஞர்.  பாஷோ என்றால் ஜப்பானிய மொழியில் வாழை மரம் என்று அர்த்தம்.  All who achieve greatness in art possess one thing in common: they are one with nature எனப் பாஷோ குறிப்பிடுகிறார். இவரது ஐந்து பயணங்களின் தொகுப்பு நூலாகிய Basho’s Journey வாசித்துக் கொண்டிருந்தேன்

1684ம் ஆண்டுத் தனது சீடனுடன் ஈடோவில் இருந்து நீண்ட பயணத்தைத் துவக்கினார் பாஷோ. Uenoவில் உள்ள தனது பிறந்த வீட்டை மறுபடி பார்ப்பதில் துவங்கிய இப்பயணம் ஆறு, மலை, காடு, பௌத்த மடாலயங்கள், என நீண்டு போகின்றன, பயணங்களே அவரது கவிதைகளுக்கான முக்கிய அகத்தூண்டுதலாக இருந்துள்ளன

அவரது பயணக்குறிப்புகள் Journal of Bleached Bones in a Field, Kashima Journal, Knapsack Notebook, Sarashina Journal, The Narrow Road to the Deep North என ஐந்து தொகுப்புகளாக வெளியாகி உள்ளன.

பாஷோவின் பயணங்களுக்கான காரணம் இயற்கையை நாடும் மனம் மட்டுமில்லை, Poetry was not just an art form but also a spiritual path, a Way எனக் கருதிய பாஷோ ஆன்மீகத்தேடலுக்காவும் பயணித்திருக்கிறார்.அத்துடன் அவர் கவிதை எழுதுவதற்குக் கற்றுத்தரும் ஆசான் என்பதால் ஹைக்கூ கவிதையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் உணர்த்தவும், இளம் தலைமுறைக்குக் கற்றுதரவும் அவர் தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டார் என்கிறார்கள்

ஜப்பானிய இலக்கியத்தில் diary literature (nikki bungaku) எனப்படும் தனிவகைமையிருக்கிறது. அரண்மனையில் வாழ்ந்த அந்தப்புரப்பெண்களே அதிகம் நாட்குறிப்புகளை எழுதியிருக்கிறார்கள், அதில் சிலர் முக்கிய கவிஞர்கள்.   Ki no Tsurayuki என்ற கவிஞரே தனது பயணம் குறித்த நாட்குறிப்பை முதன்முதலாக வெளியிட்டவர். இந்த மரபில் தான் பாஷோவும் தனது பயண அனுபவங்களை எழுதியிருக்கிறார் .இதை haikai prose என அழைக்கிறார்கள்

தனது முதல் பயணத்தில் பல வருஷங்களுக்குப் பிறகு தனது பிறந்தவீட்டிற்குப் பாஷோ போன போது இறந்து போன அவரது அம்மாவின் நரைத்த தலைமயிர்கள் கொண்ட பெட்டகத்தினை கொண்டு வந்து வைத்து அதற்கு அஞ்சலி செலுத்த சொல்லியிருக்கிறார் அவரது சகோதரர், அம்மாவின் வெண்ணிற தலைமயிரைக்கண்ட பாஷோ நிலையாமையின் குறியீடாக அதைக்கருதி அழுதிருக்கிறார். அது குறித்தும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

பயண வழியில் எதிர்பட்ட தேநீர் விற்கும் பெண்ணிற்கு தனது பட்டுத்துணி ஒன்றில் கவிதை எழுதி தந்திருக்கிறார். கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை கண்டு அதற்கு உணவளித்து ஏன் சொர்க்கத்தின் பரிசைக் கைவிட்டார்கள் என வருந்தியிருக்கிறார், பாஷோவோடு சிரி என்ற ஒரு சீடன் கூடவே பயணம் செய்திருக்கிறான். இருவருமாக நடந்து சுற்றியிருக்கிறார்கள்.

இயற்கை அவரது கண்களில் வெகு துல்லியமாக, தனித்துவமானதாக, புதிரானதாக, வியப்பூட்டுவதாகத் தெரிகிறது. பயண வழியெங்கும் இயற்கை குறித்த கவிதைகளைப் புனைந்தபடியே சென்றிருக்கிறார் பாஷோ. இப்படித்தான் சங்க காலத்திலும் கவிஞர்கள் வாழ்ந்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

ஒரு பயணத்தில் மழையில் நனையும் நாயின் முதுகினைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இன்னொரு இடத்தில் கொக்கின் தனிமையை, உயர்ந்து நிற்கும் பைன் மரத்தை, தூரத்து எரிமலையை என அவரது கவிமனம் எதில் குவிகிறதோ, அது உடனடியாக கவிதையாக மலர்ந்திருக்கிறது

அந்த நாட்களில் வைக்கோலில் செய்த காலணிகளைத் தான் அணிந்து கொண்டு நடந்திருக்கிறார்கள், இப்போதும் ஜப்பானில் உள்ள பௌத்த ஆலயங்களில் பெரிய வைக்கோல் காலணிகள் செய்து வைக்கபட்டிருப்பதைக் காணமுடிகிறது, பாஷோவும் வைக்கோல் காலணி அணிந்தே நடந்திருக்கிறார்.

தவளை, கொக்குகள், மரங்கள், மின்மினிப்பூச்சிகள், நிலவு, காற்று, மழை, கடல், விட்டில்பூச்சி, உதிரும் இலைகள் போன்றவை அவரது கவிதைகளில் திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன, ஆனால் அவற்றை உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே பலநேரங்களில் குறிப்பிடுகிறார். பயணத்தின் ஊடாகவும் இவற்றை குறித்தே அதிகம் எழுதியிருக்கிறார்.

தோக்கியோ சென்றிருந்த போது கவிஞர் பாஷோவின் ம்யூசியத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே இந்த நூலில் குறிப்பிடப்படும் வரைபடங்களை, குறிப்புகளை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்

1-6-3 Tokiwa, Koto, Tokyo Prefecture முகவரியில் உள்ள பாஷோ ம்யூசியம்1981ம் ஆண்டு உருவாக்கபட்டிருக்கிறது, சிறிய ம்யூசியம். 1680 களில் பாஷோ இந்த இடத்தில் சிறிய குடில் அமைத்துத் தங்கியிருந்திருக்கிறார், அதன் நினைவாகவே இம்ம்யூசியம் அமைக்கபட்டிருக்கிறது.

பாஷோவின் கவிதைகள், மற்றும் அவரைப்பற்றிய குறிப்புகள் யாவும் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ளன, ஆங்கிலத்தில் ஒரு வாசகம் கூடக் கிடையாது. ம்யூசியத்தைச் சுற்றிலும் அழகான தோட்டம் ஒன்று உள்ளது, கூடவே சிறிய மீன்குளம். பின்பகுதியில் சுமிதா ஆறும் பாலமும் தென்படுகின்றது,

ம்யூசியத்தின் உள்ளே பேரமைதி , நடந்து செல்லும் காலடிச்சப்தம் கூடக் கேட்கக்கூடாது என்பதற்காகத் துணிச்செருப்பு போல ஒன்றை அணிந்து கொள்ளச்செய்கிறார்கள்

ம்யூசியத்தைப் பார்வையிட்டதன் நினைவாக அட்டையில் பாஷோவின் உருவம் கொண்ட முத்திரை பதித்துத் தருகிறார்கள், என்னிடமிருந்த புத்தகம் ஒன்றில் அந்த முத்திரையைப் பதித்துக் கொண்டேன்,

நுழைவாயிலில் பாஷோவின் உருவத்தைப் போன்ற மாதிரி நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் தலைப்பகுதி ஒட்டையாக உள்ளது, அதில் நமது தலையைப் பொருத்தி புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்.

இரண்டு நிமிசம் பாஷோவாக மாறி புகைப்படம் எடுத்துக் கொண்டேன், மிகவும் சந்தோஷமாகயிருந்தது.

முதல் தளத்தில் ஹைக்கூ வகுப்புகள் நடைபெறுகின்றன, அங்கே பயிலுபவர்களில் பெரும்பகுதி இளைஞர்கள். கண்ணாடி பெட்டகத்தினுள் பாஷோவின் கையெழுத்து பிரதிகளையும் அவரது பயணவரைபடங்களையும், பயன்படுத்திய பொருட்களையும் வைத்திருந்தார்கள், அவரது வீட்டின் மாதிரி ஒன்றையும் செய்து வைத்திருக்கிறார்கள்,

பாஷோவின் கையெழுத்தை பார்த்துக் கொண்டிருந்தேன், சித்திர எழுத்துகளைப் போலவே இருந்தன. ஹைக்கூ என்பதே மொழியால் வரையப்பட்ட ஒவியங்கள் தானே.

பாஷோ அவரது தோட்டத்தில் வசித்த ஒரு தவளையை மிகவும் விரும்பியிருக்கிறார், சுனாமி அடித்த போது அந்தத் தவளை காணாமல் போய்விட்டது, பாஷோ அதற்காக மிகவும் மனம் வருந்தினார், சில காலத்தின் பிறகு அத்தவளை தானே பாஷோவின் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டது, அந்தச் சந்தோஷத்தை அவர் ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார், சுனாமியில் இருந்து மீண்ட தவளையின் உருவம் அங்கே காட்சிக்கு வைக்கபட்டிருந்தது

பாஷோவின் வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படம் ஒன்று அங்கே தொடர்ந்து டிவியில் திரையிடப்படுகிறது, பாஷோ குறித்து அறிந்து கொள்வதற்கு அது சிறந்தவழிகாட்டும் முயற்சி.

My poetry is like a stove in summer or a fan in winter. It runs counter to popular tastes என ஒரு இடத்தில் பாஷோ குறிப்பிடுகிறார்.  உண்மையில் அவரது கவிதைகள்  கோடையில் அதிக உஷ்ணம் தரும் கணப்பு அடுப்பு, அல்லது  குளிர்காலத்தில் விசிறி  போல கூடுதல் உணர்வை தருவது மட்டுமில்லை ,  இயற்கையைப் புரிந்து கொள்ளவும், கொண்டாடவும், ஒன்றுகலக்கவும் செய்யும் தியானவழி என்றே சொல்வேன்.

***

Archives
Calendar
November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Subscribe

Enter your email address: