மௌனியோடு ஒரு மாலை

நேற்று  மௌனி குறித்து எழுத்தாளர் கி. அ. சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை கேட்பதற்காகப் போயிருந்தேன். அழகியசிங்கர் கோவிந்தராஜன் இருவரும் இணைந்து விருட்சம் சார்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டம் கேட்க பதினைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் சரிபாதி எழுத்தாளர்கள்.

எழுத்தாளர் இரா.முருகன். திரைப்பட இயக்குனர் அம்ஷன்குமார், ராஜ்கமல் கண்ணன், சிறகு ரவிச்சந்திரன், ராஜகோபால் முதலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மௌனியின் மகள் ஞானம், தனது கணவருடன்  கூட்டத்தில் கலந்து கொண்டார், நிகழ்வின் இறுதியில் ஞானம் தன் தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்

நான் மௌனி பற்றி இரண்டு புத்தகங்களை வாசித்திருக்கிறேன், ஒன்று இலக்கியச்சிந்தனைக்காகத் திலிப்குமார் எழுதிய மௌனியோடு கொஞ்ச தூரம். ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தின் வழியே மௌனியின் படைப்புலகை விவரிக்ககூடியது.

மற்றொன்று ஜே.வி.நாதன் எழுதி விகடன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மௌனியின் மறுபக்கம் என்ற நூல்.

ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் மௌனியின் எதிர்வீட்டில் வசித்தவர். பல ஆண்டுகாலம் அவருடன் நெருங்கிப்பழகியவர். அவரது நூலில் மௌனி குறித்துப் பல அரிய தகவல்களும் நிகழ்வுகளும் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள மௌனியின் நேர்காணல் அவரது இலக்கிய ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.ஜே.வி.நாதனின் மௌனி குறித்த நூல் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாகும்

••

கி.அ.சச்சிதானந்தம் மௌனியோடு நெருங்கிப்பழகியவர், மௌனி கதைகளைத் தொகுத்து தனது பீகாக் பதிப்பகம் மூலம் புத்தகமாகக் கொண்டுவந்தவர். மௌனியை விரிவாக நேர்காணல் செய்தவர். உலக இலக்கியங்களைத் தேர்ந்து கற்றவர். சி.சு. செல்லப்பாவின் உற்றதுணையாக இருந்தவர். நிறைய மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். மௌனி பற்றிய அவரது உரை நினைவுகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. மிக மெதுவான குரலில் நினைவில் இருந்து மீளமுடியாமல் பேசுவது போல மௌனிக்கும் தனக்குமான உறவை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்

•••

மௌனியின் வாழ்வும் எழுத்தும் குறித்துப் பேசத்துவங்கிய கி. அ. சச்சிதானந்தம் மௌனி தனது நண்பர்களுடன் எப்படிப் பழகினார், அவரது குடும்ப சூழல் எப்படியிருந்தது. அவர் மகனின் எதிர்பாராத மரணம் ஏற்படுத்திய பாதிப்பு,  என்ன புத்தகங்களை விரும்பிப் படித்தார். அவரது கதைகள் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பற்றி விரிவாகப்பேசினார்

அந்த உரையாடலில் கி.அ.சச்சிதானந்தம் தான் எடுத்த மௌனி குறித்த ஆவணப்படம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக ஒடக்கூடிய இப்படத்தைச் சாரங்கன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மகன்.

இப்படத்தின் மூலப்பிரதிகள் இப்போதும் சாரங்கனிடமிருக்கின்றன, அதை மீட்டுருவாக்கம் செய்து புதிதாகத் திரையிடலாம். ஆனால் அதற்கு நிறையச் செலவு பிடிக்கும் என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

ஒரு தந்தையைப் போலத் தன்னை மௌனி எப்படி எல்லாம் நேசித்தார் என அவர் விவரித்த விதம் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது

••

மௌனி தன் வாழ்நாள் முழுவதும் ஆசையாகப் பைபிள் படித்து வந்திருக்கிறார், கிங் ஜேம்ஸ் பதிப்பாக வெளியான பைபிளை அவர் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் படித்து வந்தார். தூய அன்பின் அடையாளமாக இயேசுவைக் கருதினார்.

சிலுவையைச் சுமந்து கொண்டு நடந்த போது இயேசு வழியில் எந்த இடங்களில் என்ன சிந்தனை செய்தார் என்பது குறித்து எழுத வேண்டும் என்ற ஆசை மௌனிக்கு இருந்தது. ஆனால் அதைக் கடைசிவரை எழுதவில்லை.

இயேசுவை அவர் மானுட அன்பின் ஒட்டுமொத்த உருவம் போல நேசித்தார். பைபிளைப் போலவே அவர் விரும்பிப்படித்த இன்னொரு புத்தகம் Appearance and Reality.

F. H. Bradley யின் புத்தகத்தை வரி வரியாகச் சிலாகித்துப் படித்துப் போற்றியிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைகழக நூலகத்தில் இருந்து உலக இலக்கியங்களைத் தேடி வாசித்திருக்கிறார். க.நா.சுவின் அறிமுகத்தால் காப்காவை விரும்பிப் படித்திருக்கிறார். தனக்குச் சமஸ்கிருதம் வாசிக்க முடியாத காரணத்தால் சமஸ்கிருத நூல்களைப் படிக்கச்சொல்லி கேட்பதில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். இலக்கியத்தை விடவும் தத்துவம் தொடர்பான நூல்களை அதிகம் வாசித்திருக்கிறார்.

படிப்பதை மட்டுமே வாழ்க்கையையாகக் கொண்டிருந்த அவருக்கு முதுமையில் கண்பார்வை குறைந்து போனது. அதனால் மிகுந்த மனவேதனை கொண்டார். கண்சிகிட்சை செய்த போதும் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அது அவருக்கு மன உளைச்சலாக இருந்தது

ஊஞ்சல் ஆடுவதில் விருப்பம் கொண்டிருந்த மௌனி, கி. அ. சச்சிதானந்தம் வீட்டு ஊஞ்சலில் வேகமாக ஆடுவாராம். அப்போது அவரைக்காண ஒரு குழந்தையைப் போலிருக்கும் என்றார் சச்சிதானந்தம்

பேச்சின் நடுவில் சுந்தர ராமசாமி பற்றி சொன்ன கி.அ.ச. சுரா வேகமாக கார் ஒட்டக்கூடியவர், அவரோடு காரில் உட்கார்ந்து போகப் பயமாக இருக்கும். அவரது அம்பாசிடர் காரில் போய் பூதப்பாண்டியில் உள்ள கிருஷ்ணன் நம்பியை பார்த்துவந்திருக்கிறேன், அப்போது கிருஷ்ணன் நம்பி உடல்நலக்குறைவு கொண்டிருந்தார், ஆனாலும் அன்பாகப் பேசினார். திடீரென பிரமீள் பற்றிய பேச்சு வந்துவிடவே அவர் உஷ்ணமாகி அந்த ஆளைக் கொல்லவேண்டும் என்று கத்தினார்.

ஏன் இவ்வளவு கோபம் என்று சுராவிடம் கேட்ட போது அது பெரிய கதை. பிரமீள் கிருஷ்ணன் நம்பியோடு சண்டைபோட்டுவிட்டார் என்றார். நட்பாக பழகிய அத்தனை பேருடனும் பிரமீள் சண்டையிட்டிருக்கிறார். அவரது மனவிசித்திரமது.

சுந்தர ராமசாமிக்கு மௌனி மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது, ஆனால் மௌனி அவரை வெறும் கிராப்ட்ஸ்மேன் என விமர்சனம் செய்த காரணத்தால் அவர் கோவித்துக் கொண்டுவிட்டார் என்று சச்சிதானந்தம் கூறினார்

தான் சிதம்பரம் சென்றுவிட்டால் மௌனி வாய் ஒயாமல் பேசிக் கொண்டிருப்பார். இரவு பனிரெண்டரை மணி வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு அதன்பிறகு படிக்கத் துவங்குவார். எப்போதும் தன்னைப்பற்றியே பேசிக் கொண்டிருக்ககூடியவர். அது சில நண்பர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டது  என்றார் சச்சிதானந்தம்

ஒரு கதையை நாலைந்து முறை மாற்றி எழுதுவார், திருத்தி திருத்தி தான் அதன் இறுதிவடிவை உருவாக்குவார். ஆகவே அவரிடமிருந்து கதையைப் பெறுவது எளிதானதில்லை. அவரது குறுநாவல் ஒன்று பத்திரிக்கைக்கு அனுப்பிவைக்கபட்டு தொலைந்து போய்விட்டது, அதை இன்று வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தனக்குச் சிறுகதை என்ற வடிவம் தான் நெருக்கமாக இருக்கிறது, நாவல் எழுதுவது தனக்கு விருப்பமாகயில்லை என மௌனி சொல்வார். தனது காலத்திற்குப் பிறகு தான், தனது எழுத்தைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இதை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்.

அந்த நாட்களில் எழுத்தாளர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்குக் கி. அ. சச்சிதானந்தம் ஒரு உதாரணம் சொன்னார்.

சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் நாவலைக் கடுமையாக விமர்சனம் செய்து தான் நடை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தாகவும் அதன்பிறகு. ஒருமுறை மௌனியோடு எதிர்பாராமல் சிதம்பர சுப்ரமணியன் வீட்டிற்குச் சென்ற போது அன்று அவரது பிறந்தநாள் என்பதால் வடைபாயசத்தோடு சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.

மௌனி சிதம்பர சுப்ரமணியத்திடம் உன் நாவலைக் கடுமையாக விமர்சனம் செய்தவர் இவர் தான் என அறிமுகம் செய்திருக்கிறார், ஒருவரை திட்டிஎழுதிவிட்டு அவரது வீட்டில் எப்படிச் சாப்பிடுவது எனச் சச்சிதானந்தம் தயங்கியபோது ,அவருக்கு என்னோட நாவல் பிடிக்கவில்லை, அதைப் பற்றி எழுதியிருக்கிறார், இதில் என்ன தப்பு இருக்கிறது எனச் சொல்லியதோடு அன்போடு உணவு கொடுத்து உபசரித்துப் பழகினார், விமர்சனத்தில் வெளிப்படும் கோபத்திற்காக அதை எழுதியவனோடு பகை கொள்ள வேண்டியதில்லை என்ற சிதம்பர சுப்ரமணியத்தின் பண்பு மறக்கமுடியாதது என்றார்.

நகுலன் மீது மௌனிக்குப் பிடித்தம் இருந்தது, நகுலன் ஆங்கிலப்பேராசிரியராக இருந்தவர், அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் தவறு இருக்கிறது என மௌனி கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மௌனிக்கு புதுமைப்பித்தனைப் பிடிக்கும்.  நாலைந்து முறை புதுமைபித்தனைச் சந்தித்திருக்கிறார், கு.ப.ரா. பிச்சமூர்த்தி. பி.எஸ்.ராமையா, க.நா.சு இவர்களோடு நல்ல நட்பிருந்தது.

ஆரம்பத்தில் பிரமீளுடன் மௌனி மிகுந்த நட்பாகப் பழகினார், ஆனால் பிரமீள் திடீரென அவர் மீது கோவித்துக் கொண்டு கடுமையாக நடந்து கொண்டார். அது பிரமீளின் இயல்பு. மௌனி கதைகள் தொகுப்பாக வந்த போது அதற்குப் பிரமீள் எழுதிய முன்னுரை முக்கியமானது, ஆனால் அதை மௌனியே அடுத்தப் பதிப்பில் சேர்க்க வேண்டாம் என நீக்கச்சொல்லிவிட்டார், அதைப் புரிந்து கொள்ளாமல் தன்மீது கோபம் கொண்டு பிரமீள் தன்னைத் திட்டியதாகச் சச்சிதானந்தம் நினைவு கொண்டார்

மௌனியின் புகைப்படங்கள் பற்றிக் கேட்ட போது அது சிதம்பரத்தில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து எடுக்கபட்ட புகைப்படங்கள் என்று சொன்னதோடு, அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் மௌனியைப் பார்த்த ஒரு வட இந்திய புகைப்படக்கலைஞர் அவரை எடுத்த புகைப்படம் தான் இப்போது அவரது நூலின் அட்டையில் வெளியாகி உள்ளது என்றார்.

தீபம் இதழுக்காகத் தான் மௌனியை பேட்டி கண்டபோது டேப் ரிக்கார்ட் வைத்துப் பதிவு செய்யவில்லை, கேள்விகேட்டு அவர் பதில் சொல்லி எழுதினேன், அந்தப் பேட்டியை மௌனி பார்த்தபிறகே அதை வெளியிட வேண்டும் என்றேன், அதற்கு நா.பார்த்தசாரதி சம்மதம் தந்தார், முழுமையான பேட்டியை மௌனி வாசித்து ஒப்புதல் தந்தபிறகே அது வெளியானது. அந்த நேர்காணல் அவருக்கு மிகவும் பிடித்தமானது. அதில் புதுமைப்பித்தன் பற்றி மிகத் துல்லியமான விமர்சனத்தை வைத்திருக்கிறார் என்றார் சச்சிதானந்தம்

மௌனியின் இறுதிநாட்களைப்பற்றி விவரிக்கும் போது சச்சிதானந்தம் கலங்கிய குரலில் பேசினார். சாவு எல்லா மனிதருக்கும் வரக்கூடியது தான், ஆனாலும் மௌனியின் கடைசிநாட்கள் தன்னால் மறக்கமுடியாதவை. மௌனியால் நடக்கமுடியவில்லை, தவழ்ந்து கொண்டு வந்தார். அந்தக் காட்சியைக் கண்டபோது தாங்கமுடியாத வேதனை உருவானது. இனி தன்னைப் பார்க்க வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். மௌனியின் மரணம் தனக்குப் பெரிய இழப்பு, எவ்வளவு மகத்தான மனிதருடன் பழகியிருக்கிறேன் என்று இன்று நினைத்துப் பார்க்கையில் நெகிழ்வாக இருக்கிறது என்றார் சச்சிதானந்தம்

சொல்லித்தீராத நினைவுகள் கொண்ட சச்சிதானந்தின் பேச்சு கால அவகாசம் காரணமாக எட்டுமணியோடு நிறைவு கொண்டது. மௌனி கதைகள் ஆங்கிலத்தில் கதா வெளியீடாக வந்துள்ளது.

மௌனி பற்றிச் சச்சிதானந்தத்தை விரிவாகப் பேசச்சொல்லி அதை வீடியோவில் பதிவு செய்து வைக்க வேண்டும். அது போலவே சாரங்கனிடம் உள்ள மௌனி ஆவணப்படத்தினை வெளியிடுவதற்கும் ஏதாவது இலக்கிய அமைப்புகள் முனைப்புக் காட்டலாம்.

தனது படைப்புகள் குறித்து ஜே.வி.நாதனின்  நேர்காணலில் மௌனி இப்படிக்கூறுகிறார்

அவர் சொல்லியது உண்மை.  தமிழ் இலக்கியத்தில் அழியாச்சுடராக மௌனி எப்போதும் ஒளிர்ந்து கொண்டுதானிருப்பார்.

நன்றி  : கணையாழி இதழ்.  அழியாச்சுடர் இணையதளம்.

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: