ஒவியங்களும் புகைப்படங்களும்

இளம்புகைப்படக்கலைஞர்களுக்காக உலகப்புகழ்பெற்ற ஒவியங்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த உரை ஒன்றினை சனிக்கிழமை (26/07/2014) காலை கே.கே.நகரில் உள்ள சாதனா நாலெட்ஜ் பார்க்கில் நிகழ்த்தினேன்.

இந்த நிகழ்விற்காகத் தமிழகம் முழுவதுமிருந்து 30 புகைப்படக்கலைஞர்கள் வந்திருந்தார்கள். எனது நண்பர்கள் புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ், விகடன் பொன்காசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக நண்பர் ஞாநி வருகை தந்தார்.

மும்பையில் வசிக்கும் புகைப்படக்கலைஞரான ஜெய்சிங் தனது நண்பர்களுடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். ஒரு மணி நேர உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலும் நடைபெற்றது.

புகைப்படக்கலைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பயணம், அவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள், காலம் மற்றும் வெளி குறித்த பார்வைகள், ஒவியங்களுக்கும் புகைப்படக்கலைக்குமான உறவு, சிறந்த புகைப்படக்கலைஞர்களின் வாழ்க்கை அனுபவங்கள் என விரிவான தளத்தில் எனது உரை அமைந்தது

Edward weston-cabbage leaf, Ansel adams’s moon and half dome, Arnold newman’s portrait of marilyn Monroe, cartier-bresson valencia, , Margaret bourke-white’s louisville flood victims, Siskind’s chicago. chuck close -self portrait போன்ற உலகப்புகழ்பெற்ற புகைப்படங்களையும். Hokusai,Vangogh, Vermeer, Monet, Bruegel. Edward Hopper, Petrus van Schendel, Bazille, Edwin Longsden Long, Goya போன்ற ஒவியர்களின் தேர்வு செய்யப்பட்ட ஒவியங்களையும் காணொளி மூலம் சுட்டிக்காட்டி விளக்கினேன்

புகைப்படக்கலையின் தொழில்நுட்பங்கள் பற்றிய புத்தகங்கள் தமிழில் கிடைக்கின்றன. ஆனால் புகைப்படக்கலைஞர்களின் கலைத்திறமையை வளர்த்துக் கொள்வதற்கு உதவி செய்யும் Freeman Patterson’s Photography and the Art of Seeing, John Berger -Ways of Seeing, Susan Sontag – On Photography , The Mind`s eye – bresson போன்ற புத்தகங்களும், தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பும் இன்னமும் தமிழில் வெளியாகவில்லை.

நகுலன் பற்றிக் காஞ்சனை சீனிவாசன் புகைப்படங்களும் கவிதைகளும் இணைத்து வெளியிட்ட புத்தகம் முன்மாதிரியான ஒன்று. அதற்கு இணையாக இதுவரை ஒரு புத்தகம் வெளிவரவில்லை.

நெல்லையில் வசித்த மிக முக்கியப் புகைப்படக்கலைஞரான இசக்கியின் புகைப்படங்களை யாராவது தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டுவரவேண்டும் என்பது எனது ஆசை.

இது போலவே நண்பர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் எடுத்த எழுத்தாளர்கள் பற்றிய புகைப்படங்களும் தனிநூலாக வெளியிடப்பட வேண்டிய ஒன்று. சென்னையில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை மோகன்தாஸ் வடகரா சிறப்பான புகைப்படங்களாக எடுத்திருக்கிறார். அவை கண்காட்சியாக ஒருமுறை வைக்கப்பட்டிருக்கின்றன, அதையும் தனிப்புத்தகமாக வெளியிடலாம். இது போலவே செழியன், விகடன் ராஜசேகர், பொன்ஸீ, போன்றோர் எடுத்த சிறந்த புகைப்படங்களும் தனிநூல்களாக வெளிவர வேண்டும்.

தியோ புகைப்படப்பள்ளியைச் சேர்ந்த மாதவன், குமரன் ஆகியோர் திருப்பூரில் உள்ள காதுகேளாதோர் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்களுக்குப் புகைப்படக்கலையில் ஒராண்டு சிறப்புப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்

சீனிவாசன், சந்தோஷ், செல்வக்கனி, மோகனப்ரியா, விஜயலட்சுமி ஆகிய ஐந்து மாணவர்கள் எடுத்த புகைப்படங்களைக் காங்கேயம் உறங்கும் ஒரு கிராமத்தின் மௌனக்கதை எனத் தனிக்கண்காட்சியாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தகமையத்தில் நடத்தியிருக்கிறார்கள். இந்த சிறப்பான முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது

புகைப்படக்கலையைத் தொழிலாக மட்டும் கருதாமல் அதை ஒரு சேவையாக, சமூகமாற்றத்திற்கான கருவியாக, பண்பாட்டினை ஆவணப்படுத்தும் முனைப்பாக கருதும்   இந்த இளம்கலைஞர்களைக் காணும் போது மிகுந்த நம்பிக்கையும் உத்வேகமும் ஏற்படுகிறது.

•••

புகைப்படத்திற்கான நன்றி   : பிரபு காளிதாஸ்

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: