தூண்டில்

நேற்றிரவு ஒரு கனவு வந்தது, அதில் ஒரு கண்மாய். கரையில் தூண்டிலை வைத்தபடியே மீன்பிடிப்பதற்காகக் காத்திருக்கிறேன், பள்ளிவயதில் நான் வழக்கமாக மீன்பிடிக்கப்போகும் கண்மாய் அது. கரை முழுவதும் புளியமரங்கள், மழை பெய்து கண்மாய் நிரம்பியிருக்கிறது.

அசைந்து கொண்டிருக்கும் தக்கையைப் பார்த்தபடியே கரையில் உட்கார்ந்திருக்கிறேன், அந்த இடத்தில் என்னைத் தவிர யாருமேயில்லை.

தண்ணீரின் மீது வெயில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. தூண்டிலை மீன் கடித்து இழுக்கிறது. தக்கை இழுபட்டு நகர்கிறது, மீன் நன்றாகக் கடிக்கட்டும் என நரம்பு கயிறை நழுவவிடுகிறேன், நீளமான தூண்டிலது,

தூண்டில் முள்ளும் கூர்மையானது. தக்கை ஆடத்துவங்குகிறது, சுண்டி தூண்டிலை வெளியே இழுத்தேன், மாட்டிக் கொண்டிருந்தது ஒரு தவளை. பிரட்டை என்று சொல்வார்களே, சின்னத் தவளைக்குஞ்சு, அது மாட்டிக் கொண்டிருக்கிறது. தூண்டிலை இழுத்து தவளைக்குஞ்சுவின் வாயை கிழித்துக் கொண்டிருந்த தூண்டிலைப் பிடுங்கி பிரட்டையை மீண்டும் தண்ணீருக்குள் விட்டேன், விருட்டெனப் பாய்ந்து தண்ணீருக்குள் மறைந்து போனது.

மறுபடியும் தூண்டிலை வீசினேன், தண்ணீரில் காற்று தன்விரல்களால் எதையோ வரைவதும் அழிப்பதுமாகயிருந்தது. கடந்து செல்லும் கொக்கு ஒன்று தாழப்பறந்து போனது. முதுகுப்பின்னால் யாரோ ஆள் நிற்பது போல ஒரு உணர்ச்சி. திரும்பி பார்த்தால் யாருமேயில்லை.

தூண்டிலை பார்த்தபடியே உட்கார்ந்திருக்கிறேன், மேற்குவானத்தை நோக்கி சூரியன் போய்க் கொண்டிருக்கிறது. போதும் என்பது போல எழுந்து கொள்ளப் பார்க்கிறேன், என்னால் அந்த இடத்திலிருந்து எழுந்து கொள்ள முடியவில்லை.

உடம்பு உறைந்துவிட்டது போலிருக்கிறது, கைகளை அசைக்கமுடிகிறது, ஆனால் அந்த இடத்திலிருந்து எழுந்து கொள்ள முடியவில்லை, போராடுகிறேன், ஏன் இப்படி ஆனது எனப்புரியவில்லை, காலை உதறி எழுந்து கொள்ள முயற்சிக்கிறேன், முடியவேயில்லை, களிமண்ணில் கால் சிக்கிக் கொண்டது போல பிசுபிசுப்பு. ஆவேசத்துடன் காலை உதறியபோது விழிப்பு வந்து எழுந்து கொண்டுவிட்டேன்.

என்ன கனவிது, எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மீன்பிடிக்கப் போவதாக ஏன் கனவு வருகிறது. காலைத்தடவியபடியே இருட்டில் உட்கார்ந்திருந்தேன், மனது தத்தளிக்க துவங்கியது. எதற்கு இந்த நினைவு பீறிடுகிறது. பள்ளிவயதின் நினைவுகள் அழியாத கோலங்கள் தானா.

பள்ளிவயதில் விடுமுறை நாள் என்றாலே காலையில் தூண்டிலுடன் மீன்பிடிக்கக் கிளம்பிவிடுவோம், இதற்கெனவே ஒரு செட் இருந்தார்கள்.

மண்புழு தேடி கொண்டுவரவேண்டியது கணேசனின் வேலை, அவன் எங்கிருந்தோ ஒரு டப்பா நிறைய மண்புழுக்களைக் கொண்டுவருவான், கண்மாய்க் கரையில் ஆளுக்கு ஒரு இடம் தேடி உட்காருவோம், அதில் ராசியான இடம் அமையாவிட்டால் மீன்கிடைக்காது.

தூண்டிலை வீசும் முன்பு மனதிற்குள்ளாக ரகசியமான முணுமுணுத்துக் கொள்வோம், கணேசன் தூண்டில் முள்ளின் மீது எச்சில் துப்புவான், மீனுக்கு எச்சில் ருசி பிடிக்கும் என்பது அவனது எண்ணம்.

செல்வராஜும் நானும் அருகருகே குத்துகாலிட்டு உட்கார்ந்து கொள்வோம், அவன் தான் எனது தோழன், தூண்டிலை வீசி விட்டு அமைதியாக இருப்போம், பேச்சுச் சப்தம் கேட்டால் மீன் வராது,

யாருடைய தூண்டிலில் முதல் மீன் சிக்கப்போகிறது என்ற பதற்றம் எங்களுக்குள் இருக்கும், அதனால் தக்கையை வெறித்துப் பார்த்தபடியே இருப்போம், சொந்தமாகத் தூண்டில் இல்லாத பரமேஸ்வரன் கேசவனிடமிருந்து இரவல் தூண்டில் வாங்கி வந்திருப்பான், அப்படித் தூண்டில் இரவல் தருவதற்குப் பத்து தீப்பெட்டி லேபிள் கைமாறாகத் தர வேண்டும், அது போலப் பிடிக்கும் மீனில் பாதிக் கேசவனுக்கு. தூண்டில் முள் மட்டும் கடன் வாங்கினால் அதற்கு ஈடாக இரண்டு கோலிக்குண்டுகளைத் தர வேண்டும். இப்படி எழுதப்படாத பல விதிகள் இருந்தன.

ஏதாவது ஒரு தூண்டிலின் தக்கை இழுபடும் போது மற்றவர்களின் கண்கள் அந்தப் பையனையே வெறித்துக் கொண்டிருக்கும், மீன்மாட்டிக் கொள்ளக்கூடாது என மனதிற்குள் பிரார்த்தனை செய்வோம். அவசரப்பட்டுத் தூண்டிலை இழுத்துவிட்டால் மீன் தப்பியோடிவிடும், காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மதியம் மூன்று வரை மீன்பிடித்தால் பத்து மீன் கிடைக்கும், அதுவே அதிகம், சில நாட்கள் இருபது மீன்வரை கிடைத்திருக்கிறது.

கிடைத்த மீன்களை வீட்டுக்குக் கொண்டு போக முடியாது, வீட்டில் திட்டுவார்கள். ஆகவே எல்லோர் பிடித்த மீன்களையும் கொண்டு போய்க் கொடிக்காய்பழம் விற்கிற கிழவியிடம் கொடுப்போம், அவள் ஆளுக்கு ஒரு கூறு கொடிக்காய் பழம் தருவாள், அல்லது ஒரு மாம்பழம் தருவாள்.

கணேசன் சில நாட்கள் மீன்களை காளியம்மன் கோவில் பின்புறம் வைத்து சுள்ளிகளை எரித்துச் சுட்டுத் தின்றுவிடுவான்.

தூண்டிலில் சிக்கிய மீன்களைப் போட்டு வைப்பதற்காகத் தகர டப்பா ஒன்றை கொண்டு போவேன், அந்த டப்பாவில் கால்பகுதி தண்ணீர் இருக்கும், அதற்குள் மீனை விட்டுவிட்டால் துள்ளிக் கொண்டிருக்கும். அந்த சப்தம் இப்போதும் காதில் கேட்கிறது

சில நாட்கள் காலை ஆறுமணிக்கே மீன்பிடிக்கப் போய்விடுவோம், திரும்பி வருவதற்குள் மாலை ஆகிவிடும். உள்ளுர் கண்மாயில் தண்ணீர் வற்றும் போது அருகில் உள்ள அணைக்கட்டுக்குப் போய் மீன்பிடிப்போம், தூண்டிலைத் தோளில் போட்டுக் கொண்டு ஒரு கையில் மண்புழு சிரட்டையை வைத்துக் கொண்டு வேலிப்புதர் கொண்ட மண்சாலையில் நடந்து போவதில் இருந்த ஆனந்தம் நிகரற்றது

பள்ளிவயதோடு மீன்பிடித்தல் விலகிப்போனது. தூண்டிலை நெடுநாட்கள் வீட்டுத் திண்ணையில் ஒரு பக்கம் சொருகியே வைத்திருந்தேன், தூண்டில் முள்ளை சுற்றி வைப்பதற்கு என்ற நீலநிற ஜிகினா காகிதம் வைத்திருந்தேன், அதில் முள்ளை சுற்றி மடித்து ஜாமெண்டரி பாக்ஸிற்குள்ளாகவே வைத்திருந்தேன். அந்த ஜாமெண்டரி பாக்ஸில் ஒரு வளைந்து போன மூன்று பைசா ஒன்றிருந்தது. எல்லாமும் நினைவில் நேற்றுகாலையில் நடந்தது போலவேயிருக்கிறது

கல்கிடங்கு, கண்மாய், கிணறு, அணைக்கட்டு. எனச் சுற்றியலைந்து மீன்பிடித்த நாட்களைப் பற்றியே காலையில் இருந்து மனது சுற்றிக் கொண்டிருக்கிறது. பள்ளி வயதில் என்னோடு படித்தவர்களின் முகங்களை நினைவுபடுத்திப் பார்க்க முயன்று கொண்டேயிருக்கிறேன், ஒரு முகமும் நினைவிற்கு வரவில்லை, பெயர்கள், உடல் அமைப்பு, பேசுகிற விதம் எல்லாமும் கூட நினைவில் இருக்கிறது, முகம் எப்படியிருந்தது என்று தெரியவில்லை, மீன்பிடிக்க அலைந்த நாங்கள் ஒன்றாகப் புகைப்படம் எதுவும் எடுத்துக் கொண்டதேயில்லை.

பள்ளியில் எடுக்கபட்ட குரூப் போட்டோக்களைத் தவிர அந்த வயது நண்பர்கள் ஒருவரது புகைப்படமும் என்னிடமில்லை, வேறு தருணங்களில் யாரும் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக நினைவுமில்லை

பெயர்கள் மட்டுமே நினைவில் ஒளிர்கின்றன.

அவர்களுக்கும் என் முகம் மறந்து போயிருக்கும் தானே.

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: