பாலை மலர்

Desert flower  என்ற ஜெர்மன் திரைப்படத்தை இன்று பார்த்தேன், Waris Dirie  என்ற உலகப்புகழ்பெற்ற விளம்பர மாடலின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கியிருக்கிறார்கள்.

வாரிஸ் சோமாலியாவைச் சேர்ந்தவர், படத்தின் துவக்கத்தில் ஆடு மேய்க்கிற ஒரு சிறுமியாக அறிமுகமாகிறார் வாரிஸ். ஆட்டுக் குட்டியை தோளில் சுமந்தபடியே அவர் பரந்த நிலப்பரப்பை கடந்து போகும் முதற்காட்சியிலே படம் நம்மை உள் இழுத்துவிடுகிறது.

ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் குரூர சடங்கான பெண்உறுப்பின் கந்து முனையை வெட்டி அகற்றி விடும் கொடுமைக்கு வாரீஸ் உள்ளாகிறார். ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. நாள் ஒன்றுக்குக் குறைந்தது 6000 பெண்கள் கதுப்பு நீக்கம் செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள்.

வயதான ஒருவனுக்கு மூன்றாவது மனைவியாக விற்கபடும் வாரீஸ் அவனிடமிருந்து தப்பிப் பாலைவனத்தில் ஒற்றை ஆளாக நூற்றுக்கணக்கான மைல் நடந்து தனது பாட்டியிடம் அடைக்கலம் ஆகிறாள்

அங்கிருந்து வெளியேறி வேலைக்காரியாக லண்டன் வந்த வாரீஸ் அங்கே வீடற்ற பெண்ணாகப் பசியோடு வீதியில் சுற்றித் திரிகிறாள்

பேருந்தில் ஏறி எங்கே போவது எனத் தெரியாமல் தடுமாறுவது, குப்பையில் கிடக்கும் உணவைப் பொறுக்கி சாப்பிடுவது, மூடிய கடையின் சிறிய இடைவெளியில் ஒடுங்கி படுத்துக்கிடப்பது, டெலிபோன் பூத்தில் கிடைக்கும் சில்லறை காசுகளைக் கொண்டு நாளை ஒட்டுவது என லண்டனில் ஆங்கிலம் தெரியாமல், வறுமையில் ஒரு சோமாலியப் பெண் எப்படியெல்லாம் அவதிப்படுவாள் என்பதை வாரீஸின் வாழ்க்கை விவரிக்கிறது.

ஒரு நாள் மெர்லின் என்ற இளம் பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது, அவளது அறையில் வாரீஸ் ஒரு இரவு மட்டும் தங்குவதற்காகச் செல்கிறாள், வாரீஸ் நடந்து கொள்ளும் பண்பைக் கண்டு மெர்லினிற்கு அவளைப் பிடித்துப் போய்விடுகிறது, இவருக்கும் மெல்லிய நட்பு உருவாகிறது,

மெர்லின் அவளுக்கு ஒரு வேலை கிடைப்பதற்கு உதவி செய்கிறாள், வாரீஸ் ஒரு துரித உணவகத்தில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேருகிறாள், அங்கே தற்செயலாகப் பேஷன் போட்டோகிராபர் டெரி அவளைச்சந்திக்கிறார்

அவளது வித்தியாசமான முகவெட்டு அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது, தன்னை வந்து பார்க்கும்படியாகத் தனது முகவரியைத் தந்து போகிறார். டெரியின் மூலம் மாடலாக அறிமுகமாகி மெல்ல விளம்பர உலகிற்குள் நுழைகிறாள்

ஒரு நாள் மெர்லின் உடலோடு தன் உடலை ஒப்பிட்டுக் காணும் போது தான் உலகம் முழுவதும் பெண்கள் பெண்ணுறுப்பின் கந்து முனையைச் சிதைத்துக் கொள்வதில்லை, ஆப்ரிக்காவில் மட்டுமே நடைபெறுகிறது என்பதை உணரத் துவங்குகிறாள்.

சோமாலியப் பெண்ணான அவள் எப்படிப் பிரிட்டீஷ் விளம்பர உலகிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறாள் என்பது அழகாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது

புகழ்பெற்ற விளம்பர மாடலாக வாரீஸ் உருமாறுகிறாள். வெறும் விளம்பர நடிகையாக மட்டுமின்றி ஆப்ரிக்காவில் பெண்களுக்கு நடைபெறும் பெண் உறுப்பு சிதைப்பிற்கு எதிராகக் குரல் கொடுக்கவும் துவங்குகிறார்.

அவரது கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும்படியாகத் திரைக்கதை உருவாக்கபட்டிருக்கிறது . Liya Kebede வாரிஸாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். Sherry Hormann படத்தை இயக்கியிருக்கிறார். National geographic entertainment இப்படத்தை தயாரித்துள்ளது.

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: