உண்மையின் தோழன்

சமஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான யாருடைய எலிகள் நாம் நூலை வாசித்தேன்,

சமகாலப்பிரச்சனைகள் குறித்து வெகுதீர்க்கமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவைகள். வேறுவேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் அதன் அடிப்படையாக இயங்குவது நீதியுணர்வும் அறச்சீற்றமும் தான்.

சமூகவெளியில் நடக்கின்ற வன்முறைகள், அரசியல் வெறியாட்டங்கள், ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் போகிற பொதுபுத்தியின் மீது விழும் சவுக்கடிகள் தான் இந்தக் கட்டுரைகள்

சமஸின் கட்டுரைகள் பிரச்சனைகளை மட்டும் கவனம் கொள்பவையில்லை, மாறாக அது எப்படி உருவானது, எங்கே அதன் வேர்கள் புதையுண்டிருக்கின்றன, அது என்ன விளைவுகளை உருவாக்கப் போகிறது என்பதையும் ஆராய்ந்து அறிந்து எழுதுகிறார். செய்தியாளர்களின் பணி தகவல்களை ஒன்றிணைத்து தருவது மட்டுமில்லை , சமூக அக்கறையுடன், பொறுப்புணர்ச்சியுடன் உண்மையின் தோழனாகச் செயல்படுவது என்பதற்குச் சமஸே முன்னுதாரணம்.

கல்வி தனியார் மயமாக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்புலத்தைச் சுட்டிக்காட்டிப் பேசும் சமஸ் எப்படிக் கல்வி ஒரு வணிகப்பொருளாகத் திட்டமிட்டு மாற்றப்பட்டது என்பதைத் தெள்ளத்தெளிவாக அடையாளம் காட்டுகிறார் சமஸின் கட்டுரையில் வெளிப்படும் கோபமும் ஆற்றாமையும் மக்கள் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது என்பதே சிறப்பு

இந்தியா, இந்தியன் என்ற அடையாளங்கள் குறித்து இன்று பொது ஊடகங்களில் எள்ளலும், கேலியும் சரளமாக உலவுகின்றன, சுதந்திர இந்தியா எப்படி உருவானது, அதற்காகக் கனவு கண்டவர்கள் எந்த இந்தியாவை உருவாக்க நினைத்தார்கள் என்ற வரலாற்று புரிதலுடன் சமஸ் கட்டுரைகளை எழுதுகிறார் என்பது சந்தோஷம் அளிக்கும் விஷயம்

சாதிய அமைப்பின் குரூரங்கள் குறித்த கட்டுரையில் சாதிய அமைப்புகளின் பின்னுள்ள அரசியல் எவையெனத் துல்லியமாக அடையாளம் காட்டுதுவடன் அதற்குக் காரணமானவர்களை நேரடியாகவே குற்றம் காட்டுகிறார் சமஸ்

கோட்டூர்புரம் நூலகத்தைப் பற்றிய ஒரு கட்டுரையில் வெளிப்படும் கோபம் பண்பாட்டுத் தளத்தில் அரசியல் எந்த அளவு ஒடுக்குமுறையைக் கையாளுகிறது என்பதற்கான சான்று

தெளிவான வரலாற்றுத் தரவுகளுடன், பிரச்சனையின் பல்வேறு அம்சங்களையும், பருந்து பார்வையில் சுட்டிக்காட்டி, நுட்பமாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தமிழ் பத்திரிக்கை எழுத்தின் பெரும் பாய்ச்சல் என்றே சொல்வேன்

சமஸின் கட்டுரைகள் நம்மைக் கேள்விகேட்கின்றன, சிந்திக்க வைக்கின்றன, இத்தனை மொண்ணைதனம் சமூகத்தில் எப்படி வந்தது என்று யோசிக்கச் செய்கின்றன. சில தருணங்களில் நம்மைக் கண்ணீர்விடவும் வைக்கின்றன. இதற்காகவே அனைவரும் இக்கட்டுரைகளை அவசியம் வாசிக்க வேண்டும் என்பேன்

••

புத்தகத்தை வாங்க, தொடர்புக்கு:
thuliveliyeedu@gmail.com
samasbooks@gmail.com
9444204501

***

0Shares
0