காலத்தின் திறவுகோல்

தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் நான்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது

ஸ்டீபன் ஸ்வேக்கின் The Society Of The Crossed Keys கதையை மையமாகக் கொண்டு எடுக்கபட்ட படமது

ஸ்டீபன் ஸ்வேக் (Stefan Zweig) ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் எழுதிய யாரோ ஒருத்தியின் கடிதம், ராஜவிளையாட்டு போன்ற நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கபட்டுள்ளன.,

உலக அரங்கில் இவர் காப்காவிற்கு இணையாகப் பேசப்படுகிறார். இவரது குறுநாவல்கள், நாவல்கள் பல திரைப்படங்களாக உருவாக்கபட்டுள்ளன, A Letter from an Unknown Woman., Twenty-Four Hours in a Woman’s Life, Marie Antoinette, Brainwashed போன்றவை குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்,
யூதரான ஸ்வேக் நாஜிகளால் தான் கைது செய்யபட்டு வதை முகாமிற்கு அனுப்பட்டுவிடுவோம் எனப் பயந்து மனைவியோடு தற்கொலை செய்து கொண்டவர்.
•••
ஸ்வேக்கின் தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் பெருமைக்குரிய விடுதி ஒன்றின் கடந்தகாலத்தை விவரிக்கிறது. ஸ்வே கதைக்குள் கதை என்ற பாணியினை விரும்பி எழுதக்கூடியவர், இதிலும் அது போன்ற கதை சொல்லும் முறையே கையாளப்பட்டுள்ளது,

படத்தின் துவக்க காட்சியில் ஒரு இளம்பெண் கல்லறை தோட்டம் ஒன்றுக்குள் செல்கிறாள், அங்குள்ள எழுத்தாளரின் சிலை முன்பாக நின்றபடியே அவர் எழுதிய புத்தகம் ஒன்றை படிக்கத் துவங்குகிறாள்,
படம் பின்னோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறது, ஸ்வேக் தான் அந்த எழுத்தாளர் என்பது போல அக்கதாபாத்திரம் உருவாக்கபட்டுள்ளது, அவர் தனது கடந்த கால அனுபவம் ஒன்றை விவரிக்க ஆரம்பிக்கிறார்,

அதாவது 1968ம் ஆண்டுத் தனிமையை நாடி பனிமலைக்குச் சென்ற போது தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டலில் தங்குகிறார்,

ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்த அந்த விடுதி தற்போது கைவிடப்பட்ட நிலையில் மிகக்குறைவான ஆட்களே தங்குமிடமாக உள்ளது

கடந்த காலங்களில் அங்கு வந்து தங்கியிருந்த முதியவர்கள் சிலர் அதே நினைவுகளுடன் திரும்பத் தங்க வந்திருப்பதைத் தவிரப் புதியவர்கள் எவரும் விடுதிக்கு வருவதேயில்லை,

பராமரிப்பின்றிக் காலியான அறைகளுடன் மர்ம மாளிகை போலிருந்த அந்த விடுதியில் தங்கியிருக்கும் போது தற்செயலாக ஹோட்டலின் உரிமையாளனரான ஜீரோ முஸ்தபாவைச் சந்திக்கிறார்,
வயதான ஜீரோ எப்போதும் அந்தப் பிரம்மாண்டமான விடுதியில் மிகச்சிறிய ஒற்றை அறையில் தான் தங்குகிறார், ஏன் அப்படிச் சிறிய அறையில் தங்குகிறார் என்பது புதிராக இருக்கிறது,
எழுத்தாளர் இதை அறிந்து கொள்ள அவரைச் சந்தித்து அறிமுகம் செய்து கொள்கிறார், அன்றிரவு இருவரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள், அப்போது ஜீரோ இந்த ஹோட்டலுக்குத் தான் எப்படி உரிமையாளர் ஆனேன் என்ற கதையை விவரிக்கத் துவங்குகிறார்
••

தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் புகழ்பெற்றிருந்த காலத்திற்குப் படம் பின்னோக்கிச் செல்கிறது. ஜுப்ரோவ்கா என்ற கற்பனையான பிரதேசம் ஒன்றின் அழகான பனிமலையில் உள்ளது கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்.

பனிச்சறுக்கு விளையாடுபவர்களும், கோடையை இனிமையான கழிக்க விரும்புகிறவர்களும் அங்கு வந்து குவிகிறார்கள், அவ்விடுதியில் இடம் கிடைப்பது எளிதானதில்லை, பெரும் பணக்காரர்களும், கலைஞர்களும், வணிகர்களும் வந்து தங்குகிற ஹோட்டலது. அதன் தலைமை மேலாளராக இருப்பவர் குஸ்தாவ், அவர் தான் ஹோட்டலை அத்தனை நிர்வாகத்தினையும் நடத்துகிறார்,
கிராண்ட் புடாபெஸ்டின் முதலாளி யாரென எவருக்கும் தெரியாது, ஹோட்டல் தொடர்பான கணக்கு வழக்குகள் முழுவதும் வழக்கறிஞரான கோவாக்ஸ் மூலமே நடைபெறுகிறது

குஸ்தாவ் தனது ஹோட்டலில் வந்து தங்குகிறவர்களை மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொள்வார், விதவிதமான உணவும், இசையும், நடனவிருந்துமெனக் கிராண்ட் ஹோட்டல் எப்போதும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறது

ஹோட்டலில் வந்து தங்குகிற வயதான பெண்களைக் குஸ்தாவ் நடத்துகிற விதம் அவர்களை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது, பல பெண்களுடன் படுத்துச் சுகம் காணும் குஸ்தாவ் அந்த ஹோட்டலை தனது சொந்த நிறுவனம் போலப் பொறுப்போடு கவனித்துக் கொள்கிறார்.

ஒரு நாள் ஹோட்டலின் புதிய லாபி பாயாக வேலைக்குச் சேர்கிறான் ஜீரோ. பதின்வயது சிறுவன், முறையான ஆவணஙகள் எதுவுமின்றி அகதியாக வேலைக்கு வந்துள்ள அவனைக் குஸதாவிற்குப் பிடித்துப் போய்விடுகிறது. காரணம் அவரும் ஒரு லாபி பாயாக இருந்து வாழ்க்கையில் முன்னேறியவர்.

ஜீரோ அறிமுகம் ஆகிற காட்சியும், அவனுக்குக் குஸ்தாவ் ஹோட்டலின் ஒழுங்கை கற்று தரும் முறையும், ஜீரோவின் சின்னஞ்சிறு அறையும், பரபரப்பான ஒட்டமும் அழகாகப் படமாக்கபட்டுள்ளன, ஜீரோவின் கண்கள் பேசுகின்றன, அந்தப் பையனிடம் காணப்படும் வியப்பு, அடக்கம், பயம் அத்தனையும் துல்லியமாக வெளிப்படுத்தபட்டுள்ளன.

அது போலவே குஸ்தாவின் கதாபாத்திரமும் நுட்பமாகக் காட்சிபடுத்தபட்டுள்ளது. அவ்வளவு பெரிய ஹோட்டலை நிர்வாகம் செய்வது எளிதானதில்லை, அதற்கு அவர் மேற்கொள்ளும் கெடுபிடியான நடைமுறைகளும், பணியார்களை அவர் நடத்துகிற விதமும், விருந்தினர்களைச் சந்தோஷப்படுத்த மேற்கொள்ளும் செயல்களும், கச்சிதமாக உருவாக்கபட்டுள்ளன. அழுத்தமான ஒரு கதாபாத்திரமாக அவர் உருவாக்கபட்டுள்ளார்.

சந்தர்ப்பம் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதன் அடையாளமே குஸ்தாவ். ஆரம்பக் காட்சிகளில் ஒரு கனவானைப் போல நடந்து கொள்ளும் அவர் பிற்பகுதியில் குற்றவுணர்ச்சியோடு ஒடிக்கொண்டேயிருக்கிறார். அதிர்ஷடம் அவரது வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் கொண்டுவரவில்லை, தீராத பிரச்சனைகளையும் சேர்த்துக் கொண்டுவந்துவிடுகிறது
•••

கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டலின் வாடிக்கையாளர்களில் ஒருவர் மேடம் டி, அவள் பெரும் பணக்காரி, ஆண்டுத் தோறும் இதே விடுதிக்கு வந்து தங்குது வழக்கம், அவளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளுமளவு நெருக்கமாக இருக்கிறார் குஸ்தாவ்,

இந்த முறை அவளை வழியனுப்பி வைக்கும் போது அவள் கண்ணீருடன் தான் இனி ஒருபோதும் அந்த விடுதிக்கு வரஇயலாது, நிச்சயம் இறந்து விடுவேன் என அழுகிறாள், அவளைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார் குஸ்தாவ், ஆனால் அவள் சொன்னது போலவே சில மாதங்களில் மேடம் டி இறந்து போய்விடுகிறாள்

••
மேடம் டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளக் குஸ்தாவ் ஜீரோ இருவரும் ரயிலில் பயணம் செய்கிறார்கள், ஒரு இடத்தில் ரயில் காவலர்களால் சோதனை செய்யப்படுகிறது, முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ஜீரோவை கைது செய்ய முற்படுகிறார்கள், அதை அனுமதிக்க முடியாது எனத் தடுக்கும் குஸ்தாவை ராணுவ அதிகாரி தாக்குகிறான், அவரையும் கைது செய்ய முற்படும் போது உயர் ராணுவ அதிகாரி ஒருவன் அங்கே வருகை தருகிறான்,

அவன் குஸ்தாவை அறிந்தவன் என்பதால் விடுதலை செய்யப்படுகிறார், தன்னைக் காப்பாற்றிய குஸ்தாவ் மீது ஜீரோவிற்கு நெருக்கம் உண்டாகிறது

அவர்கள் மேடம் டியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்கிறார்கள், அங்கே அவளது உயில் வாசிக்கபடுகிறது, அந்த உயிலை வாசிப்பவர் வழக்கறிஞர் கோவாக்ஸ்.

மேடம் டி தனது விருப்பத்திற்குரிய ஒவியங்களில் ஒன்றை குஸ்தாவிற்குப் பரிசாக அளிப்பதாக உயிலில் குறிப்பிட்டிருக்கிறாள், இது அவளது மகன் டிமிட்ரிக்கு பிடிக்கவில்லை, அவன் குஸ்தாவை அவமதித்து வெளியே துரத்துகிறான்,

ஆனால் குஸ்தாவ் அந்த வீட்டுப் பணியாளர்கள் உதவியோடு பாய் வித் ஆப்பிள் என்ற ஒவியத்தைத் திருடிக் கொண்டு கிளம்பிவிடுகிறான்
ஆத்திரமான டிமிட்ரி கூலிக்கொலையாளியான ஜோப்பிலிங் என்பவனை அனுப்பிக் குஸ்தாவைக் கொல்ல திட்டமிடுகிறான்

••
ரயிலில் திரும்பி வரும்போது அந்த ஒவியத்தை ஏலத்தில் விற்று கிடைக்கும் தொகையை இருவரும் பிரித்துக் கொள்வது எனக் குஸ்தாவும் ஜீரோவும் முடிவு செய்து கொள்கிறார்கள், அக்காட்சியில் ஜீரோ பெரிய மனிதனைப் போலப் பேரம் பேசுவதும் அவனுடன் குஸ்தாவ் ஒப்பந்தம் செய்து கொள்வது ரசனையாகப் படமாக்கபட்டிருக்கிறது

கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டலில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் அந்த ஒவியத்தை ஒளித்து வைக்கிறார் குஸ்தாவ்.
••
பதின்வயதிலிருந்த ஜீரோ கேக்குகள் செய்யும் அகதா என்ற அழகான இளம்பெண்ணைக் காதலிக்கத் துவங்குகிறான், அவர்களின் காதலும், இரவில் அவளைத்தேடி வீட்டு மாடி வழியாக ஜீரோ செல்வது அழகான காதல் காட்சிகள்

ஒருநாள் அவளை ஹோட்டலுக்கு அழைத்து வந்து குஸ்தாவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறான் ஜீரோ , எங்கே குஸ்தாவ் அவளை மயக்கிவிடுவாரோ என உள்ளுற பயப்படுகிறான் ஆனால் அவர்களின் காதலை பாராட்டி வாழ்த்துகிறார் குஸ்தாவ்,

இந்நிலையில் மேடம் டியின் மரணம் ஒரு படுகொலை என்ற சந்தேகம் உருவாகிறது, இதனை விசாரிக்கும் போலீஸ் குஸ்தாவ் தான் மேடம் டியை கொல்ல சதி செய்தவர் என்று அவரைத் தேடிவந்து கைது செய்கிறது, இதற்கு மேடம் டி வீட்டின் பட்லர் செர்ஜி பொய்சாட்சியம் சொல்கிறான்
••
குஸ்தாவ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கபடுகிறார், ஹோட்டலை நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஜீரோ வசம் ஒப்படைக்கபடுகிறது. குஸ்தாவின் பிரதிநிதி போல ஜீரோ செயல்படுகிறான், இதற்கிடையில் தான் குற்றமற்றவன் என நிரூபிக்கச் சிறையில் இருந்து தப்பிக்கத் திட்டமிடுகிறார் குஸ்தாவ்,

இதற்கு நிறைய உதவிகள் செய்கிறான் ஜீரோ, அதைப் பயன்படுத்திக் குஸ்தாவும் உடனிருந்த சில கைதிகளும சிறையில் இருந்து தப்பி வெளியே வருகிறார்கள், அவர்களைக் காவலர்கள் துரத்து ஆரம்பிக்கிறார்கள். குஸ்தாவும் ஜீரோவும் தப்பியோடுகிறார்கள்
••
இன்னொரு பக்கம் கூலிக்கொலையாளியான ஜோப்பிலிங் அவர்களைப் பின்தொடருகிறான், போலீஸ் தொல்லைக்குப் பயந்து பனிமலையில் உள்ள மடாலயம் ஒன்றில் ஒளிந்து வாழும் பட்லர் செர்ஜியை தேடிப்போகிறார்கள், அந்தக் காட்சிகள் பேரழகுடன் உருவாக்கபட்டுள்ளன, ஒரு கனவிற்குள் பிரவேசித்துவிட்டதைப் போல உணர்வு உருவாகிறது.

அங்கே செர்ஜியை சந்தித்து உண்மையை அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது அவன் கொல்லப்படுகிறான், இதற்குக் காரணமாக இருந்த ஜோப்பிலிங்கை அவர்கள் துரத்துகிறார்கள், முடிவில் ஜோப்பிலிங் பனிச்சறுக்கில் தப்பியோடுகிறான், துரத்தி போய் அவனைக் கொல்கிறார்கள்,
புதிதாகக் கிடைத்த உயில் மூலம் குஸ்தாவ் குற்றமற்றவர் என நிரூபிக்கபடுகிறார், இப்போது தான் தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டலை நடத்தி வந்தவர் மேடம் டி என்ற உண்மை தெரியவருகிறது, அவர் ஹோட்டலையும் பெரும்சொத்துகளையும் குஸ்தாவ் பெயரில் உயில் எழுதி வைத்திருக்கிறார்.
இதனால் குஸ்தாவ் மிகப்பெரும் பணக்காரன் ஆகிறார், இந்தச் சூழலில் யுத்தம் துவங்குகிறது. ஹோட்டல் ராணுவத்தின் கைக்கு மாறுகிறது, ராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஒவியத்தைத் திருடி எடுக்கத் திட்டமிடுகிறான் ஜீரோ,

இதற்காகக் காதலி அகதாவின் உதவியை நாடுகிறான், அவள் கேக் விநியோகம் செய்பவள் போல ஹோட்டலுக்குள் நுழைந்து ஒவியத்தைக் கைப்பற்றுகிறாள், இப்போது மேடம் டியின் மகன் டிமிட்ரி தனது ஆட்களுடன் ஒவியத்தைத் தேடி வந்து விடுகிறான், அவன் அகதாவை துரத்துகிறான், அவள் தப்பியோடுகிறாள், உடன டிமிட்ரி சுடத்துவங்கவே, அவனுக்கும் ஹோட்டலில் இருந்த ராணுவத்திற்கும் சண்டை ஏற்படுகிறது இரண்டு பக்கமும் துப்பாக்கி சண்டை நடைபெறுகிறது, அகதா ஒவியத்தோடு தப்பி வருகிறாள்
••
முடிவில் குஸ்தாவும் ஜீரோவும் முன்பு பயணம் செய்தது போலவே இன்னொரு ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள் வழியில் ராணுவத்தால் தடுத்து நிறுத்தபடுகிறார்கள். இப்போதும் ஜீரோவிற்காகவே வாதிடுகிறான் குஸ்தாவ், அவனை ராணுவம் இழுத்துப் போய்ச் சுட்டுக் கொல்கிறது
ஜீரோ அந்த ஹோட்டலின் உரிமையாளன் ஆகிறான், தான் பெரும் பணக்காரனாக மாறிய போதும் அதே லாபி பாய்க்குத் தரப்படும் ஒற்றை அறையில் தான் தங்குகிறான்,

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் ஏன் அந்த ஹோட்டலை அப்படியே வைத்திருக்கிறார் என எழுத்தாளர் கேட்ட போது ஜீரோ சொல்கிறார்,

அது தனது காதலின் அடையாளம், அங்கே தான் அகதாவை சந்தித்தேன், காதலித்தேன், தற்போது அவள் இறந்து போய்விட்டாள், அதனால் அந்த ஹோட்டலை காதலின் நினைவுச்சின்னமாகக் கருதுகிறேன் என்கிறார் ஜீரோ

முடிவில் ஜீரோ எங்கோ தென் அமெரிக்காவிற்குப் போவதாகக் கூறுகிறார். பழைய நினைவுகளுடன் காதலின் அடையாளச்சின்னமாகப் பனிமலையில் தனித்து நிற்கிறது கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்
அதே சிலையின் முன்பாக இளம்பெண் புத்தகம் படித்தபடியே நிற்பதுடன் படம் நிறைவு பெறுகிறது,
••
குஸ்தாவும் ஜீரோவும் அகதாவும் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள். ஸ்வேக்கின் கதைகளில் சர்ரியலிச
தன்மை அதிகமிருக்கும், இக்கதையிலும் அது போன்ற விவரிப்பு அதிகமாகவே உள்ளது, குறிப்பாகப் பனிமலையில் உள்ள மடாலயம், அதற்குப் போகும் வழி, பனிச்சறுக்கில் துரத்திப் போவது. கூலிக்கொலையாளியின் ஈவுஇரக்கமற்ற செயல்கள் எனத் துப்பறியும் கதையைப் பெரும் இலக்கியப்படைப்பாக மாற்றியுள்ளது போலிருக்கிறது

படத்தை இயக்கியவர் வெஸ் ஆண்டர்சன் இவர் ஸ்வேக்கின் தீவிர வாசகர். ஆகவே அவரது நாவலின் உந்துதலில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

பிரிட்டீஷ் ஜெர்மன் கூட்டுதயாரிப்பில் உருவான இப்படம் ஹாலிவுட்டில் பெரிய வசூல்சாதனையை நிகழ்த்தியிருக்கிறது, ரால் பின்னெஸ் குஸ்தாவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார், தேர்ந்த இசையும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் அற்புதமானதொரு அனுபவத்தைத் தருகின்றன
••
ஸ்வாக்கின் பெரும்பான்மை கதைகள் கடந்தகால நிகழ்வுகளை விவரிப்பவை, குறிப்பாக அக்கதைகளில் ஏதாவது ஒரு புதிர்தன்மை மையக்குறியீடு போல இருப்பதுண்டு,

ராஜவிளையாட்டில் சதுரங்கம் மையக்குறியீடு, அதன் கறுப்பு வெள்ளை இரண்டினையும் இரண்டுவிதமான கதாபாத்திரங்களாக மாற்றியிருக்கிறார் ஸ்வாக், அதனால் தான் சிறையில் இருந்த ஒருவன் உலகச் சாம்பியனை ஒரு போட்டியில் வெற்றிபெறுகிறான், கற்பனையின் வழியே சதுரங்கம் ஆடுகிறவனின் உலகம் விசித்திரமானது, அதை ஸ்வாக் நுட்பமாக எழுதியிருப்பார்.
இது போலவே தான் யாரோ ஒருத்தியின் கடிதமும். எழுத்தாளன் மீது காதல் கொள்ளும் இளம்பெண் அவனது குழந்தையின் தாயாகிறாள், அந்த ரகசிய உறவை அவள் உலகிற்குத் தெரியப்படுத்தவேயில்லை, எழுத்தாளன் மீதான காதலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் குறுநாவல் சிறந்த திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தனது எழுத்துகள் யாவும் தனக்கு எரிந்து கொண்டிருக்கும் ரகசியங்க்ள் என்றே ஸ்வே கூறுகிறார்.

குழந்தைகளுக்கான தேவதை கதைகள் கொண்ட புத்தகங்களில் ஒவ்வொரு பக்கமும் அழகான சித்திரங்களாக வரையப்பட்டிருக்கும், பக்கஒரங்கள் கூடக் கொடிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கபட்டிருக்கும், அப்படி இப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் அழகான சித்திரம் போல உருவாக்கபட்டுள்ளன

ஜெர்மனியில் நிலவிய யூத எதிர்ப்புணர்வைக்கண்டு தப்பியோடிய ஸ்வேக் ஐரோப்பியநாடுகளில் பல்வேறு பெரிய ஹோட்டல்களில் தங்கி வாழ்ந்திருக்கிறார், ஸ்விட்சர்லாந்தில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் நினைவைப்பற்றித் தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார், அது தான் இந்தப் படம் உருவாவதற்கான உத்வேகத்தைத் தந்தது என்கிறார் வெஸ் ஆண்டர்சன்.

புடாபெஸ்ட் ஹோட்டல் என்பது யூதர்களின் பெருமைக்குரிய கடந்த காலம் என்பதன் குறியீடு போலவும் அடையாளப்படுத்தபடுகிறது. வதைமுகாம்களும், நாஜிகளின் வன்முறையும் யூதர்களை எப்படி அகதியாக்கியது என்பதையே ஸ்வேக்கின் இத்திரைப்படம் நினைவூட்டுகிறது என்கிறார்கள்.
இப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனதில் இதே போன்ற கதைக்களத்தைக் கொண்ட இரண்டு படங்கள் நினைவில் வந்து போயின ஒன்று 1932ல் ஹாலிவுட்டில் வெளியான கிராண்ட் ஹோட்டல்,
இப்படமும் பிரபலமான தங்கும்விடுதி ஒன்றின் கதையைத் தான் விவரிக்கிறது. உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

கிரேட்டா கார்போவும் ஜான் பேரிமோரும் நடித்துள்ள இதில் ஒரு திருடன், ஒரு டாக்டர், ஒரு நோயாளி, ஒரு தொழில் அதிபர், ஒரு ஸ்டோனோகிராபர். ஒரு நடிகை, ஒரு ராணுவ அதிகாரி என அந்த ஹோட்டலில் தங்கியுள்ள பல்வேறு கதாபாத்திரங்களின் வாழ்வினை இடைவெட்டி கதை சொல்லப்படுகிறது. சுவாரஸ்யமான படமிது

இது போலவே ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய தி ஷைனிங் ( The Shining) திகில்படமான இதுவும் ஒரு ஹோட்டலை முதன்மையாகக் கொண்டு உருவாக்கபட்டதே, எழுதுவதற்குத் தனியான இடம் தேடும் ஜே குளிர்காலத்தில் ஆட்களே வராத ஒரு ஹோட்டலின் மேலாளராகப் பொறுப்பு ஏற்றுக் கொள்வதிலிருந்து கதை சொல்லப்படுகிறது, உச்சபட்ச திகிலை உருவாக்கும் இப்படம் குப்ரிக்கின் தனிச்சிறப்புகள் கொண்டது.
எழுத்தாளர்கள் கதைகளைத் தேடிப்போவதில்லை, கதாபாத்திரங்கள் தான் எழுத்தாளர்களைத் தேடிவந்து தங்கள் கதையை எழுதும்படி கேட்டுக் கொள்கிறார்கள் என்கிறார் ஸ்வாக்.

தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டலின் வழியே மறக்கமுடியாத கதாபாத்திரங்களை உருவாக்கியதே இப்படத்தின் வெற்றியாகும்
••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: