ஒளிரும் நினைவுகள்

கும்பகோணத்தில் பிறந்த வளர்ந்த நண்பர்கள் தங்களின் ஊரைப் பற்றியும் அங்கு வாழ்ந்து மறைந்த கலை இலக்கிய ஆளுமைகள் குறித்தும், காவிரி பற்றியும், ஊரின் முக்கிய கோவில்கள்,  விழாக்கள்,  இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், நூலகங்கள். உணவகங்கள்  பற்றியும் சொல்லித்தீராத நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தருணங்களிலும் இவை குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்

தேனுகாவைக் கும்பகோணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் கும்பகோணம் குறித்துப் புதிது புதிதாக விஷயங்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்.

தேனுகா அபூர்வமான கலைஞர். இசையையும் ஒவியத்தையும் இலக்கியத்தையும் தன்னுடைய உயிர்மூச்சாகக் கொண்டிருந்தார். அவரோடு ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தால் நூறு புதுவிஷயங்களைப் பகிர்ந்து தந்துவிடுவார்,  அவரது பேச்சில் தோழமை உணர்வும், தேர்ந்த ரசனையும் வெளிப்படும்

நானும் கோணங்கியும் பலமுறை கும்பகோணம் வந்து சுற்றியிருக்கிறோம், நிறைய நண்பர்களுடன் பழகிப் பேசி நாள்கணக்கில் தங்கியிருக்கிறோம்

இன்று அந்த நினைவுகளைத் தூண்டிவிட்டு மனதை மிகவும் நெகிழச்செய்தது ரவி சுப்ரமணியனின் ஆளுமைகள் தருணங்கள் என்ற புத்தகம். சமீபத்தில் நான் படித்த முக்கியமான புத்தகமிது.

எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, மதுரை சோமு. அபி. பி.பி.சீனுவாஸ் சகஸ்ரநாமம் பாலுமகேந்திரா, தேனுகா, ருத்ரய்யா என நான் பெரிதும் மதிக்கும் ஆளுமைகள் குறித்த தனது நினைவுகளையும் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களையும், கலை வெளிப்பாட்டினையும் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார் ரவி சுப்ரமணியன்.

இவை வெறும் நினைவுகூறலில்லை மாறாக எழுத்தில் உருவாக்கபட்ட ஆவணங்கள்,  வாசிக்க வாசிக்க ஒவ்வொருவரும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள். ஆவணப்படம் காண்பது போல அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் காட்சிகளாக விரிகின்றன

இதில் தனித்துக் குறிப்பிட வேண்டியது ரவி சுப்ரமணியனின் குரல், தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் தான் சந்தித்துப் பழகிய ஆளுமைகளின் வாழ்வியல் அனுபவங்களை, சாதனைகளை. சிந்தனைகளை, சந்தோஷத்தை, வருத்தங்களை எழுத்தில் கவித்துவமாக பகிர்ந்து தருகிறார் ரவி சுப்ரமணியன். கட்டுரை எழுத்தில் இது ஒரு சாதனை.

எம்.வி.வி அவர்களை நான் ஒரேயொரு முறை பார்த்திருக்கிறேன், அவரோடு பழகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஆனால் ரவியின் எழுத்துகள் வழியாக எம்விவியைப் பற்றி அறிந்து கொள்ளும் போது அவரது கைகளைப் பற்றிக் கொண்டது போன்ற நெருக்கம் உருவாகிறது.

இது போலவே மதுரை சோமுவைப்பற்றிய கட்டுரையும்.

மதுரை சோமுவின் கச்சேரிகளை விரும்பிக் கேட்டிருக்கிறேன், எனது சஞ்சாரம் நாவலிலும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன், சோமுவைப் பற்றிய ரவியின் பதிவு உயிரோட்டமாக சோமுவை நம் கண்முன்னே கொண்டுவந்துவிடுகிறது, எத்தனை மகத்தான கலைஞன், இனி இப்படி ஒரு கலைஞன் உருவாக முடியுமா என்ன.

கரிச்சான் குஞ்சுவினைப் பற்றித் தேனுகா நிறையச் சொல்லியிருக்கிறார். அவர் காட்டிய கரிச்சான்குஞ்சு ஞானி என்றால், ரவி சுப்ரமணியன் காட்டும் கரிச்சான் குஞ்சு அசலான கலைஞன். தனது புத்தகம் வெளிவருவதற்குக் கரிச்சான்குஞ்சு பட்ட கஷ்டங்களையும் அவரது பசித்த மானுடம் நூலுக்கான ராயல்டி தொகையை அவரது துணைவியாரிடம் ரவி ஒப்படைத்த போது அவர் சொல்லிய வார்த்தைகளும மனதைக் கலங்க வைக்கின்றன.

பிரபல திரையிசைப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸை அவரது இறுதிநாட்களில் வாரம் இரண்டுமுறை சந்தித்து வந்தேன். எனது சிறுகதை ஒன்றில் அவரைப்பற்றி குறிப்பிட்டதற்காக நன்றி தெரிவித்து நீண்ட வாழ்த்துக் கடிதம் எழுதியிருந்தார். அக் கதையை படமாக்க விரும்பி என்னை அடிக்கடி சந்தித்தார். அப்போது அவரது திரையுலக அனுபவங்களைப் பற்றி விரிவாக அவர் சொல்லிக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.ஸ்ரீனிவாஸின் குரல் தரும் மயக்கத்தை, வசீகரத்தை ரவி வெகுவாக ரசித்து உணர்ந்து எழுதியிருக்கிறார்.

தேனுகாவைப் பற்றிய ரவியின் கட்டுரையை வாசிக்க முடியாமல் இரண்டுமுறை கண்ணீர் ததும்பிவிட்டது. வாழ்க்கையை ரசித்து வாழத்தெரிந்த மனிதர்களைத் தான் காலம் அவசரமாகப் பறித்துக் கொள்கிறது.

தேனுகா என்ற அந்த ரசனைமிக்க கலைஞனுக்குள் எரிந்து கொண்டிருந்த கலைநெருப்பை வாசகனுக்கு அதே சூட்டோடு, தகிப்போடு உணர்த்துகிறது ரவியின் கட்டுரை . இதுவே தேனுகாவிற்குச் செலுத்தப்பட்ட சிறந்த அஞ்சலி.

இப்படி தமிழின் மகத்தான கலைஆளுமைகளை நினைவு கூறும் இந்நூல் எல்லாக் காலத்திலும் கலைஞர்கள் தன்னுடைய வாழ்நாளில் கௌரவிக்கபட்டதில்லை, கொண்டாடப்பட்டதில்லை, புறக்கணிப்பும் கசப்பும் வறுமையுமே அவர்களை பீடித்திருந்தது ஆனால் இவை குறித்து அக்கலைஞர்களிடம் புகார்கள் எதுவுமில்லை. மனநெருக்கடிக்கும் தனிமைக்கும் உள்ளாகியே அவர்கள் மறைந்து போனார்கள் என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.

நினைவில் ஒளிரும் மகத்தான ஆளுமைகளைத் தனது எழுத்தில் ஆவணப்படுத்திய ரவி சுப்ரமணியன் மிகுந்த பாராட்டிற்குரியவர். அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: