ராதிகா சாந்தவனம்

கவிஞர் முத்துபழனியின் ராதிகா சாந்தவனம் படித்துக் கொண்டிருக்கிறேன். 584 பாடல்களைக் கொண்ட “ராதிகா சாந்தவனம்” சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Appeasement of Radhika” என்னும் நூலாகப் பென்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

இதன் சில கவிதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, அவற்றை இணையத்திலும் சிற்றிதழ்களிலும் வாசித்திருக்கிறேன். ஆனால் முழு நூலும் மொழியாக்கம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

முத்துப்பழனி (1730-1790) தஞ்சையை ஆண்ட பிரதாபசிங்க மன்னரின் அரண்மனையில் தேவதாசியாக இருந்தவர். இவர் தெலுங்கில் எழுதிய ‘ராதிகா சாந்தவனம்’ ஒரு சிருங்காரக் காப்பியம். பெண்ணின் பார்வையில் காமவுணர்வுகளையும் பாலின்ப அனுபவத்தையும் முதன்மைபடுத்தி எழுதப்பட்ட கவிதைகள் கொண்டது இந்நூல்.

ஜெயதேவரின் கீதகோவிந்தம் கிருஷ்ணனின் லீலைகளைப் கொண்டாடுகிறது, முத்துபழனியோ இதற்கு மாறாக ராதையின் பார்வையில் பெண்ணுடலின் ஏக்கத்தையும் கண்ணனின் பாலின்ப இச்சைகளையும் இன்பநுகர்வுகளைப் பாடுகிறார். முத்துப்பழனி இயற்றிய இக்காவியம் 1887-ல் முதன் முறையாகப் பதிப்பிக்கப்பட்டாலும் முழுமையாகப் வெளியிடப்படவில்லை, பின்னர் 1911 இல் தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம்மாள் இதனை மறுபதிப்புச் செய்தார். ஆபாசமான நூல் இதைத் தடைசெய்ய வேண்டும் என எதிர்ப்புக் குரல் கொடுத்தவர் தெலுங்கு கவிஞர் கந்துகூரி வீரேசலிங்கம், அவரது பலத்த எதிர்ப்பின் காரணமாக ஆங்கில அரசு நூலை தடை செய்தது. தற்போது இந்நூல் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

கிருஷ்ணன் இலாவை திருமணம் செய்து கொண்டதால் ராதைக்கு ஏற்படும் தனிமையும் விரகமும் , அவள் இலாவிற்குக் கூறும் ஆலோசனைகளும் பாடலாகப் புனையப்பட்டுள்ளன. மரபான சித்தரிக்கபட்ட கிருஷ்ணனின் பிம்பத்திற்கு மாறான ஒரு கிருஷ்ணனை முத்துபழனி நமக்குக் காட்டுகிறார்.

அறியாப் பெண்ணான இலாவிற்குக் காமக்கலையைக் கற்று தருகிறாள் ராதை. கண்ணன் முதலிரவில் இலாவோடு எப்படி மூர்க்கமாக நடந்து கொள்கிறான், இலாவை திருமணம் செய்து கொண்ட போதும் கண்ணனுக்கு ராதையின் மீதான மோகம் குறையாமல எப்படி அவதிப்படுகிறான் என்பதை முத்துபழனி பாடுகிறார்.

ராதை இதில் சுயமரியாதை மிக்க பெண்ணாகச் சித்தரிக்கபடுகிறாள். இலாவை திருமணம் செய்து இன்பங்களை அனுபவித்துவிட்டு பிறகு தன்னைத் தேடி வரும் கிருஷ்ணனிடம் அவள் கோவித்துக் கொண்டு சுயமரியாதையே தனது பெரும் செல்வம் என்கிறாள்.

அவளது கோபத்தைச் சாந்தப்படுத்த கண்ணன் அவளது கால்களில் சரணாகதி அடைகிறான்.ஆனால் ராதை ஏற்றுக் கொள்ளவில்லை, எட்டி உதைக்கிறாள். தன்னை ஏற்றுக் கொண்டு இன்பம் தா எனக் கண்ணன் மன்றாடுகிறான். இப்படிக் கலகக்குரலில் ஆண்வயப்பட்ட பாலின்பத்திற்கு மாற்றாகப் பெண்ணுடலின் தவிப்பை, உணர்வுகளை முதன்மைப்படுத்திய கவிதைகளை முத்துபழனி எழுதியிருக்கிறார்

தனது கனவில் கண்ணன் வந்து கவிபாடச் சொன்னதாகவும் அந்த விருப்பத்தையே  கவிதைகளாக எழுதியதாகவும் முத்துபழனி கூறுகிறார்.  அவளது குரு வீரராகவ தேசிகர் மற்றும் அறிஞர்கள் கொண்ட சபை  அவளது கவிதைகளை ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் செய்தது, இக்காப்பியத்தை கிருஷ்ணனுக்கே முத்துபழனி சமர்ப்பணம் செய்திருக்கிறார்

••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: