இசையின் வழி


இசையின் வழி

கண்டிப்பான ஆசிரியர்களே மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்க கூடியவர்கள் என்பார்கள். அதிலும் இசை கற்றுக் கொள்ளும் போது சரியான குரு கிடைத்து விட்டவர்கள் பாக்கியசாலிகள்.

உலகப்புகழ் பெற்ற இசை மேதையான பீத்தோவனைச் சிறுவயதில் அவரது தந்தை ஒரு நாளைக்குப் பலமணிநேரம் தொடர்ச்சியாக ப்யானோ மற்றும் வயலின் வாசிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவாராம். கால் கடுக்க நின்றபடி வயலின் வாசிக்கும் போது வலி பொறுக்க முடியாமல் பீத்தோவன் அழுதால் பிரம்படி விழும். காரணம் பீத்தோவனை இளம்வயதிலே மேதையாக முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவரது அப்பாவிற்கு இருந்தது. அவரே பீத்தோவனின் முதல் ஆசிரியர்.

மொசார்ட் நான்கு வயதிலே இளம்மேதையாகக் கொண்டாடப்பட்டது இதற்கான மறைமுகக் காரணம் என்கிறார்கள்.மொசார்ட் பீத்தோவனை விட 14 வயது மூத்தவர். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டதாகக் குறிப்புகளில்லை, ஆனால் பீத்தோவனின் தந்தைக்கு மொசார்டின் இசைத்திறமையும் அதற்குக் கிடைத்த அங்கீகாரமும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. தனது ஏழரை வயதில் பீத்தோவன் முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவரது வயது ஆறு என்று பொய் சொல்லி இளம்மேதை என உலகை நம்ப வைத்தார் அவரது தந்தை.

கண்டிப்பும் வலியும் தனிமையும் நிராகரிப்பும் பீத்தோவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தான இசையாக வெளிப்பட்டது. இன்று அவரது இசையைக் கேட்கும் நாம் அந்த இசையின் பின்னுள்ள வலியை உணர்வதேயில்லை.

இசைக்கலைஞர்களின் வரலாற்றை வாசிக்கும் போது பெரும்பான்மையினர் அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகியே வென்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இசையை வசமாக்குவது எளிதானதில்லை.மனதும் உடலும் கரைந்து போய் இசையினுள் வாழ்பவர்களே அதன் உன்னத நிலைகளை அடைகிறார்கள்.

இசை கற்றுக் கொள்கிற எல்லோராலும் சாதனைகளை நிகழ்த்த முடிவதில்லை, யாரோ ஒருவர் தான் தனது கடின உழைப்பாலும் கற்பனையாலும், சிருஷ்டிகரத்தின் முழுமையான வெளிப்பாட்டினாலும் உயர்ந்த சங்கீதக்காரனாக உருவெடுக்கிறார். இந்த முயற்சிக்கு செலவிட்ட நாட்கள், அடைந்த வேதனைகள், காத்திருந்த தருணங்கள் அத்தனையும் இசையின் மேன்மையில்  கரைந்து போய்விடுகின்றன

விப்லாஷ் (Whiplash) படம் பார்க்கும் போது இதை முழுமையாக உணர்ந்தேன்.

ஹாலிவுட் சினிமாவில் இசை சார்ந்தோ, இசைக்கலைஞனின் வாழ்க்க சார்ந்தோ நிறையத் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இது ஒரு தனிவகைமையாகவே கருதப்படுகிறது. பெரும்பான்மையான இசை படங்கள் நேர்த்தியாக உருவாக்கபட்டவை. ஆனாலும் அவற்றால் மனஎழுச்சியை உருவாக்கிவிட முடிவதில்லை.

அரிதாக மொசார்ட்டின் வாழ்க்கையை விவரிக்கும் Amadeus, பீத்தோவனின் வாழ்க்கையை விவரிக்கும் Immortal Beloved ரே சார்லஸின் வாழ்க்கை விவரிக்கும் Ray போன்ற படங்களே கலைநுட்பமான திரைப்படங்களாக உருவாக்கபட்டுள்ளன

Damien Chazelle எழுதி இயக்கியுள்ள விப்லாஷ் அவரது அனுபவத்திலிருந்தே உருவாக்கபட்டிருக்கிறது. மூன்று ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள இந்தப் படம் jazz drummer ஆக இசை கற்றுக் கொள்ளும் ஆன்ட்ரூ நெய்மனின் வாழ்வை விவரிக்கிறது.

நெய்மனுக்குச் சிறுவயது முதலே டிரம்ஸ் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். இதற்காகவே நியூயார்க்கில் உள்ள ஷாபர் இசைப்பயிலகத்தில் சேர்கிறான். அங்கு Conductor ஆகப் பணியாற்றும் பிளெட்சர் முன்கோபி, கடுமையான வார்த்தைகளால் மாணவர்களைத் திட்டுபவர், மிக கண்டிப்பானவர்.ஆனால் மிகச்சிறந்த இசைக்கலைஞர்.

ஒரு நாள் அவரது கவனத்தை ஈர்க்கும் நெய்மனை தன்னுடைய ஸ்டுடியோ பேண்டில் வாசிப்பதற்காக அழைக்கிறார் பிளெட்சர், அங்கே Whiplash என்ற இசைக்கோர்வையை வாசிக்க தொடர் பயிற்சி நடக்கிறது,. இதில் நெய்மன், தன்னுடைய டெம்போவினை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை எனப் பிளெட்சர் மிக மோசமாகத் திட்டுகிறார், அனைவரின் முன்பாக அவமானப்படுத்துகிறார்.

பிளெட்சரைத் திருப்திபடுத்த வேண்டும் என மணிக்கணக்கில் டிரம்ஸ் வாசித்துப் பயிற்சி செய்கிறான் நெய்மன். இதற்கிடையில் நெய்மனுக்குச் சினிமா தியேட்டரில் பணிபுரியும் நிகோல் என்ற இளம் பெண்ணுடன் நட்பு உருவாகிறது.

உள்ளுர் போட்டி ஒன்றில் பிளெட்சரின் பேண்ட் கலந்து கொள்கிறது. அதில் நெய்மன் வாசிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது, சிறப்பாக வாசித்து வெற்றிபெறுகிறான். ஆனாலும் பிளெட்சர் அவனை அங்கீகரிக்கவில்லை, கேலி பேசுகிறார். அத்தோடு நெய்மனுக்குப் பதிலாக Ryan Connolly என்பவனை டிரம்மராக நியமிக்கிறார்.

இது நெய்மனுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. வெளிப்படையாக அவரோடு சண்டையிடுகிறான். அவர் நெய்மன், ரேயன், டேனர் என மூன்று டிரம்மர்களில் யார் மிக வேகமாக வாசிக்கிறார்களோ அவர்களே தனக்குத் தேவை எனப் பரிசோதனை செய்கிறார்,  இதில் நெய்மன் வெற்றிப் பெறுகிறான்.

அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்காகக் கடுமையான பயிற்சி மேற்கொள்கிறார்கள். நிகழ்ச்சி அன்று நெய்மன் வந்த கார் விபத்திற்கு உள்ளாகிறது. ரத்தம் ஒழுக அதிலிருந்து மீண்டு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டிரம்ஸ் வாசிக்கிறான். அப்படியும் பிளெட்சர் அவனை அங்கீரிக்கவில்லை. ஆத்திரமாகி அவரைக் கோபத்தில் திட்டிவிட்டு அடிப்பதற்காக அவர் மீது பாய்ந்து உருளுகிறான். இதனால் இசைப்பள்ளியில் இருந்து நெய்மன் நீக்கபடுகிறான்.

இசை பயின்றது போதும் என யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு வேலைகள் செய்கிறான், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பிளெட்சரை ஒரு இரவு விடுதியில் சந்திக்கிறான். இப்போது அவனை மறுபடியும் தனது குழுவிற்கு அவர் டிரம்மராக அழைக்கிறார். அந்த இசை நிகழ்ச்சி என்னவானது, அதில் எப்படி நெய்மன் தனது திறமையை நிரூபணம் செய்தான் என்பதே படத்தின் இறுதிக்காட்சி.

இசையைப் பற்றிய படமாக இருந்தாலும் குருவிற்கும் சீடனுக்குமான போராட்டத்தையே படம் முதன்மையாகப் பேசுகிறது. மாணவனின் சராசரி திறமைகளைப் பாராட்டி அவனை உற்சாகப்படுத்தும் ஆசிரியராகத் தான் ஒருபோதும் இருக்க மாட்டேன். ஒருவனால் எவ்வளவு முடியுமோ, அது போலப் பத்து மடங்கு அதிகம் செயல்பட வைக்கவே ஆசைப்படுகிறேன், ஒருவகையில் இது ஒரு சீண்டல், படைப்பாற்றல் மிக்க ஒருவன் இதைச் சவலாக எடுத்துக் கொள்வான். அவன் தன்னை வருத்திக் கொண்டு நிச்சயம் சாதனை செய்வான், அப்படித்தான் இசைமேதைகள் உருவாகியிருக்கிறார்கள். சராசரிகள் தங்களின் அளவான திறமைகளுக்குள் முடங்கிவிடுவார்கள். good job என்பது தனக்கு ஆங்கிலத்தில் பிடிக்காத வார்த்தை எனக் கூறுகிறார் பிளெட்சர்

மாணவர்களின் முழுத்திறமையும் வெளிக்கொண்டுவர கடுமையான வழிகளை முயற்சிப்பதால் திறமையானவன் கூட நம்பிக்கையற்று விலகிப்போய்விடும் அபாயமிருக்கிறதே என நெய்மன் கூறும் போது, தன் திறமை மீது முழுநம்பிக்கை கொண்டவன் ஒருபோதும் அப்படிக் கைவிட்டு போக மாட்டான் என்கிறார் பிளெட்சர்

சாதிக்க முடிந்தவற்றைச் சாதிப்பது பெரியதில்லை, சாதிக்கவே முடியாதவற்றைச் சாதிப்பதே மகத்தானது என்பதைப் படம் அழுத்தமாக உணர்த்துகிறது

படத்தில் பிளெட்சர் கதாபாத்திரமாக வரும் J. K. Simmons சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார். அவரும் ஒரு இசைக்கலைஞரே. ஆகவே இசைக்கலைஞரின் கோபம், ஆதங்கம், சீற்றம் ஆகியவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நெய்மனாக நடித்துள்ள Miles Teller இசைக்கற்றுக் கொண்ட நடிகர், ஆகவே ஜாஸ் டிரம்மராகச் சிறப்பாக நடித்துள்ளார். தேர்ந்த இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என நிறைவான படமாக அமைந்துள்ளது

பிளெட்சர் கதாபாத்திரத்திற்கு எதிர்மறையான ஒரு கதாபாத்திரம் நெய்மனின் தந்தை. அவரும் ஒரு வழிகாட்டியே, ஆனால் அவர் ஒரு பள்ளிஆசிரியர். மகனின் இசை ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவனது வழியிலே அவனது ஆளுமையை உருவாக்க முயற்சிக்கிறார். வீட்டின் உணவு மேஜையில் நண்பர்கள் முன்பாக நடைபெறும் உரையாடலும், மகனின் வாசிப்பை கேட்க வந்து காத்திருந்து அவனை கட்டிக் கொள்ளும் தருணமும், இசையே வேண்டாம் என ஒதுங்கிய நிலையில் அவனை அரவணைத்துக் கொள்வதும் தந்தையை போல சிறந்த ஆசிரியர் எவருமில்லை என்பதையே காட்டுகிறது.

நெய்மன் தனது இசைத்திறமையை நம்பும் இளைஞனின் சரியான உதாரணம். அவன் போராடுகிறான், தன்னோடும் தன்னை அங்கீரிக்காத உலகோடும் போராடுகிறான். ஒவ்வொரு முறை பிளெட்சர் அவனை அவமதிக்கும் போதும் அவருக்கு தனது இசையின் வழியே பதில் சொல்லவே முயற்சிக்கிறான், இது தான் கலைஞனின் பதில்.

படம் முடிந்த பிறகும் மனதில் சோலோ டிரம்ஸ் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு “Feel-Good” movie பார்த்த சந்தோஷத்துடன் எனது இசைசேமிப்பிலிருந்து Charlie “Bird” Parker கேட்கத்துவங்கினேன்

•••

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: