எனக்குப் பிடித்த கதைகள் – 12

தழும்புள்ள  மனிதன் – சாமர்செட் மாம்

தமிழில்: வெ.சந்திரமோகன்

பெரிய பிறைப் போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடிய பெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையான காயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும். வட்டவடிவமான, பெருத்த,  நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. சிறிய, கவனம் ஈர்க்காத தன்மைகளுடன் அவன் இருந்தான். கபடமில்லாத முகக் குறிப்பு.

அவனது பெருத்த உடலுக்கு அந்த முகம் பொருந்தாமல் தோன்றியது. நல்ல வலுவான மனிதனாக அசாதாரண உயரத்தோடு இருந்தான். கந்தலான சாம்பல் சூட், ஒரு காக்கி சட்டை மற்றும் நைந்து போன சொம்ப்ரேரோ தவிர வேறெதையும் அவன் அணிந்து நான் பார்த்ததில்லை. சுத்தத்துக்கும் அவனுக்கும் நெடுந்தொலைவு இருக்கும். ஒவ்வொரு நாளும் கவுதமாலா நகரத்தின் பேலஸ் ஹோட்டலுக்கு காக்டெயில் நேரத்துக்கு அவன் வருவான். பாரை சுற்றி அமைதியாக உலாத்திக்கொண்டு லாட்ட்டறி டிக்கெட்டுகளை விற்பான்.

ஒருவேளை இது தான் அவனுக்கு வாழ்வாதாரம் என்றால் நிச்சயம் அவன் ஏழையாகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் ஒருவரும் அவனிடம் லாட்டரி டிக்கெட் வாங்கி நான் பார்த்ததேயில்லை. என்றாலும் அவ்வப்போது அவனுக்கு குடிக்க மது தருவதைப்  பார்த்திருக்கிறேன். அவன் ஒருபோதும் மறுத்ததே இல்லை. ஏதோ நீண்ட தூரம் நடக்கப் பழப்பட்டவன் போல் ஒரு சுழலும் நடையுடன் ஒவ்வொரு மேஜையாகக் கடப்பான். தன்னிடம் இருக்கும் லாட்டரியின் எண்களை ஒரு புன்னகையுடன் சொல்லிக்கொண்டே செல்வான். ஒருவரும் வாங்கவில்லைஎன்றாலும் அதே புன்னகையுடனே கடந்துபோவான். அற்பக் குடிக்காக தான் அவன் அலைகிறான் என்று நினைத்தேன்.

ஒரு மாலை நேரத்தில் நான் அந்த பாரில் பழகிய நண்பர் ஒருவருடன் நின்றுகொண்டிருந்தேன்.  நல்ல வறுத்த மார்டினி அந்த கௌதமாலா நகர் பேலஸ் ஹோட்டலில் கிடைக்கும். அப்போது அந்த தழும்புடைய மனிதன் அங்கு வந்தான். அவனது லாட்டரி சீட்டு வேண்டாம் என்று நான் இருபதாவது முறையாக நான் தலையை அசைத்து மறுத்தேன். ஆனால் என் நண்பர் இணக்கமாக தலையசைத்தார்.

‘குவா டால், ஜெனெரல்? வாழ்க்கை எப்படிப் போகிறது?’

‘ ஒன்றும் மோசமில்லை. வியாபாரம் ஒன்றும் பெரிதாக இல்லை. என்றாலும் மோசம் ஒன்றுமில்லை’

‘என்ன குடிப்பீர்கள், ஜெனெரல்?’

‘பிராந்தி.’

அதை குடித்துவிட்டு கிளாசை பாரின் மீது திரும்ப வைத்தான். எனது நண்பரைப் பார்த்து தலையசைத்தான். ‘கிரேஷியஸ். ஹாச்டா லியூகோ’

பிறகு திரும்பி எங்களுக்கு அடுத்து நின்று கொண்டிருந்தர்வர்களிடம் லாட்டரி டிக்கெட்டுகளை விற்கலானான்.

‘யார் இந்த ஆள்?’ என்று என் நண்பரிடம் கேட்டேன். ‘முகத்தில் கொடூரமானத் தழும்பு இருக்கிறதே!’

‘அது அவன் முகத்துக்கு அழகு சேர்க்கவில்லை, இல்லையா? அவன் நிகராகுவாவில் இருந்து நாடுகடதப்பட்டவன். ஆள் முரடன், கொள்ளைக்காரன் தான் என்றாலும் மோசமானவனில்லை. அவ்வப்போது நான் சில பெசொக்களை அவனுக்குத் தருவேன். அவன் ஒரு புரட்சிகரமான ஜெனெரல். ஒருவேளை அவனது ஆயுதத்தடவாள கள்ள விற்பனை வெளியில் தெரிந்து அரசை சங்கடப்படுத்தாமல் இருந்திருந்தால் அவன் கவுதமாலாவில் லாட்டரி விற்றுக் கொண்டிராமல் போர் அமைச்சராகி இருப்பான். அவனையும் அவனது உதவியாளர்களையும் அவர்கள் பிடித்து நீதிமன்றம் முன் நிறுத்தினார்கள். இதெல்லாம் அந்த நாடுகளில் பெரியவிஷயம், உனக்குத் தெரியும், அவனை சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். பிடிபடும்போதே தனக்கு என்ன நேரப்போகிறது என்று அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். மற்றவர்களுடன் சேர்ந்து முந்தைய இரவில் போக்கர் விளையாடிக் கொண்டிருந்தான். அவனோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர். தீப்பெட்டி அட்டைகளை நோட்டுகளாக அவர்கள் பயன்படுத்தினார்கள். தன் வாழ்வில் அது போன்ற துரதிருஷ்டம் நேரவில்லை என்ற அவன் என்னிடம் சொன்னான்’.

விடிந்ததும் படைவீரர்கள் அவர்களை தண்டனைக்காக கூட்டி செல்ல செல்லுக்கு வந்தார்கள். அதற்குள் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை தீப்ப்ட்டிகளை உபயோகிக்க முடியுமோ அவ்வளவு தீப்ப்ட்டிகளைத் இழந்திருந்தான்.

அவர்கள் காலின் வராந்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்கத்துப் பக்கத்தில் சுவற்றைப் பார்த்து நிற்க வைக்கப்பட்டனர். சுடுபவர்கள் அவர்களைப் பார்க்கும்படி அவர்கள் நிறுத்தப்பட்டனர். கொஞ்ச நேரத்துக்கு ஒன்றுமே நடக்கவில்லை.  என்ன இழவுக்கு இப்படிக் காக்க வைக்கிறார்கள் என்று இன்சார்ஜ் ஆபீசரிடம் நம் ஆள் கேட்டான். அரசின் கமாண்டிங் ஜெனெரல் தண்டனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சொன்னான் அந்த ஆபீசர். அவருக்காக தான் எல்லோரும் காத்திருந்தார்கள்.

“அப்போ இன்னொரு சிகரெட் பிடிக்க எனக்கு நேரமிருக்கு” என்றான் நம்மாள். “அந்தாள் எப்பவுமே லேட் தான்”.

என்றாலும் அதைப் பற்றவைப்பதற்குள் அந்த ஜெனெரல் -அவர் பெயர் சான் இக்னேஷியோ, அவனை நீ சந்தித்திருக்கிறாயா என்று எனக்குத் தெரியவில்லை- அந்த வராந்தாவுக்கு வந்துவிட்டான். பின்னாலேயே ஏ.டி.சி.யும். வழக்கமான நடைமுறைகள் முடிந்தவுடன் இக்னேஷியோ குற்றவாளிகளிடம் மரணதண்டனைக்கு முன் கடைசி ஆசை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான். ஐந்தில் நான்கு பேர் தலையசைத்து மறுத்தனர். நம்மாள் மட்டும் பேசினான்.

“ஆமாம், என் மனைவியிடம் விடைபெற விரும்புகிறேன்”

“பியூனோ. எனக்கு ஆட்சேபனையில்லை. அவள் எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டான் ஜெனெரல்.

“அவள் சிறையின் கதவுக்கருகில் காத்துக்கொண்டிருக்கிறாள்”

” அப்போ ஐந்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது.”

“அவ்வளவு தான், செனார் ஜெனரல்”

” அவனை ஒரு பக்கம் நிறுத்தி வையுங்கள்”

இரு வீரர்கள் முன்னே செல்ல அவர்களுக்கிடையில் அந்த குற்றவாளி புரட்சிக்காரன் காண்பிக்கப்பட்ட இடத்தை நோக்கி நடந்தான். ஜெனரல் தலையசைத்தவுடன் அந்த கமாண்டிங் ஆபீசர் சுடும் ஆணையைப் பிறப்பித்தான். ஒரே சத்தம். நான்கு பேரும் விழுந்தனர். அவர்கள் விநோதமாக விழுந்தனர், எல்லோரும் சேர்ந்தாற்போல் விழவில்லை. ஒருவர் பின் ஒருவராக, ஒழுங்கற்ற முறையில் ஏதோ கைப்பாவைக் கூத்தில் பொம்மைகள் போல் விழுந்தார்கள். அவர்கள் அருகில் சென்ற ஆபீசர் இன்னும் உயிரோடிருந்தவன் மீது இரண்டு சேம்பர் குண்டுகளை தன் ரிவால்வர் மூலம் சுட்டான். நம்மாள் சிகரெட்டை முடித்து அதன் அடிப்பாகத்தை தூர எறிந்தான்.

நுழைவாயிலில் ஏதோ குழப்பம். ஒரு பெண் வராந்தாவுக்கு துரிதமான நடையுடன் வந்தாள். தன் கையை நெஞ்சின் மேல் வைத்தவாறு வந்தவள் சட்டென்று நின்றாள். பிறகு கைகளை விரித்து நீட்டியபடி அழுதுகொண்டே ஓடி வந்தாள்.

“கரம்பா” என்றான் ஜெனெரல்.

அவள் கருப்பு நிறத்தில் உடையணிந்திருந்தாள். கூந்தலை ஒரு முக்காடால் மூடியிருந்தாள்.முகம் வெளுத்து பிரேதக்களையில் இருந்தது. ஒரு சிறுமியை விட கொஞ்சம் தான் பெரியவளாயிருந்தாள். மெலிந்து சாதாரண உடலமைப்பில் இருந்தாலும் கண்கள் விசாலமாய் இருந்தன. ஆனால் அவை வேதனையால் அலோங்கோலமாய் தெரிந்தன. அவள் ஓடி வருகையில் சிறிது திறந்திருந்த வாயும் வேதனை நிறைந்த முகமும் அவளை அத்தனை அழகாய் காட்டின. வீரர்கள் ஆச்சர்யத்தில்   மூச்சுத் திணற  அவளைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

கலகக்காரன் ஓரிரு அடிகள்  முன்னால் வந்து அவளை எதிர்கொண்டான். அடைக்கும் குரலில் கத்திக்கொண்டே அவனது கரங்களுக்குள் தன்னை அவள் புதைத்துக்கொண்டாள். ‘அல்மா டி மி கோரோசான், என் இதயத்தின் ஆன்மாவே’ என்றபடி அவளது உதடுகளின் மேல் தன் உதடுகளை வைத்து அழுத்தினான். அதே கணம் கிழிந்து கசங்கிய தன் சட்டைக்குள் இருந்து ஒரு கத்தியை எடுத்தான் .அதை வைத்திருக்க அவன் என்ன செய்து சமாளித்தான் என்று எனக்குப் புரியவில்லை. அவளது கழுத்தில் குத்தினான். வெட்டப்பட்ட நரம்பிலிருந்து ரத்தம் வெளிப்பட்டு அவனது சட்டையை நனைத்தது. பின் அவளது உடலை கரங்களால் அணைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை அவளது உதட்டில் தன் உதடைப் பதித்தான்.

அத்தனை சீக்கிரம் அது நடந்துவிட்டது. பலருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என்றாலும் சிலர் பயங்கரமாக அலறினர். அவன் மீது பாய்ந்து அவனைப் பிடித்துக்கொண்டனர். அவர்கள் அவன் மூச்சு விடும்படி தங்கள் பிடியைத் தளர்த்தினர். ஏ.டி.சி மட்டும் பிடிக்கவில்லைஎன்றால் அந்தப் பெண் கீழே விழுந்திருப்பாள். அவள் நினைவிழந்தாள். அவளை தரையில் படுக்கவைத்த வீரர்கள் துயரம் நிறைந்த முகங்களுடன் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தனர். கலகக்காரனுக்குத்  எங்கு தாக்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. ரத்தத்தை நிறுத்தமுடியாது என்று அவன் அறிந்திருந்தான். சிறிது நேரத்தில் அவள் பக்கம் முழங்காலிட்டு அமர்ந்திருந்த ஏ.டி.சி எழுந்தான்.

“இறந்துவிட்டாள்” என்று அவன் முணுமுணுத்தான்.கலகக்காரன் சிலுவையிட்டுக்கொண்டான்.

“ஏன் இப்படி செய்தாய்?” என்றான் ஜெனரல்.

“நான் அவளை நேசித்தேன்.”

அந்த கூட்டத்தில் இருந்தவர்களிடையே ஒரு பெருமூச்சு எழுந்தது. விசித்திரமான முகங்களோடு அவர்கள் கொலைகாரனைப் பார்த்தனர். ஜெனரல் மெளனமாக அவனை உற்றுப்பார்த்தான்.

“மேன்மையான செயல் இது” என்றான் கடைசியாக.”

என்னால் இவனைக் கொல்ல முடியாது. எனது காரை எடுத்துக்கொள்ளுங்கள். இவனை எல்லையில் சென்று விட்டு விடுங்கள். செனார், ஒரு வீரனுக்கு இன்னொரு வீரன் தர வேண்டிய  மரியாதையை உனக்கு அளிக்கிறேன்.”

இதைக் கேட்டவர்களிடம் அமோதிப்பான முணுமுணுப்பு எழுந்தது.கலகக்காரனின் தோளில் தட்டினான்  ஏ.டி.சி.

ஒரு வார்த்தை பேசாமல் இரு வீரர்களுக்கு நடுவே காத்திருக்கும் காரை நோக்கி நடை போடத் தொடங்கினான் கலகக்காரன்.

எனது நண்பர் நிறுத்தியதும் நான் அமைதியாக இருந்தேன். இதைக் கண்டிப்பாக விளக்க வேண்டும். அவர் ஒரு கவுதமாலாக் காரர். என்னிடம் ஸ்பானிஷில் தான் பேசினார். என்னால் முடிந்தவரை அவர் சொன்னதை மொழிபெயர்த்திருக்கிறேன். என்றாலும் அவரது உணர்ச்சிமிகுந்த உரத்த பேச்சை குறைக்க  ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. உண்மையை சொன்னால் அது அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தது.

“சரி. எப்படி அவன் முகத்தில் அந்தத் தழும்பு வந்தது?” என்று நீட்டி முழக்கி கேட்டேன்.

“அதுவா , ஒரு முறை பாட்டில் ஒன்றை திறக்கும்போது அது வெடித்ததால் ஏற்பட்டது. இஞ்சி பான பாட்டில் அது.”

“அது எனக்குப் பிடிக்கவே இல்லை” என்றேன் நான்.

-The man with the scar                William Somerset Maugham

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: