எனக்குப் பிடித்த கதைகள் 15

தீபம்   –     கான்ஸ்டாண்டின் செமினாவ்              தமிழில் நா. பாஸ்கரன்
நான் உங்களிடம் சொல்லப்போகும் இந்த நிகழ்ச்சி 1944-ம் வருஷம் செப்டம்பர் மாதம் பத்தொன்பதாம் தேதி நடந்தது.
பெல்கிரேட், ஏற்கனவே கைப்பற்றப்பட்டு விட்டது. சாவா நதியின் மேலுள்ள பாலமும், அதன் ஓரத்திலுள்ள ஒரு சிறிய அரண் இவை மட்டுமே ஜெர்மானியர்களின் வசம் இருந்தது.
அன்று உதயத்தில், செஞ்சேனை வீரர்கள்  ஐவர் அந்தப் பாலத்தின் மீது ஏறுவது என்று திட்டமிட்டனர். அங்கே செல்வதற்கு அவர்கள் ஒரு சிறு சதுக்கத்தைக் கடக்க வேண்டும். அந்தச் சதுக்கத்தில் நம்முடையதும் எதிரிகளுடையதுமான எரிந்த டாங்கிகள் பலவும் படைக் கவசமுள்ள கார்கள் முதலியனவும் கிடந்தன. மரம் ஒன்றுகூட முழுசாக நிற்கவில்லை மரங்கள் எல்லாம் ஏதோ ஒரு பூதாகரமான கையால் வெட்டிவிடப்பட்டதை போன்று ஒரு ஆள் உயரத்திற்கு அடிக்கட்டைகளாக நின்றன.
அந்தச் சதுக்கத்தின் மத்தியில், நமது சிப்பாய்கள் அக்கரையிலிருந்து வந்த பீரங்கிப் பிரயோகத்தால் தாக்கப்பட்டனர். அவர்கள் எரிந்து கொண்டிருக்கும் தணலிலேயே சுமார் அரைமணிநேரம் படுத்துக் கிடந்தனர். கடைசியாக, சிறிது அமைதி காணப்பட்டது. பலமாக அடிபட்ட இருவரை லேசாக அடிபட்ட இருவர் இழுத்துக்கொண்டே பின்னால் நகர்ந்து வந்தனர். ஐந்தாவது ஆசாமி சதுக்கத்தில் இறந்து கிடந்தார்.
அந்த சிப்பாயை பற்றி வேறொன்றும் எனக்கு தெரியாது. கம்பெனியின் பெயர் ஜாபிதாவில் அவன் பெயர் செகுலேயேவ் என்றும் பத்தொன்பதாம் தேதி காலை பெல்கிரேடில்  சாவா நதிக்கரையில் கொல்லப்பட்டான் என்று மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தது.
அந்தப் பாலத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற செஞ்சேனை வீரர்களின் முரட்டுத்துணிச்சலைக் கண்டு ஜெர்மானியர்கள் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதற்குப் பின்னர் அவர்கள் தொடர்ந்து- ஏதோ சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு- நாள்பூராவும் அந்தச் சதுக்கத்தையும், பக்கத்திலுள்ள தெருவையும் பீரங்கியால் தாக்கிக் கொண்டே இருந்தனர்.
அடுத்தநாள் விடிவதற்குள் எப்படியும் அந்தப் பாலத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று தளகர்த்தருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவர் இப்பொழுது உடனே போய் செகுலேயேவின் உடலை எடுத்துவர வேண்டாம்;  பாலத்தைக் கைப்பற்றியவுடன் அந்த சடலத்தை எடுத்து ஒழுங்காகப் புதைக்கலாம் என்று கூறினார்.
ஜெர்மானியர்கள் அன்று பூராவும் மாலை நேரத்திலும், இரவிலும் கூட பீரங்கியால் சுட்டுக்கொண்டே இருந்தனர்.
அந்தச் சதுக்கத்தின் ஓரத்தில், மற்ற வீடுகளுக்குக் கொஞ்சம் அப்பால். கற்கள் குவியல்களாகக் கிடந்தன. அங்கே என்ன இருந்திருக்கும் என்பதை நிதானிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த இடத்தில் யாராவது வசித்துகொண்டிருக்க முடியும் என்று யாருக்குமே தெரிந்திருக்க முடியாது.
என்றாலும் கூட, அந்த நிலவறையில் கற்குவியல்களுக்கும் கீழே, மரியா என்ற ஒரு கிழவி வசித்து வந்தாள். செங்கற்களால் பாதி மூடப்பட்டு கருப்பான ஒரு பொந்து வாயைப் பிளந்து கொண்டிருந்தது. அதன் மூலம்தான் அந்த நிலவறைக்குள் செல்ல வேண்டும்.
கிழவியின் கணவனான பாலத்துக் காவல்காரன் இறந்துவிட்டதற்குப் பிறகு, அந்தக் கட்டடத்தின்  இரண்டாவது மாடியறை அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதிலே அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். இரண்டாவது மாடி அழிக்கப்பட்டதற்குப் பின்னர், அவள் முதல் மாடிக்கு வந்துவிட்டாள். அங்கிருந்த மற்றவர்களெல்லாம் அந்த வீட்டை விட்டே வெளியேறிவிட்டார்கள். அப்புறம், முதல் மாடியும்
அழிக்கப்பட்ட பிறகு அவள் கீழேயுள்ள நிலவறைக்குச் சென்று விட்டாள்.
பத்தொன்பதாம் தேதியோடு, அந்த நிலவறையில் அவள் நான்கு நாட்கள்தான் இருந்திருக்கிறாள். அன்று காலை, ஐந்து ருஷ்யர்கள் அந்தச் சதுக்கத்தைக் கடந்து ஊர்ந்து செல்வதை அவள் நன்றாகப் பார்த்தாள். அவளுடைய இடத்தையும் அந்த சதுக்கத்தையும் ஒரு இரும்பு வேலிதான் பிரித்திருந்தது. ஜெர்மானியர்கள் அவர்கள் மீது குண்டு பொழிவதைப் பார்த்தாள். சுற்றிலும் வெடிகுண்டுகள் சிதறி விழுகின்றன. அந்த ருஷ்யர்களை தனது நிலவறைக்குள் அழைக்க பாதிதூரம் வரை அவள் ஊர்ந்தே சென்றுவிட்டாள். அவள் இருக்கும் இடத்தை விட அவள் போகும் இடம் அவ்வளவு ஆபத்தானதல்ல என்பது அவளுக்குத் தெரியும். அவளுக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அந்த வெடிச் சத்தத்தில் அவள் காதுகள் செவிடாயின. உணர்விழந்தாள்.
அவள் சுய உணர்வு பெற்று எதிரே பார்க்கும்பொழுது சதுக்கத்தில் ஒரேயொரு ருஷ்யன் மாத்திரந்தான் இருந்தான். அவன் ஒரு கையைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு, இன்னொரு கையை தொடையில் வைத்துக்கொண்டு ஒருக்களித்துப் படுத்திருந்தான். அவன் தூங்குவதைப் போலக் காணப்பட்டான். பலமுறை அவனைக் கூப்பிட்டுப் பார்த்தாள். ஆனால், அவனிடமிருந்து பதிலே இல்லை. அவன் கொல்லப்பட்டு விட்டான் என்பதை பின்னர் உணர்ந்து கொண்டாள்.
ஜெர்மானியர்ள் மீண்டும் சுட்டார்கள். நாலாபக்கமும் குண்டுகள் சிதறி விழுந்து கொண்டும், கருப்புமண் தூள்கள் தெறித்தவண்ணமுமிருந்தன. குண்டுகளின் செதில்கள் மரங்களின் அடிப்பாகத்தைக் கூடத் துளைத்துக் கொண்டிருந்தன. இரும்புத் தூள்களும், பட்ட மரங்களும் பரவியிருந்த அந்தச் சதுக்கத்தில், அந்த ருஷ்யன் கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு தனியே படுத்திருந்தான்.
இறந்த சிப்பாயை கிழவி மரியா ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டே நின்றாள். அவனைப் பற்றி யாரிடமாவது அவள் கூற விரும்பினாள். ஆனால், அங்கே உயிருள்ள ஜீவன் ஒன்று கூடக் கிடையாதே!  அந்த நிலவறையில் அவளோடு வசித்த ஒரு பூனைக்குட்டியும் கூட, குண்டுமாரியின்போது செங்கல் சிதறி விழுந்து இறந்து கிடந்தது. அந்தக் கிழவி வெகுநேரம் யோசித்துக்கொண்டு நின்றிருந்தாள். பின்னர் தன்னிடமிருந்த மூட்டைக்குள் எதையோ தேடினாள். பிறகு, அதிலிருந்து எதையோ எடுத்து தன்மேலிருந்த கருப்புசால்வைக்குள் மறைத்துக் கொண்டாள். பின்னர் மெதுவாக அந்த நிலவறையை விட்டு வெளியே வந்தாள்.
அவளால் நடந்து செல்லவும் முடியவில்லை. ஓடவும் முடியாது. மெதுவாகத் தள்ளாடியபடியே அந்தச் சதுக்கத்தை நோக்கி நடந்தாள். இரும்பு வேலியின் ஒரு பகுதி, அவள் பாதையைத் தடுத்து நின்றது. அவளால் அதில் ஏறிக் கடக்க முடியவில்லை. அவள் மெதுவாக அதைச் சுற்றி வந்து சதுக்கத்திற்குள் நுழைந்தாள்.
ஜெர்மானியர்கள் குண்டுமாரி பொழிந்த வண்ணமிருந்தனர். ஆனால், ஒரு குண்டுகூட கிழவியின் அருகில் விழவில்லை.
சதுக்கத்தைக் கடந்து இறந்து கிடந்த அந்த ருஷ்யச் சிப்பாயை அவள் நெருங்கிகனாள். மிகுந்த சிரமத்தோடு, அவனைப் புரட்டி முகத்தைப் பார்த்தாள். மிகவும் இளவயது;  முகமெல்லாம் ஒரேயடியாக வெளுத்திருந்தது. அவனது தலைமயிரைத் தடவிக் கொடுத்தாள். விறைத்துப் போன அவனது கரங்களை எடுத்து அவனுடைய மார்பின்மீது போட்டாள் பின்னர், அவனுக்கருகில் அமர்ந்து கொண்டாள்.
ஜெர்மானியர்கள் குண்டுகளை வெடித்தவண்ணமே இருந்தனர். முன்னைப் போலவே குண்டுகள் கிழவி இருந்த இடத்திற்கு அப்பால் விழுந்துகொண்டிருந்தன. அப்படியே அவள் ஒரு மணிநேரம், அல்லது இரண்டு மணிநேரம் மௌனமாக அவனுக்கருகில் உட்கார்ந்திருந்தாள்.
அப்பொழுது குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் இருந்தது. நடுநடுவே பீரங்கிக் குண்டுகள் வெடிக்கும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கடைசியில், அந்தக் கிழவி எழுந்திருந்தாள். அந்தச் சிப்பாயின் சடலத்தைவிட்டு சில அடிகள் அப்பால் சென்றாள். அங்கே ஒரு குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகி அதில் தண்ணீர் நிரம்பியிருந்தது.
அந்தக் குழிக்கருகில் முழங்காலிட்ட வண்ணம் கிழவி அதனுள் ளிருக்கும் தண்ணீரை எடுத்து வெளியே ஊற்றினாள். அதற்குள் அவள் பல தடவை ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பின்னர் சிப்பாயின் சடலத்தை கைகளில் இடுக்கியவாறு இழுத்துக் கொண்டே நடந்தாள்.
அவள் போக வேண்டிய தூரம் பத்து அடிகள் தானிருக்கும். அவளுக்கு வயதாகிவிட்டதால், அங்கே போய்ச் சேருவதற்குள் அவள் மூன்றுமுறை உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டாள். கடைசியாக, அவளை இழுத்து அந்த குழிக்குள் போட்டுவிட்டாள். மிகவும் களைப்படைந்ததால், ஒரு மணி நேரத்திற்கதிகமாக உட்கார்ந்து இளைப்பாறினாள்.
ஜெர்மானியர் சுட்டவண்ணமே இருந்தனர். அவர்களது குண்டுகள் கிழவிக்கு அப்பால் விழுந்துகொண்டிருந்தன. அவள் ஓய்வெடுத்துக் கொண்டதும் முழங்காலிட்டு நின்று அவன்மீது சிலுவைக் குறியிட்டு நெற்றியில் முத்தமிட்டாள்.
பின்னர், அந்தக் குழிக்கருகே இருந்த மணலை மெதுவாக எடுத்துப் போட்டு மூடிக்கொண்டிருந்தாள். விரைவாக மூடிவிட்டாள். என்றாலும், அவளுக்குத் திருப்தியளிக்கவில்லை. அதைச் சரியான கல்லறையாக்க வேண்டும் என நினைத்தாள். மேலும் கொஞ்சநேர ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் மணலை எடுத்து அதன்மீது போட ஆரம்பித்தாள். சிலமணி நேரங்களுக்குள்ளாக, ஒவ்வொரு கைப்பிடி யாகவே மணலை அள்ளிப்போட்டு ஒரு கல்லறை மேடாகவே ஆக்கிவிட்டாள்.ஜெர்மானியர்கள் குண்டுபோட்டவாறே இருந்தனர். அவர்களது குண்டுகள் முன்னைப் போலவே கிழவிக்கு அப்பால் விழுந்து கொண்டிருந்தன.
அந்த மேட்டை உண்டாக்கியதற்குப் பிறகு அந்த நிலவறையிலிருந்து எடுத்து, கருப்பு போர்வைக்குள் மறைத்து வைத்திருந்ததை வெளியே எடுத்தாள். அது ஒரு பெரிய மெழுகுவத்தி! நாற்பத்தி ஐந்து ஆண்டு களுக்கு முன்னால் நடந்த தனது கல்யாணத்திலிருந்து அவள் மிக ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வந்த இரண்டு கல்யாண மெழுகு வத்திகளில் ஒன்று.
பைக்குள்ளிருந்து சில தீக்குச்சிகளை எடுத்தாள். அந்த கல்லறை மேட்டின்மீது மெழுகுவத்தியை வைத்துக்கொளுத்தினாள். இரவு அமைதியாக இருந்தது. தீபம் அசையாமல் எரிந்துகொண்டே இருந்தது. அதை ஏற்றி வைத்துவிட்டதற்கப்பால், போர்வைக்குள்ளே, முழங்காலைக் கட்டிப் பிடித்தவாறு கல்லறைக்கருகே உட்கார்ந் திருந்தாள்.
விடிவெள்ளி முளைக்க ஆரம்பித்தது. மெழுகுவத்தியும் பாதி எரிந்துவிட்டது. தரையில் சுற்றுமுற்றும் பார்த்தாள். அங்கே துருப்பிடித்த ஒரு தகரம் கிடைத்தது. அதை எடுத்து மெல்லிய கைகளால் மிகுந்த கஷ்டப்பட்டு வளைத்தாள். பின்னர், அதை அந்த மெழுகுவத்திக்கருகில் பதித்தாள். காற்றினால் அந்த மெழுகுவத்தி அணைந்து விடாமலிருக்கப் பாதுகாப்பு செய்தாள். இதைச் செய்ததும், அவள் எழுந்து, சதுக்கத்தைக் கடந்து, வந்தவழியே மெதுவாக நடந்துசென்று, மறுபடியும் அந்த இரும்பு வேலியை சுற்றிக் கொண்டுபோய் தனது நிலவறையை அடைந்தாள்.
விடிவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னால், செகுலேயேவ் இருந்த கம்பெனியைச் சார்ந்த செஞ்சேனை வீரர்கள், பயங்கர குண்டு மாரிகளுக்கிடையே சதுக்கத்தைக் கடந்து அந்தப் பாலத்தைக் கைப்பற்றினர்.
ஒருமணி நேரத்தில் நன்றாக விடிந்துவிட்டது. காலாட்படையைத் தொடர்ந்து நமது டாங்கிப் படை அக்கரையை அடைந்தது. அடுத்த கரையில் யுத்தம் தொடர்ந்து நடந்தது. என்றாலும் குண்டுகள் சதுக்கத்தில் விழவில்லை.
பின்னர், அந்தப் படையின் தளபதி செகுலேயேவை நினைவுபடுத்திக் கொண்டு சில சிப்பாய்களை அனுப்பி, அந்தச் சடலத்தைத் தேடச் செய்து, அன்று காலை போரில் மாண்ட இதர விரர்களோடு சேர்த்துப் புதைக்கும்படி உத்தரவிட்டார்.
பின்னர், அந்தப் படையின் தளபதி செருலேயைவை நினைவு படுத்திக் கொண்டு சில சிப்பாய்களை அனுப்பி, அந்தச் சடலத்தைத் தேடச்செய்து, அன்று காலை போரில் மாண்ட இதர வீரர்களோடு சேர்த்துப் புதைக்கும்படி உத்தரவிட்டார்.
செகுலேயேவின் சடலத்தை அவர்கள் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. திடீரென்று, வீரர்களிலொருவன் சதுக்கத்தில் ஓரத்தில் நின்று ஆச்சர்ய மேலிட்டுக் கூக்குரலிட்டான். மற்றவர்களையெல்லாம் அழைத்தான். சிலர் அங்கே ஓடிவந்தனர்.
“பாருங்கள்!” என்றான். செஞ்சேனை வீரன்.
அவன் சுட்டிக் காண்பித்த திசையை அனைவரும் நோக்கினர்.
உடைந்திருந்த இரும்பு வேலிக்கருகில், பழைய குழி ஒன்று மேடாகி, அந்த மேட்டின் மீது துருப்பிடித்த ஒரு தகரத்தினுள் ஒரு மெழுகுவத்தி எரிந்து கொண்டிருந்தது. அதுவும் அநேகமாக எரிந்து முடிந்துவிட்டது என்றாலும், சிறிய ஒளி மட்டும் தெரிந்துகொண்டிருந்தது.
அந்தச் சிப்பாய்கள், தங்கள் தொப்பிகளைக் கழற்றி அமைதியாக அந்த கல்லறையைச் சுற்றி நின்று அணையும் தீபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். உணர்ச்சி மேலீட்டால் அவர்களால் எதுவும்  பேச முடியவில்லை.
அப்பொழுதுதான் கிழவி, கருப்புச் சால்வை போர்த்திக் கொண்டு வந்தாள். அவளை அதற்கு முன் அவர்கள் அங்கே பார்க்கவில்லை. மெலிந்த கால்களால் மெதுவாக நடந்தாள். செஞ்சேனை வீரர்களைக் கடந்து சென்றாள். கல்லறைக்கருகே முழங்காலிட்டாள். போர்வைக் குள்ளிருந்து இன்னொரு மெழுகுவத்தியை எடுத்தாள். அங்கே எரிந்துகொண்டிருந்ததைப் போலவே அதுவுமிருந்தது. அந்த மெழுகு வத்தியைக் கொளுத்தி அந்த இடத்திலேயே வைத்தாள். அவள் எழுந்து நிற்கவே கஷ்டப்பட்டாள். அவள் எழுந்து நிற்பதற்கு பக்கத்தில் நின்ற செஞ்சேனை வீரர்கள் உதவி செய்தனர்.
அதற்குப்பின்னரும் கூட,  அவள் ஒன்றுமே சொல்லவில்லை. அங்கு நின்று கொண்டிருந்த வீரர்களைப் பார்த்தாள். அவர்கள் தலையில் தொப்பி அணியாமல் நின்றுகொண்டிருந்தனர். கிழவி, அவர்களுக்குத் தன் தலையைத் தாழ்த்தி கம்பீரமாக வணக்கம் செலுத்தினாள். பின்னர் போர்வையை சரி செய்துகொண்டு, அந்தத் தீபத்தையோ அன்றி அங்கு நின்றவர்களையோ பாராமல் வந்த வழியே நடக்க ஆரம்பித்தாள்.
செஞ்சேனை வீரர்கள் தங்கள் பார்வையை கிழவியின் பக்கம் செலுத்தினர். அந்த அமைதியைக் கெடுக்க அஞ்சி, மெதுவாகப் பேசிக் கொண்டனர். பிறகு அதற்கு எதிர்த்திசையில், சாவா நதியின் பாலத்தைக் கடந்து, தங்களது படையைச் சேர்ந்து போராடச் சென்றனர்.
பீரங்கிக் குண்டுகளினால் கருகிய மண்ணும், இரும்புத்துண்டுகளும், பட்ட மரங்களும் சூழ்ந்த அந்தக் கல்லறையில், யுகோஸ்லாவிய அன்னையின் கடைசி சொத்து-அவளது கல்யாண மெழுகுவத்தி-ஒரு ருஷ்ய இளைஞனின் கல்லறையின் மீது எரிந்துகொண்டே இருந்தது!
அந்தத் தீபம் அணையாமல் நிரந்தரமாக எரிவதைப் போலவே தோன்றியது.
அன்னையின் கண்ணீரும், அன்பு மகனின் வீரமும் எவ்வளவு நிரந்தரமோ அம்மாதிரி, நிரந்தரமாகவே எரிந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.

**

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: