யுத்த ரகசியம்

இறந்து போன ஒரு மனிதனால் ஒரு யுத்தத்தின் போக்கினை திசைதிருப்ப முடியுமா ?

முடியும் என்கிறது The Man Who Never Was திரைப்படம்.நாவலாக வெளிவந்து வெற்றிபெற்ற கதையைப்  படமாக்கியிருக்கிறார்கள். 1956ல்  வெளியான இப்படத்தை Ronald Neame இயக்கியுள்ளார். சமீபத்தில் பார்த்த மிக சுவாரஸ்யமான திரைப்படம்

இரண்டாம் உலகப்போரின் போது நேசப்படை எங்கே தனது அடுத்த தாக்குதலை நடத்தப் போகிறது எனக் கவனமாக உளவு பார்க்கிறது நாஜி ராணுவம். அதை திசைதிருப்புதவற்காக பிரிட்டீஷ் ராணுவம் இறந்த மனிதனின் உடலை கடலில் மிதக்கவிட்டு அந்த மனிதன் ஒரு கடற்படை அதிகாரி, ரகசியத் தகவலுடன் விமானத்தில் பறந்த போது விபத்து ஏற்பட்டு கடலில் விழுந்து இறந்துவிட்டிருக்கிறான் என நம்ப வைக்க முயற்சிக்கிறது

இந்த ரகசியத் திட்டத்தை உருவாக்குபவர் லெப்டினெட் கமாண்டர் மாண்டேகு. இதற்காக பிரிட்டீஷ் ராணுவத் தலைமையிடம் அனுமதி பெறப் போராடுகிறார், முடிவில் பிரதமரின் ஒப்புதல் கிடைக்கிறது. திட்டத்தின் பெயர் Operation Mincemeat.

இறந்த உடலைப் பெறுவதற்காக மருத்துவமனைகளில் தேடி அலைகிறார்கள். அந்த மனிதன் கடலில் விழுந்து இறந்து போனது போல நம்ப வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என கவனமாகத் திட்டமிடுகிறார்கள்.

மருத்துவமனையில் நோயுற்று இறந்து போன ஒரு உடலை வாங்கி பதப்படுத்தி அந்த உடலுக்கு Major William Martin, R.M. எனப்பெயரிட்டு முறையான அடையாள அட்டைகள், லாண்டரி ரசீது, காதலியின் கடிதம், நாடக டிக்கெட் உள்ளிட்ட சகலத்தையும் தயார் செய்கிறார்கள். அத்துடன் ராணுவ ரகசிய கடிதம் ஒன்றினை அவர் தன்னோடு கொண்டு போவது போல மவுண்ட்பேட்டன் கையெழுத்து போட்ட ஒரிஜினல் கடிதம் ஒன்றையும் தயார் செய்து கைப்பையில் வைக்கிறார்கள். பின்பு அந்த உடலை நீர்மூழ்கி கப்பலில் கொண்டு போய் ஸ்பெயின் கடற்கரையை ஒட்டி வீசிவிட்டு வருகிறார்கள்

திட்டமிட்டது போலவே உடல் கரை ஒதுங்குகிறது. இறந்த அதிகாரியின் உடலைப் பெற பிரிட்டீஷ் தூதரகம் முனைப்பு காட்டுகிறது, இதனூடே அந்த மனிதன் பையில் இருந்த ரகசிய கடிதம் உளவாளி மூலமாக நாஜி ராணுவத்திடம் சென்று சேர்கிறது. அதிலுள்ள ராணுவ ரகசியம் சரியானது தானா எனச் சோதிக்க இறந்து போனவன் உண்மையான கடற்படை அதிகாரியா  என நாஜி ராணுவம் விசாரிக்க விரும்புகிறது, இதற்காக ஒரு உளவாளியை லண்டனுக்கு அனுப்பி சோதனை மேற்கொள்கிறது,

ஜெர்மன் உளவாளி ஒவ்வொன்றாக தேடிப் போய் சோதனை செய்கிறான். இறந்தவன் உண்மையான கடற்படை அதிகாரி தான் என்பதற்கு சில ஆதாரங்கள் கிடைக்கின்றன. திடீரென அவனுக்கு ஒரு சந்தேகம் வருகிறது, அதை எப்படி முறியடித்து  பிரிட்டீஷ் ராணுவம் இறுதியில் வெற்றி பெறுகிறது என்பதே கதை. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம்.

மாண்டேகு ஒரு அற்புதமான கதாபாத்திரம், அவரது கவனமான  திட்டமிடலும் ரகசிய அணுகுமுறையும் படத்தில் சிறப்பாக காட்சிபடுத்தபட்டுள்ளன. இறுதிக் காட்சியில் பெயரறியாத அந்த மனிதனின் கல்லறையில் தனது பதக்கத்தை வைத்து அவர் அஞ்சலி செலுத்தும் நிமிசத்தில் நெகிழ்ந்து போனேன்.

அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற பதைபதைப்பை படம் முழுவதும் தக்க வைத்திருப்பது சிறந்த திரைக்கதை அமைப்பின் வெற்றி.

••

The Imitation Game  2014ல் வெளியான திரைப்படம், இதுவும்  இரண்டாம் உலக யுத்தப்படமே,  ஜெர்மனி ராணுவத்தின் ரகசியத் தகவல்களை கண்டறிவதே படத்தின் மையக்கதை. இம்முயற்சிக்குத் துணை நிற்பவர்  Alan Turing என்ற கணிதமேதை. அலன் டூரிங்  தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகக் கருதப்படுகிறார். இவர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இரகசியக் குறியீடுகளைப் புரிந்துகொள்வதற்கான மையத்தில் பணி புரிந்தார். ஜெர்மன்  கடற்படை தொடர்பான ரகசியக் குறியீட்டுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராக செயல்பட்டார். பகுப்பாய்விற்காக  விஷேச இயந்திரம் ஒன்றை உருவாக்க முனைந்தார்.
படத்தின் துவக்கத்திலே டூரிங் வீட்டிற்கு இரண்டு போலீஸ்காரர்கள் வருகிறார்கள், அவரை சோவியத் உளவாளி என சந்தேகம் கொண்டு விசாரிக்கிறார்கள்.அங்கிருந்து படம் டூரிங்கின் பள்ளிபருவத்திற்குள் செல்கிறது, அங்கே அவரது நண்பன் கிறிஸ்தோபர் cryptographyயில் விருப்பம் கொண்டிருப்பது,  டூரிங் அதை கற்றுக் கொள்வது குறித்து விவரிக்கபடுகிறது
ஜெர்மனியின் ரகசிய தகவல்கள் எனிக்மா என்ற இயந்திரத்தின் உதவியால் சங்கேத முறையில் அனுப்பபடுகின்றன, அவற்றை விளக்கிப் புரிந்து கொள்ள ஒரு டீமை பிரிட்டீஷ் ராணுவம் உருவாக்குகிறார்கள், அதற்குத் தலைமை ஏற்கும் டூரிங் செயற்கை அறிவு கொண்ட இயந்திரம் ஒன்றை உருவாக்க முனைகிறார். அதற்கு கிறிஸ்தோபர் என இறந்து போன தனது நண்பனின் பெயரைச் சூட்டுகிறார்
இந்த திட்டத்திற்கு உடன் பணியாற்றுகிறவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ராணுவத் தலைமை முட்டுக்கட்டை போடுகிறது. இதற்கிடையில் டூரிங் ஒரு உளவாளி என சந்தேகம் அவரை நிழலாய் பின்தொடர்கிறது. ஒரினச்சேர்க்கையாளர் என்பதால் அவர் மிரட்டப்படுகிறார். தோல்வி, மனக்கசப்பு, விரக்தி, தடைகள்  இதனூடே டூரிங் ஜெர்மன் ராணுவத்தின் எனிக்மா இயந்திரம் உருவாக்கும் ரகசிய செய்திகளை முறியடிக்க போராடி முடிவில் வெற்றி பெறுகிறார்
இரண்டு படங்களும் பிரிட்டன் ராணுவத்தின் ரகசியத் திட்டங்களையே விவரிக்கிறது, ஒன்று தந்திரம், மற்றது விஞ்ஞானம், இரண்டிலும் திட்டத்திற்கு தலைமை ஏற்பவர் அதை நிறைவேற்ற தொடர்ந்து போராடுகிறார். முடிவில் பிரிட்டன் வெற்றி பெறுகிறது.

மாண்டேகுவும் ஆலன் டூரிங்கும் எதிர்நிலையான மனிதர்கள். அவர்களின் அணுகுமுறை வேறுவிதமானது. ஆனால் இருவரும் தனது எண்ணத்தை செயல்படுத்திக்காட்ட போராடுகிறார்கள். அவமதிப்புகளை தாண்டி  நம்பிக்கையோடு செயலாற்றுகிறார்கள். மாண்டேகு முடிவில் அங்கீகரிக்கபடுகிறார். டூரிங்கிற்கு அதுவும் கிடைக்கவில்லை, அவர் மனநலம் பாதித்து இறந்து போனார் என படம் நிறைவு பெறுகிறது.  இருவரும் மறக்க முடியாத கதாபாத்திரங்களாக மனதில் தங்கிவிடுகிறார்கள்

••

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: