எனக்குப் பிடித்த கதைகள் 22

ஹாட் ட்ரிக்              எட்கர் கேரத் (இஸ்ரேல்)

தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன்

”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” ஆ, இதோ வருகிறது வெளியே.

மாயாஜால நிகழ்ச்சியின் கடைசி வித்தை. தொப்பியில் இருந்து ஒரு முயலை வெளியே இழுக்கிறேன். எப்பவுமே நிகழ்ச்சி முடிகிற போது இதைச் செய்வேன், ஏனென்றால் குழந்தைகளுக்கு பிராணிகளைப் பிடிக்கும். குறைந்தபட்சம் நான் குழந்தையாய் இருந்தபோது பிராணிகளிடம் நான் பிரியம் வைத்திருந்தேன். நிகழ்ச்சி இந்த விதமாய் முடிந்தால் பளிச்னு இருக்கும், அப்படியே முயலை பையன்களிடம் கை கையாக அனுப்பலாம், அவர்கள் கொஞ்சுவார்கள், எதையாவது அதற்கு ஊட்டி விடுவார்கள். குறைந்தபட்சம், அப்படித்தான் இருந்தது எங்கள் காலத்தில். இப்பத்திய பசங்களை மேய்க்கிறது சிரமம், அவர்கள் எளிதில் இதிலெல்லாம் அயர்கிறார்கள் இல்லை,

ஆனாலும் இந்த முயல் ட்ரிக்கை நான் கடைசியாகவே செய்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த வித்தை இது… ஒரு காலத்தில் என்றும் சொல்லுவேன். பையன்களையே கண்ணெடுக்காமல் பார்த்தவாறு, தொப்பிக்குள் துழாவித் தேடி, என் முயல் கஸாமின் காதுகளைப் பிடிக்கிறேன்.

”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” ஆ, இதோ வருகிறது வெளியே. பையன்களை கண்விரிய வைக்க நான் தவறியதே இல்லை. அவர்களுக்கு மாத்திரமல்ல, எனக்கே அப்போது ஒரு துள்ளல் கிடைத்தது. தொப்பிக்குள் அந்த வேடிக்கையான காதுகளை நான் ஸ்பரிசிக்கும் போதெல்லாம், எனக்கு நான் வித்தைக்காரனாக்கும், என்கிற மிதப்பு இருக்கும். இந்த வித்தையை எப்படிச் செய்கிறேன், எனக்குத் தெரியும். மேஜையடியில் ஒரு ரகசிய அறை, அதெல்லாம்தான்… எது எப்படியானாலும் அது குறளி வித்தை போலத்தான் ஆச்சர்யமானது.

அந்த சனி மதியம் ஊரொட்டிய கிராமத்தில் இதே தொப்பி வித்தையைக் கடைசியாக என்று வைத்திருந்தேன், என் வழக்கப்படி. அந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த பிள்ளைகள் எல்லாம் அடங்காப்பிடாரிகள். அவர்கள் என்னை கண்டுகொள்ளவே இல்லை. சில பையன்கள் ஸ்வார்சனேகர் படத்தை டி.வியில் பார்த்தபடி எனக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தார்கள். பிறந்தநாள் கொண்டாடும் பையன், அவன் அந்த அறையிலேயே இல்லை, புது வீடியோகேம் விளையாடிக்கொண்டிருந்தான் அவன். அத்தனை கூட்டத்தில் என்னை கவனிக்கிறவர்கள் எண்ணி நாலே பிள்ளைகள். ரொம்ப எக்குத்தப்பான நாள். வித்தைக்கார கெட்டி உடைக்குள் கசகசவென வியர்த்துக் கொட்டியது எனக்கு. சட்டுபுட்டுனு முடித்துவிட்டு வீடுபோய்ச் சேரலாம்… மூணு கயிறுமுடிச்சு வித்தைகளை ஓரங்கட்டிவிட்டு நேரே தொப்பி நிகழ்ச்சிக்கு வந்தேன். என் கையைத் தொப்பிக்கு ஆழத்தில் விட்டபடியே, ஒரு கண்ணாடி மாட்டிய கொழுகொழு குழந்தையின் கண்ணோடு பொருத்திய என் பார்வையை எடுக்கவேயில்லை, கஸாமின் மெல்லிய காதுகளைத் தொட்டது எப்போதும் போலவே என்னை ஆச்சர்யப்படுத்தியது,

”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” இன்னும் ஒரே நிமிஷத்தில், அந்தப் பிறந்தநாள் விழா நடத்தும் அப்பங்காரனின் கையிலிருந்து 300 ஷெகல் செக்கை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டு, ஜுட்! காதைப் பிடித்து கஸாமை வெளியே இழுக்… என்னவோ மாறுதல், கனமே இல்லையே!..

என் கையைக் காற்றில் வீசினேன். பார்வை எதிர்க் கூட்டத்தில் அப்படியே நிலைத்திருந்தது. அப்பத்தான்… என் மணிக்கட்டில் ஈரந் தட்டி, அப்பத்தான் அந்தக் கொழுகொழுப் பெண் அலறினாள். என் கையில் கஸாமின் முகம், பிடித்துத் தூக்கிய காதுகள், வெறித்த கண்கள்… வெறும் தலை மாத்திரம், உடம்பே இல்லை. தலையும், எக்கச்சக்க, கசகசக்கிற ரத்தக் குளம். குண்டுக் குழந்தை வீறிட்டாள். எனக்கு முதுகுகாட்டி டி.வி பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள் திரும்பினார்கள்.

அவர்கள் கைதட்ட ஆரம்பித்தார்கள். பிறந்தநாள்க் குழந்தை கையில் வீடியோகேமுடன் அடுத்த அறையில் இருந்து வெளியே வந்தான், துண்டிக்கப்பட்ட அந்தத் தலையைப் பார்த்ததும் அவன் விசிலடித்து ஹ¨ங்கரித்தான். எனக்கு அடிவயிறுபுரட்டி தொண்டை அழுத்தியது, வாந்தி வந்தது, தொப்பியிலேயே வாந்தியெடுத்தேன், அப்படியே அதைத் திரும்ப மறைத்தேன். பிள்ளைகள் ஆரவாரித்தார்கள்.

அந்த ராத்திரி எனக்குப் பொட்டுத் தூக்கம் இல்லை. திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தேன். என்ன நடந்திருக்கும் என்றே புரிபடவில்லை. காஸாமின் உடம்பும் கிடைக்கவேயில்லை. அடுத்தநாள் காலையில் வித்தை சாமான்கள் வாங்கும் கடைக்குப் போய், அவர்களிடம் எல்லாம் சொன்னபோது அவர்களும் பதில் தெரியாமல் திகைத்தார்கள்.

இன்னொரு முயலை விலைக்கு வாங்கிக் கொண்டேன். அந்த வியாபாரி எப்படியாவது ஒரு ஆமையை என் தலையில் கட்டப் பார்த்தான். ”முயல் வித்தைல்லாம் அரதப் பழசு அண்ணே. இப்ப ஆமைதான் ஜோர். இது நிஞ்ஜான்னு சொல்லு. பசங்க வாயைப் பொளப்பாங்க…”

ஆனால் நான் முயலையே வாங்கிக் கொண்டேன். இதற்கும் கஸாம் என்றே பேர் வைத்தேன். வீடு திரும்பிப் பார்த்தபோது என் தொலைபேசியில் ஐந்து தகவல்கள் காத்திருந்தன. எல்லாமே மாயாஜால நிகழ்ச்சிக்காக. அந்த முந்தைய நிகழ்ச்சியைப் பார்த்த குழந்தைகள் வீட்டிலிருந்து. ஒரு குழந்தை, போன நிகழ்ச்சியைப் போலவே எங்க வீட்டிலும் நிகழ்ச்சி முடிந்ததும் முயல் தலையை அப்டியே விட்டுட்டுப் போயிறணும், என்று கேட்டது. அப்பதான் எனக்கே தெரிந்தது, அடடா கஸாமின் தலையை நிகழ்ச்சி முடிந்து அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

அடுத்த நிகழ்ச்சி புதனன்று. எங்கள் வீட்டுப் பக்கமே, நல்ல வசதியான குடும்பத்து ஒரு பத்து வயசுப் பையனின் பிறந்த நாள். நிகழ்ச்சி பூராவும் நான் வெலவெலத்திருந்தேன். கவனம் சிதறித் தடுமாறினேன். ஒரு சீட்டு மேஜிக் செய்கையில் உதறலெடுத்தது. தொப்பியைப் பற்றியே திரும்பத் திரும்ப யோசனை வந்து கொண்டிருந்தது.

இப்போது தொப்பிவித்தையின் நேரம். ”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” பார்வையாளரின் மேல் என் கூர்த்த பார்வை தொப்பிக்குள் நுழைகிறது கை. காதுகள் கிடைக்கவில்லை. ஆனால் உடம்பு கனமாய் இருந்தது. அத்தோடு திரும்பவும் அந்த அலறல். கூட கரகோஷமும். நான் பிடித்திருந்தது… முயல் அல்ல. அது இறந்த ஒரு குழந்தை.

அதே வித்தையை இனியும் செய்ய எனக்குத் திராணியில்லை. எனக்குப் பிடித்தமான ஜாலம்தான், என்றாலும் இப்ப அதை நினைக்கவே கை நடுங்குகிறது. என்னென்ன கோர சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன. இனி இந்த வித்தை வேணவே வேணாம்… தொப்பிக்குள்ளாற இன்னும் என்னென்ன விபரீதம் காத்திருக்கிறதோ. நேத்து ராத்திரி ஒரு கனவு, தொப்பிக்குள்ள கை விடுகிறேன், எதோ ராட்சச மிருகத்தின் வாய்க்குள் என் கை சிக்கிக்கொண்டாப்போல. அந்த இருண்ட பகுதிக்குள் கை விடவே எனக்கு எப்படி தைரியம் வந்தது தெரியவில்லை. அதுக்கப்பறமும் கண்ணை எப்படி மூடி, திரும்ப எப்படித் தூங்கினேன் தெரியாது.

நான் மேஜிக் செய்கிறதையே நிறுத்தி விட்டேன். போனால் போகட்டும். இப்ப எனக்குச் சோத்துப் பாடு திண்டாட்டம்தான், ச் அதுனால என்ன. வீட்டில் அந்த மாஜிக் செய்கிற போது மாட்டிக் கொள்கிற உடைகளைப் போட்டுப் பார்ப்பேன், சும்மா ஒரு இதுவுக்காக. தொப்பிக்குக் கீழே மேஜைக்குள் இருக்கிற ரகசிய அறை, அதைத் துழாவிப் பார்ப்பேன், ஆனால் அத்தோட அவ்வளவுதான். அது தவிர எதையும் செய்கிறதில்லை, விட்டுத் தலைமுழுகிவிட்டேன்.

இதைத் தவிர வேறெதும் வேலைகீலை செய்யவும் இல்லை. தூங்காமல், அந்த முயல் தலையையும், குழந்தை உடலையும் பத்தி யோசித்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறேன். அவை ஒரு விடுகதையை விடுவிக்கும் துருப்புகளாகத் தோணுகிறது. யாரோ என்னவோ என்னிடம் சொல்ல வருகிறார்கள், இது முயல்களுக்கும், அத்தோடு குழந்தைகளுக்கும் ஏற்ற சூழல் அல்ல. வித்தைகாட்டுகிறவர்களுக்கும் இது உகந்த நேரம் கிடையவே கிடையாது, என்று யாரோ சொல்ல வருகிறார்கள்.

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: