எனக்குப் பிடித்த கதைகள் 32

மாமிசம்விர்ஜிலியோ பினோரா (Virgilio Piñera)

மொழிபெயர்ப்பு: ரவிக்குமார்

அது சாதாரணமாகத்தான் நடந்தது, எந்தப் பாவனையுமில்லாமல். அந்த நகரம் இறைச்சிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தது, அதற்கான காரணங்களை இங்கே விவரிக்கத் தேவையில்லை. எல்லோரும் கலவரப்பட்டார்கள், மிக மோசமான விமர்சனங்கள் காதில் விழுந்தன. பழி வாங்கப் போவதாகவும் பேசப்பட்டது. ஆனால், வழக்கம்போல மிரட்டல்களைத் தாண்டி எதிர்ப்பு வளரவில்லை, பாதிக்கப்பட்ட அந்த நகரத்தின் மக்கள் வெகுசீக்கிரமாகவே,பலதரப்பட்ட காய்கறிகளையும் தின்பதில் ருசிகண்டு விட்டார்கள்.

திரு. அன்சால்டோ மட்டும்தான் அந்த நகரத்தில் விதிவிலக்கு. எந்தக் கலக்கமும் இல்லாமல் ஒரு பெரிய கத்தியை அவன் தீட்டிக்கொண்டிருந்தான். பிறகு தனது பேண்ட்டை முழங்கால் வரை கீழே தளர்த்திவிட்டான். தனது இடதுபுற பிருஷ்டத்திலிருந்து ஒரு துண்டுக் கறியை வெட்டி எடுத்தான்.உப்பும் வினிகரும் போட்டு அந்தக் கறியைச் சுத்தம்செய்து அதை ப்ராய்லரில் வைத்து வதக்கினான். ஞாயிற்றுக்கிழமைகளில் சமைப்பதற்குப் பயன்படுத்தும் வாணலியில் அந்தக் கறியைப் போட்டு வறுத்தான். மேசையில் அமர்ந்து தனது கறியைச் சுவைத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

அந்தச் சமயம் பார்த்துக் கதவை யாரோ தட்டுகிற சப்தம் கேட்டது. தட்டியவர் அன்சால்டோவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர். அவர் தனது மனக்குறையை அன்சால்டோவிடம் சொல்வதற்காக வந்தார்.அன்சால்டோ மிகவும் சினேக பாவத்தோடு அந்த இறைச்சித் துண்டை அவரிடம் காண்பித்தான். அதைப் பற்றி அவர் கேட்டபோது தனது இடது பக்க பிருஷ்டத்தை அவருக்கு அன்சால்டோ காண்பித்தான்.

உண்மை பட்டவர்த்தனமாக இருந்தது. அவர் மிகவும் நெகிழ்ந்துபோனார், ஒரு வார்த்தையும் பேசாமல் வெளியே சென்று சற்று நேரத்தில் அந்த நகரத்தின் மேயரை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தார். அந்த நகரத்தின் மக்கள் தங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் இறைச்சியை –அதாவது தங்களின் சொந்த மாமிசத்தைக் கொண்டு தங்களது பசியைத் தீர்த்துக்கொள்ளும்படி செய்யலாம் என்ற தனது ஆவலை அன்சால்டோவிடம் மேயர் தெரிவித்தார். அதிகம் படித்தவர்களின் எதிப்புக்குப் பிறகு, அன்சால்டோ அந்த நகரத்தின் மத்தியிலிருந்த சதுக்கத்துக்குச் சென்று வெகுமக்களுக்கான செய்முறை விளக்கத்தைச் செய்துகாட்டினான். அதன் பிறகு அந்தப் பிரச்ச்னை ஒரு முடிவுக்கு வந்தது.

ஒவ்வொருத்தரும் தனது இடது பிருஷ்டத்திலிருந்து இரண்டு துண்டுகளை வெட்டி எடுப்பது எப்படி என்பதை ஒருமுறை அவன் செய்துகாட்டினான். ஒரு கொக்கியில் மாட்டப்பட்டிருந்த இறைச்சியின் நிறத்திலான ப்ளாஸ்டரால் செய்யப்பட்ட பொருளை அவன் பயன்படுத்தி அதை விளக்கினான். ஒன்று அல்லது இரண்டு துண்டு மாமிசத்தை வெட்டி எடுப்பது எப்படி என்பதைச் செய்து காட்டினான். இந்த விஷயங்கள் தெளிவு படுத்தப்பட்டதும் ஒவ்வொருத்தரும் தனது இடதுபக்க பிருஷ்டத்திலிருந்து இரண்டு துண்டு மாமிசத்தை வெட்டி எடுக்கத் தொடங்கிவிட்டனர். அது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஆனால் அதைப்பற்றி விவரிக்கக் கூடாது எனச் சொல்லப்பட்டது.இப்படியாகப் பெறப்படும் மாமிசத்தைக்கொண்டு அந்த நகரத்தின் இறைச்சித் தேவையை எத்தனை நாட்களுக்குத் தீர்க்க முடியும் எனக் கணக்கிடப் பட்டது. நூறு பவுண்டு எடையுள்ள ஒரு நபர் –குடல் போன்ற சாப்பிட முடியாத உறுப்புகளைத் தவிர்த்துப் பார்த்தால் – ஒரு நாளைக்கு அரை பவுண்டு மாமிசம் வீதம் நூற்று நாற்பது நாட்களுக்குத் தன்னையே சாப்பிட முடியும் என ஒரு புகழ்பெற்ற மருத்துவர் தெரிவித்தார். இந்த கணக்கு ஏமாற்றம் தருவதாயிருந்தது. ஒவ்வொருவரும் தனது அழகிய மாமிசத்தைச் சாப்பிட முடிந்தது.

திரு. அன்சால்டோவின் யோசனையைப் பெண்களெல்லாம் புகழ்ந்து பேசினார்கள். உதாரணமாக, தமது மார்பகங்களைத் தின்றுவிட்ட பெண்கள் தங்களது உடம்பின் மேல் பாகத்தை மூடத் தேவையில்லாமல் போய்விட்டது. அவர்களது உடை தொப்புளோடு நின்றுவிட்டது. சில பெண்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர், ஏனென்றால் அவர்கள் தமது நாக்குகளை விழுங்கிவிட்டார்கள் (அதுவரை அது அரச வம்சத்தினர் மட்டுமே அனுபவித்துவந்த விருந்தாக இருந்தது.) தெருக்களில் வினோதமான காட்சிகள் நிகழ்ந்தன. வெகுகாலமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டபோது அவர்களால் ஒருவரையொருவர் முத்தமிட்டுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் தமது உதடுகளைக்கொண்டு அருமையான குழம்பு ஒன்றைச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டார்கள். சிறை அதிகாரியால் ஒரு கைதியின் மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட முடியவில்லை, ஏனென்றால் அவர் தனது விரல்களிலிருந்த சதையைத் தின்று தீர்த்துவிட்டார். ருசியாகச் சாப்பிடுவதில் வல்லவர்கள் – அந்த அதிகாரியும் அதில் ஒருவர் –இந்தப் பழக்கத்தை வைத்துதான் “விரல் சூப்புவது நல்லது” என்ற பழமொழியை உருவாக்கினார்கள்.

சிறிய அளவில் இதற்கு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்தது. பெண்களுக்கு ஆடை தயாரிக்கும் தொழிலாளர் யூனியனைச் சேர்ந்தவர்கள் உரிய அதிகாரிகளிடம் தமது முறையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். பெண்கள், தமது தையல்காரகளை மீண்டும் பராமரிக்க ஊக்குவிக்கும் முழக்கம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற அவர்களது கோரிக்கையை அந்த அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால் அந்த எதிர்ப்பு குறிப்பிடும்படியாக இல்லை,தங்களது மாமிசத்தைத் தாங்களே உண்ணும் அந்த நகரத்து மக்களின் நடைமுறையில் அது எந்த விதக் குறுக்கீட்டையும் செய்யவில்லை.

அந்த விஷயத்தின் மிகவும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சி அந்த நகரத்தின் பாலே நடனக் கலைஞனின் கடைசித் துண்டு மாமிசம் வெட்டியெடுக்கப்பட்டதுதான். அவனது கலையின் மீதிருந்த மரியாதை காரணமாகத் தனது கால் பாதங்களின் முன் பகுதியைக் கடைசியாகச் சாப்பிடலாம் என அவன் விட்டு வைத்திருந்தான். பல நாட்களாக அவன் அமைதியின்றி இருந்ததை அவனது அக்கம்பக்கத்தினர் கவனித்துவந்தார்கள்.

கால் நுனியின் மாமிசம் மட்டுமே இப்போது மிச்சமிருந்தது. அந்தச் சமயத்தில் அவன் தனது நண்பர்களை அழைத்தான் கொடூரமான மௌனத்தின் மத்தியில் அந்தக் கடைசிப் பகுதியை அப்படியே அதை முன்பு அழகான வாயாக இருந்தது தற்போது ஒரு ஓட்டையாக மட்டுமே எஞ்சியிருக்கும் பகுதிக்குள் போட்டுக்கொண்டான். அங்கு இருந்தவர்கள் எல்லோரும் சட்டென்று இறுக்கமானார்கள்.

ஆனால், வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது. அதுதான் முக்கியமான விஷயம். அது அதிர்ஷ்டவசமாய் நடந்ததா? நினைவுக்கூரத்தக்க விஷயங்களுக்கான மியூசியத்தின் அறைகளில் ஒன்றில் அந்த நடனக் கலைஞனின் காலணிகள் காணப்படுவது இதனால்தானா? அந்த நகரத்தின் பருமனான நபர்களில் ஒருத்தர் (நானூறு பவுண்டுக்கு மேல் எடை உள்ளவர்) தனது கையிருப்பில் இருந்த மாமிசம் அத்தனையையும் பதினைந்தே நாளில் சாப்பிட்டு முடித்துவிட்டார்.(அவர் சிற்றுண்டி சாப்பிடுவதிலும் மாமிசம் தின்பதிலும் அதிக விருப்பம் உள்ளவர். அதுமட்டுமின்றி அவரது உடலமைப்பு, நிறையச் சாப்பிட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.) கொஞ்ச காலத்துக்குப் பிறகு எவரும் அவரைப் பார்க்க முடியவில்லை. உண்மையில் அவர் ஒளிந்து வாழ்ந்துக்கொண்டிருந்தார்.

ஆனால் அப்படி ஒளிந்து வாழ்ந்தது அவர் மட்டுமல்ல, வேறு பலரும் அதே போலச் செய்துகொண்டிருந்தார்கள். இப்படியாக ஒருநாள் காலை திருமதி ஓர்ஃபிலா தனது மகனைக் கூப்பிட்டப்போது அவனிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை (அவன் தனது இடது காது மடலைச் தின்றுகொண்டிருந்தான்). காது இருந்த இடத்தில் வேறு எதையோ வைத்திருந்தான். கெஞ்சல்களோ மிரட்டல்களோ எதுவும் பயனளிக்கவில்லை. காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்கும் நிபுணர் வரவழைக்கப்பட்டார். ஆனால், தான் விசாரித்துக்கொண்டிருந்தபோது தனது மகன் அமர்ந்திருந்ததாக திருமதி. ஓர்ஃபிலா சுட்டிக்கட்டிய இடத்திலிருந்து கொஞ்சம் கழிவுப் பொருள்களை மட்டுமே அந்த நிபுணரால் கண்டெடுக்க முடிந்தது.

ஆனால், இப்படியான சிறுசிறு தொந்தரவுகள் அந்த நகரவாசிகளின் சந்தோஷத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தனது ஜீவாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு நகரம் எப்படிக் குறை சொல்ல முடியும்? இறைச்சிப் பற்றாக்குறையால் பொது ஒழுங்குக்கு ஏற்பட்ட நெருக்கடி நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டாயிறு இல்லையா?நகரின் மக்கள்தொகை கண்ணுக்குத் தெரியாமல்போகும் அளவுக்கு வேகமாகக் குறைந்துகொண்டிருந்தது என்பது அந்த அடிப்படையான பிர்ச்சனைக்கு ஒரு பிற்சேற்கை. மக்கள் தமது வாழ்வாதாரத்தை அடைவதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஒவ்வொருவரிடமிருந்தும் எடுக்கப்பட்ட மாமிசத்துக்கான விலைதான் அந்தப் பிற்சேர்க்கையா? ஆனால், இப்படிப் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்பது சில்லறைத்தனமான விஷயம் எனத் தோன்றக்குடும். இப்போது சிந்தனையாற்றல் நிரம்பிய அந்தச் சமூகம் நல்ல முறையில் போஷிக்கப்படுகிறது.

நன்றி : வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) ரவிக்குமார்.

http://karuvanam.blogspot.in/.

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: