காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2.


நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுத தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்க கூட முடியவில்லை.


நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையை சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது? வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா? கள்ளர்களின் பூர்வீக தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய பொய். ஏன் கள்ளர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளின் மீது அக்கறை கொள்ளவேயில்லை


அவருக்கு கள்ளர்களின் வாழ்க்கை அவலங்களை விடவும் அவர்கள் இரவில் களவு செய்யப்போவதில் தான் அதிகமான சுவராஸ்யமிருக்கிறது. இதை தான் காலம்காலமாக தமிழ் சினிமா காட்டி வருகிறது. திருடன் எப்பேர்பட்ட காவலையும் மீறி திருடிவிடுவான். அவனை போலீஸôல் ஒருநாளும் பிடிக்கவே முடியாது. திருடன் அதி புத்திசாலி. இருட்டிலும் அவனுக்கு கண் தெரியும் , அவன் ஒரு மாயாவி என்று தமிழ் சினிமா கட்டிய பிம்பத்திற்கும் அசலான கள்ளர்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ வேறுபாடு இருக்கிறது.


மதுரையை சுற்றிய கள்ளர் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு வாழ்க்கை அவலங்களை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். எத்தனை ரணங்கள், வலிகள் அவர்களிடம் மறைந்திருக்கின்றன என்று புரியும்.


வெங்கடேசன் கள்ளர்களின் அந்த வலியை வாசகனுக்கு பகிர்ந்து தரவில்லை. தகவலாக திரட்டி நிரப்பியிருக்கிறார். வேல ராமமூர்த்தியின் எழுத்தில் வெளிப்படும் கள்ளர் வாழ்க்கையின் ரணமும் ஆற்றாமையும் உக்கிரமான கோபமும் வெங்கடேசனின் நாவலில் துளியுமில்லை.


கள்ளர் வாழ்வியல் பகுதி முழுவதும் திருடன் என்ற சினிமா பிம்பத்தை இன்னும் ஊதி பெருக்கியிருக்கிறார். மாடு திருடுதல், தானியக்கொள்ளைக்காக ரயிலில்  திருடுவது. வீடு புகுந்து கன்னம் வைப்பது என்று களவினை கொண்டாடுகிறார். ஜல்லிகட்டில்மாடு பிடிப்பதையும், பார வண்டி திருட்டையும் சிலாக்கிறார்.  இந்தக் கொண்டாட்டத்தில் அடிபட்டு போய்விடுவது அவர்களின் நிம்மதியற்ற அன்றாட வாழ்க்கை மற்றும் கள்ளர் குடும்ப பெண்களின் அல்லல்படும் பிழைப்பு.  குற்றாவளிகளாக அடையாளம் காணப்பட்டு சிறை சென்று திரும்பியவர்களை சமூகம் நடத்தும் புறக்கணிப்பு போன்றவை இந்த நாவலில் விரிவாக அடையாளம் காட்டப்படவேயில்லை.


கள்ளர் வீடுகளுக்கும் கதவிருக்கிறது. அதை பூட்டிக் கொண்டு தான் உறங்குகிறார்கள். கள்ளர் வீட்டு பெண்களின் தாலியும் தங்கம் தான் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. வாழ்க்கை நெருக்கடி தான் மனிதனை திருடனாக்குகிறது. எவனும் பிறப்பால் திருடன் இல்லை.


பழங்கதைகளில் வரும் திருடர்களை போல  மதுரைக்கள்ளர்கள் எப்படி திருட போனார்கள். எப்படி கன்னம் வைத்தார்கள். அதில் எந்த கோஷ்டி பிரபலமானது என்பதை இருநூறு பக்கங்களுக்கு விளக்கியிருக்கிறார். அதிலாவது ஏதாவது புதிய விஷயங்கள் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை


சிறுவயதில் கால் திருடன் அரை திருடன் முக்கால் திருடன் முழு திருடன் என்று நாலு திருடர்களை பற்றிய கதை ஒன்றை கேட்டிருக்கிறேன். இதில் முழுதிருடன் அப்பா, மற்ற மூவரும் பிள்ளைகள். கால் திருடன் உடைந்த மண்பானை ஒட்டை காலணா என நம்ப வைத்து ஏமாற்றுவான். அரை திருடன் ஒரு ஆளை துணைக்கு கூட்டி போய் ஜவுளிகடையில் உட்கார வைத்துவிட்டு தேவையான பொருளை வாங்கி வந்துவிடுவான். திருடன் கூட்டி போன ஆள் மாட்டிக் கொள்வான்.


முக்கால் திருடன் இதில் என்ன சவால் இருக்கிறது என்று அரண்மனைக்குள் உடும்பை போட்டு ஏறி அத்தனை காவலையும் மீறி ராணியின் கழுத்து மாலையை திருடி வருவான். இது எல்லாம் திருட்டா என்று முழுத்திருடன் திருடர்களை பிடிக்க மாறுவேஷத்தில் வந்த ராஜாவை மடக்கி, தான் உதவி செய்தவாக அவர் முத்திரை மோதிரத்தை வாங்கி கொண்டு அவரை ஒரு சாக்கில் கட்டி வைத்துவிட்டு அரண்மனைக்கு போய் முத்திரை மோதிரத்தை காட்டி வேண்டிய தங்கம் அள்ளி கொண்டு வந்துவிடுவான்.


இந்தக் கதை வேடிக்கைக்காக சொல்லப்படுகிறது. இதை சரித்திர உண்மையாக்கியிருக்கிறார் வெங்கடேசன்.


யாரும் நுழைய முடியாத திருமலை நாயக்க மன்னரின் அரண்மனைக்குள் இரண்டு கள்ளர்கள் கன்னம் வைத்து போய் ராஜ முத்திரையை திருடி வந்த காரணத்தால் அவர்களை பிடித்து வர  ஆணையிட்டு  சபைக்கு கொண்டு வந்ததும் திருடியவனுக்கு மூன்று சவுக்கடி தந்து  இனிமேல் நீங்கள் தான் மதுரை நகரை காவல் காக்க வேண்டும் என்று பட்டயம் தருகிறார். திருடனை அரசன் முன் கொண்டுவந்தவனுக்கு கள்ளநாட்டில் நீதி பரிபாலனம் செய்யும் உரிமை தருகிறார்.


திருடனும் தான் அரண்மனையில் கன்னம் வைத்த ஒட்டை அப்படியே இருக்கட்டும் என்று பணிவாக வேண்டுகோள் விடுக்கிறான். திருமலை நாயக்கரும் அதற்கும் சம்மதிக்கிறார். எவ்வளவு அப்பாவியான ராஜா. எவ்வளவு அப்பாவியான மக்கள். திருடன் கையில் கஜானா சாவியை ஒப்படைத்து விடுவது என்பது எவ்வளவு பெரிய ராஜதந்திரம் .


இதுதான் கள்ளர்களின் வீரபரம்பரை சான்று என்று நாவலின் இரண்டாம் பகுதி கூறுகிறது.


கள்ளர்கள் மதுரையை காவல் புரிந்தார்கள் என்று புகழாரம் சூட்டுகிறது. சரி காவல் புரிந்தார்கள். யாருக்கு. எதற்காக, யாரிடமிருந்து ? சம்பளத்திற்காக செய்த வேலை தானே அது. அவர்கள் வாழ்க்கை அப்போது எப்படியிருந்தது. மதுரை நகரையே காவல் காக்கின்றவன் என்பதற்காக மாநகரில் அவர்கள் தங்கி கொள்ள வசதி செய்யபட்டிருந்தா? இல்லை அவர்கள் மனைவி மக்கள் அரசு அதிகாரத்தில் பங்கு பெற அனுமதிக்கபட்டார்களா, இல்லையே? மீனாட்சி அம்மன் கோவிலில் கள்ளர்களுக்கு என்ன மரியாதை தரப்பட்டது.? கள்ளழகர் உருவான கதை அறிந்தவர்கள் அதன் பின் உள்ள புறக்கணிப்பின் வலியை அறியாமலா இருப்பார்கள்?


கள்ளர்களை ஒடுக்குவதற்கு நாயக்கர் செய்த தந்திரமே இந்தக் காவல் முறை. தன் கையை வைத்து தன் கண்ணைக் குத்தி கொள்ள வைப்பது போன்றது.
மதுரை வீரன் கதையில் கள்ளர்கூட்டத்தை ஒடுக்குவதற்காக மதுரை வீரன் வந்தான். ஒடுக்கினான் என்று நாட்டார் கதை பேசுகிறதே. அது நாயக்கர் காலத்தில் தானே நடந்தது. ராமேஸ்வரம் போகின்ற யாத்ரீகர்களை கொன்று வழிப்பறி செய்தார்கள் என்ற குற்றசாட்டுகள் லண்டன் நீதிமன்றம் வரை சென்ற வழக்குகளை இன்றைக்கும் வாசிக்க முடிகிறதே?


கள்ளர்கள் கிராமங்களில் காவல் பணி புரிவதும், வரி வசூலில் ஈடுபட்டு வந்ததிற்கும் நாயக்கர் காலத்திற்கு முன்பே நிறைய சான்றுகள் இருக்கின்றன. வெங்கடேசன் நாயக்கர்களால் தான் கள்ளர்கள் நல்வாழ்வு பெற்றார்கள் என்று நாயக்கர் பெருமையை உயர்த்தி பிடிக்கவே மறைமுகமாக முயற்சித்திருக்கிறார்.


மதுரை மாநகர் காவல் தான் கள்ளர்களுக்கு கிடைத்த பெரிய பேறு என்று வைத்துக் கொண்டாலும் காவல் பணிக்கு எத்தனை பேர் போயிருப்பார்கள். அதிகம் சென்றால் நூறு பேர் போயிருக்க கூடும். மற்றவர்கள். தாதனூரை தவிர மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த கள்ளர்கள் எதை நம்பி வாழ்ந்தார்கள். மதுரை ஏன் அவர்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை. எது அவர்களை தொடர்ந்து இருண்ட மூலைகளில் குற்றசமூகமாகவே வைத்திருந்தது.


மதுரையின் மேற்கில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்தை தான் வெங்கடேசன் உருமாற்றி புனைஉருவம் தந்திருக்கிறார். இந்த கிராமம் குற்றபரம்பரை சட்டத்தில் பாதிப்பு அடைந்த கிராமம். ஊரின் வடபுறத்தில் சமண மலை ஒன்றும் சமண பிரதிமைகளும் காணப்படுகின்றன. மலையின் உச்சியில் ஆடுஉறிச்சான் பாறை என்று ஒன்று காணப்படுகிறது. அங்கே திருடி கொண்டு போன ஆட்டை உறிப்பார்கள். இந்த ஊர் பற்றிய ரிக்காடுகளே அவரது நாவலின் முக்கிய அம்சம்.


அந்த ஊரின் துயர்படிந்த வரலாற்றையாவது  முழுமையாக சித்திரிக்க முடிந்திருக்கிறதா என்றால் அதிலும் தோல்வியே. தரவுகள், தகவல்கள் கையில் இருந்த போதும் கதையாக்க முடியாத அவரது எழுத்து தோல்வியே பக்கம் பக்கமாக பிரசங்கம் போல நீட்டி செல்கிறது.


திருடுவது, பிடிபடுவது, விசாரணை, தண்டனை, மறுபடியும் அதன் தொடர்ச்சியான வன்கொலை என்று சலிப்பூட்டுகின்றன சம்பவங்கள். அதை தினுசு தினுசாக மாற்றி சொல்லிபார்த்திருக்கிறார்.


தேர்தல் சுற்றுபயணம் போகின்றவர்கள் ஒரு நாளில் எண்பது கிராமங்களை வட்டமடித்து வருவதை போல தான் நாவலும் மாறிமாறி வட்டமடிக்கிறது. தாதனூர் . பிறகு உசிலம்பட்டி , பிறகு கம்பம் .அதற்குள்  பெரியார் அணைகட்டு. இடையிடையில் மதுரை.


பெரியார் அணை கட்டுவதில் ஈடுபட்ட கள்ளர் இன மக்களின் வம்பாடுகளை, உயிரிழப்பை பற்றி நிறைய நானே கேள்விபட்டிருக்கிறேன். அணைக்கட்டு வேலையில் இறந்து போனவர்களின் கல்லறைகளை நேரில் பார்த்திருக்கிறேன். கொட்டும் மழையும் நோயும் விஷக்கொசுக்கடியும் உள்ள சூழலில் அவர்கள் ஒன்றிணைந்து அணையை உருவாக்கிய அந்த பிரம்மாண்ட கனவு நாவலில் காற்றில் பறக்கும் இலவம்பஞ்சு போல போய்விடுகிறது. பென்னி குக்கின் வருகையும் அவரது அணைக்கட்டு முயற்சிகளும் தனித்து விரிவாக எழுதப்பட வேண்டிய நாவலது.


பெரியார்அணை முடிந்தவுடன் நீர்பங்கீடு அடுத்தது சிடி ஆக்ட் எனப்படும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு தாவி செல்கிறார்..


குற்றபரம்பரை சட்டம் கள்ளர்களை ஒடுக்குவதற்காக மட்டும் போடப்பட்ட சட்டமல்ல. மாறாக இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் உப்புக் குறவர்கள்.அவர்கள் ஊர் ஊராக போய் உப்பு விற்றார்கள். வெள்ளை அரசாங்கம் உப்பை தாங்களே வாங்கி விற்க துவங்கிய பிறகு இவர்களை ஒடுக்க நினைத்தது. ஆனால் அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை.


இந்த நேரம் இந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கவே உப்பு குறவர்களை ஒடுக்குவதற்காக அந்த இனமே திருடர்கள் என்று அறிவித்து அவர்களை குற்றவாளிகள் ஆக்கியது. அப்போது தான் இந்த சட்டம் மறுஉயிர்ப்புபெற்றது.


உடனே இந்த சட்டத்தை பயன்படுத்தி தொல்லை தரும் நபர்களை ஒடுக்கிவிடலாம் என்று காவல் உயரதிகாரிகள் சொன்ன ஆலோசனை படியே பல்வேறு மாநிலங்களிலும் உள்ள ஆதிவாசிகள், அடித்தட்டு இனங்களை, குற்றக்குழுக்களை ஒன்றிணைத்து குற்றபரம்பரை சட்டம்  (The Criminal Tribes Act  ) 1871 அமுலுக்கு வந்தது. அதன் திருத்தபட்ட வடிவம் 1911ல் ஏற்றுக் கொள்ளபட்டு நடை முறைபடுத்தபட்டது.இந்த நடைமுறைபடுத்தலுக்கான வழிகாட்டும் குழுவில் ராமானுஜம் அய்யங்கார் என்ற தமிழ் காவல் துறை அதிகாரிசெயல்பட்டிருக்கிறார். வங்காளத்தில் இருந்த நதிக் கொள்ளையர்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்த நாடோடி வழிப்பறி கொள்ளைகளையும் தடுக்க இந்த முயற்சி தீவிரப்படுத்தபட்டது.


இந்தியா முழுவதும் 160 சாதிகளின் மீது இந்த சட்டம் பாய்ந்திருக்கிறது. இதில் சில இன்றும் நடைமுறையில் இருக்கிறது. வங்காள எழுத்தாளர் மகேஸ்வததா தேவி குற்றப்பரம்பரையான ஆதிவாசிகளின் உரிமைக்காக இன்றும் போராடிவருகிறார்.


தமிழ்நாட்டில் இந்த சட்டம் பெரிதும் அதிகார வர்க்கத்தின் நலனுக்ககாவே நடைமுறைபடுத்தபட்டது. அதை எதிர்த்து பெருங்காமநல்லூரில் போலீஸôருடன் துப்பாக்கி சூடு நடந்து பலர் உயிர்பலியானர்கள். எதிர்ப்பு வலுத்தது.  முத்துராமலிங்க தேவருடன் பி. ராமமூர்த்தி  ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் போராடி அந்த சட்டத்தை ரத்து செய்தார்கள் என்பதே வரலாறு.


குற்றபரம்பரை சடடம் பற்றி பேசும் போது அதில் விவசாய நிலம் கொண்டவர்கள். நில வரி கட்டுபவர் விதி விலக்கு பெற்றதும், தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த கள்ளர் இன மக்கள் மீது இந்த சட்டம் தீவிரமாக பாயவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


ஏன் மதுரையின் மேற்கில் உள்ள கள்ளர் கிராமங்கள் அடைந்த பாதிப்பை ஆற்று பாசனம் சார்ந்த கிராமம் அடையவில்லை, கிழக்கே  ராமநாதபுர பகுதி அதிகம் பாதிப்பு கொள்ளவில்லை. ஆகவே இது முழுமையான அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறை சட்டமாகவே அமுல்படுத்தபட்டிருக்கிறது


வெங்கடேசன் மேடை பேச்சை போல குற்றபரம்பரை தரவுகளை  அடுக்கி கட்டியிருக்கிறார். சிடி ஆக்டின் பாதிப்போ. மறுவாழ்வு தருகிறோம் என்ற பெயரில் நடைபெற்ற அதிகார கூத்துகளோ மனதை பாதிப்பதாக அமையவில்லை.


குற்றபரம்பரை சட்டம் ஒழிக்கபடுவதன் முன்பே நாவல் முடிந்து போய்விடுகிறது. எப்படி இதிலிருந்து மக்கள் விடுதலை ஆனார்கள் என்பதில் தான் ஒன்றுபட்ட மக்களின் முயற்சியும் ஆவேசமும் உள்ளது. அதை நாவல் கவனம் கொள்ளவேயில்லை.


அதே நேரம் இவ்வளவு அரும்பாடுபட்டு தங்கள் உரிமைகளை பாதுகாத்துகொண்ட மக்கள் இன்று தனது சகமனிதர்களான தலித் மக்களை தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதும் அவர்கள் அடிப்படை உரிமையை பறித்து வன்கொலை செய்வதும் அதே மதுரை பகுதியில் தான் நடந்துவருகிறது என்ற சமூக உண்மையை மறந்து இந்த நாவலை வாசிக்க முடியவில்லை.


நாவல் சிடி ஆக்ட் பற்றிய நிறைய ஆவணங்களை ஒன்று சேர்த்திருக்கிறது. அவை எல்லாம் கீழக்குயில் குடி ஆவணங்கள் தான். அந்த  ஆவணங்களின் உதவியால் மட்டும் மனித அவமானத்தின் வலியை எழுத்தில் கொண்டுவர இயலவில்லை.


ரயில் வருகை, பள்ளிகளின் வருகை, போலீஸ் ஸ்டேஷன் அமைக்கபட்டது என்று தனிதனி அத்யாயம் போட்டு பிரித்து எழுதிய வெங்கடேசன் கண்டு கொள்ளாமல் விட்டு போன முக்கிய விஷயம் கிறிஸ்துவத்தின் வருகைûயும் அது மதுரை சீமையில் ஏற்படுத்திய உள்ளார்ந்த கொந்தளிப்பும்.
பசுமலையில் உள்ள மதுரை மிஷினரி பற்றி ஏற்படுத்தி பள்ளி ,போதகர்கள் சேவை பற்றி போகிற போக்கில் சொல்லி போக தெரிந்தவருக்கு மதுரை மிஷனரியின்  75 ஆண்டுகால வரலாற்றின் இருண்ட பக்கங்களை புரட்டி  எழுத வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை .


நாயக்க மன்னர்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது கிறிஸ்துவரின் வருகையும் அதை தொடர்ந்த மதமாற்றங்களும். அவர்களை ஏற்றுக் கொள்வதாக அல்லது ஒதுக்கி வைப்பதா என்று தெரியாத குழப்பம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மறவர் நாட்டில் கிறிஸ்துவம் நுழைவதற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருந்தது. பிரசங்கிகள் தாக்கபட்டார்கள். அடித்து காயப்படுத்தபட்டார்கள்.


ஜெசுவிட் பாதிரி ஒருவர் தனது சபைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிரசங்கம் செய்ய போகின்றவர்களின் பல்லை உடைக்கிறார்கள். அதையும் மீறி சென்றால் பிடித்து சிறையில் இடுகிறார்கள். திரும்பவும் அந்த பகுதிக்கு போனால் தலையை துண்டித்துவிடுகிறார்கள் என்று புகார் சொல்கிறார்.


உடனே திருச்சபை வெளிநாட்டிலிருந்து வரும் பாதிரிகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இதற்காக இன்றுள்ள களியக்காவிளை பகுதியில் தமிழ் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறது.
அங்கே பயின்று பிரசங்கத்திற்கு வந்தவர்கள் தங்களை ஐயர் என்று சொல்லிக் கொண்டுவேஷ்டி அணிந்திருந்தார்கள். சைவம் மட்டுமே சாப்பிட்டார்கள். அப்படியும் அவர்களால் தங்கள் மத நம்பிக்கையை மக்களிடம் சுலபமாக கொண்டு போக முடியவில்லை என்று ஜெசுவிட் மிஷனரி ஏடுகள் தெரிவிக்கின்றன.


இன்னொரு பக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ மக்கள் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டனர். போர்த்துகீசியர் அதற்கு நிதி நல்கை தந்தனர் என்பதால் போர்த்துகீசிய வணிகர்கள் அந்த பகுதிகளில் வரிவிலக்கோடு வணிகம் செய்ய அனுமதிக்கட்டனர். அது நிர்வாக குழப்பத்தை ஏற்படுத்தியது.


ஒவ்வொரு நாயக்க மன்னிரின் முன்னாலும் இருந்த முக்கிய கேள்வி கிறிஸ்துவ போதகர்களை என்ன செய்வது. எப்படி நடத்துவது என்பதே. ஆராய்ந்து பார்த்தால் பல அரசியல் மாற்றங்களின் பின்னே இந்த காரணம் ஆழமாக வேரோடியிருக்கிறது.


ராணி மங்கம்மாளை காண்பதற்காக லிஸ்பனில் இருந்து வந்த கிறிஸ்துவ மிஷனரியை சேர்ந்த மூத்த பாதிரி முதன்முறையாக ஒரு உலக உருண்டை ஒன்றை அவளுக்கு பரிசளிக்கிறார். அதுவரை அவள் உலக உருண்டை பற்றி கேள்விபட்டது கூட கிடையாது. வியப்போடு பார்க்கிறாள். அந்த உலக உருண்டையில் தங்க பிடி உள்ளது. ஊர்களின் பெயர்கள் பொறிக்கபட்டிருக்கின்றன. உலகம் இவ்வளவு தானா என்று பிரமிப்பதாக இருக்கிறது.


அத்தோடு இரண்டு லென்சுகளை பரிசாக தருகிறார். ஒன்று தூரத்தில் உள்ளதை அருகில் காட்டுகிறது. மற்றது அருகில் உள்ளதை தூரத்தில் காட்டுகிறது. இது எப்படி என ராணி வியக்கும் போது இது தேவனின் மகிமை என்கிறார் மிஷனரி.


அவள் மிஷனரியை பாராட்டி தன்  எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதித்து தன் சார்பில் பரிசுகள் தருகிறாள். ஆனால் அன்றிரவே மனம்மாறி அவரை கைது செய்து சிறையில் அடைத்து தன் எல்லைக்குள் அவர் நடமாட கூடாது என்று வெளியேற்றினாள் என்றும் மிஷனரி ரிக்காடுகள் கூறுகின்றன.


இப்படி தோண்ட தோண்ட பூதம் கிளம்பும் விஷயங்களை கண்டு கொள்ளாமல் ஏன் விலக்கி போனார் . ஒரே காரணம் இந்த தகவல்கள் எளிதில் கிடைக்க கூடியதில்லை. இதற்காக பாரீஸில் உள்ள ஆவணகாப்பகத்தை நாட வேண்டியதிருக்கும். தேடி அலைவது  பெரிய சவாலாக இருந்திருக்கும். இன்னொன்று அதை கற்பனை செய்து ஆழமாக எழுதுவது மிகப்பெரிய வேலை.


வெங்கடேசன்   நாவலில் வரும் மிஷனரி போதகரின் கடிதங்கள் யாவும் வெற்று தகவல்கள் மட்டுமே.


நாவல் பெருங்காம நல்லூர் போலீஸ் துப்பாக்கி சூட்டோடு நிறைவு பெறுகிறது. நாளிதழ் செய்தி வரை எத்தனையோ தகவல்கள் கிடைப்பதால் அதை எளிதாக நிரப்பமுடிந்திருக்கிறது.


நாவலை படித்து முடித்த பிறகு ஒவ்வொரு அத்தியாயத்திலும் வந்து போகும் பத்து பதினைந்து பெயர்கள், சம்பவங்கள் எதுவும் நினைவில் இருப்பதில்லை. எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். துண்டு துண்டான அத்யாயங்கள்.


கதை என்று இந்த நாவலில் எதுவுமில்லை. தலைமுறை தலைமுறையாக வளரந்து செல்லும் கதை போக்கு கூட இல்லை. சர்வே ரிக்கார்ட் அல்லது சென்சஸ் ரிக்கார்ட் ஒன்றை எடுத்து அதில் வரும் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அத்யாயம் தகவல்களை நிரப்பி எழுதினால் எப்படியிருக்குமோ அந்த சோர்வு தான் மிஞ்சுகிறது.


நாவல் முழுவதும் ஆங்காங்கே சமணர்களை பற்றிய விஷயங்கள் லேசாக தூவப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டு இடங்களில் புத்த பிரதிமை வருகிறது. அது எதற்கு என்று நாவல் முடிந்தபிறகும் புரியவேயில்லை. ஒரு வேளை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் இருக்கிறது சமணமும் பௌத்தமும் போட்டுவிட்டால் மத ஒற்றுமையை பற்றிய எழுதியதாக சொல்லலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?


மிதமிஞ்சிய தகவல் சேகரிப்பும், தான்சேர்த்து வைத்த தகவல்களை மொத்தமாக கொட்டி வாசகனை திணறடிக்க வேண்டும் என்ற முனைப்பும், கற்பனையே இல்லாத வறட்டு விவரணைகளும், கோணங்கியின் மொழியிலிருந்து உருவி எடுக்கபட்ட இருளை பற்றிய, நிசப்தம் பற்றிய, ஊரை பற்றிய, களவு, வேட்டை குறித்த வர்ணனைகளும், முழுமையற்ற கதாபாத்திரங்களும், தொடர்ந்து வெங்கடசனே நாவலில் நுழைந்து செய்யும் பிரசங்கங்களும் நாவலை மிக பலவீனமானதாக ஆக்குகின்றன.


காவல் கோட்டம் மதுரையை பற்றிய வெறும் கட்அவுட் சித்திரம் மட்டுமே


காவல் கோட்டத்தில் பாராட்டும்படியாக எதுவும் இல்லையா என்று கேட்பது புரிகிறது. உண்மையில் பாராட்ட பட வேண்டியவர்கள் காவல்கோட்டம் போன்ற நாவலை கூட விபரம் தெரியாமல் படித்துவிடக்கூடிய வாசகர்கள் தான். ( நான் இதற்கு பலியாக்கபட்டவன். ஆகவே என்னை சேர்க்க முடியாது )


அதிலும் வெளியான நாலு நாளில் அதை படித்து விகடன் விருதுக்கு தேர்வு செய்த அந்த மகானுக்கு இந்த ஆண்டின் சிறந்த வாசகர் விருது தரலாம்.


பின்குறிப்புகள்


என்னிடம் உள்ள பிரதியில் கடைசி அத்யாயம் இரண்டு தடவை அச்சாகி வேறு இருக்கிறது. அதையும் சேர்த்து படித்து வைக்கவேண்டிய இம்சை ஏற்பட்டது.


நாவலை இரண்டு ஆண்டுகாலம் மூன்று பேர் எடிட் செய்தார்கள் என்று கேள்விபட்டேன். எடிட்செய்ததே இப்படியிருக்கிறது என்றால் இதை எடிட் செய்யாமல் படித்திருந்தால், நினைக்கவே பயமாக இருக்கிறது. இது வெங்கடேசனின் முதல் நாவல் என்கிறார்கள். அது இன்னமும் பயத்தை அதிகப்படுத்துகிறது.


***


 


 


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: