கழுமரம்

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன்.இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது. இதை Impalement  என்று சொல்வார்கள். கவுண்ட் விளாட் நிறைய ஆட்களை கழுவேற்றியதால் அவர் விளாட் தி இம்பேளர் (Vlad the Impaler ) என்று அழைக்கபட்டார். அவர் தான் பின்னாளில் டிராகுலாவாக உருமாறினார்.


கழுவில் ஏற்றுதல் என்ற தண்டனையை பற்றிய சிறுவயதில் நிறைய கதை சொல்வார்கள். கழுமரம் பூத்தது என்றும் கழுமரத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது என்றெல்லாம் விந்தையான செய்திகள் கூட அறிந்திருக்கிறேன்
திருடர்கள் பிடிபட்டால் அவர்களை கழுவில் ஏற்றுவார்கள் . அப்படி பிடிபட்டு செத்து திருடனின் உடலை தின்ன கழுகுகள் வந்து சேரும் என்றும் அவன் உடலை யாரும் எடுக்கவே முடியாது என்ற கிராமிய கதைகள் சொல்கின்றன.


கழுகுமலை கோவிலில் சேவலை கழுவில் ஏற்றுவதை சடங்காக செய்வதை கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் எட்டாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றி கொல்லப்பட்டார்கள் என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. ஆவுடையார் கோவில் ஒவியம் ஒன்றில் கழுவேற்றம் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது. கழுமரத்தை பற்றி கி.ராஜநாராயணன் தனது கதையில் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.


இப்படி அங்கும் இங்கும் கழுமரம் பற்றி அறிந்த  ஆசையில் ஒருமுறையாவது கழுமரத்தை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. ஆனால் எங்கேயும் கழுமரம் இருப்பதாக எவரும் சொல்லியதேயில்லை. மதுரை திருமங்கலத்தில் ஒரு கழுமரம் முன்பு இருந்ததை கண்டிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். இன்னொருவர் சிவகரியில் ஒரு கழுமரம் இருந்து முறிந்துபோய்விட்டது என்றார்.


சமீபத்தில் ஈரோடு சென்றிருந்த  போது வரலாற்று அறிஞர் புலவர் இராசுவை தேடிச்சென்று நண்பர்களுடன் சந்தித்தேன். கொங்குமண்டலத்தின் நூற்றாண்டுகால வரலாற்றை துல்லியமாக அறிந்தவர். சிறந்த கல்வெட்டு ஆய்வாளர். அவரிடம் உள்ள சரித்திர சான்றுகளும் ஆவணங்களும் கொங்கு வரலாற்றினை ஆய்வதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. கொங்கு மண்டலம் குறித்த அவரது ஆய்வேடுகள், புத்தகங்கள் சிறப்பானவை. அவரை நேரில் சந்தித்து பேசுவது மிகுந்த சுவாரஸ்யமானது. எண்ணிக்கையற்ற தகவல்கள், வியப்பூட்டும் செய்திகள், உண்மைகள் அறிந்தவர். எளிமையான மனிதர்.


அவரோடு பேசிக் கொண்டிருந்த போது விஜயமங்கலத்தில் உள்ள சமண கோவில் பற்றி விரிவாக எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார். பேச்சின் ஊடாக அவர் தன் சேமிப்பில் இருந்த ஒரு பழைய புகைப்படம் ஒன்றை காட்டி கழுமரம் பாத்திருக்கிறீர்களா என்று கேட்டார். எங்கேயிருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்டேன். இங்கே ஈரோட்டில் தான் உள்ளது. அநேகமாக நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் இங்கே மட்டுமே  கழுமரம் இருக்கிறது என்று சொன்னார்


உடனே காணவேண்டும் போலிருந்தது. இரண்டு மணி நேரம் புலவர் ராசுவோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பி காளியங்கராயன் கால்வாயின் அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாராப்பன் கோவிலில் இருந்த கழுமரத்தை காண்பதற்காக சென்றோம்.


நாங்கள் சென்ற நேரம் அந்த பகுதியில் ஒரு வீட்டில் வயதானவர் இறந்து போயிருந்ததால் கோவிலை மூடியிருந்தார்கள். இவ்வளவு தூரம் வந்து கழுமரத்தை பார்க்காமல் போகக் கூடாது என்று வெயிலில் நின்றபடியே இருந்தோம். நண்பர் பாபுவும் கிருஷ்ணனும் யாரிடமோ போனில் பேசினார்கள். அரை மணி நேரத்தில் எங்கிருந்தோ சாவியுடன் ஒருவர் வந்து கோவிலை திறந்து காட்டினார்.


ஒரு பீடத்தில் இருந்த அந்த கழுமரம் பனைமரத்தால் ஆனது. ஆறடிக்கும் குறைவான உயரம். பனஞ்செதில்கள் தேய்ந்து போயிருக்கின்றன. சிலுவை போன்ற வடிவில் குறுக்கு சட்டம் போடப்பட்ட அந்த கழுமரத்தில் இரண்டு இரும்பு சங்கிலிகள் இணைக்கபட்டிருந்தன. கழுமரத்தை இப்போது காத்தவராயன் என்று வணங்குகிறார்கள்.


நாங்கள் உச்சி வெயிலில் கழுமரத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்ததை கண்டு கோவில் நிர்வாகி இது உங்க குலசாமியா என்று கேட்டார். இல்லை இதை பார்க்க வந்திருக்கிறோம் என்று சொல்லி அதன் அருகில் நெருங்கி சென்று வியப்போடு பார்த்தபடி இருந்தோம்


கைகளால் கழுமரத்தை தொட்டு பார்த்தேன். பனைமரம் செதுக்கபட்டு அப்படியாக்கபட்டிருப்பது புரிந்தது. எந்த மனிதன் அதில் கழுவேற்றப்பட்டான். இதன் முன்பு எங்கேயிருந்தது. எத்தனை ஆண்டுகளாக இந்த மரம் இருக்கிறது என்று ஏதேதோ யோசனைகள் பீறிட்டபடியே இருந்தன


சந்தனம் குங்குமம் வைக்கபட்ட போது அந்த கழுமரத்தில் படிந்த கண்ணுக்கு தெரியாத குருதிக்கறையை உணர முடிந்தது.


தண்டனைகளுக்கும் குற்றங்களுக்கும் உள்ள தொடர்பை கவனிக்கும் போது உடலை ஒடுக்குவது அல்லது உடலை வதைப்பது தான் தண்டனைகளின் ஆதாரம். குற்றங்களுக்கும் தண்டனைக்கும் நேரடியான தொடர்பு எதுவுமில்லை. பலநேரம் தண்டனை குற்றத்தை விடவும் கொடூரமானது. மனித உடல் எப்படி போகத்திற்கான கருவியாக இருக்கிறதோ அது போலவே வதைக்கான நிகழ்வெளியாகவும் உள்ளது. எந்த இடத்தில் எப்படி அடித்தால் மனிதன் உச்சபட்ச வலி கொள்வான் என்பதை தண்டனை முறைகள் அறிந்திருக்கின்றன.


கொலைக்கருவிகளின் வரலாற்றை வாசிக்கையில் மனிதமனதின் புரிந்து கொள்ள முடியாத குருரங்களையும் விசித்திரங்களையும் காண முடிகிறது.


புலவர் ராசு 800 வருடங்களுக்கு முன்பாக உள்ள கழுமரம் அது என்றார். கொலைக்கருவிகள் கடவுளாவது உலகெங்கும் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வு. கழுமரமும் அப்படிதான் கடவுளாகியிருக்கிறது.


நாங்கள் பார்த்து கொண்டிருந்த போது ஒருவர் அந்த கழுமரத்தை வணங்கியபடியே அடுத்த சாமியை தேடிச் சென்றார்.


ஆயுதங்களை சொல்லி என்ன செய்வது தண்டனையை முடிவு செய்வதும் செயல்படுத்துவதும் மனிதன் தானே.


***

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: