பதில் இல்லாத பரிட்சை.


சென்னையில் எந்தச் சாலையை எப்போது தோண்டுவார்கள். என்ன வேலை நடக்கிறது எப்போது அது முடியும். எந்த சாலை எப்போது திருப்பிவிடப்படும் என்று எவராலும் சொல்லிவிட முடியாது. எந்த முன்னறிவிப்பும் கிடையாது.


தொலைக்காட்சி, பண்பலை, இணையம் என்று இத்தனை ஊடகங்கள் இருந்த போதும் காவல்துறையும் மாநகராட்சியும் அதில் எதையும் பயன்படுத்தி முன்கூட்டி தெரிவிப்பதுமில்லை. குறிப்பாக தேர்வு காலங்களில் சென்னை மாநகரம் படும்பாடுகள் எழுதி தீராத வலி நிரம்பியது.மைக்கேல் டக்ளஸ் நடித்த Falling Down  படத்தில் வீடு திரும்பும் மைக்கேல் டக்ளசை பாதையில் வேலை நடக்கிறது என்று சுற்றி போகும்படியாக சொல்வார்  சீரமைப்பு  பணியாள். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போது சரியாக தானே இருந்தது. அதற்குள் என்ன ஆனது என்று கேட்பார்.


உடனே அந்த ஆள் சாலையில் வேலை நடைபெறுகிறது என்று போர்டு வைத்துவிட்டால் கேள்வி கேட்க கூடாது . வேறு வழியில் வாயை மூடிக் கொண்டு போய் கொண்டிருக்க வேண்டும் என்று கோபபடுவான்.


பணி எப்போது முடியும் என்று மைக்கேல் டக்ளஸ் கேட்பார். அந்த ஆள் நாங்கள் நினைக்கும் போது என்று சாவகாசமாக பதில் தருவான்.


 ஏன் இப்படி பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் என்று கேட்டதும், நீ நினைப்பது போல சாலை வெறும் பயணத்திற்கு மட்டும் உரியதில்லை. அதன்பின்னால் நிறைய பணம் கொட்டியிருக்கிறது. தோண்டுவது, நிரப்புவது ,மூடுவது, திரும்பவும் சரி செய்வது  என அத்தனையும் பணம் சம்பந்தட்ட விஷயம். பேசாமல் போ என்று எச்சரிப்பார். அது தான் உலகெங்குமான நிஜம்.


இரண்டுநாட்களுக்கு முன்பாக  வடபழனியிலிருந்து சாலிகிராமம் வரும் சாலையில் போக்குவரத்து நெருக்கடி. சாலை ஏதோ பணிக்காக தோண்டி போடப்பட்டு பல நாட்களாக அப்படியே கிடக்கிறது. காலை நேர நெருக்கடியில் ஒரு பள்ளி மாணவி பிளஸ் டு தேர்விற்காக செல்கிறவள், ஒரு ஆட்டோ முந்தி செல்ல முயற்சிக்க  அவள் அவசரத்தில் தடுமாறி விழுந்துவிட்டாள். சைக்கிள் வீல் திரும்பிக் கொண்டது.  அவள் முன்பாக ஒரு ஆட்டோ, இரண்டு கார்கள் சப்தமிட்டபடியே நிற்கின்றன.கிழே விழுந்த மாணவி தன் வயதை மறந்து தனக்கு அன்று பரிட்சை என்பதை அழுதபடியே சொல்லிக் கொண்டிருந்தாள்.  அவளது கைக்கடிகாரம் உடைந்து போயிருக்கிறது. கையில் தோல் உராய்ந்து ரத்தம் கசிகிறது. அதை நின்று சரி செய்ய அவளால் முடியவில்லை. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த மாணவி வளைந்த சைக்கிளை தள்ளிக் கொண்டு அவசரமாக செல்ல துவங்கினாள்.


கிழே விழந்து அடிபட்டதை விடவும் பரிட்சையின் போது இப்படியாகிவிட்டதே என்ற வலி தான் அவளுக்கு அதிகமாக இருந்திருக்கும். நிச்சயம் தனது காயத்திற்கு அவள் மருந்திட்டிருக்க மாட்டாள். அநேகமாக காலையில் அவள் சாப்பிட்டு கூட வந்திருக்க மாட்டாள். அடிபட்ட நடுக்கம் எளிதில் அவளுக்குள் அடங்கியிருக்காது.  பரிட்சை முடிந்து வீடு திரும்பும் வரை அவளுக்கு வலி குறையாது.


சரி செய்யப்படாத சாலைகள், பரிட்சை ஏற்படுத்தியுள்ள பயம், முறையற்ற வாகனப்போக்குவரத்து என்று எதைக் காரணமாக சொன்னாலும் இதெல்லாம் சகஜம் தானே என்ற மனநிலையே பெரும்பான்மையினருக்கு இருக்கிறது.


கடந்த காலங்களை விட சமீபமாக பள்ளி  இறுதி தேர்வின் போது மாணவர்கள் அடையும் மனநெருக்கடி வெகு அதிகமாக இருக்கிறது.  முந்தைய தலைமுறையினரை விட அதிகமாகவும் திறமையாகவும் படிக்கிறார்கள். மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.


ஆனாலும் பரிட்சையின் மதிப்பெண்கள் மட்டுமே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது என்ற பதட்டம் அவர்களை வதைக்கிறது. எனது நண்பர் ஒருவரின் பையன் இரவெல்லாம் படித்து பரிட்சைக்கு கிளம்புகிற நேரத்தில் வாய்கட்டிக் கொண்டு தாடையை பிரிக்க முடியாமல் ஆனது. மருத்துவ சிகிட்சைக்கு கொண்டு போனார்கள்.


ஒன்றிரண்டு பரிட்சைசுமை குறித்த கலந்துரையாடல் நிகழ்வுகளை தவிர வேறு எதையும் நான் ஊடகங்களில் காணவேயில்லை. ஒரு நாள் பரிட்சைக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பல்லாயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட செய்தியை டிவியில் பார்த்தேன். இதை தவிர இத்தனை லட்சம் மாணவர்கள்  பயம்/ பதட்டம், கவலை கொள்கின்ற ஒரு விஷயம் சார்ந்து பொது ஊடகங்களில் எந்த மாற்றுவழிகளும் விவாதிக்கபடவேயில்லை.


இதை தவிர்க்க இயலாது என்று பெற்றோர்கள் ஒத்துக் கொள்கிறார்களே அன்றி இதற்கான முறையான சில மாற்றுவழிகளை ஏன் மேற்கொள்ள மறந்து போகிறோம்.


உண்மையில் அப்படி ஏதாவது வழியிருக்கிறதா என்னவென்று கூட நமக்கு தெரியவில்லை என்பதே நிஜம்.


தென்கொரியாவில் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வினை அரசாங்கம் நடத்துகிறது. அது தான் அங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயக்கும் தேர்வு. இந்த தேர்வு நடக்கும் நாட்களில் அரசாங்கம் எதை எல்லாம் செய்கிறது என்ற பட்டியலை பாருங்கள் 1. பரிட்சை நாள் அன்று காலை  அலுவலகம் செல்கின்றவர்கள், வணிகர்கள்  மற்றும் பிற தொழில் செய்கின்றவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தங்கள் பணிக்கு செல்லும்படியாக அரசு கேட்டுக் கொள்கிறது. அதற்கான அனுமதியை  எல்லா நிறுவனங்களும் அளித்திருக்கின்றன.  முக்கிய காரணம் பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து ரயில் சாலை போன்ற இடங்களில் நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.

 2. பரிட்சை நாள் அன்று கூடுதலான ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கபடுகின்றன.

 3. பரிட்சை நடைபெறும் வளாகத்தில் யாரும் செண்ட் அடித்துக் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கபடுகிறது. காரணம் அது கவன சிதைவை உண்டுபண்ணக்கூடும்.

 4.  பரிட்சைக்கு தயார் ஆகும் மாணவர்களின் பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்தவதற்கு வசதியாக மாலை முன்னதாகவே அவர்கள் வேலையிலிருந்து திரும்ப அனுமதி தரப்படுகிறது

 5.  பரிட்சைக்கு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில்  பெற்றோர்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொண்டு இரவில் தாமதமாக வீடு திரும்ப கூடாது என்பதற்காக இரவு பத்து மணிக்கு எல்லா விழாக்களும் நிறைவு செய்யப்படுகின்றன.

 6.  பரிட்சை நாளில் ஆங்கில தேர்வு எழுதும் மாணவர்கள் உச்சரிப்பு கேட்டு பதில் எழுத நேரிடும் என்பதால் அதற்கு இடையூறு செய்ய கூடாது என்று பரிட்சை நடக்கும் நேரத்தில் விமான சேவைகள்  ரத்து செய்யப்படுகின்றன. விமானம் பறக்கும் ஒசை மாணவர்களின் கவனத்தை சிதற அடிக்கும் என்பதால் விமான சேவை நேரம் அன்று மட்டும் மாற்றப்படுகிறது. தரையிறங்க உள்ள விமானங்கள் கூட தாமதமாகவே அனுமதிக்கபடுகின்றன

 7.  ரேடியோ மற்றும் தொலைக்காட்சி பரிட்சைக்கு செல்லும் மாணவர்களை பொதுமக்கள் வாழ்த்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன

 8.  பரிட்சை நடைபெறும் நேரத்தில் இந்த ஆண்டு பரிட்சை எப்படியிருக்கிறது. இது சென்ற ஆண்டுகளில் இருந்து எந்த அளவு மாறுபட்டிருக்கிறது. எப்படி மாணவர்கள் இதை எதிர் கொள்கிறார்கள் என்பதை முக்கிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது.

 9.  அன்று மின்சார ரயில்கள் கூட அவசியமில்லாமல் ஒலிப்பானை உபயோகபடுத்த கூடாது.

 10.   தேர்வு நடைபெறும் வளாகங்களின் அருகாமையில் எவரும் எவ்விதமான ஒலிப்பானையும் ஒரு போதும் பயன்படுத்த கூடாது

 11.  ஸ்டாக் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வணிக மையங்கள் கூட  அன்று ஒரு மணி நேரம் தாமதமாகவே இயங்க துவங்குகின்றன

 12.  நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கபடுகிறது. அதனால் மற்ற மாணவர்கள் வந்து போகும் இடையூறு தவிர்க்கபடுகிறது.

 13.  தேர்வு நடைபெற்ற நாளின் மாலையில் அன்று கேட்கபட்பட்ட கேள்விகளும் அதற்கான சரியான பதிலையும் நாளிதழ்கள் பிரசுரம் செய்கின்றன. இதனால் தான் எவ்வாறு தேர்வு எழுதினோம் என்பதை மாணவன் உடனே தெரிந்து கொள்ள முடிகிறது.

 14.  தேர்விற்கு ஒருவாரம் முன்னதாகவே மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் குறிப்புகள் மற்றும் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சீரான உணவு முறை பற்றிய தகவல்களை எல்லா ஊடகங்களும் வாறி வழங்குகின்றன. வீடு தேடி வந்து உளவியல் நல ஆலோசகர்கள் நம்பிக்கை பயிற்களும் தருகிறார்கள்

 15.  இது போலவே பௌத்த ஆலயங்களும் கிறிஸ்துவ தேவலாயங்களும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் நினைவாற்றலை பயிற்சி தருகின்றன.

 16.  கொரிய மின்சார துறை இதற்காக தனது 4000 பணியாளர்களை சிறப்பு பணி என கருதி மின்சார தடையே இல்லாமல் பரிட்சை நடைபெற உதவி செய்கிறது

 17.  பரிட்சைக்கு மாணவர்கள் தயார் ஆகும் நாட்களில் வீட்டில் பெற்றோர்கள் ஹெட்போன் போட்டுக் கொண்டு மட்டுமே தொலைக்காட்சி பார்க்கும்படியாக தொலைக்காட்சிகளே வற்புறுத்துகின்றன.

 18.  தாமதமாகவோ அல்லது நுழைவு தேர்விற்கான அடையாள அட்டையை மறந்துவிட்டோ வரும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு என்றே தனியான போலீஸ்படை அமைக்கபட்டு உதவி செய்கிறார்கள்.

 19.  கேள்விதாளை 400 ஆசிரியர்கள் கொண்ட குழு நான்கு நிலைகளில் உருவாக்கி முடிவு செய்கிறது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் ஒரு போதும் இடம் பெறுவதில்லை.

 20.   தோல்வியுற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளையின் தோல்விக்கு ஒரு போதும் ஆசிரியரை குறை சொல்வதில்லை. மாறாக கூடுதல் கவனம் தந்து எப்ப படிக்க வைப்பது என்பதில் தான் அக்கறை காட்டுகிறார்கள்.

கொரியா மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும்  நுழைவு தேர்விற்கு அரசும் மக்களும்  தரும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பகுதி கூட நமது சூழலில் இல்லை.


குறைந்த பட்சம் பரிட்சை நடக்கும் நாட்களில் சாலைகளை தோண்டி, வழிகளை மாற்றி அமைத்து சுத்த விடமால் இருக்கலாம். ஒலிப்பெருக்கிகளை தடை செய்து விடலாம். சிறப்பு பேருந்துகளை இயக்கலாம்.


ஆசிரியர்களில் பலர் பள்ளிவளாகத்தில் செல்போன்களை உபயோகிக்கிறார்கள். அதை தற்காலிமாக நிறுத்தி வைக்க சொல்லலாம்.


பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு நாளும் கேள்விதாளையும் அதற்கான பதிலையும் நாளிதழ்களோ. இணையத்திலோ வெளியிடலாம்


மாணவர்களின் மனநெருக்கடியை குறைப்பதற்கான ஆலோசனை, பள்ளிகளே உரிய உளநல ஆலோசகர்களின் உதவியோடு நடத்தலாம்


இத்தனைக்கு அப்பால் எப்போது தேர்வு முடிவு வெளியாகும் என்ற தேதியை அரசு தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாளிலே வெளியிடலாம்.


ஒரே படிப்பிற்கு ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு கட்டணம், எவ்வளவு குறைவான மதிப்பெண் வாங்கினாலும் பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட எதையும் பணத்தால் விலைக்கு வாங்கி படிக்க முடியும் என்ற வணிக சூழலும், கலை, அறிவியல் போன்றவை படிப்பவர்கள் கையாலாகதவர்கள் என்ற பொதுபுத்தியின் கேலியும், நமது கல்வி சூழலாக இருக்கின்றன.


இதில் மாணவர்கள் பரிட்சை எழுதும் போது மௌனமான சூழல் வேண்டும் என்று மட்டும் சுட்டிக்காட்டுவது குற்றவுணர்ச்சியை தான் உருவாக்குகிறது. அதையாவது சுட்டிகாட்டலாமே என்று தான் சமாதானம் கொள்ள வேண்டியிருக்கிறது.


***


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: