அரவிந்தனின் இரண்டு நாவல்கள்

பயணம், பொன்னகரம் என்ற அரவிந்தனின் இரண்டுநாவல்களைச் சமீபத்தில் வாசித்தேன்.

பத்திரிக்கையாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இலக்கியக் கட்டுரைகள் எழுதுபவராகவுமே அவரை அதிகம் அறிந்திருக்கிறேன். அவர் இந்தியாடுடே மற்றும் காலச்சுவடு இதழ்களில் பணியாற்றிய நாட்களில் சிலதடவைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆனால் அவரது புனைவெழுத்தை வாசித்ததில்லை.

இந்த இரண்டுநாவல்களில் முதலாவதாகப் பொன்னகரத்தை வாசிக்கத் துவங்கினேன். முக்கியக் காரணம் அதன் தலைப்பு. புதுமைபித்தனின் புகழ்பெற்ற சிறுகதை ஒன்றின் தலைப்பாகும் .இந்நாவல் புதுமைப்பித்தன் கதையோடு எவ்விதமாகவும் தொடர்பற்றது.

சுந்தர ராமசாமியின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் அரவிந்தன், ஆனால் அவரது எழுத்துமுறை அதிகம் அசோகமித்ரனின் சாயலையே கொண்டிருக்கிறது. அசோகமித்ரனிடம் வெளிப்படும் எளிமையும், மெல்லிய கேலியும், அழுத்தமான உணர்ச்சிவெளிப்பாடுகளும் அரவிந்தனின் எழுத்திலும் காணமுடிகிறது. ஆனால் அசோகமித்ரனின் குவிமையம் வேறு, அரவிந்தன் புனைவில் உருவாக்கும் உலகம் வேறு.

பார்வதி சினிமாவில் பார்த்திருந்த சென்னைக்கும் நேரில் காணும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லை. அவள் மனதில் துக்கம் உருக்கொண்டது (பக்15)

குரு அசாத்தியமான வேகத்தில் சைக்கிள் ஒட்டினான். மரம் செடி கொடிகளினூடே ஒரு புலி பாய்ந்து செல்வது போல  மக்கள் கூட்டத்திடையே விரைந்தான் ( பக்கம்85)

இந்த வரிகள் அப்படியே அசோகமித்ரனை நினைவுபடுத்துகின்றன. இதுபோல நாவலில் பல நிகழ்வுகள், வரிகள் அசோகமித்ரனை அழுத்தமாக ஞாபகப்படுத்துகின்றன.

பொன்னகரம் நாவலை வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களில் இதை முன்னதாக வாசித்திருக்கிறேன் என்ற எண்ணம் உருவானது. எப்படி எனப்புரியாமல் யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் பால.கைலாசம் புதுயுகம் என்ற தொலைக்காட்சிக்காகப் புதிய தொடர் ஒன்றை அரவிந்தன் எழுதுவதாகச் சொல்லி அதன் கதையை எனக்கு விரிவாகச் சொல்லியிருந்தது நினைவிற்கு வந்தது. அதன்பிறகே முன்னுரையை வாசித்துப் பார்த்தேன். அவரும் அந்தத் தொலைக்காட்சிக்காக எழுதப்பட்ட வடிவிலிருந்தே நாவல் உருவானதை குறிப்பிட்டிருந்தார். ( பொதுவாக நாவல்களின் முன்னுரைகளை நான் வாசிப்பதில்லை. அரிதாகச் சில நேரம் நாவலை வாசித்தபிறகே அதைப் படிப்பேன் )

நாவல் சென்னையின் அடித்தட்டு வாழ்வை, அதன் நெருக்கடியான வாழ்க்கையை முன் வைக்கிறது. பார்டர் தோட்டம், பகவதி புரம் என்ற இரண்டு உலகங்கள். அதற்குள் சாராயம் விற்கும் மனிதர்கள். அவர்களுக்கு இடையே ஏற்படும் போட்டி. மோதல்கள் எனக் குற்றவுலகின் நிழல்மனிதர்கள் நாவலில் ஊடாடுகிறார்கள். கபடிவிளையாட்டில் தீவிர ஈடுபாடு கொண்ட ஜகா, சென்னையில் நடைபெறும் பல்வேறு கபடிப்போட்டிகள், அதன் இயல்புகள், வேடிக்கை பார்க்கும் மனிதர்களின் உற்சாக ஈடுபாடு ஆகியவை நுட்பமாக விவரிக்கபடுகின்றன ,

பார்வதியின் பார்வையில் தொடங்கும் நாவல் ஜகா, குரு, வரதன், ராசு, பெருமாள், பாபு, செண்பகம் லட்சுமியம்மா என மாறுபட்ட கதாபாத்திரங்களுடன் விரிகிறது. சென்னைத்தமிழும் வழக்குகளும் இயல்பாக நாவலில் இடம்பெற்றுள்ளன. மாஞ்சாவிடுவதை பற்றியும் கபடி விளையாட்டு பற்றியும் இவ்வளவு விரிவாக இதன்முன்பு யாரும் எழுதியதில்லை. ஜகா வழியாக அரவிந்தன் கபடியின் நுட்பங்களைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.  அதற்காக தனிப் பாராட்டுகள்.

சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சியின் பின்னுள்ளது பார்டர்தோட்டம். பகவதிபுரம் என்பது கற்பனை பெயர் ( அது சற்றே அந்நியமாகத் தெரிகிறது)

பார்வதி என்ற இளம்பெண்ணின் வழியே அந்த உலகம் அறிமுகமாகிறது. அவள் சென்னை வாழ்க்கையை விசித்திரமானதாக உணர்கிறாள். மெல்ல அதற்குள் தன்னைக் கரைத்துக் கொள்ள முயற்சிக்கிறாள். ஒருவகையில் அவள் இந்த இருண்ட உலகின் இயல்பைப் புரிந்து கொள்வதுடன் நாவல் முடிந்துவிடுகிறது. இன்னமும் அதிகம் எழுதப்பட்டிருக்கலாம் என்பது போலவே நாவலை படிக்கும் போது தோன்றுகிறது.

அரவிந்தனின் பொன்னகரத்தை விடவும் பயணமே அதிகம் எனக்குப் பிடித்திருந்தது. காரணம் பயணம் ஒருவனின் அகத்தேடலை முன்வைக்கிறது. அதிலும் குறிப்பாக யோகா, தியானம் என  நாட்டம் கொண்டு அதற்காக வீட்டைத் துறந்து சென்ற ஒருவனின் தேடலை விவரிக்கிறது

கல்லூரி நாட்களில் விவேகானந்தர் மீது ஈடுபாடு கொண்டு யோகம், தியானம், காவி உடை எனத் தீவிரமாக இருந்த சில நண்பர்களை நான் அறிவேன்.

அவர்களில் ஒருவன் வீட்டைத் துறந்து வெளியேறி கல்கத்தாவிற்குப் போய் ராமகிருஷ்ண இயக்கத்தில் சில காலம் தொண்டு செய்து பின்பு அங்கிருந்து வெளியேறி இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வெறுமையான மனநிலையில் ஊர்வந்து சேர்ந்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணமாகி அமெரிக்கா சென்றவன் இன்று வெற்றிகரமான வணிகநிறுவனம் ஒன்றை நடத்திவருகிறான். அந்த நிகழ்வுகளை நேரிடையாக அறிந்தவன் என்பது இந்நாவலை நெருக்கமாக உணரச்செய்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

நாவலின் துவக்கத்தில், இனி இந்த வீடு என்னுடையதில்லை என நினைத்து ராமநாதன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தனக்கான மனிதர்கள் வீட்டிற்குள் இல்லை. மற்றவர்களைப் போல தானும் பணம் சம்பாதித்துத் திருமணம் செய்து கொண்டு வேடிக்கை மனிதர்களில் ஒருவனாக வாழவிரும்பவில்லை. தனக்கான தனித்துவத்தை உலகிற்கு நிரூபணம் செய்ய வேண்டும், இந்த உலகமே தனது வீடு. இதை மேம்படுத்துவதே தனது லட்சியம் என நினைக்கிறான் ராமநாதன்.

இந்த எண்ணம் இளைஞர் பலருக்கும் ஏற்படுவது இயற்கையே. ஆனால் மிகக்குறைவான சிலரே வீட்டை விட்டு வெளியேறி தான் விரும்பிய பாதையில் பயணம் செய்து பார்த்திருக்கிறார்கள்.

ராமநாதன் சிறுவயதிலிருந்தே விவேகானந்தரின் புத்தகங்ளை வாசித்து அவர் மீது ஈடுபாடு கொண்டிருக்கிறான். அவரைப் போலவே லட்சியகனவுடன் வாழ வேண்டும் என்ற பிம்பத்தை மனதில் உருவாக்கி கொள்கிறான். விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் கிடைத்தது போலத் தனக்கொரு குரு கிடைப்பார். அவர் மூலம் தான் நிறைய விஷயங்களைச் செய்ய முடியும் என நம்புகிறான்

ஸ்வாமிஜி சிவானந்த சங்கர யோகியினால் நடத்தப்பட்ட சாந்தி யோகா முகாமில் கலந்துகொண்டபோது குருவை கண்டடைந்த சந்தோஷம் ராமநாதனுக்கு ஏற்படுகிறது. அவரது ஆசிரமத்தில் சேர்ந்து யோகா கற்பிக்கத் துவங்குகிறான்.

ஆசிரமம் என்பதும் ஒரு நிறுவனமே. அங்கே கட்டுபெட்டியான விஷயங்கள்., ஏற்றுக் கொள்ளமுடியாத நடைமுறைகள் உள்ளன. கேள்வி கேட்காத பணிவு என்பது அவனுக்குப் போலித்தனமாகப் படுகிறது.

மாற்றுசிந்தனைகள் கொண்ட ராமநாதன் தான் விரும்புகிற மாற்றங்களைச் செய்து பார்க்க முனையும் போது அதிருப்திக்கும் கண்டிப்பிற்கும் உள்ளாகிறான்.இதனால் மனச்சோர்வு கொள்கிறான். ஆசிரமத்தின் எல்லை என்பது யோகா கற்பிப்பது, கைவினை பொருட்கள் செய்து விற்பது, கல்விப் பணிகளுக்கு உதவி செய்வது மட்டும் தானா. சமூகமாற்றத்தினை இதன் வழியே சாத்தியப்படுத்த முடியாதா என ஏங்குகிறான்

இதற்கிடையில் சுசீந்திரத்தில் கணவனை இழந்த காயத்ரியைக் கண்டு அவள் அழகில் மயங்கி தன்னை மறந்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறான். காமத்தை அடக்கி கொள்வது எளிதில்லை, காமம் என்பது இயல்பான உணர்ச்சி. பாலுறவு தவறானதில்லை எனத் தனக்குதானே முடிவு செய்து கொள்கிறான், அதன்பிறகு காயத்ரியைத் தேடிப் பழகி ஒரு நாள் அவளுடன் உடலுறவு கொள்கிறான். அப்போது அவன் மனதில் எந்தக் குற்றவுணர்வில்லை. நாம் இருவரும் இணைந்து சேவை செய்யலாம் என்கிறாள் காயத்ரி. பின்பு எப்போதும் போலவே ஆசிரமப்பணிகளுக்குத் திரும்புகிறான் ராமநாதன்.

நாவல் சில முக்கிய கேள்விகளை எழுப்புகிறது ஒன்று குரு ஆசிரமம் போன்றவற்றின் வழியே ஒரு இளைஞன் தான் விரும்பும் கனவை அடைய முடியுமா, இரண்டாவது துறவு என்பது தன்னை அடக்கிக் கொண்டு ஒடுங்கி வாழ்வதா, இல்லை சமூகமாற்றத்திற்கு  நேரடியாகத் தொண்டு செய்வதா, மூன்றாவது மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகள். கலவரங்களை எப்படி புரிந்து கொள்வது. நான்காவது யோகா, தியானம் போன்றவை வெறும் வணிகதந்திரங்கள் தானா. இல்லை இவை வாழ்வியல் மாற்றத்திற்கான நெறிகளா, அவற்றை மதம் சார்ந்த விஷயமாக ஏன் முன்வைக்கிறோம்.

இந்த கேள்விகளுடன் தனிநபர் சார்ந்த உரிமைகள், பங்களிப்புகள். தனித்துவம். கும்பல் மனப்பான்மை, பொதுஒழுக்கம் குறித்த நியதிகள் துணைக்கேள்விகளாக விவாதிக்கபடுகின்றன. ஸ்வாமிஜிக்கும் ராமநாதனுக்கும் நடைபெறும் உரையாடல்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்வாமிஜியின் நிதானமும் ஆழ்ந்த வாசிப்பும் அவரது உரையாடலில் வெளிப்படுவது சிறப்பாக உள்ளது.

ராமநாதனின் எதிர்பிம்பம் பிரபு. அவன் ஆசிரமவாழ்வை அப்படியே ஏற்றுக் கொண்டு குருவிற்கு ஏற்ற சீடனாகப் பொருந்திப்போகிறான். அவனைப் போன்றவர்களுக்குத் துறவு என்பது ஒரு வேலையே, அதில் அவன் சிறந்த ஊழியனாகப் பாராட்டு பெறுவதை லட்சியமாகக் கொண்டுவிடுகிறான்.

ராமநாதன் அயோத்திக்கு செல்வதும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை நேரில் பார்ப்பதும் நாவலில் முக்கியமான தருணம். இந்த நிகழ்வு அவனுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நாவல் ராமநாதனின் பார்வையிலே பெரிதும் எழுதப்பட்டிருக்கிறது. அதுவே இதன் பலமும் பலவீனமும். நிறையக் கதாபாத்திரங்கள் ராமநாதனின் கணிப்பில் பலவீனமானவர்களாகத் தெரிவதற்கு இதுவே முக்கியக் காரணம். ஆசிரமம் குறித்த அதிகமான விவரிப்புகள். கதையை வளர்ப்பதற்கான மேலோட்டமான நிகழ்வுகள் குறைக்கபட்டிருந்தால் நாவல் இன்னமும் தீவிரமாக உருவாகியிருக்ககூடும்.

போகமும் போதையும் மிதமிஞ்சிய சுயநலமும் மேலோங்கியுள்ள இன்றைய நவீன வாழ்க்கையில் அறத்தையும் சமூக அக்கறையும் ஞானத்தேடலையும் கொண்ட ஒரு இளைஞன் எது போன்ற அவஸ்தைகளை, நெருக்கடிகளைச் சந்திப்பான் என்பதற்கு பயணம் நாவல் ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் ராமநாதன் சென்று சேரும் முடிவு ஏற்புடையதாகயில்லை. அது தீர்வாகவும் இல்லை. மாறாகத் தந்திரமாகவே தோன்றுகிறது.

ஹெர்மன்ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா இப்படி ஞானத்தைத் தேடி வீட்டை விட்டு வெளியேறிய இளைஞன். அவன் புத்தனை சந்தித்து அருளாசி பெறுகிறான். புத்தனிடம் சீடனாகவில்லை. புத்தனைக் கடந்து போகிறான். வணிகனிடம் பணியாற்றுகிறான், கமலா என்ற தாசியைச் சந்திக்கிறான். முடிவில் தனது ஞானத்தை அவனே  கண்டறிந்து கொள்கிறான். ஹெஸ்ஸேயின் நாயகர்கள் பலரும் ஞானத்திற்கான தேடல் கொண்டவர்களே. ராஜாராவ் என்ற இந்திய ஆங்கில எழுத்தாளர் இது போன்ற தேடல் கொண்ட கதாபாத்திரங்களை எழுதியிருக்கிறார். அவரது பாம்பும் கயிறும் மிக முக்கியமான நாவல்

தமிழில் இது போல ஆசிரம வாழ்க்கைய முதன்மையாகக் கொண்ட நாவல் எதுவும் எழுதப்பட்டதில்லை. யோகா. தியானம். ஆன்மீக வாழ்க்கை என்பது மதம் சார்ந்த விஷயமாகவே எப்போதும் கருதப்படுகிறது. ஆனால் மதம் சாராமலும் இவற்றை வாழ்க்கை முறையாக நாம் கொள்ளமுடியும், உடலை உறுதிப்படுத்துவதன் நோக்கம் அதிகம் இன்பத்தை அனுபவிப்பதில்லை. மாறாக இந்த உடலையும் மனதையும் கொண்டு நாம் ஆற்றவேண்டிய சமூகக் கடமைகள் அதிகமிருக்கின்றன

இன்று கார்ப்பரேட் சாமியார்கள் பெருகிவிட்டார்கள். அவர்களை வாழும் தெய்வமாகக் கருதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உண்மையில் என்ன தேவையிருக்கிறது. எதை நாடி ஆன்மீகத்திற்குள் வருகிறார்கள் எனப்புரியவேயில்லை. இவர்களுக்கு ஆன்மீகமும் ஒருவகைப் பொழுதுபோக்கு தானா.

எனக்கு ஆசிரமம் என்றவுடன் எப்போதும் காந்தி தான் நினைவிற்கு வருவார்.. அந்த எளிமையும் சுயகட்டுபாடுகளும், கூட்டு உழைப்பும் இன்றில்லை, இன்று கார்ப்பரேட் சாமியார்களின் ஆசிரமம் என்பது ஹைடெக் ஸ்டார் ஹோட்டல் போன்றிருக்கின்றன. இந்தச் சூழலில் இந்நாவல் எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை.

தானும் ஒரு விவேகானந்தராக வேண்டும் என ஆசைப்பட்ட ராமநாதன் தனது பயணத்தில் என்னவாகிறான், எதை இழக்கிறான், எதை அடைகிறான் என்பதைத் தேர்ந்த மொழிநடையில், தகுந்த விவாதங்களுடன் சிறப்பாக எழுதியிருக்கிறார் அரவிந்தன். அவ்வகையில் பயணம் தனித்துவமிக்க நாவலாகும்.

**

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: