செகாவ்வும் கார்க்கியும்


நூறு வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ்வை சந்திப்பதற்கு சக எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி  சென்றார். இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பற்றிய நினைவுகுறிப்புகள் ஒன்றை இரண்டு நாட்களின் முன்பாக வாசித்தேன்.செகாவ் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கடன்தொல்லை காரணமாக வீட்டை விட்டு ஒடிப்போனார். தானே வேலை செய்து சம்பாதித்து படித்தவர். மருத்துவம் படித்து ஏழைகளுக்கு  இலவச வைத்தியம் செய்தபடியே எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது எழுத்து ரஷ்ய அடித்தட்டு மக்களின் குரலை துல்லியமாக வெளிப்படுத்தியது.


 சிறுகதை எழுத விரும்புகின்ற ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். அவரை சிறுகதையின் பிதாமகன் என்று உலகமே கொண்டாடுகிறது


தனது நாற்பது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்தவர் செகாவ். தனது தாயுடன் தனிமையில் ஒரு பண்ணை வீடு அமைத்து கொண்டு வாழ்ந்தார் செகாவ். அவருடன் இரண்டு வளர்ப்புநாய்கள் இருந்தன. அந்த கோச்சோகோவ் பண்ணைவீட்டிற்கு கார்க்கி பார்ப்பதற்காக சென்றார்


கார்க்கி சந்திக்க சென்ற சமயம் செகாவ் நோயுற்றிருந்தார். கார்க்கியை கண்டதும் உற்சாகமாகி தன்னுடைய பண்ணை வீட்டை சுற்றிக் காட்டினார். வீட்டின் பின்புறத்தில் அவரே மரங்களை வைத்து பராமரித்து கொண்டிருந்தார். காலியான இடம் நிறைய இருந்தது.


இலக்கியம் சமகாலஅரசியல் போன்றவற்றை இருவரும் பேசிக் கொண்டிருந்தார். இந்த காலி இடத்தில் என்ன செய்ய போகிறீர்கள்  என்று கார்க்கி கேட்டதும் செகாவ் உற்சாகமாகி இங்கே ஒரு சானிடோரியம் அமைக்க இருக்கிறேன் என்று சொன்னார்.


நோயாளிகளுக்காக அப்படி ஒரு திட்டம் இருக்க கூடும் என்று நினைத்த கார்க்கி இது போன்ற கிராமப்பகுதி மக்களுக்கு நல்லதொரு மருத்துவ சிகிச்சை மையம் தேவை என்று பாராட்டினார்.


உடனே செகாவ் நான் சிகிட்சை மையம் அமைக்க விரும்புவது நோயாளிகளுக்கு அல்ல ஆசிரியர்களுக்கு. உண்மையில் அது என்னுடைய கனவு. இந்த இடத்தில் நிறைய தங்குமிடங்கள் அமைத்து ரஷ்யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்க வைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத்தையும் எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது.


இன்றுள்ள ஆசிரியர்களை ஒரு நோய் பற்றியிருக்கிறது. அது கல்வி குறித்த அலட்சியம். அது களைந்து எறியப்பட வேண்டிய நோய்.


ஆகவே ஆசிரியர்கள் இங்கே தங்கிக் கொண்டு நிறைய படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். அத்துடன் இசை. ஒவியம், பாடல், இலக்கியம் என்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து நேரடி அனுபவம் பெற்று கொள்ள வேண்டும்.


ஒருவன் ஆசிரியராக பணியாற்றுவது என்றால் சகல விஷயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவன். அது குறித்து ஆழ்ந்துசிந்திப்பவன் என்று தான் பொருள். ஆகவே ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கென தனியான முகாம்கள் அமைக்க படுவது அவசியம்.


ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்க வேண்டும். எப்படி ஒரு பாடகன் தன்னுடைய பாடும் திறனை தினமும் வளர்த்து கொள்வானோ அப்படி கற்று தருவதை நுட்பமாக வளர்த்து எடுக்க வேண்டும்.


அது போலவே பொதுமக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே ஒரு இளக்காரம், கேலியே உள்ளது.  அது மாற வேண்டும்.  மக்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்கு கிடைக்கும் மரியாதை ஆசிரியருக்கு கிடைப்பதில்லை. போலீஸ்காரன் குற்றவாளிகளை பிடிக்க வருகிறான். அவனை நாம் வரவேற்று மரியாதை செய்கிறோம். ஆசிரியர் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்து எடுக்க முயற்சிக்கிறார். அவரை நாம் மதிப்பதேயில்லை. அது மாற வேண்டும். முதலில் ஆசிரியர்கள் மதிக்கபட வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராக எவரும் கை நீட்டி பேசவோ, பரிகாசம் செய்யவோ கூடாது.


தன்னுடைய பணி இடத்தில் ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணக்கமாக பழக வேண்டும்.  எப்படி காவல் நிலையத்தை கண்டவுடன் எவ்வளவு  பெரிய ரௌடியும் அடங்கி ஒடுங்கி அமைதியாக போகிறானோ அப்படி பள்ளியை கண்டதும் அது அறிவுநிலையம் என்று மதித்து நடக்க வேண்டும்.


ஒரு கிராமபள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அந்த கிராமத்தின் வளர்ச்சி தன் கையில் ஒப்படைக்க பட்டிருக்கிறது என்ற பொறுப்புணர்ச்சி கொள்ள வேண்டும். மாறாக வகுப்பறை மட்டுமே தனது உலகம் என்று ஒதுங்கி கொள்ள கூடாது.


அது போலவே படிக்காத கிராமத்து மக்களை ஆசிரியர்கள் ஒருபோதும் குறைவாக மதிக்க கூடாது. கேலி செய்யவோ,  படிக்காதவர் என்று சுட்டி காட்டி பேதமாக நடத்தவோ கூடாது.


ஆசிரியர்களின் பணி என்பது ஒருவகையில் போர்வீரனை விடவும் சவால் நிறைந்தது. ஆகவே அவர்களின் அன்றாட தேவைகள். குறிப்பாக  குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளை, அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கிறோம் என்று ஆசிரியர் உணரும் போது தான் கல்வி நலிவடைய துவங்குகிறது.  அது மாற்றப்பட வேண்டும்


பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத குழந்தைகளுக்கு பள்ளிக்கு வெளியில் கற்று தருவதற்கு ஆசிரியர்கள் முன்வர வேண்டும். அலங்காரமான ஆடைகளை அணிந்து பகட்டுதனமாக ஆசியர்கள் நடந்து கொள்ள கூடாது.


முறையான வெளிச்சம் , நல்ல குடிநீர்.  காற்றோட்டம் உள்ள வகுப்பறை. அடிப்படையான  புத்தகங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம். ஆசிரியர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.


கிராம பள்ளி ஆசிரியர்களை நகர பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வந்து பார்வையிடுவது கிடையாது. இது மாற்றப்பட வேண்டும். கிராமத்து ஆசிரியர் நகரத்திற்கும்  மாநகரில் உள்ள ஆசிரியர் சிறிய கிராமபள்ளிக்கும் வருகை தந்து கற்றுத்தரும் முறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.


என்று மாபெரும் கனவுதிட்டங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் செகாவ். இதை எல்லாம் கேட்ட கார்க்கி இவை எப்படி சாத்தியமாகும் என்பது போல சிரிக்க செகாவ் அதை புரிந்து கொண்டு இவை எல்லாம் என்னுடைய கனவுகள்.
இவை நடந்தால் அன்றி ரஷ்யா முன்னேற முடியாது. முறையான ஆசிரியர்கள் இல்லாத சமூகம் மேம்படவே முடியாது. ஒரு வேளை என்காலத்திற்குள் இதில் சில மாற்றங்களாவது நடந்தால் சந்தோஷப்படுவேன். இல்லாவிட்டால் ஏங்கி ஏங்கியே சாக வேண்டியது தான்.


எனது பயணங்களில் வழியில் தென்படும் ஆசிரியர்களை காணும் போது தான் மிகுந்த வெட்கபடுகிறேன். காரணம் அவர்களில் எவரும் உரிய முறையில் பேசவோ, எழுதவோ அறிந்திருக்கவில்லை. ஆசிரியர் என்ற தோற்றத்திற்கு கூட அவர்கள் முக்கியம் தருவதில்லை.  அதை விடவும் மக்களின் மேம்பாடு குறித்து ஒரு போதும் சிந்திப்பதேயில்லை.


தன்னை சுற்றிய மனிதர்களின் மீது அக்கறை கொள்ளாதவன் எப்படி ஆசிரியராக பணியாற்ற முடியும். ரஷ்யா மிகவும் பின்தங்கி போயிருக்கிறது. இங்கே கல்விக்கு அதிகம் முக்கியத்தும் கிடைக்கவேயில்லை.


பிரெஞ்சு தேசம் உலகம் முழுவதும் பெயர் பெற்றிருப்பதற்கு காரணம் அங்குள்ள கல்வி முறையும் அதனால் உருவான கலாச்சார சூழலும் தான். அதை நாம் பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போல இந்த சமூகம் நொறுங்கி விழுந்துவிடும் என்று சொல்லிவிட்டு செகாவ் இப்படி நானாக புலம்பிக் கொண்டிருக்கிறேன். இதை யார் எடுத்து கொள்ள போகிறார்கள். வாருங்கள் தேநீர் அருந்தலாம் என்று சொல்லி கார்க்கியை தன்னோடு அழைத்து கொண்டு செல்கிறார் செகாவ்


இந்த உரையாடல் நடைபெற்று நூறு வருடங்களுக்கும் மேலாகிறது. ஆனால் அவர்கள் பேசிக் கொண்ட விஷயமும் கல்வி குறித்த பிரச்சனைகளும் அப்படியே இருக்கிறது.


 ரஷ்யாவை பற்றி செகாவிற்கு இருந்த கவலை அப்படியே இந்திய சமூகத்தில் இன்றுள்ள கல்விமுறைக்கும் பொருந்த கூடியதாக இருக்கிறது.


செகாவ் சொல்லியது போல இவை பேசிக் கொண்டே இருக்க வேண்டிய புலம்பல்கள் மட்டும் தானா என்று தான் கவலையாக இருக்கிறது.
***


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: