சிற்பமொழி


சிற்பமொழி 


இரண்டு நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமகால இலக்கியப் போக்குகள் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு கும்பகோணம் சென்றிருந்தேன்.


அங்கே கலை விமர்சகர் தேனுகா  அவர்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். இசை, சிற்பம், ஒவியம், இலக்கியம் என்று ஆழ்ந்து அறிந்தவர் தேனுகா.  பேச்சின் நடுவில் நீங்கள் அவசியம் வித்யாசங்கர் ஸ்தபதியைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி அவரைக் காண்பதற்காக அழைத்து சென்றார்.


 
கும்பகோணம் சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ளது வித்யாசங்கர் ஸ்தபதியின் வீடு. மிக எளிமையானது. வீட்டிலே தனது பட்டறையும் வைத்திருக்கிறார். காணும் இடம் எங்கும் அவரது சிற்பங்கள்.


தேனுகா வித்யாசங்கர் ஸ்தபதியை பற்றிய அறிமுக நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதை வாசித்திருக்கிறேன். சோழர் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற கோவில்களுக்கான சிற்பங்களை செய்த குடும்பத்தை சேர்ந்தவர் வித்யாசங்கர் ஸ்தபதி.


இவரது அப்பா , தாத்தா  யாவரும் புகழ்பெற்ற சிற்பிகள். வித்யாசங்கர் ஸ்தபதியும் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க சிற்பி. மரபும் நவீனமும் ஒன்று கலந்த சிற்பங்கள் அவருடையது. சென்ற மாதம் லலித்கலா அகாதமி அவரை இந்தியாவின் சிறந்த சிற்ப ஆளுமைகளில் ஒருவராக சிறப்பு செய்து அவர் சிற்பம் செய்யும் நுட்பத்தினை இளம் படைப்பாளிகள் அருகில் இருந்து காண்பதற்கு ஒரு பட்டறை ஏற்பாடு செய்திருக்கிறது.


வித்யாசங்கர் ஸ்தபதியின் வீட்டில் செடிகளுக்கு நடுவில் ஒரு மங்கை சிற்பம் நின்றிருந்தது. அந்த சிலையை காணும் போது நூற்றாண்டுகளுக்கு முன்பாக உள்ள ஒரு பெண்ணை அருகில் கண்டது போலிருந்தது. வார்ப்பு சிற்பங்கள் செய்வதில் தனித்திறன் கொண்டவர் வித்யாசங்கர். துறவியை போன்று அடர்ந்த தாடியுடன் உள்ள தோற்றம். மெலிந்த உடல் அவரது சிற்பத்தை போல நெகிழ்வு கொண்டிருந்தது. ப்ரகாசமான முகம். அறிமுகப்படுத்திக் கொண்டு பேச துவங்கினேன். தனது சிற்பங்கள் ஒவ்வொன்றாக எடுத்து காட்ட துவங்கினார்.


காமாக்னி என்ற சிற்பத்தை பார்த்தேன். ஒரு ஆணும் பெண்ணும் காமமுற்று முயங்கிய நிலையில் ஒருவரையொருவர் நெருக்கமாக கட்டிக் கொள்ள எத்தனிக்கும் தோற்றம். ஆணின் முகத்தில் காமத்தின் தெறிப்பு துல்லியமாக உள்ளது. பெரிய உதடுகள். நீண்ட நாசி. இன்றுள்ள ஆண் உருவங்களில் இல்லாத கம்பீரமும் ஆண்மையும் நிறைந்த உடல்வாகு. ஆதிதமிழன் இப்படித்தான் இருந்திருப்பான் எனும்படியான தோற்றம்.


அவனோடு தாபத்தில் ஏங்கி நிற்கும் பெண். அவளது நெளிநெளிவான கூந்தல். உதட்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் உள்ளார்ந்த சிரிப்பு. அவளது கழுத்தில் உள்ள அட்டிகை. நெற்றிசுட்டி. குழைவுற்ற ஸ்தனங்கள். ஆணின் கை பெண்தோள் மீதும் பெண்ணின் வளைக்கரம் ஆண்மீதும் பட்டும் படாமலும் உள்ளது.


காமம் இருவரின் ஊடாகவும் எரிந்து கொண்டிருக்கிறது. அதை வெளிப்படுத்தும் நெருப்பின் தழல் தோற்றம் கொண்ட அடிப்பாகம். அந்த சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்க சொல்கிறது. நடனத்தின் உணர்ச்சிமயமான காட்சி துணுக்கு போல அது அமைந்திருக்கிறது. சிற்பத்தின் மௌனம் பெரும் வசீகரமாக உள்ளது.


காமம் உடலை கவ்விக் கொள்ளும் போது உடல்கள் கொள்ளும் நெகிழ்வு அற்புதமாக இருக்கிறது. ஆண் பெண் என்ற அந்த உருவங்களை விடவும் காமம் எனும் நெருப்பு தான் தன்னை மிகவும் வசீகரிக்கிறது. அதை தான் தனது சிற்பத்தின் ஆதார புள்ளி என்று சொல்வேன் என்று வித்யாசங்கர் சொல்லியபடியே அவருக்கு விருப்பமான மங்கை சிற்பங்களை காட்டுகிறார்.


அவரது பெண் சிற்பங்களில் காணப்படும் பாவமும் நளினமும் மரபான பெண் தெய்வங்களின் சிற்பங்களில் காணப்படும் அழகை நினைவூட்டுகின்றன. ஆனால் தெய்வ சிற்பங்களின் மீதான புனிதம் எதுவுமின்றி இவை யட்சிகளை போல வசீகரமாக நம்மை தீண்டுகின்றன. தலைமுறை தலைமுறையாக சிற்பம் செய்த கைகள் என்பதால் அவர்கள் உருவாக்கும் சிலைகளுக்கு மிகுந்த தனித்துவமும் பேரழகும் இருக்கின்றன. 


ஒரு சிற்பம் கனவை போல தன் மனதில் உருக் கொண்டு பல நாட்கள் வளர்ந்து அதன் பிறகு அதன் மெழுகு வடிவம் தயார் செய்யப்பட்டு  அதிலிருந்து வார்ப்பு உருவாகிறது. தான் சிற்பத்துடனே நாளும்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் ஸ்தபதி தன்னுடைய சிற்பங்களை முறையாக வைத்து  கேலரி போல பராமரிக்க தன்னிடம் பொருளாதார வசதிகள் எதுவுமில்லை என்றார்.


அதை விடவும் தான் நவீன சிற்பங்களை உருவாக்க துவங்கிய காலத்தில் பல மாத காலம் பாடுபட்டு தான் செய்த சிற்பத்தை கண்காட்சியில் வைக்கபடுவதற்காக டெல்லிக்கு அனுப்பி வைப்பேன். ஆனால் அதை வாங்க எவருமில்லாமல் திரும்பி வரும்போது அடையும் ஏமாற்றம் இருக்கிறதே அது தாங்கமுடியாத வலி.


அதை தாங்கமுடியாமல் பல தாமிரதகட்டு சிற்பங்களை ஆத்திரத்தில் துண்டாக்கி போட்டிருக்கிறேன் என்று சொல்லும் வித்யாசங்கர் ஸ்தபதி தன்னிடம் இந்த சிற்பங்களை தவிர வேறு சேமிப்பு இல்லை. இதன் அருமையை யார் உணர்கிறார்கள். நகல்கள் தான் விற்பனை பொருள்களாக சந்தையில் மலிந்து கிடக்கின்றன என்று பெருமூச்சிட்டார்.அவரது வீட்டின் விளக்கு மாடத்தில் சிறிய பெண் சிற்பம் ஒன்றை பார்த்தேன். தூசி அடைந்து போயிருந்தது. கையில் எடுத்து பார்த்தேன். எத்தனை அழகு. எவ்வளவு உயர்ந்த கலைத்திறன். ஆனால் அதை வைத்து பராமரிக்க இடமில்லை. அவர் போன்ற கலைஞர்கள் மீது பொது மக்களின் கவனமும் அக்கறையும் இருப்பதேயில்லை.பெயரிடப்படாத தனது சமீபத்தைய சிற்பம் ஒன்றினை எடுத்து காட்டினார். இன்னமும் அது முடிக்கபடவில்லை என்று சொல்லியபடியே ஒரு பீடத்தில் வேறுவேறு நிலைகளில் பொருத்தப்பட்ட ஆண் பெண் கால்களையும் அதன் மீது பொருத்தபட உள்ள தலைகளையும் கவனத்துடன் பொருத்தினார். கால்களில் ஒன்று சரியாக பொருந்தாமல் சரிந்து விழுந்தது. அவர் அந்த காலுடன் ஏதோ பேசியபடியே அதை திரும்பவும் பொருத்தினார்.


இதுவும் காம மயக்கம் கொண்ட ஆண் பெண்ணின் கால்கள் கொள்ளும் அற்புதமே. ஆனால் இந்த சிற்பத்தில் உடல் இல்லை. கால்களின் வேறுவேறு நிலைகள். அதில் வெளிப்படும் இச்சை. உடல் கரைந்து கால்களின் வழியே காமம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அற்புதமான சிற்பம். மரபான நமது சிற்பக்கலையின் நுட்பமும் அதிநவீன சிற்பக்கலையின் கருத்தாக்கமும் ஒன்று சேர்ந்த சிற்பமது.


தனித்தனியாக அந்த கால்களை செய்துள்ள விதமும் அந்த கால்களில் உள்ள நெளிவும், வாளிப்பும் முன்பு ஒருபோதும் பார்த்திராத ஒன்றை காண்பது போல பார்த்துக் கொண்டே இருக்க வைத்தது. இணை பூக்களாக இரண்டு பூக்களை அதன் அடியில் வைத்திருக்கிறார்.


காலும் கைகளும் எங்கே எப்படி தொட்டுக் கொண்டு, ஒட்டிக் கொண்டு இருக்கின்றன என்பதில் தான் ஆணும் பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவு உள்ளது. இந்தக் கைகளை சற்று இடம் மாற்றி வைத்தால் கூட இந்த பெண்ணோடு உள்ள நெருக்கம் உருமாறிவிடும். உடல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சூட்சுமம் அது என்று விளக்கி சொன்னார்.


நூற்றாண்டுகளாக தொடரும் இந்த சிற்ப பராம்பரியம் குறித்து மக்கள் அதிகம் கவனம் கொள்ளவோ, உரிய பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் தருவதோ இல்லை. எங்கோ இத்தாலியில் இருந்து வரும் பயணி அவரைத் தேடி வந்து சிற்பங்களை பார்த்து வியந்து போகிறான். ஆனால் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் கும்பகோணத்திற்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் கூட இப்படியொரு கலைஞன் இந்த நகரில் வாழ்கிறான் என்று  தேடி வந்து சிற்பங்களை காண்பதில்லை.


சிற்பங்களையோ ஒவியங்களையோ எப்படி காண்பது. எப்படி ரசிப்பது என்பதை பற்றிய அடிப்படை அறிதல் நம்மிடம் இல்லை. இசையை ரசிப்பதற்கு அடிப்படைகளை அறிந்து கொள்வது போன்று சிற்பம் ஒவியம் போன்ற நுண்கலைகளை எளிய அறிதல் வழியாக புரிந்து கொள்ள முடியும். அதற்கு முக்கிய தேவை நமது விருப்பம். மற்றும் தொடர்ந்த அவதானிப்பு.


கலைஞனுக்கு அங்கீகாரம் அவனது கலையை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. மற்றபடி கோடிகோடியாக பணம் கொடுத்தாலும் தனக்கு விருப்பமில்லாத கலைப்படைப்பு எதையும் தான் செய்ய மாட்டேன் என்று உறுதியாக கூறும் வித்யாசங்கர் ஸ்தபதி தன் மனது இன்றும் படைப்பு செயல்பாட்டின் மீதே கவனம் கொண்டிருக்கிறது.


செய்ய நினைத்த சிற்பங்களை செய்யமுடியாமலே தன் காலம் முடிந்தவிடுமோ என்ற வேதனை தான் மனதை அரிக்கிறது. கலைஞனின் பெரிய வேதனையே அவன் செய்ய ஆசைப்படுவதை செய்யமுடியாமல் போவது தான். தன் மனதில் அப்படியான சில சிற்பங்களை உருவாக்கும் ஆசைகள் இருக்கிறது. ஒருவேளை அதை செய்யாமலே தான் போய்விடுவோனோ என்று பயமாகவும் இருக்கிறது என்று தன்னை மீறிய அழுகையை வெளிப்படுத்தினார்.


உயர்ந்த கலைஞர்கள் தன் படைப்புமனநிலையிலே எப்போதும் வாழ்கிறார்கள். அவர்களது மனம் கலைஆவேசத்தில் கொந்தளிக்கிறது. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் கால்களை சுற்றி இழுக்கும் போது அவர்கள் செய்வதறியாமல் தடுமாறுகிறார்கள்.


நவீன சிற்பகலையில் தமிழகம் சிறந்த கலைஞர்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக சிற்பி எஸ்.தனபால், சி. தட்சணாமூர்த்தி, பி.வி. ஜானகிராம், பி.எஸ்.நந்தன். நந்தகோபால், போன்ற அற்புதமான நவீன சிற்பக்கலைஞர்கள் நம்மிடம் உள்ளார்கள். அவர்கள் வரிசையில் வருபவர் தான் வித்யாசங்கர் ஸ்தபதியும்.


 இந்த சிற்ப கலைஞர்களை பற்றி பிரபல கலைவிமர்சகர் ஜோசப் ஜேம்ஸ் எழுதிய Contemporary Indian Sculpture: An Algebra of Figuration by Josef James; Oxford University Press, 1998 புத்தகம் மிக முக்கியமானதாகும்.இலக்கியம், நுண்கலைகளின் மீதான ஆர்வம் உள்ள அத்தனை பேரும் அவரை சந்திக்க வேண்டும், அந்த சிற்பங்களை பார்வையிட வேண்டும்,  காரணம் வித்யாசங்கர் ஸ்தபதி  போன்ற கலைஆளுமைகளிடமிருந்து கற்றுக் கொள்ளவும் அவரது கலைநுட்பங்களையும் எழுத்தில் பதிவு செய்யவும் வேண்டியது மிக  அவசியம்.. அதுவே அவரது கலைக்கு நாம் செயயும் உரிய அங்கீகாரம் ஆகும்.****

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: