மண்ணின் இசையாய்…

( சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக் கட்டுரை)

சுப்பாராவ்

கர்னாடக சங்கீதம் இந்த மண்ணின் இசையா? இல்லை அதுவும் கைபர் கணவாய் வழியே வந்ததா? என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. நல்ல ரசனையும், ஆழ்ந்த வாசிப்பும், பரந்த பார்வையும் கொண்ட பல முற்போக்காளர்கள் கூட கர்னாடக சங்கீத விஷயத்தில் சறுக்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அது இந்த மண்ணின் இசையல்ல, அது இந்த மக்களின் இசையல்ல, அது மேட்டுக்குடியினரின் இசை, உழைக்கும் வர்க்கத்திற்கு, பிராமணரல்லாத, இடைநிலைச்சாதியினருக்கு சம்பந்தமில்லாத ஒரு கலை வடிவம் என்பது போன்ற கருத்துகள் கொண்டுள்ள பல முற்போக்குச் சிந்தனையாளர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கர்னாடக சங்கீதம் எளிய மக்களின் சங்கீதம்தான் என்ற விஷயத்தை கரிசல் மண்ணின் உழைப்பாளி மக்களின் நாதசுவரக் கலைஞர்களை வைத்து மிக அற்புதமாக சஞ்சாரம் என்னும் நாவலை எழுதி, அருமை நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் நிரூபித்து விட்டார். இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உண்மையில் கர்னாடக சங்கீதத்தை அழிந்து போகாமல் இன்று வரை காப்பாற்றியவர்கள் நாதசுவரக் கலைஞர்கள்தான். நான் சிறுவயதில் கரகாட்டக் காரர்களுடன், நாதசுவரக் கலைஞர்களுடன் சுற்றித் திரிந்த்துண்டு. அந்தக் கலைஞர்களின் சங்கீத ஞானமும், ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வும் பற்றிச் சொல்ல வார்த்தைகளே கிடையாது.

சமீபத்தில், ஒரு சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு புறநகரில் இருக்கும் என் வீட்டிற்கு பொட்டல் காட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். எங்கோ மிகத் தொலைவில் யார் வீட்டிலோ யாரோ மரணமடைந்ததற்கு நாதசுவரக்காரர்கள் வாசித்துக் கொண்டிருந்தது காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்த்து. நெஞ்சினிலே நினைவு முகம் என்ற பாடல்.. ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்த்து நீதியில்லை….. என்று நிறுத்திவிட்டு அந்த முகமறியாத நாதசுவரக் கலைஞன் திரும்பவும், கீழே நெஞ்சினிலே நினைவு முகம் என்று ஆரம்பித்த போது என்னையறியாமல் கண்களில் குபுகுபு என்று கண்ணீர் பொங்கி வந்தது. எதிரில் டூ வீலரில் வந்து கொண்டிருந்த ஒருவர் நிறுத்தி ஸார் என்ன பிராபளம்? தண்ணி குடிக்கிறீங்களா? என்று என்னென்னமோ கேட்கிறார். காற்றில் மிதந்து வந்த பாட்டைக் கேட்டு பொங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அவரிடம் நான் எப்படிச் சொல்வது? கிராமப்புறங்களின் எளிய நாதசுவரக் கலைஞர்களின் சங்கீத வித்வத்திற்கு என் சொந்த வாழ்விலேயே இப்படியொரு சாட்சியம் இருக்கிறது. கர்னாடக சங்கீதம் இந்த மண்ணின் இசையாக இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியமாகும்? அதை இந்த நாவல் வழியே சொல்லியிருக்கும் எஸ்.ராவிற்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

நாவலில்தான் எத்தனை விதம் விதமான வித்வான்கள் – அவரே சொல்வது போல கரிசலிலும் சில காட்டு யானைகள்! டில்லி வரை சென்று வாசித்த லட்சய்யா, தனி நாதசுவரக் கச்சேரி செய்ய ஆரம்பித்த கண்ணுசாமி, பக்கிரியின் குரு ராகவையா, தெக்கரை சாமிநாதப்பிள்ளை, நாதசுவரம் கற்றுக் கொள்ளும் ஹாக்கின்ஸ், மேலையுர் தன்னாசி என்ற கண்தெரியாத கலைஞன், முஸ்லீம் வீட்டுப் பையனுக்கு திருநீறு வைத்துவிட்டு, நாயனம் கற்றுத்தரும் கன்னையா  என்று கலைஞர்கள் ஒரு பக்கம். மோகனராகத்தைக் கேட்டு மயங்கி தன்னிடம் இருந்த நாலணா காசைத்தரும் கோவில் மடப்பள்ளி சமையல்கார்ர், நல்ல வித்வானுக்கு கல்கண்டும், மோசமாக வாசிப்பவனுக்கு கழுதைவிட்டையும் தரும் ஊமை அய்யர், வாய் மூடாமல் பேசிக் கொண்டே இருக்கும் வானொலி நிலைய ஊழியர் என்று விதம்விதமாய் ரசிகர்கள் ஒருபுறம். வித்வான்கள் ஒருபுறம் வயிற்றுப் பிழைப்பிற்காக ஓடிக் கொண்டிருந்தாலும், என்றேனும் ஒருநாள் ஏதோ ஒரு உண்மையான ரசிகன் தன்னை மறந்து சொல்லப் போகும் அந்த ஒரு சபாஷிற்காகத்தான் உயிரைக் கொடுத்து வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நாவலைப் படிக்கும்போது நான் பார்த்திருக்கும், ரசித்துக் கேட்டிருக்கும் எத்தனையோ நாதசுவர வித்வான்கள் நினைவில் வந்து போகிறார்கள். சிம்மக்கல் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அனுமத் ஜெயந்தி சுவாமி புறப்பாட்டின் போது ஒரு முறை, மார்கழி மாத நள்ளிரவில் திருமோகூர் ஆறுமுகமும், அவர் தம்பி சேவுகப் பெருமாளும் வாசித்த தெலியலேது ராமா நாவலைப் படித்துக் கொண்டிருந்த போதே காதில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.. ஆனாலும், அண்ணன் தம்பி ஏதோ மனஸ்தாபத்தில் பிரிந்தபின், இருவர் வாசிப்பிலுமே அந்த பழைய சுகம் இல்லாமல் போனது நிஜம்தானா? இல்லை என் பிரமையா என்று இன்றுவரை தெரியவில்லை. தீபாவளியன்று நாதசுவரக்காரர்கள் வீட்டுவாசலில் ஓரிரு வரி வாசித்துவிட்டு தீபாவளிக் காசு வாங்கிச் செல்லும் வழக்கம் மிகச் சமீபகாலம் வரை எங்கள் அக்கிரஹாரத்தில் இருந்தது. அப்படி காசு போடும் போது ஏனோ மிக வேதனையாக இருக்கும். வர்ஷா பிறந்து, அவள் பாட்டுக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலத்தில், ஒரு தீபாவளிக்கு இப்படி நாதசுவரம் வாசிக்க வந்த சௌந்திரபாண்டியன், சுவாமிநாதன் செட்டை உள்ளே வரச்சொல்லி பாய் போட்டு உட்காரச் சொல்லி வாசிக்கச் சொன்னபோது பாப்பாக்கு இப்ப என்ன சொல்லிக் கொடுத்திருக்காங்க? என்று கேட்டு அவர்கள் எவ்வரி போதன ஆபோகி வர்ணம் வாசித்ததும் நாவல் படிக்கும்போது முழுக்க மனதில் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு பிரதோஷத்திற்கு மீனாட்சி கோவிலில் சேதுராமன் பொன்னுச்சாமி வாசித்த மாமவசதா ஜன்னி, அபிராமம் கணேசன் என்ற நாதசுவர வித்வான், அபிராமம் மணி,  என்ற தவில் வித்வான் என்று எனக்கு அறிமுகமான கலைஞர்களின் நினைவெல்லாம் வந்து வந்து போனது. ஒரு நாவல் எனக்கு இதற்கு மேல் என்ன தரவேண்டும்?

தவிலை பெற்ற குழந்தையைப் போல் சுமந்து கொண்டு, கால்நடையாக, டாக்சியில், ரயிலில், விமானத்தில், பஸ்சில், பஸ்சின் டாப்பில் கூட என்று செல்லும் பயணங்கள் இருக்கிறதே ஒரு கலைஞனுக்கு அந்த ஒரு கஷ்டம் மட்டும் போதும். வேறு எக்ஸ்ட்ராவாக எதுவும் வேண்டாம். அதே போல ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் படும் அவமானம். ஏழை சங்கீதக் காரர்கள் அவமானப்படவே பிறக்கிறார்கள். அவமானம் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அப்படியும் வயிற்றுப் பிழைப்பிற்காகக் குழைந்து குழைந்து காலில் விழுகிறார்கள். ஏதோ ஒரு அலாதியான தருணத்தில் நான் கலைஞன் என்ற திமிரோடு அதிகாரத்தை எதிர்த்து முரட்டுத்தனமாக நிற்கிறார்கள். அதற்காகவும் அடி படுகிறார்கள். அவமானப்படுகிறார்கள். எல்லாம் கலந்ததாகத்தான் இருக்கிறது அவர்களது வாழ்க்கை.

இன்னும் சங்கீதம் குறித்து, அவர்களது பயிற்சி முறை, வாசிக்கும் முறை பற்றியெல்லாம் விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்று எனக்கு லேசான ஒரு மனக்குறை. ஆனால், நாவலின் வாழ்க்கைக்கு மிக அருகில் இருக்கும் ய்தார்த்த்த்தில் இந்தக் குறை பெரிதாக்க் தெரியவில்லை.

இப்படியான ஒரு நாவலைப் படித்து வெகுநாட்களாகிவிட்டது என்பதால் மனம் மிகவும் நிறைவாக இருக்கிறது.

சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மை வெளியீடு. 375 பக்கங்கள் விலை ரூ 370.00

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: