பசுமை உணவகம்

சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தினைக் கடந்தவுடன் வருகிற முதல் இடப்புற தெருவான 16 வது குறுக்குத்தெருவில் க  (Green cafe ) என்ற பெயரில் Organic Veg. restaurant ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நண்பர் பவா.செல்லதுரையின் பரிந்துரையால் நேற்று மாலை அங்கே குடும்பத்துடன் சாப்பிடச் சென்றிருந்தேன்.

சென்னையில் இதுவரை நான் சாப்பிட்ட சைவ உணவகங்களில் மிகச்சிறந்த ஒன்று இதுவென்பேன். சிறுதானியங்களைக் கொண்டு இத்தனை விதங்களில் உணவு தயாரிக்கமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. சுவையும் தரமும் இனிய உபசரிப்பும் கொண்ட சிறப்பான உணவகமது.

இந்த உணவகத்தையும் அத்துடன் இணைந்த இயற்கை வேளாண்மைப் பொருட்களுக்கான அங்காடியும் பார்வையிட்டேன். அந்த அங்காடியின் ஒரு பிரிவாகப் புத்தகக் கடை ஒன்று இயங்கி வருகிறது. கதர் துணிகளுக்காகத் தனிப்பிரிவு ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கான உடைகளை உள்ளுர் கதர் துணியில் நேர்த்தியாகத் தயாரித்திருக்கிறார்கள்

சென்னையில் இயற்கை விளைபொருள் அங்காடிகள் நிறைய இருக்கின்றன. இதிலும் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளே முன்னிலை வகிக்கின்றன. இயற்கை விளைபொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் Green cafeல் பெருமளவு பொருட்களின் விலை நியாயமாக இருந்தன.

இந்த அங்காடியை நடத்தி வரும் வி.பி.ராஜ் தொழில்முறை புகைப்படக்கலைஞராக மும்பையில் பணியாற்றியவர். National Geography சேனலுக்காக freelancer ஆக வேலை செய்திருக்கிறார். இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் தனது வேலையை உதறி எறிந்துவிட்டு முழுநேரமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏராளமான விவசாயிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்காகவே இயற்கை விளைபொருள் அங்காடிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்குக் கிடைத்த நல்ல வரவேற்பின் காரணமாகவே உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்

ராஜ் ஒரு தேர்ந்த இலக்கிய வாசகர். நிறையப் படித்திருக்கிறார். பயணம் செய்திருக்கிறார். சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்று வரும் இயற்கை வேளாண்மை முயற்சிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இயற்கை விவசாயம். கதர் துணிகள் விற்பனை. புத்தக விற்பனை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு. இயற்கை விவசாயம் சார்ந்த கல்விநிலையம், கூட்டுப் பண்ணை என்று ராஜ் தனது செயல்திட்டங்களைப் பற்றி விளக்கிச் சொன்ன போது பிரமிப்பாக இருந்தது.

இந்த உணவகத்தில் பராம்பரிய முறையில் சமைக்கிறார்கள். செக்கில் ஆட்டிய எண்ணெய். சுத்தமான பசும்பால், பயன்படுத்தப் படும் பொருட்கள் முழுவதும் இயற்கை வேளாண்மையில் விளைந்தவை. வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, , சோளம் போன்றவற்றைப் பயன்படுத்தி இவர்கள் செய்து தரும் சிற்றுண்டிகளின் ருசி அபாரம்.

தி. நகர் நடேசன் பூங்காவின் பின்புறமும் இவர்களின் இயற்கை அங்காடியும் Green cafe உணவகமும் செயல்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தினை முழுமையாக இயற்கை வேளாண்மை சார்ந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே ராஜின் கனவு. அதற்கான ஆரம்பப் பணிகளைத் தற்போது துவங்கி வருகிறார்.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மையை அர்ப்பணிப்புடன் செய்து வரும் பலரையும் ஒருங்கிணைத்து இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாக்கெட் பாலுக்குப் பதிலாகக் கண்ணாடி புட்டியில் அடைத்த பால், பிளாஸ்டிக் பாட்டில்களுக்காக மாற்றாக மண்ணில் செய்த குடுவைகள். காய்கறிகள். தானியங்கள், அழகுசாதனப்பொருட்கள். நொறுக்குதீனிகள், மண்ணில் செய்த அலங்காரப் பொருட்கள் என மாற்றுவாழ்வியலுக்கான அத்தனையும் இந்த அங்காடியில் கிடைக்கின்றன.

ராஜ் என்னிடம் ஆலோசனைகள் கேட்டார்.

அரசு பொதுமருத்துவமனைகளில் இயங்கி வரும் உணவகங்கள் மிக மிக மோசமாக உள்ளன. அதற்கு மாற்றாக இது போன்ற பசுமை உணவகங்களை துவக்கலாம். நெடும்சாலையோர துரித உணவகங்களுக்கு பதிலாக பசுமை உணவகங்களை உருவாக்கலாம். கல்லூரி விடுதிகளில் வாரம் ஒரு நாள் முழுமையாக பசுமை உணவு வகைகளை  தயாரித்துக் கொடுக்கலாம். இயற்கை விவசாயத்திற்கென்றே தனியான கல்லூரி துவங்கலாம். ஒரு வீட்டிற்கு தேவையான அடிப்படை பொருட்கள் அத்தனையும் விநியோகம் செய்யும்படியாக திட்டம் ஒன்றை உருவாக்கலாம்.  ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்களில் சம அளவு இயற்கை விளைபொருட்களை தரும்படி அரசிடம் வற்புறுத்தலாம். ரயிலில் இயங்கும் உணவகத்தில் பசுமை உணவு கிடைக்க ஏற்பாடு செய்யலாம். இது போன்ற அங்காடிகள் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒரு முறையோ இயற்கை உணவு. சுற்றுசூழல். இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யலாம். கடற்கரைக்கு ஒரு நாளைக்கு பல்லாயிரம் பேர் வருகிறார்கள். அங்கே இது போன்ற நடமாடும் பசுமை உணவகம் உருவாக்கலாம் எனச் சொன்னேன். ஆர்வத்துடன் அவற்றை குறிப்பு எடுத்துக் கொண்டார்.

சிறுதானிய உணவுகளைச் சமைப்பது எப்படி என்று கூட நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். விரும்புகிறவர்கள் எங்கள் உணவகத்திற்கு வந்து கற்றுக் கொள்ளலாம் என உற்சாகமான கூறினார் ராஜ்.

இவர்களின் கனவு ஆரோக்கிய வாழ்விற்கான அடிப்படைகளை உருவாக்குவதாகும். அதன் முதற்படியே இயற்கை விளைபொருள் அங்காடி மற்றும் இயற்கை உணவகம். இது போன்ற முயற்சிகளை நாம் பெரிய அளவில் ஆதரிக்க வேண்டும். ஆரோக்கிய உணவின் மீது அக்கறை கொண்டவர்கள் அவசியம் Green cafe உணவகத்திற்குச் சென்று வாருங்கள்.

***

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: