கோவை வாசகர் சந்திப்பு

கோவை வாசகர் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வினை எழுத்தாளர் இரா.முருகவேள் ஒருங்கிணைத்து நடத்தினார்.  இளம்வாசகர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் விஜயா வேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி தந்தது.

காஸ் வனவியல் அருங்காட்சியகத்திலுள்ள சிற்றரங்கில் நிகழ்வு நடைபெற்றது.

இந்தியாவில் மிகவும் பழமை  வனவியல் அருங்காட்சியகமிது . 1902-ம் ஆண்டில் அப்போதைய வனத்துறை அலுவலர் ஹாரஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் என்பவரால், அருங்காட்சியகம் உருவாக்கபட்டுள்ளது..பல்வேறு வகையான பறவை, விலங்கினங்கள், மரங்கள், தாவர வகைகள் இங்கே பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.  பிரிட்டீஷ் ஆட்சியில் எப்படி  பாலம் கட்டினார்கள், அதற்கு என்பது  குறித்தும் அருங்காட்சியகத்தில் வடிவமைப்பு மாதிரிகள் உள்ளன.

இந்தநிகழ்விற்கு முக்கிய உறுதுணையாக இருந்தவர் சேகர்.  வனவியல் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.

கோணங்கியோடு எனது நட்பு. தேவதச்சனின் கவிதைகள்.  நகுலன் பற்றி, இடக்கை நாவல்  எழுதிய அனுபவம், கவிதைகளை எப்படித் தேர்வு செய்து படிக்கிறேன். உலக இலக்கியத்தின் மீதான ஆர்வம் உண்டான விதம். ரஷ்ய இலக்கியங்கள்,  சமகால கவிதைகளின் போக்கு,  ஜோர்பா தி கிரேக் நாவல் பற்றி, மகாபாரதம் படிப்பது குறித்து,  சென்னை வாழ்க்கையின் நெருக்கடிகளை எப்படி சந்திக்கிறேன், எனது பயண அனுபவம் எப்படியானது என்பது போல  பல்வேறு விதமான கேள்விகளை வாசகர்கள் கேட்டார்கள். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக  கலந்துரையாடல் நடைபெற்றது.

புதிய வாசகர்களுடன் உரையாடும் போது இரண்டாயிரத்திற்குப் பிறகான புத்தகங்கள் மட்டுமே அவர்களுக்கு அறிமுகமாகியுள்ளது என்பது தெரிய வந்தது. மூத்த படைப்பாளிகள் பலரையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழின் செவ்வியல் கவிதைகள் எதையும்  வாசித்திருக்கவில்லை. சமகாலப்படைப்புகளிலும் சமூக ஊடகங்களில் பங்குபெறும் படைப்பாளிகளைத் தான் அதிகம் அறிந்திருக்கிறார்கள்.

இணையத்திற்கு வெளியே இயங்கும் இலக்கிய உலகம் குறித்து விரிவாக பேசவும் முன்னெடுத்து சொல்லவும் வேண்டிய தேவையிருக்கிறது. சுயம்புலிங்கம் . சி.எம்.முத்து,  முத்தானந்தம், பாரததேவி, கர்ணன் போல இணையத்திற்கு வெளியே இயங்கும் சிறந்த  படைப்பாளிகளைப் பற்றி  எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது வருத்தமான விஷயமே.

••

கோவைக்குச் சென்றிருந்த போது தியாகு புத்தக நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.  சனிக்கிழமை தோறும் நண்பர்கள் கூடி உரையாடுவது வழக்கம் என்றார் தியாகு.  வாடகை நூல் நிலையம் என்றாலும் மிகச்சிறந்த இலக்கியநூல்களை வாங்கி அடுக்கியிருக்கிறார்.  தியாகு ஒரு தேர்ந்த படிப்பாளி. பண்பான மனிதர்.  ஒரான் பாமுக்கிலிருந்து முரகாமி வரை அத்தனை முக்கிய எழுத்தாளர்கள்  புத்தகங்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.  அச்சந்திப்பில் இயற்கை வேளாண்மை செய்து வரும் கண்ணன் அவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தது சந்தோஷம் தந்தது.  When Breath Becomes Air – Paul Kalanithi  என்ற  நூலை தியாகு எனக்குப் பரிசாகத் தந்தார்.

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: