அந்தரத்தில் சர்க்கஸ்


நீண்ட வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் சர்க்கஸ் பார்க்கச் சென்றிருந்தேன். தேனியில் பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த கிரேட் இந்தியன் சர்க்கஸை சாலை பயணத்தில் கண்ட போது அதை பார்க்கலாமே என்று மதியகாட்சிக்கு சென்றிருந்தேன்.என் பால்யநாட்களில் சர்க்கஸ் மிக அரிதான நிகழ்வு.  அதன் வருகை சுற்றுப்புற கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தும். ரஷ்யன் சர்க்கஸ், ஏசியன் சர்க்கஸ், பாரத் சர்க்கஸ் என்று மிகப்பெரிய சர்க்கஸ்களை பார்த்திருக்கிறேன்.எனது முதல் வசீகரம் சர்க்கஸ்கூடாரம். அது போல ஏன் வீடுகள் கட்டப்படுவதில்லை என்று சிறார்களாகிய நாங்கள் பேசிக் கொண்டேயிருப்போம். அப்புறம் சர்க்கஸ் கோமாளி. அவனை பார்த்தாலே சிரிப்பு பீறிடும்.


அந்த நாட்களில் சர்ச் லைட் ஒன்றை சர்க்கஸ்காரர்கள் வைத்திருப்பார்கள். அந்த வெளிச்சம் பத்து மைல் தூரம் உள்ள கிராமங்களின் மீது இரவில் ஊர்ந்து போய்க் கொண்டிருக்கும்.  வெளிச்சத்தின் பின்னாடியே ஒடுவோம். அரைவட்டமாக வெளிச்சம் சென்று திரும்பிவரும். 


 சர்க்கஸ் சென்ற போது அந்த வெளிச்சத்தினை அருகில் நின்று பார்த்தேன். வெளிச்சம் வானை நோக்கி உயர்ந்து சுழன்று கொண்டிருந்தது வியப்பாக இருந்தது.


புலியை முதன்முறையாக சர்க்கஸ் கூண்டில் தான் சந்தித்தேன். பாடப்புத்தங்களில் பார்த்திருந்த புலி குரல் அற்றது. புலியின் ஊடுருவ முடியாத கண்களை, கொதிப்பு மிகுந்த அதன் குரலை. உடல்லாவகத்தை அருகில் பார்த்தபோது சிலிர்ப்பாக இருந்தது. ஆனால் இவ்வளவு வலிமை மிக்க புலி எதற்காக சிறிய சவுக்கை கண்டு பயந்து முக்காலியில் ஏறி நிற்கிறது என்று ஆத்திரமாகவும் வந்தது. 


குள்ளர்கள், கோமாளிகள், பார் விளையாடும் பெண்கள். கணிதம் போடும் நாய்க்குட்டி. ஒற்றை சக்கர சைக்கிள். இரும்பு கூண்டிற்குள் பைக்கில் சுற்றுவது. கண்ணை மூடி கத்தி எறிவது. விதவிதமான ஜிம்னாடிஸ்டிக் விளையாட்டுகள். பீரங்கியில் ஒரு ஆளை வைத்து சுடும் நிகழ்ச்சி. சக்கரத்தில் ஏறி நிற்கும் யானை. ஒட்டகங்கள், நரி, கரடி, நீர்யானை, குரங்குகள். குதிரைகள், சிங்கம் தலையில் தலையை நுழைக்கும் பெண். என அந்த உலகம் மயக்கம் தருவதாக இருந்தது.


ஒவ்வொரு நாளும் சர்க்கஸ்காரர்கள் நகரில் அணிவகுப்பு நடத்துவார்கள். தெருவில் புலியை கையில் பிடித்தபடியே ஒரு ஆள் நடந்து செல்வான். அவனோடு டிரம்ஸ் அடித்தபடியே கோமாளி. உடன் மெல்லிய உடை அணிந்த பார் ஆடும்பெண்கள். சாலையே நின்று அதை வேடிக்கை பார்க்கும். சர்க்கஸ் மாய உலகம் போலிருந்தது. தினமும் சர்க்கஸ் பார்க்க வீட்டில் விடமாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கமாக இருக்கும்


சர்க்கஸ் வந்து போன சில மாதங்களுக்கு அது போலவே மரத்தில் கயிறு கட்டி சிறுவர்கள் பார் விளையாட்டு ஆடுவார்கள். ஒணானை பிடித்து வந்து கையில் குச்சி வச்சி தாவி வேடிக்கை காட்ட செய்வார்கள்.  கோமாளி போல தாங்களே குதித்து வேடிக்கை காட்டுவார்கள்.


ஒரு முறை சர்க்கஸில் ஏழு அடி உயரமுள்ள ஒரு ஆப்கான்காரனை வேடிக்கை மனிதராக கொண்டு வந்திருந்தார்கள்.அந்த ஆள் பகல் நேரங்களில் மீன் வாங்க சந்தையில் நடந்து வரும் போது தனியாக அவன் உருவம் மட்டும் தெரியும். அவன் பின்னாடியே நாங்கள் செல்வோம். அவன் எங்களை விரட்ட மாட்டான். பேக்பைப்பர் பின்னால் செல்லும் எலிகளை போல நாங்கள் அவன் பின்னாடியே சுற்றியலைவோம். அந்த மயக்கம் விசித்திரமானது.தேனியில் நான் பார்த்த சர்க்கஸில் கூடாரத்தை தவிர வேறு எதுவும் பழைய சர்க்கஸ் போல இல்லை. இரண்டு வயதான ஒட்டகங்களுக்கும் ஒரேயொரு குதிரையும் இருந்தது. இதைவிட மெலியவே முடியாது என்பது போல தோல் சுருங்கிப்போன அந்த கிழட்டு ஒட்டகங்கள் நடக்க முடியாமல் தடுமாறுகின்றன. குதிரையோ ஆஸ்துமா நோயாளி போல மூச்சிரைக்க நடந்து போகிறது. அதை கண்டதும் சிறார்கள் கேலியாக ஏய் இது குதிரையாம்.. இது ஒட்டகமாம் என்று  சிரிக்கிறார்கள்.


மிருகங்களை சர்க்கஸில் வைத்து வேடிக்கை காட்ட கூடாது என்ற சட்டம் கடுமையாக அமுலில் இருக்கிறது. ஆகவே எங்களிடம் வேறு மிருகங்கள் இல்லை என்றார்கள் சர்க்கஸ்காரர்கள்.


நேஷனல் ஷியாகிரபியும் அனிமல் பிளானெட்டும் வராத நாட்களில் நாங்கள் பார்த்த கூண்டுபுலி அதிசயமாக இருந்தது. ஆனால் இன்று தொலைக்காட்சிகளில் புலியோடு மானை வேட்டை ஆடுவதை கேமிரா மிக அண்மையில் காட்டுகிறது. அதை வீட்டிலிருந்தபடியே பார்த்துவிடுகிறார்கள். அதனால் நேரில் மிருகங்களை பார்ப்பதில் ஒரு கிளர்ச்சியும் அடைவதில்லை


அன்று பார் விளையாட்டுகளிலும் பார்வையாளர்களுக்கு உற்சாகமேயில்லை. இதை விட சிறப்பான விளையாட்டுகளை அவர்கள் பிம்பங்களாக சின்னதிரையில் பார்த்துவிட்டார்கள் என்பதே காரணம்.


எந்த நிகழ்ச்சிக்கும் பார்வையாளர்களிடம் கைதட்டு இல்லை. தன் செல்போன் கேமிராவில் சர்க்கஸ் பெண்களை படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் மட்டும் அடிக்கடி தனியே கை தட்டிக் கொண்டிருந்தான். வேறு சலனமேயில்லை.


வசீகரம் இழந்து போய் வெக்கையும், அலுப்புமாக மக்கள் சர்க்கஸ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முந்தைய நாட்களில் இடைவேளை எல்லாம் விடுவார்கள். இன்று சினிமா போல இரண்டு மணி நேரம்  ஒரே காட்சியாக நடைபெற்றது.


கோமாளியாக நடித்தவரை பார்க்க பரிதாபமாக இருந்தது. அவரால் ஒரு சிறுவனை கூட சிரிக்க வைக்க முடியவில்லை


அந்தரத்தில் பெண்கள் கயிற்றில் ஆடும்போது பார்வையாளர்கள் அதை பற்றிய விருப்பமின்றி ஐஸ்கிரீம் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வசீகரமற்ற வித்தை பார்வையாளர்களிடம் வெறுப்பையே உருவாக்குகிறது என்பதை கண்கூடாக கண்டேன்.


தொலைகாட்சி அலுத்து போன மக்களுக்கு அதை விட கேளிக்கை தரக்கூடிய ஒரு வடிவம் தேவைப்படுகிறது.ஆகவே மாற்றுவழிகளை தேடி வருகிறார்கள். ஆனால் அந்த கலைவடிவங்கள் அவர்களை திருப்தி செய்ய முடியவில்லை என்று அலுப்புடன் திரும்ப காட்சி ஊடகங்களை நோக்கிபோய்விடுகிறார்கள்.


சர்க்கஸ் விளம்பரங்கள், அதில் வாசிக்கபடும் இசை, பின்னணி வர்ணனை என எதிலும் சர்க்கஸ்காரர்களும் கவனம் கொள்ளவேயில்லை. சர்க்கஸ் இறுதி காட்சியில் அதில் பங்கு பெற்ற கலைஞர்கள் வந்து கையசைத்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள், ஆண்கள், அதை நிர்வகிக்கும் வயசாளிகள், சிறார்கள். சர்க்கஸின் அக உலகம் அப்படியே தானிருக்கிறது. ஆனால் அதன் புறவசீகரம் முற்றிலும் சிதைந்து போயிருக்கிறது.


சர்க்கஸ் மனிதர்களின் கண்களை பார்த்தபடியே இருந்தேன். பசிதான் அவர்களை இயக்கும் ஒரே சக்தி. அன்றாட வருமானத்திற்குள் தங்கள் வாழ்வை கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடிகளை அவர்கள் முற்றிலும் அனுபவிக்கிறார்கள்.
பார்விளையாடும் பெண்கள் முகத்தில் சிரிப்பில்லை.


முந்நூறு கிலோ எடை தூக்க தெரிந்த பெண் அடுத்த காட்சிக்கு கூட்டம் வருமா என தெரியாத திகைப்பில் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்களுக்குள்ளும் குடும்பம், குழந்தைகள். எதிர்காலம் என்ற ஊஞ்சல் அந்தரத்தில் ஆடிக் கொண்டேதானிருக்கிறது.


இந்த பொருளாதார சிரமங்களுக்கு ஊடாகவே வித்தை வேடிக்கை என்று செய்ய வேண்டியிருக்கிறது. சிறிய வளையத்திற்குள் மூன்று பேர் நுழைந்து வெளிவரும் வித்தை  தெரிந்த சர்க்கஸ்காரர்களுக்கு பசியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தான் இருக்கிறது.


வயதான மிருகங்கள் காய்ந்த இலைகளை மேய்ந்து கொண்டிருக்கின்றன.  மிருகங்களை ஏற்றி செல்லும் கூண்டுவண்டிகள் மசி உலர்ந்து போய் வர்ணம் வெளுத்து நிற்கின்றன. நிகழ்ச்சியில் பங்கு பெறாத குரங்கு குட்டி ஒன்று மெலிந்து போய் காகிதத்தை வாயில் வைத்து சவைத்துக் கொண்டிருக்கிறது.


முகம் தெரியா ஒரு ஆளின் குரல் சர்க்கஸ் பார்க்க வரும்படியாக மக்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறது. யாரும் செவி சாய்க்கவேயில்லை


அடுத்த காட்சிக்கு உள்ளே செல்ல வரிசையில் நின்ற ஒரு சிறுவன் தன் தாயிடம் சர்க்கஸில் டைனோசர் இருக்குமா. அதை பிடித்து கொண்டு வந்து வேடிக்கை காட்டுவார்களா என்று கேட்கிறான். அம்மா அதெல்லாம் டிவியில் தான் வரும் என்கிறாள். இல்லைம்மா.. சர்க்கஸ்ல டினோசர் இருக்கும். பாரேன் என்று உற்சாகமாக உள்ளே ஒடுகிறான்


டைனோசர்களின் விளையாட்டுகளை நேரில் பார்க்கும் விரும்பும் சிறார்களின் காலமிது. கற்பனை மிருகங்கள் காட்சி ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன. அடுத்த கிரகத்திலிருந்து ஏலியன்ஸ் வருவதை அன்றாடம் ரசிக்கும் சிறுவனை பேசும் கிளிகள் வசீகரிப்பதில்லை.


அவன் மிருகங்களை வேடிக்கை பொருளாக நினைக்கவில்லை. மிருகம் ஒன்றையொன்று சண்டையிட்டு கொள்ளவும் தாக்கிக் கொள்வதையும் வேடிக்கை பார்க்கவே விரும்புகிறான். அது தான் இன்றைய சிறார் மனதில் புதைந்து போயுள்ள வன்முறை.


சர்க்கஸில் மிருகங்கள் காட்சிப் பொருளாக இருந்தன ஒரு காலத்தில் . இன்று சர்க்கúஸ காட்சிப்பொருளாக உள்ளது. சாலையில் செல்லும் வாகனவாசிகள் இது தான் சர்க்கஸா என்று தூரத்தில் இருந்தபடியே பார்த்து கடக்கிறார்கள்.


தன்னுடைய கம்பீரம் மறந்து தெருவில் யாசகம் கேட்கும் கோவில்யானை போல  வசீகரம் இழந்து போயிருக்கிறது சர்க்கஸ் என்பதே நிஜம்.


*** 
 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: