இடக்கை நாவல் குறித்து

இயக்குனர் ராம் தனது முகநூலில் இடக்கை நாவல் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவருக்கு  மனம் நிரம்பிய நன்றி.

••

படித்ததில் பிடித்தது

எஸ்.ராமகிருஷ்ணனின் ”இடக்கை”.

பதிப்பகம் : உயிர்மை. 91- 44 – 24993448

www.uyirmmai.com

’சம்பவங்கள் சொற்பமாய் சொற்கள் அதிகமாய்’ கொண்ட எழுத்தைப் படித்து சலித்துப் போன எனக்கு வெகு நாட்களுக்குப் பிறகு சம்பவங்களும்

துணைக் கதைகளும் நிறைந்த இடக்கை, பரவச வாசக அனுபவத்தைத் தந்தது.

உங்களுக்கு game of thrones (hbo தொலைக்காட்சித் தொடர்) பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்த நாவல் பிடிக்கும். game of thrones திரைக்கதையைப் போல்

எழுத நம் மொழியில் யாரும் இல்லையா என்று நீங்கள்

ஏங்கிக் கொண்டிருப்பீர்கள் ஆயின் உங்கள் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் எல்லா வல்லமையும் கொண்ட பெரும் எழுத்தாளர் எஸ்.ரா என்பதை இந்த நாவல் உரத்துச் சொல்கிறது.

ஒளரங்கசீப் காலத்தில் இருந்து, சென்னையில் பெரு வெள்ளம் வந்த இன்று வரை துளியும் மாறாத அருந்ததியினர் வாழ்வையும் , மனித குலம் தோன்றியது முதல் திருநங்கைகள் மீதான மானுடத்தின் குற்றங்களையும் , வரலாறு நெடுகிலும் வறியவர்களை அரசும் நீதியும் எப்படி தண்டித்தது எப்படி நீதிக்காக காக்க வைத்தது என்பதையும் , அரச, மானுட பயங்கரவாதத்தையும் சொல்கிற பெரும் நாவல் ‘இடக்கை’.

காப்பியக் கால விதிகளுக்குட்பட்டு எழுதப்பட்ட சரித்திர நாவல் அல்ல இடக்கை. ஆனால் அவ்விதிகளுக்குட்பட்டு எழுதப்பட்ட நாவல்களில் என்ன வசீகரம் இருக்குமோ அதைத்தாண்டிய வசீகரத்தை கொண்ட கதை வளர்ச்சியும், அதீதப் புனைவும் கொண்டிருக்கிறது இடக்கை.

உங்களை வேறு காலத்திற்குக் கடத்திச் செல்லும். ஆனால் சம காலத்தைக் குறித்து யோசிக்கவும் வைக்கும். ராஜாக்களின் காலத்தில் நடக்கிற கதையப் படிக்கிற போது இன்றைய பேரறிவாளனும் உங்கள் நினைவில் வரலாம். அல்லது நீதிக்காகக் காத்திருக்கிற எவர் வேண்டுமானலும் உங்கள் நினைவில் வரலாம்.

அதிகப் பக்கங்கள் கொண்ட நாவலைப் படிக்கும் போது எப்போது முடியும் என்று தோன்றுவது இயல்பு. ஆனால் இடக்கையின் இறுதிப் பக்கமான 358 ம் பக்கத்தை முடிக்கும் போது இன்னும் இந்தக் கதை வளர்ந்து இருக்கக் கூடாதா என்று ஏங்க வைத்தது….

பிரியங்களுடன்

ராம்.

22 ஏப்ரல் 16

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: