பிலோ இருதயநாத்

இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்டு அதை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு மிக நுட்பமாக கட்டுரைகள் எழுதியவர்  பிலோ இருதயநாத். 


சென்னை மந்தை வெளியில் உள்ள லாசர் கோவில் தெருவில் வசித்தவர். 1915ல் மைசூரில் பிறந்த இவர் சாந்தோமில் படித்தார். பள்ளி ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகாலம் வேலை செய்திருக்கிறார்.


இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றியலைந்தவர் என்பவர் இவரது தனிச்சிறப்பு. பயண நாட்களில் சைக்கிளை மரத்தின் ஒரத்தில் நிறுத்தி சைக்கிள் கேரியரை மரத்தோடு இணைக்கும் பலகையை போட்டு படுத்து உறங்க கூடியவர். மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  29 புத்தகங்கள் வெளியாகி உள்ளன.


எனது பள்ளி நாட்களில் இவரை தேடித்தேடி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் இவரது புத்தகம் ஒன்றை பழைய புத்தக கடை ஒன்றில் வாங்கி படித்தேன். பயணம் ஒரு கலை,  ஏமாந்தால்..என்ற அந்த புத்தகம் அவரது காட்டு வாழ்க்கை அனுபவத்தின் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளை  விவரிக்கிறது.


பிலோ இருதயநாத்தின் அப்பா டாக்டர் ஏ.எப். மைக்கேல். பொது மருத்துவர். உலக யுத்ததின் போது கேப்டனாக பணியாற்றியிருக்கிறார். அதனால் பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்த அனுபவம் அவருக்கிருந்தது. இருதயநாத்தின் தாய் வழி பாட்டனோ, இந்தியாவிற்கு வரும் வெள்ளைக்காரர்களுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிக்காட்டும் வழிகாட்டி. ஆகவே அவரும் ஒரு ஊர்சுற்றியே.


அந்த உத்வேகம் தான் தன்னையும் ஊர் சுற்ற செய்தது என்று குறிப்பிடும் இருதயநாத் ஆதிவாசிகளை நிறைய புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் முறையாக பாதுகாக்க படாமலும் ஆவணப்படுத்த படாமலும் இன்று அழிந்து போய்விட்டன.


பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு அவர் தரும் குறிப்புகள் மிக முக்கியமானவை.  அவர் பலமுறை வலியுறுத்தும் ஒரே விஷயம் எங்கே பயணம் செய்ய நினைத்தாலும் தனியே பயணம் செய்யுங்கள். முடிந்தால் துணைக்கு ஒரு நண்பரோடு பயணம் செய்யலாம். ஆனால் இரண்டு  பேருக்கு மேல் கூட்டமாக பயணம் செய்தால் அது எதற்கும் ஒத்துவராது. ஆளுக்கு ஒரு யோசனை பிறக்கும். ஆளுக்கு ஒரு விருப்பம் இருக்கும். சாப்பாடு, தூக்கம் , பொழுதுபோக்கு என்று பயணம் விரயமாகிவிடும். அதுபோலவே நிறைய பார்க்க வேண்டும் என்று எப்போதும் நினைக்காதீர்கள். பார்த்த விஷயங்களில் ஆழமாக கவனம் செலுத்துங்கள் என்பதே முக்கியம்.கசவா என்ற பழங்குடியினரை காண்பதற்காக அவர் ஒரு முறை மசினிகுடி என்ற மைசூர் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். அதை பற்றி எழுதும் போது அவர் தெரிவிக்கும் விஷயங்கள் ஆச்சரியமூட்டுபவை


மசினி என்பது  மலைவாசிகளின் தெய்வம். அதன் வீடு என்பதால் அந்த இடத்திற்கு மசினிகுடி என்று பெயர். தென்னிந்தியாவில் உள்ள பூர்வீகக் குடிகளில் கசவா என்ற மலைவாழ்மக்களே மிகவும் குறைந்த எண்ணிக்கையுடைவர்கள். அவர்களது மொத்த எண்ணிக்கை 423. அவர்கள் மலையடிவாரத்தில் உள்ள சதுப்பு நிலங்களில் வாழ்கிறார்கள்.  அவர்களது தொழில் யானையின் கழிவை சேகரித்து அதை விற்பது தான். இந்த கழிவுப்பொருளை வாங்கிக் செல்வதற்கு தனியே வணிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் லாரியில் வந்து சேகரிகப்பட்ட லத்திகளை வாங்கி போகிறார்கள்.


மசினிகுடியிலிருந்து பத்துமைல் சென்றால் கசவர்களை காணமுடியும். ஆனால் அந்த மலையடிவாரம் பற்றி பயமுறுத்தும் பலகதைகள் உள்ளன. காட்டிற்குள் வழிதெரியாமல் தட்டுதடுமாறி பாதையை கண்டுபிடித்து கசவர்களை சந்தித்து அவர்களுக்கு யானை பற்றி தெரிந்த விஷயங்கள் அத்தனையும் சேகரித்து வந்திருக்கிறார் இருதயநாத்.


தமிழகத்தில் உள்ள ஆதிவாசிகள் பற்றிய இவரது கட்டுரைகள் மிகுந்த கவனத்துடன் சுவாரஸ்யமாக எழுதப்பட்டவை. நாட்டார் வழக்காற்று துறை இன்று முன்னெடுக்கும் பல ஆய்வு முயற்சிகளை இவர் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரால் சுற்றியலைந்து செய்திருக்கிறார்.


தொடர்ந்த பயணத்தின் வழியே இவர் அடைந்த அனுபவங்கள் அற்புதமானவை. அவற்றை நகைச்சுவை உணர்வு ததும்ப எழுதியிருக்கிறார். பிலோ இருதயநாத் காடர்கள் பற்றி மிக விரிவான ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்.


ஒரு சைக்கிள். தலையில் தொப்பி, கறுப்பு கண்ணாடி, பாக்ஸ் டைப் கேமிரா  அணிந்த அவரது தோற்றம் தனித்துவமானது.


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் இருதயநாத்திடம் மற்றவர்களை போல கதை கட்டுரைகளை நீங்களும் எழுத முற்பட வேண்டும். காட்டிற்கு சென்று அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்கள் வாழ்வினை பற்றி சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு எழுதுங்கள் என்று சொன்ன ஆலோசனையை அப்படியே மனதில் ஏற்றுக் கொண்டு பயணம் செய்ய துவங்கி இந்தியாவின் அத்தனை முக்கிய காடுகளுக்குள்ளும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.


இவரது கட்டுரைகள் இன்றும் முழுமையாக தொகுக்கபடாமல் இருக்கின்றன. அவர் காட்டில் சேகரித்த பொருட்கள், புகைப்படங்கள், குறிப்புகள் என்னவாகின என்று தெரியவில்லை.


 மலைவாசிகள் இன்றும் அவரை அறிந்து வைத்திருக்கிறார்கள்.


ஊட்டி பகுதியில் உள்ள தோடர்களை ஒரு முறை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது பலவருசங்களுக்கு முன்பாக தங்களை தேடி வந்து ஆய்வு செய்த  தொப்பி அணிந்த ஒரு ஆளை பற்றி சொன்னார்கள். அது பிலோ இருதயநாத் என்பதை இந்த நூலின் வழியே தான் தெரிந்து கொள்ள முடிந்தது.


தனது பணியை பற்றி குறிப்பிடும் இருதயநாத் காட்டிற்குள் சென்று ஆதிவாசிகளை சந்திக்கும் போது ஒவ்வொரு நாளும் தான் படுப்பதற்குள் அன்று தான் பார்த்த கேட்ட விஷயங்களை குறிப்பு நோட்டில் விரிவாக எழுதிவிடுவேன். அதன் பிறகு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதுபோல ஏதாவது சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளதா என்று சங்க இலக்கிய பாடல்களை வைத்து கொண்டு தேடுவேன். ஆச்சரியமாக பல ஒற்றுமைகளை காணமுடிந்தது என்கிறார்.


நேஷனல் ஜியாகிரபியில் காட்டிற்குள்ளாகவே சுற்றியலையும் கானுயிர் புகைப்பட கலைஞர்களையும், ஆய்வாளர்களையும் காணும் போது அப்படி தமிழ்நாட்டில் யாரும் இல்லையா என்று அடிக்கடி தோன்றும். ஊடகங்களின் வருகைக்கு முன்பாகவே தன்னுடைய சுயமுயற்சியால் இருதயநாத் மேற்கொண்ட பயணங்களையும் சாகசங்களையும் காணும்போது கானுயிர் பயணங்களின் முன்னோடி அவரே என்றுபடுகிறது.


**** 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: