கலாப்ரியா


நவீன தமிழ் கவிதையுலகின் முக்கிய கவி ஆளுமையான கலாப்ரியா  தனது இளமைகால ஞாபகங்களை  நினைவின் தாழ்வாரங்கள் என்று  தனது  வலைப்பக்கத்தில்  எழுதி வருவதை தொடர்ந்து வாசித்து  வருகிறேன். அந்திமழை இணையதளத்தில் இது தொடராக வெளியாகிறது.காலம் அப்படியே புரண்டு படுத்தது போன்ற துல்லியம் கொண்ட அற்புதமான பதிவுகள்.  கவித்துவமும் ,சுய எள்ளலும் ,கேலியும் கலந்த சரளமான உரைநடை. எவ்விதமான ஒளிவு மறைவுமற்று மனம் திறந்து எழுதப்பட்டிருக்கிறது.. 


திருநெல்வேலி பற்றி புதுமைபித்தன் எழுதியது ஒரு விதம். வண்ணதாசன் வண்ணநிலவன் காட்டிய திருநெல்வேலி இன்னொரு வசீகரம். கலாப்ரியா தன் நினைவுகளின் வழியே அடையாளம் காட்டும் திருநெல்வேலியோ இந்த மூன்றிலிருந்தும் மாறுபட்டது.


எவ்வளவு மாறுபட்ட மனிதர்கள். சுபாவங்கள். ஒரு ஆவணப்படத்தை காண்பது போல அத்தனை நெருக்கமாகவும் ஈரத்துடனும் திருநெல்வேலி எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சாத்தியமாக்குவது கலாப்ரியாவின் மொழி. எதிரில் அமர்ந்து உரையாடுவது போன்ற நெருக்கத்தைத் தருகிறது.


வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரிந்தவனே உயர்ந்த கலைஞன் ஆகிறான். அப்படி தன் குடும்பத்தின் வீழ்ச்சியை,வேதனைகளை எழுதும் போது கூட கலாப்ரியாவிடம் சுயஎள்ளல் காணமுடிகிறது. அந்த சிரிப்பை வாசித்து முடிக்கையில் மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது.


தனது ஞாபகஅத்யாயங்களுக்கு கலாப்ரியா பழைய சினிமா பாடல்களின் வரிகளை தலைப்பாக  வைத்திருக்கிறார். அதை வாசிக்கையில் அந்த வரிகள் தனித்து உருவாக்கும்  கிளர்ச்சியும் ஈர்ப்பும் அற்புதமானது. இதே பாடல்களை பலமுறை கேட்டிருக்கிறேன். அப்போது இல்லாமல்  தனித்து அடையாளம் காட்டும் போது அவை நினைவை மீட்டிக் கொண்டேயிருக்கின்றன.


தன்னை சுற்றிய தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்துவம் எப்படி உருவாகிறது என்பதற்கு நிறைய உதாரணங்களை இந்தத் தொடரில் காணமுடிகிறது. இவ்வளவு வெளிப்படையாக தனது அந்தரங்களை பகிர்ந்து கொண்ட கவி வேறு யாருமில்லை.


கலாப்ரியாவின் நினைவுகளில் அவரது சொந்தவாழ்வோடு தமிழ்சினிமாவின் மாற்றங்களும் சினிமா  நம் மனதில் என்னவிதமான கிளர்ச்சிகளை, உந்துதலை,  பாதிப்பை உருவாக்கியது என்பதையும் ஒரு சேர வாசிக்கமுடிகிறது என்பதே இதன் கூடுதல் சிறப்பு.


இதை படிக்கையில் கவிஞர் விக்ரமாதித்யன் இது போல ஒரு தன் நினைவுகளை தனித்து பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. அவரது அலைச்சலும் தேடுதலும் எண்ணிக்கையற்ற நிகழ்வுகள், விசித்திர மனிதர்களை உள்ளடக்கியது.


கவிஞர் கலாப்ரியாவின்  நினைவின் தாழ்வாரங்களை  இலக்கிய வாசகர்களும், கவிஞர்களும், வலைப்பதிவர்களும் அவசியம் வாசிக்க  வேண்டும்


http://kalapria.blogspot.com/


http://andhimazhai.com/


***

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: