நீதி மறுக்கபட்டவர்களின் குரல்

தனது முகநூல் பக்கத்தில் இடக்கை நாவல் குறித்து இயக்குனர் வசந்தபாலன் எழுதியிருக்கிறார்.

அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

•••

குமாரசாமி\ சங்கர்ராமன்\அண்ணாநகர் ரமேஷ்\ சாதிக் பாட்ஷா\ தினகரன் எரிப்பு சம்பவம்\ தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்\ ராமஜெயம்/ லீலாவதி/ தா.கிருஷ்ணன் இந்தப் பெயர்கள் எல்லாம் நமக்கு உணர்த்தியது என்ன???.

நீதி மறுக்கப்பட்டு விட்டது அல்லது நீதி மறைக்கப்பட்டு விட்டது என்பதை தானே.

இப்படி நீதி மறுக்கப்பட்டவர்களின் குரல் அல்லது கதைகள் இன்று உலகமெங்கும் ஒலிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.இலங்கையின் சிறையில் வாடுபவர்கள், ஆந்திராவின் சிறையில் வாடுபவர்கள், துபாய் போன்ற மேலைநாடுகளுக்கு போனவர்கள் சிறையில் சிக்கிக்கொண்டு வெளிவரமுடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களின் குரல் இன்று உலகமெங்கும் உரத்துக் கேட்டவண்ணமுள்ளது.

பிரதமர் முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாக்குர் கண்ணீர் வீட்டு அழுகிறார். நாடுமுழுவதும் 3 கோடி வழக்குகள் தேக்கநிலையில் உள்ளன என்றும் அப்பாவி மக்கள் சிறையில் வாடுகின்றனர் சிறைகள் நிரம்பி வழிகின்றன என்று கூறுகிறார்.

10 லட்ச மக்களுக்கு 50 நீதிபதிகள் நியமனமும் முறையாக நடக்கவில்லை. ஜனநாயக நாட்டின் முக்கியத் தூணாக இருக்கும் நீதித்துறையை காப்பாற்றவேண்டிய நேரமிது என்று நீதிபதி தாக்குர் முறையிடுகிறார். அரசால் விஜய்மல்லையாவைக் கைது செய்யமுடியவில்லை ஆனால் கடனுக்காக தமிழக விவசாயி கடுமையாகத் தாக்கப்படுகிறான் இது தான் நீதித்துறையின் அவலம்.

நீதி பற்றிய ஒரு விசாரணை இன்றைய சூழ்நிலையில் மிக அவசியம் . இதை எஸ் ராமகிருஷ்ணன் எழுதி சமீபத்தில் வெளியான நாவல் இடக்கை நாவல் மிக அழகாகக் கையாண்டு உள்ளது

இதில் நீதி குறித்த விசாரணையும் நீதி மறுக்கப்பட்டவர்களின் குரலும் அழுத்தமாக விவரிக்கபட்டுள்ளது. இதனை ஒரு அரசியல் நாவல் என்றே சொல்லலாம். நீதி குறித்த ஒரு தத்துவ விவாதத்தை நாவலாக மிக அழகாக உருவாக்கியதில் எஸ் ரா வெற்றி கண்டிருக்கிறார் .

இன்றைய வாழ்க்கையோடு தமிழகத்தோடு பொருத்திப் பார்க்கக்கூடிய அத்தனை சம்பவங்களும் நிகழ்வுகளும் இருந்தாலும் ஔரங்கசீப் காலத்தில் நடப்பதாகவே நாவல் புனையப்பட்டுள்ளது.

ஔரங்கசீப் எப்படிபட்ட ஒரு கொடுங்கோலன் என்று நமக்கு வரலாறு உணர்த்தும் ஆனால் அவனுடைய கடைசிகாலத்தில் நீதி அல்லது உண்மை அல்லது அறம் அவனை இறுதிப்படுக்கையில் எத்தனை ரணப்படுத்தி எடுத்தது என்று உண்மையை புனைவாக எழுதியுள்ளார்.
மயிலாசனத்தில் அமர்ந்த அரசன் தன் இறுதி காலத்தில் எந்த நேரமும் யாராலும் கொடூரமாக கொல்லப்படக்கூடும் என்ற எண்ணத்திலே இடையறாது துன்பத்தில் உழன்று கொண்டேயிருக்கிறான்.

ஔரங்கசீப் தன் காலத்தில் நடந்த ஒன்றை நினைத்து பார்க்கிறான்.ஒரு போரில் வெற்றி பெற்ற படைவீரர்கள் ஒரு தாம்பாளத்தட்டில் வைத்து ஆயிரம் வெட்டப்பட்ட மனித நாக்குகளை காட்டுகிறார்கள்.அதைக் கண்டு சந்தோசப்படுகிறான்.
பிஷாடன் என்ற மன்னன் தனது சுயநலத்திற்காகச் சட்டத்தை உருவாக்குகிறான் அதிகாரம் செய்கிறான் அதை மீறுபவர்களைத் தண்டிக்கிறான் கொலை புரிகிறான்.

இப்படித்தான் காலம் காலமாக மன்னர் ஆட்சி காலத்தில் நீதி நிறுவப்பட்டிருக்கிறது ஆனால் அத்தனையும் அநீதியே,கடந்த காலத்தின் மன்னர்கள் அனைவரும் இம்மைஅரசன் 23ம்புலிகேசிகள் தான் முட்டாள்தனமான நீதிகளையும் தண்டனைகளையும் மக்களுக்கு இடையறாது வழங்கியபடியே தான் இந்த உலகம் இயங்கியது என்பதை நாவல் உணர்த்துகிறது .மனுநீதி சோழன் என்பது முழுக்கமுழுக்க கற்பனை பெயர் மட்டும் தானா?                                …
ஔரங்கசீப் இறந்து போன இரண்டாம் நாள் சத்கர் நகரில் வாழும் தூமகேது திருட்டுக்குற்றம் சுமத்தி கைது செய்யப்படுகிறான்.சிறையில் அடைக்கப்படுகிறான்.அவனுக்கு நீதி மறுக்கப்படுகிறது.குரல் துண்டிக்கப்பட்ட போன நாயைப் போல உழலுகிறான். அலைகிறான். சிறையில் இருந்து தப்பிக்கிறான். தொலைந்து போன குடும்பத்தைத் தேடி அலைகிறான் தவிக்கிறான் அநாதையாய் பரிதவிக்கிறான் ஒருநாள் கொலை புரிகிறான்.வயதாகி தனியனாகி ஒடுங்கிப் போகிறான். தூமகேதுவின் வாழ்க்கையை சொல்வதோடு நாவல் பல்வேறு விதமான நீதி மறுக்கப்பட்டவர்களின் குரலையையும் சேர்த்து ஒலிக்கிறது.

நீதி கேட்டு ஒரு பெண் புழு நீதிமன்றம் போகிறது. அங்கே நீதி மறுக்கப்படுகிறது கங்கையிடம் நீதி கேட்கிறது அங்கேயும் நீதி மறுக்கப்படுகிறது. முடிவில் கடவுளிடம் நீதி கேட்கிறது.கடைசியில் அதற்கான நீதி வழங்கப்பட்ட போது குற்றவாளியை புழு மன்னித்து விடும்படி கூறிவிடுகிறது , அது தான் மகத்தான தண்டனை.

ஆயிரத்தொரு இரவுகள் கதைகளில் காணக்கிடைக்கிற நீதிக்கதைகள் போல நாவல் நெடுக குறுங்கதைகள் நிறைந்து வழிகிறது. அத்தனை கதைகளும் அற்புதமான சிறுகதைகள் என்றே கூறலாம்.அரவாணிகள் பற்றி உலகக்கவனம் ஏற்பட்ட இந்த உலகில் அஜ்யா என்ற அரவாணியின் கதை மிக அற்புதமான கதை

மண்உருவமான லகியாவின் கதை இந்திய துணைக்கண்டத்தின் அத்தனை பெண்களின் நிலையை உணர்த்துகிற அற்புதமான கதை.பிறப்பிலேயே மண் உருவத்தால் ஆன ஒரு பெண் லகியா. அவளை ஒருவன் திருமணம் செய்கிறான்.அவள் கண்ணீர் மட்டும் விடக்கூடாது.கண்ணீர் விட்டு அழுதால் உடல் கரையத் துவங்கிவிடும்.கணவனின் போதைக்காக அழுது அழுது தன் கணவனுக்கு தன்னையே குடிக்கத்தருகிறாள். ஒருநாள் அவள் அழுது அழுதே கரைந்து தண்ணீரோடு தண்ணீராய் போய்விடுகிறாள்.நம் வீட்டு பெண்களும் அப்படி தானே கணவனுக்காக குழந்தைகளுக்காக குடும்பத்துக்காக அழுதழுது கரைந்து போகிறார்கள்.எத்தனை அற்புதமான கதை.

இப்படி நாவல் நெடுக குறுங்கதைகள் நிரம்பி வழிகின்றன. நாவலில் வரும் மையக்கதையைப் போலவே குறுங்கதைகள் அத்தனை தித்திப்பானவை. வேம்பை போன்று வாழ்க்கையின் கசப்பையும் சொல்ல கூடியவை.நாவல் படித்து முடித்தவுடன் ஒருவித கசப்பும் பானக்காரம் குடித்த தித்திப்பும் நாக்கில் ஒட்டியபடியிருக்கிறது.

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: