கண்காணிப்பின் வலை.

நேற்று Eye in the Sky என்ற பிரிட்டீஷ் திரில்லரைப் பார்த்தேன்.

நைரோபியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் ஒளிந்துள்ளதாகப் பிரிட்டீஷ் ராணுவம் அடையாளம் காணுகிறது. அவர்கள் தற்கொலைப்படையினர் என்பதால் வான்வழிதாக்குதல் மூலம் அவர்களின் இருப்பிடத்தை அழிக்க முற்படுகிறார்கள். இதற்கான விண்ணிலிருந்து அந்த வீடு கண்காணிக்கபடுகிறது.

தீவிரவாதிகளை ஒழிப்பது கூட்டு நடவடிக்கை என்பதால் இங்கிலாந்துடன் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகிறது.

தீவிரவாதிகளின் இருப்பிடத்திற்குள் சிறிய வண்டு போல ரகசிய கேமிரா பறந்து போய் அவர்களைப் படம்பிடிக்கிறது.

வான்தாக்குதல் நிகழ்த்தப்படும் நேரத்தில் அந்த வீட்டின் அருகே அலியா என்ற சிறுமி ரொட்டி விற்பதற்காக வந்து சேருகிறாள். அந்தச் சிறுமி ஏவுகணை தாக்குதலில் கொல்லப்படக்கூடும் என்பதால் ஏவுகணையைச் செலுத்த இருக்கும் பைலட் ஸ்டீவ் தாக்குதல் நடத்த மறுக்கிறான்.

குறைந்தபட்ச சேதத்துடன் இந்தத் தாக்குதலை எப்படி நடத்துவது எனப் பிரிட்டீஷ் கர்னல் ஹெலன் திட்டமிடுகிறாள்.

சிறுமியை அங்கிருந்து எப்படி அகற்றுவது என யாருக்கும் புரியவில்லை. இதற்கான முனைப்புகள் நடந்து கவனம் திசைமாறுகிறது.

இன்னொரு பக்கம் தீவிரவாதிகளைத் தாக்கும் போது அப்பாவி சிறுமி ஒருத்தி அறிந்தே கொல்லப்பட்டாள் என நாளை ஊடகங்கள் நம்மை விமர்சிக்கும் எனப் பிரிட்டீஷ் அரசின் ஆலோசகர்கள் அனுமதி தர மறுக்கிறார்கள்.

இந்த ஊசலாட்டத்தின் ஊடே தீவிரவாதிகள் வீட்டை விட்டு தாக்குதலுக்காக வெளியேற முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிறுமியின் உயிருக்காக ராணுவமும் இரண்டு நாட்டு உயரதிகாரிகளும் எப்படிக் கருத்துமுரண்டுபாடு கொள்கிறார்கள். ராணுவம் முடிவில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பரபரப்பாகச் சொல்கிறது இப்படம்.

சமீபத்தில் பார்த்த படங்களில் இவ்வளவு விறுவிறுப்பான படம் எதையும் காணவில்லை.

நைரோபியிலுள்ள அப்பாவி சிறுமியின் உயிர் மீது பிரிட்டீஷ் அரசு எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பது படத்தின் மையக்கதையாக இருப்பது ஒரு அரசியல். சமீபமாக இங்கிலாந்தில் ஏற்பட்டு வரும் தீவிரவாத தாக்குதலுக்குப் பதில் தரும்படியாகவே இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது.

வான்வழிதாக்குதல் படத்தின் மையக்கதை என்ற போதும் நமக்கு ஏற்படும் அச்சம். கண்காணிப்புக் கேமிராக்களே. விண்ணிலிருந்து எல்லோரது அந்தரங்களையும் கேமிராக்கள ஊடுவுருகின்றன. கண்ணுக்கு தெரியாத தூரத்திலிருந்து யாரும் யாரையும் அழித்து விட முடியும் என்பது பயத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

பிரிட்டீஷ் படம் என்பதால் அவர்கள் கருணையானவர்கள் போலவும் அமெரிக்கா அதிக உணர்ச்சிவசப்படக்கூடியது என்றும் படம் முழுவதும் காட்டப்படுகிறது. ஆனால் சமகால நிகழ்வுகள் காட்டும் உண்மை இரண்டும் அண்ணன் தம்பிகளே என்பதே.

படத்தில் கர்னலாக ஹெலன் என்ற பெண்ணை முக்கியப்படுத்தியது தான் உணர்ச்சிபூர்வமான திரைக்கதையின் முதல்நகர்வாக அமைகிறது.

நைரோபியிலுள்ள ஆயிஷா வீட்டில் படம் துவங்குகிறது. அவள் ரொட்டி சுடுகிறாள். அவளது மகள் அலியா அதைக் கொண்டு போய் விற்று வருகிறாள். அலியா என்ற விளையாட்டு சிறுமிக்கும் அவளது தந்தைக்குமான உறவு அழகாக வெளிப்படுத்தபடுகிறது.

மறுபுறம் லண்டனில் ஹெலனின் அதிகாலை நேரம் துவங்குகிறது. அவள் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் பிரிவின் தலைவராகயிருக்கிறாள். படம் முழுவதும் ஹெலன் தனது தேசத்தின் நலனிற்காகப் போராடுகிறவளாகக் காட்டப்படுகிறாள். இது ஒரு தந்திரம். பிரிட்டீஷ் பெண்களைப் பற்றி ஊடகம் உருவாக்கும் பிம்பம்.

இதன் மறுபுறம் ஏவுகணை தாக்குதல் விமானத்தின் பைலட்டாக இருக்கும் பெண்ணும் கருணை மிக்கவளாகக் காட்டப்படுகிறாள். கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களே இரக்கமற்ற, கறாரான மனிதர்களாகச் சித்தரிக்கபடுகிறார்கள்.

படத்தின் முடிவில் ஸ்டீவ் வாட்ஸ் விமானத்தை விட்டு இறங்கி சோகமாகத் திரும்புகிறான். நன்றாக ஒய்வு எடுத்துக் கொள். சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறாய் என அவனது தலைமை அதிகாரி வாழ்த்துகிறார்.

லண்டனில் ராணுவம் மற்றும் அரசு உயரதிகாரிகள் அனைவரும் வெற்றிபெற்ற மனநிலையில் வீடு திரும்புகிறார்கள். நைரோபியில் மட்டும் துயரம் தீரவேயில்லை.

Tsotsi படத்தை இயக்கிய Gavin Hood இப்படத்தை இயக்கியிருக்கிறார். Haris Zambarloukosன் ஒளிப்பதிவும் மற்றும் சிறந்த படத்தொகுப்பு பிரமிக்க வைக்கிறது.

••

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: