ஊரும் உறவும்

திதி என்ற கன்னடப்படத்தைப் பார்த்தேன்.

சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையே உருவாகவில்லை. மாறாக ஒரு கிராமத்தில் நம் கண்முன்னே எல்லாச் சம்பவங்களும் நடப்பதாகவே இருந்தது. ஆவணப்படத்தைக் கூட இவ்வளவு துல்லியமாக எடுக்க முடியுமா என்பது சந்தேகமே.

நடித்திருப்பவர்கள் அத்தனை பேரும் கிராமத்து மனிதர்கள். வெகு யதார்த்தமாகப் படமாக்கபட்டிருக்கிறது. இவ்வளவு நிஜமாக ஒரு படத்தை உருவாக்கிவிட முடியும் என்பது சாதனையே. இதனாலே Locarno International Film Festival லில் இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது.

படத்தின் இயக்குனர் ராம்ரெட்டி. டெல்லியில் படித்தவர். கர்நாடகாவின் முதல் முதலமைச்சரான செங்கலராய ரெட்டியின் கொள்ளுப்பேரன். இது இவரது முதல்படம்.

ERE GOWDA என்ற இளம் எழுத்தாளரின் கதை. பள்ளிபடிப்பை முடித்தவுடன் ஆட்டோமொபைல் கம்பெனி ஒன்றில் செக்யூரிட்டியாக வேலைக்குச் சேர்ந்தார் ERE GOWDA அவரது ஒரே ஆசை சினிமா இயக்குனராக வேண்டும் என்பது, ஆனால் ஆங்கிலம் தெரியாது. சினிமாவிற்குள் யாரையும் பழக்கமில்லை. அதிர்ஷ்டவசமாகப் பள்ளிவயது நண்பரான ராமின் நட்பு மீண்டும் கிடைத்தது. சினிமா எடுக்க ஆசைப்பட்ட ராமிற்காகத் தனது ஊரில் நடந்த சம்பவம் ஒன்றைத் திரைக்கதையாக்கி திதி படத்தின் மூலம் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதைப்பெற்றிருக்கிறார்.

இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது ஈரேகௌடாவின் கிராமம். இருவரும் அங்கேயே தங்கியிருந்து இக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். படமாக்கபட்ட விதமும் நடிப்பும் அற்புதம்.

குறிப்பாகத் தம்மன்னாவின் மகனின் காதல் திரையில் இதுவரை நாம் காணாத அழகு. இவ்வளவு இயல்பாகக் காதலை யாரும் படமாக்கியதில்லை.

படம் முழுவதும் தாடிக்காரக் கிழவரின் அட்டகாசம் தான்.  உண்மையில் அவர் தான் படத்தின் ஹீரோ. அவர் தனது வாழ்க்கையில் நடந்தவற்றைச் சொல்லிமுடித்துவிட்டு இது உண்மையில் நடந்ததா, இல்லை நேற்றிரவு கண்ட கனவை தான் சொல்கிறேனா எனத்தெரியவில்லை என்று சொல்லுமிடத்தில் சிலிர்த்துப் போனது.

படம் முழுவதும் அவர் மனம் போன போக்கில் நடந்து சுற்றிக் கொண்டேயிருக்கிறார். குடிக்கிறார். ஆடுமேய்க்கும் கீதாரிகளுடன் அவர் ஆடுபுலியாட்டம் ஆடுவதும். அவர்களைக் குடிக்கவைத்து வேடிக்கை பார்ப்பதும். அனைவருக்கும் சேர்த்துச் சமைக்கக் கோழிக்கறி வாங்க காசு தருவதும். பணத்தாசை பிடித்த மகனிடம் இறுதிக் காட்சியில் நடந்து கொள்ளும் விதமும் அபாரம். அது போலவே கீதாரி வீட்டுப்பெண்ணாக நடித்துள்ள கௌரியின் இயல்பான நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

மண்டியாவை அடுத்துள்ள சிறிய கிராமம் ஒன்றில் செஞ்சுரி கௌடா என்ற 101 வயது முதியவர் இறந்து போவதில் படம் துவங்குகிறது. செஞ்சுரி கௌடாவின் அறிமுகக்காட்சியில் அவரது கேலியும் கிண்டலும் அசலானவை. இறந்து போனவருக்கான இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

அப்போது செஞ்சுரி கௌடாவின் மகன் கடப்பா ( தாடிக்கார கிழவர் ) அறிமுகமாகிறார். ஒசியில் பீடி கேட்டு வாங்கும் கடப்பா அடுத்தவர் சட்டை பாக்கெட்டில் கைவிட்டுப் பணத்தை எடுக்கத் தயங்காதவர்., நாடோடி போல நடந்து அலையும் கட்டப்பா செத்துப் போன ஆளிற்கு எதற்கு இத்தனை சடங்குகள் எனச் சலித்துக் கொள்கிறார்.

இந்தக் கடப்பாவின் மகன் தம்மன்னா தனது தாத்தாவான செஞ்சுரி கௌடாவிற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். இந்த முயற்சிக்குத் தடையாக இருப்பது கடப்பா. காரணம் அவரது பெயரில் தான் நிலம் உள்ளது.

அதைத் தன் பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி தம்மன்னா வற்புறுத்துகிறார். ஆனால் கிழவர் ஒத்துக் கொள்ளவில்லை.

இன்னொரு பக்கம் தம்மன்னாவின் மகன் கிடை போடுவதற்காக வந்துள்ள ஒரு இளம்பெண்ணைத் துரத்திக் காதலிக்க ஆரம்பிக்கிறான். ‘

சொத்தை அடைவதற்காகத் தனது தந்தை செத்துப் போய்விட்டதாக மரணச் சான்றிதழ் கேட்டு அலைகிறான் தம்மன்னா.

இதற்கிடையில் இறந்து போன செஞ்சுரி கௌடாவிற்காகத் திதி கொடுக்க நாள் குறிக்கப்படுகிறது. அதற்குப் பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் விநியோகம் செய்கிறார்கள். கறிச்சோறு போட ஆடு வாங்க வேண்டும் என அநியாய வட்டிக்கு கடன் வாங்குகிறான் தம்மன்னா.

அந்தப் பணத்தைக் கொண்டு பொய்சான்றிதழ் வாங்க கையூட்டுத் தருகிறான். ஒரு வழியாகப் பொய்சான்றிதழ்களுடன் நிலத்தை ஒரு ஆளிற்கு விற்க முடிவு செய்து பணம் கைமாறும் போது உண்மை தெரிந்துவிடுகிறது.

திதி நடக்கும் நாளில் பிரச்சனை உருவாகிறது. இறந்தவர் சொர்க்கத்திற்குச் செல்லும் கதை சொல்லும் நிகழ்ச்சியோடு படம் நிறைவு பெறுகிறது. இயல்பாகத் துவங்கியது போலவே இயல்பாகவே படம் நிறைவு பெறுகிறது.

கிராமத்து மனிதர்களின் இயல்பான நகைக்சுவை படத்தின் தனிச்சிறப்பு. அசலான கிராமத்துவீதிகள். எளிய உடைகள். ஒப்பனையில்லாத முகங்கள் என நாம் திரையில் புதிய அனுபவத்தை பெறுகிறோம். சூதாட்டம். குடி. அநியாய வட்டிக்கு கடன் வாங்குவது, ஜோசியம், கறிவிருந்துக்காக அலையும் மனிதர்கள், ஊர் ஊராகப் போய் செம்மறிகளை கிடைபோடும் ஆடு மேய்யப்பவர்களின்வாழ்க்கை என நுட்பமாக படம் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது.

படம் பார்த்து முடித்த போது ஒரு நாவலை வாசித்து முடித்தது போலவேயிருந்தது.

குறைந்த முதலீட்டில் யதார்த்தமான கதை ஒன்றை தொழில்முறை சாராத நடிகர்களைக் கொண்டு மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார் ராம் ரெட்டி. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இப்படத்திற்குக் கிடைத்துள்ளன. சமகால இந்திய சினிமாவில் இப்படம் மகத்தான கலைப்படைப்பு.

கன்னடம், மலையாளம், மராத்தி என இளந்தலைமுறை இயக்குனர்களின் படங்கள் இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிவருவது சந்தோஷம் அளிக்கிறது

••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: