புத்தக உரையாடல்


உயிர்மை இதழ் புதிய புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில் புத்தக விமர்சனத்திற்கான சிறப்புபகுதி ஒன்றினை இதழில் துவக்கியுள்ளது. அதில் பல்வேறு புதிய புத்தகங்கள் அறிமுகமும் விமர்சனமும் செய்யப்படுகின்றன. இத்துடன் மாதம் ஒரு எழுத்தாளரின் ஒரு குறிப்பிட்ட புத்தகம் சார்ந்த உரையாடல் நடைபெறுகிறது.


இந்த மாத உயிர்மையில் எனது சமீபத்திய சிறுகதை தொகுதியான  பதினெட்டாம் நூற்றாண்டின் மழை குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுப்பிய கேள்விகளும் அதற்கான எனது பதில்களும் இவை.


***
சமீபத்தில் வெளிவந்த உங்கள் சிறுகதைத் தொகுப்பு பதினெட்டாம் நூற்றாண்டி மழையில் உள்ள பல கதைகள் அவை இதழ்களில் வெளிவந்தபொதே வாசகர்களிடம் தீவிரமான உணர்வலைகளை ஏற்படுத்தின. உங்கள் சிறுகதை மொழியில் நீங்கள் இந்தத் தொகுப்பின் வழியாக இன்னொரு தளத்திற்கு நகர்ந்திருப்ப்பதாக கருதுகிறீர்களா?


சிறுகதைகள் எப்போதுமே சவாலன வடிவமாக இருக்கிறது. பழக்கம் காரணமாக ஒரு நல்ல சிறுகதையை எழுதிவிட முடியாது. இன்று சிறுகதையின் மையம் முழுமையாக மாறியிருக்கிறது.   என் கதைகள் சூதாடியின் கையிலிருக்கும் சீட்டுக்கட்டுகளை போல கிடைப்பதை வைத்து கொண்டு வேறுவேறு சீட்டுகளை எடுத்தும் மாற்றியும் கைவிட்டுமே  உருவாகிறது . இதில் உள்ள புதிர்மை தான் எழுத்தாளானாக என்னை வசீகரிக்கிறது. தினசரி வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் விசித்திரத்தையும் , விந்தையின் ஊடாக வெளிப்படும் அன்றாட உலகத்தையுமே நான் கதையின் முக்கிய சரடாக கொள்கிறேன்.


என் சமீபத்தைய கதைகள் துக்கத்திலிருந்து விளைபவை. துக்கம் மொழியற்றது. அதற்காக சொல்லப்படும் காரணங்கள் வெறும் கருதுகோள்கள் மட்டுமே. திட்டு திட்டாக மேகம் மிதந்து கொண்டிருப்பது போல நம் யாவர் மனதிலும் காரணம் அறிந்தும் அறியாமலும் துக்கம் மிதந்து கொண்டிருக்கிறது. அதை நாம் சில வேளைகளில் மட்டுமே நெருக்கமாக உணர்கிறோம். 


இந்த தொகுப்பில் உள்ள பெரும்பான்மை கதைகளில் ஆண் பெண் என பேதமில்லாமல் துக்கமடைகிறார்கள். அதை தாளமுடியாமல் எதன் மீது சார்பு கொள்வது என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். அந்த தருணங்களில் மட்டுமே தன் இருப்பும் அக்கறைகளும் குறித்து தன்னை பரிசீலனை செய்து கொள்கிறார்கள்.


விதிவசம் என்று மனிதர்கள் அடையாளம் காட்டும் ஒவ்வொரு செயலின் பின்னும் ஒரு கதை ஒளிந்திருக்கிறது. 


 சிறுகதையின் இன்றைய சவால்  கதைக்கான மொழி மற்றும் சொல்முறை. இரண்டும் மிக புதியதாக இருக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் எழுத்தாளனின் அகப்பார்வையே கதையின் முக்கிய ரசவாதம். கதை சொல்வது மட்டும் கதையின் வேலையில்லை என்று தான் தோன்றுகிறது.


***
மனித இருப்பிற்கு நேரும் அவமதிப்பும் சிறுமையும்தான் இந்தக் கதைகளில் மைய்ய சரடாக இருப்பதாக ஒரு எண்ணம் ஏற்படுகிறது. இது இந்தக் காலகட்டத்தின் உங்கள் கதைகான தேர்வா அல்லது தற்செயலானதா?


அவமதிப்பும் சிறுமையும் நம் காலத்திற்கு மட்டும் உரியதில்லை. மாறாக நூற்றாண்டுகளாக மனிதர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை இதுவே.  எல்லா குடும்பங்களிலும் அவமானம், அவமதிப்பும் முறிந்த முள்ளாக புரையோடிப் போயிருக்கிறது. இதன் வலி அறியாத மனிதர்களே  இல்லை. அவமதிப்பு நம் இருப்பை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. அவமானத்தை மனிதர்கள் பகிர்ந்து கொள்வதேயில்லை. அதை ஒளித்து கொள்கிறார்கள். அந்த சுமை இன்னும் வலி தரக்கூடியது.  நம் காலத்தில் மனித அவமதிப்புகள் அன்றாடச் செயல்பாடாகிவிட்டது. அதிகாரம் மனிதனை அவமதிக்கும் உரிமை பெற்றுள்ளதாக எண்ணப்படுகிறது.அவமதிக்கபடும் மனிதன் எப்போதும் தான் தனியாள் என்றே உணர்கிறான். தன் வலியை வெளிப்படுத்தும் சொற்கள் கூட தன்னிடமில்லை என்று வருந்துகிறான்.  உலகம் கருணையற்றது என்று தனக்கு தானே சொல்லிக் கொள்கிறான். இந்த நிர்கதியும் ஆற்றாமையும் அடங்கிய கோபமும் தான் சமகால இலக்கியத்திற்கான முக்கிய பாடுபொருளாக நான் கருதுகிறேன். 


நம் ஒவ்வொருக்குள்ளும்  அவமதிப்பின் சரித்திரம் ஒன்று எழுதப்படாமலேயிருக்கிறது. தால்ஸ்தாய், டாஸ்டாயெவ்ஸ்கி, விக்டர்க்யூகோ, ஷேக்ஸ்பியர், காப்கா, மார்க்வெஸ் என்று பல முக்கிய படைப்பாளிகள் மனித அவமதிப்பிற்கும் சிறுமைக்கும் எதிராகவே எப்போதுமே எழுதி வந்திருக்கிறார்கள்.  எழுத்தின் செயல்பாட்டு தொடர்ச்சி அதுவே. அதை அறிந்தே நானும் செயல்படுகிறேன்.


***
இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன’ இந்தத் தொகுப்பில் உள்ள மிக அபூர்வமான கதை. அந்தக் குழந்தையின் மொளனத்திற்கும் பறவை என்ற படிமத்திற்கும் இடையிலான உறவை எப்படி இந்தக் கதையில் உத்தேசித்தீர்கள்?


மாநகர வாழ்க்கையில் நான் தொடர்ந்து காணும் காட்சி பெரும்பான்மை நேரங்களில் வானம் வெறுமையாகவே இருக்கிறது. ஒரு பறவை கூட கண்ணில் படுவதேயில்லை. வீடுகளின் அருகாமையில் மரங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் வந்தமரும் பறவைகளே இல்லை. ஒரு நாள் எல்டாம்சாலையில் சென்று கொண்டிருந்த போது வானக ஒலிக்கு இடையில் அபூர்வமான பறவையொன்றின் சப்தத்தை கேட்டேன். உடனே வாகனத்தை விட்டு இறங்கி அது என்ன பறவை என்று பார்க்க வேண்டும் என்று அருகாமைக்கு சென்றேன்.


 அப்படியான பறவையை அதன் முன்னே பார்த்ததேயில்லை.  மைனா போன்ற தோற்றமிருந்தது. ஆனால் அலகும் சிறியதாகவும் உடல்  காபி நிறத்திலிருந்தது. எங்கிருந்தோ வந்திருக்கிறது என்பது தெரிகிறது. அதன் பெயர் தெரியவில்லை. மறுபடி அந்த பறவை எப்போது சப்தமிடும் என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். அது கத்தவேயில்லை. வானக நெருக்கடி அதிகமானதும் அது பறந்து போய்விட்டது. எனக்கு மிக குற்றவுணர்ச்சியாக இருந்தது.


இது போலவே இன்னொரு சம்பவம் என் நண்பரின் மகள் விளையாடும் போது கையில் கிடைத்தது என்று ஒரு பறவையின் சிறகை கொண்டுவந்தாள். அதை என்ன செய்ய போகிறாய் என்று கேட்டேன். அதை வைத்துக் கொண்டு தான் ஒரு பறவையை படம் வரைய போவதாக சொன்னாள். ஒரு சிறகை வைத்துக் கொண்டு பறவையை கற்பனை செய்து வரைவது சிறுவர்களால் மட்டுமே முடியும் என்று தோணியது. ஆழ்ந்த மௌனத்தின் குறியீடாகவே பறவைகள் எனக்குகாட்சியளிக்கின்றன. அந்த இரண்டு புள்ளியிலிருந்தே இக்கதை உருவானது.


**
இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகளில் கவனிக்கக்கூடிய ஒரு அமசம் சட்டெனெ வந்துபோகும் உதிரிப்பாத்திரங்களின் இடம். பலசமயங்களில் அவை மையப்பாத்திரஙக்ளை விட வலிமையாய மனதில் தங்கிவிடுகின்றன. உதாரணமாக் ‘ ’என்னை சாம்பல் கிண்ணம்போல உபயோகிறார்கள்’ கதையில் வரும் டெய்லர் கடை பெண். தன்னை விற்றுக் கொள்ளும் ஒவ்வொரு புணர்ச்சிகுப் பிறகும் அவளுக்கு தலைவலி மாத்திரை தேவைப்படுகிறது. அதற்கு மேல் நீங்கள் அவளது அவலம் தொடர்பாக எதையுமே சொல்ல முற்படுவதில்லை. துயரங்கள் வாழ்கையில் ஏற்கப்படும் சகஜபாவத்தை வெளிபடுத்தவே இந்த உத்தியை தேர்ந்தெடுகிறீர்களா?


நான் எப்போதுமே உபகதாபாத்திரங்களின் மீது கவனம் கொள்பவன். அவர்களின் வழியாகவே கதையின் இன்னொரு தளத்தினை சுட்டிகாட்ட முடியும் என்று நம்புகின்றவன். அத்துடன் பிரதான நிகழ்வுகளை போலவே துணை நிகழ்வுகளிலும் அதே வலியும் துயரமும் தான் உள்ளது. ஆனால் அதை சந்திப்பதும் கடந்து செல்வதும் வேறாக இருக்கிறது என்பதை காட்டவே அவர்களை தனித்து அடையாளம் காட்டுகிறேன்.
**பதினெட்டாம் நூற்றாண்டின் மழை கதையில் அன்னியர்களால், குறிப்பாக கிறிஸ்துவத்துவ மரபால் அழிக்கபட்ட பழங்குடிகளின் புராதன அறிவையும் வாழ்வையும் எதிர்கொள்கிறீர்கள். ஒரு கதை சொல்லியாக பழங்குடி மரபின்மீது நீங்கள் காட்டும் ஆர்வத்தை விளக்க முடியுமா?


காடு குறித்து நமக்கு ஒரேயொரு பொதுபிம்பம் மட்டுமேயிருக்கிறது. அது காட்டில் நிறைய மரங்களும் மிருகங்களும் இருக்கின்றன அது பயமுறுத்தும் இடம் என்பதே. உண்மையில் காடு மட்டுமே இயற்கையின் மாறாத அம்சம். அதை எளிதில் மனிதர்கள் உருமாற்ற முடிவதில்லை. குகைகள் நமது புராதான வீடுகள். இன்றும் அந்த ஆதிவாழ்க்கையின் மிச்சங்கள் அப்படியே இருக்கின்றன. காடு ஒரு பேரியக்கம். அது ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது. காட்டினுள் வசிக்கும் ஆதிவாசிகளை நாம் நாகரீகமற்றவர்களாக ஒதுக்குகிறோம். அவர்களது பழக்கவழக்கங்களை கேலி செய்கிறோம். மூன்றாம் தர மனிதர்களாகவே நடத்துகிறோம்.


ஆதிவாசிகள் தங்கள் இயல்பில் வாழ்வதை நாகரீக மனிதர்கள் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. வேட்டை, மதமாற்றம், சீர்திருத்தம், என்ற பெயரில் நூற்றாண்டுகாலமாக ஆதிவாசிகள் மீது அளவில்லாத வன்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களை காட்டிலிருந்து வெளியேற்றவும், காட்டிற்குள் ஒரு நகரவாழ்வை ஏற்படுத்தவும் செய்த முயற்சிகள் பெரிதும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஆனால் இந்த முயற்சிகள் ஒய்வதேயில்லை. வனவாசியின் மீதான நகரவாசிகளின் அறியாமையிலிருந்தே இவை உருவாகின்றன.


ஆதிவாசிகள் மீதான அதிகார வன்முறைகள் எழுத்தில் அதிகம் பதிவு செய்யப்படவில்லை. காலனியாக்கத்தின் மிக முக்கிய வன்முறையாக நான் இதை காண்கிறேன். அதையே என் எழுத்தின் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறேன்.


**
ஹசர் தினார் கதையில் பாலியல் அரசியலுக்கும் அதிகார அரசியலுக்கும் இடையே வரலாறு முழுக்க நிலவும் பந்ததத்தை பேசுவதுதான் உங்கள் நோக்கமா அல்லது இந்தக் கதைக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றனவா?


ஹசர் தினார் கதை மாலிக்கபூர் என்ற நாம் அறிந்த சரித்திரகதாபாத்திரத்தின் மறுபக்கத்தை பேசுகிறது. நம் பாடபுத்தகங்களில் மாலிக்கபூர் ஒரு வெறிபிடித்த படைத்தளபதி. கோவில்களை இடித்தவன். கொள்ளையடித்தவன். மனிதர்களை கொன்று குவித்தவன் என்ற பிம்பமே உருவாக்கபட்டுள்ளது. உண்மையில் மாலிக்கபூர் ஒரு அரவாணி.. ஹசர்தினார் என்பது ஆயிரம் தினார் கொடுத்துவாங்கப்பட்டவன் என்று பொருள்.  பாலியல் இச்சைக்காக சுல்தானோடு  நெருங்கி பழக அனுமதிக்கபட்டிருக்கிறான். அதற்கு கிடைத்த பட்டம் தான் மாலிக்கபூர். அதாவது எஜமானனுக்கு உரியவன்.


தன்னை சிறுமைபடுத்திய மனிதர்கள் மீது மாலிக் கபூர் கொண்டிருந்த ஆத்திரம் தான் கட்டற்ற வன்முறையாக வெளிப்படுகிறது. வரலாற்றில் போக்கினை எப்போதுமே அவமதிப்பும் அவமானமுமே தீர்க்கின்றது. இக்கதையில் வரும் ஹசர் தினார் தன்னுடைய அடையாளம் அழிக்கபட்டதற்கு மாற்றாக சமூக கலாச்சார அடையாளங்களை நிர்மூலம் செய்யமுயற்சிக்கிறான். சரித்திரம் எண்ணிக்கையற்ற தவறுகளாலும் மனித அவலங்களாலும் நிரம்பியது என்பது தானே உண்மை.


***

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: