சூரியனோடு பேசும் சோளம்

நீண்ட பல வருசங்களின் பின்பாக என் கனவில் சோளக்காடு வந்தது. ஆறடிக்கும் மேலாக வளர்ந்தருந்த சோளத்தட்டைகள் ஊடே நடந்து கொண்டிருந்தேன்.


சோளம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளர்ந்துவிடும். சோளத்தட்டைகளின் நுனி கையில் பட்டால் அறுத்துவிடும்.  சோளக்காட்டிற்குள் நடக்கையில் ஏற்படும் சப்தம் விசித்திரமானது. ஆள் முகம் தெரியாது. காற்றின் லேசான சலசலப்பு. உரசல். சோளம் முற்றியிருந்த காலத்தில் நிறைய குருவிகள் வந்து சேரும். அவை பறந்தபடியே சோளம் கொத்தும் காட்சிகள் மனதில் இன்றும் பசுமை மாறாமல் அப்படியே இருக்கின்றன.


விவசாயம் செய்வதிலிருந்து எனது குடும்பம் விலகி வந்து இருபத்தைந் வருசங்களுக்கும் மேலாக இருக்கும். அதன் முன்பு வரை வயல், கரிசல், கிணறு, தோட்டம்  என்று முழுமையான விவசாய வீடு எங்களுடையது.அப்பா அரசு பணியில் இருந்த போதும் விவசாயத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். வீட்டில் பால் மாடுகள், காளைமாடுகள், நாய் பூனை, முயல் புறா என்று யாவும் ஒன்றிணைந்த விவசாய வாழ்க்கை.


பத்து வயதில் சோளக்காட்டிற்குள் ஒடி ஒளிந்து கொள்வதும் ஆள் தேடி வரும் போது கண்டுபிடிக்க முடியாதபடியே பதுங்கி பதுங்கி நடப்பது எனது அன்றாடம். தானியங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது சோளம். அந்தச் சொல்லே தானியமணி போல அழகாக தானிருக்கிறது. சோளம் சாப்பிடுவதற்கு இன்று எவருக்கும் விருப்பமில்லை. சோளம் என்றால் மக்காசோளமா என்று கேட்கிறார்கள். அது நாட்டுச்சோளம்.


சோளமும் ஒரு புல்வகையே. அதனால் தான் அது பொசுக் என்றிருக்கிறது என்று தோட்டவேலை செய்யும் பெண் சொல்வார். வெண்சோளம், சிவப்பு சோளம், என்று இரண்டுவகையிருந்தன. சோளத்தட்டைகளை மாடுகள் ஆசையாக தின்னக்கூடியது. சோளம் முற்றாத போது பால் கொண்ட தானியமாக இருக்கும். அதை சாப்பிடுவது ஒரு தனி ருசி. ஆனால் தொண்டையில் சிக்கி கொள்ளும் என்று சாப்பிட விடமாட்டார்கள்.


எனது பால்யத்தில் சோளம் கிராமத்தின் விருப்பத்திற்குரிய உணவு. சோளச்சோறு, சோளதோசை, சோளக்கஞ்சி என்று சோளம் தான் கிராம மக்களின் எளிமையான உணவு. சோளத்தோசையின் ருசி அற்புதமானது. சில சிறுவர்கள் அதை ரகசியமாக டவுசர் பாக்கெட்டில் ஒளித்து வைத்துக் கொண்டு வந்து பள்ளியில் தின்பதை கண்டிருக்கிறேன்.


அந்தக் கனவில் எல்லையற்று நீண்டு போய்க்கொண்டிருந்த  சோளக்காட்டினுள் போய்க் கொண்டிருந்தேன். சோளம் எப்போதும் சூரியனோடு பேசிக் கொண்டிருக்க கூடியது என்ற நம்பிக்கை சிறுவயதில் எனக்குள் உருவானது. எதற்காக அப்படி தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் சோளக்கதிர்கள் அசையும் போது அது சூரியனை அழைப்பது போன்றேயிருக்கும்.


சோளம் வெடித்திருப்பது எத்தனை அற்புதமான காட்சி. சிவப்பு சோளமணிகள் முத்து முத்தாக அல்லவா இருக்கும். கனவில் சோளக்காட்டின் ஊடாக நடந்து போய்க்கொண்டேயிருக்கிறேன். என் முன்னே ஆள் நடப்பது போல காற்று செல்கிறது. காற்றின் வேகத்தில் சோளத்தட்டைகள் வளைகின்றன. காற்று நடந்து செல்லும் வழி கிடைக்கிறது. சர்வ சுதந்திரமாக காற்று கடந்து போகிறது. காற்றால் சோளத்தட்டைகளை வளைக்க முடியும். ஆனால் அதை ஒடிக்க முடியாது. சோளத்தட்டையின் உள்ளே பல்பம் என்று நாங்கள் சொல்லும் மெல்லிய சதைப்பற்று இருக்கும்.


அதை கடித்து சுவைக்கையில் ஏற்படும் ருசி நாவில் இன்றும் ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது. ஏன் சோளம் என் கனவில் வந்தது என்று புரியவேயில்லை. ஆனால் அந்த சோளக்காட்டில் நீண்ட தூரம் நடந்து கொண்டேயிருக்கிறேன். எங்கிருந்தோ மயில் கூவுவது போன்ற சப்தம் கேட்கிறது.


முடிவில்லாதபடி அடிவானத்தின் கடைசி புள்ளி வரை சோளம் விளைந்திருந்தது. நடந்து நடந்து கால்சலிக்க எதோவொரு புள்ளியில் நின்று திரும்பி பார்க்கிறேன். என் பின்னால் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து பிணைந்து நிற்பது போல சோளம் ஒன்று சேர்ந்து கைகோர்த்து நின்றிருந்தது. நிமிர்ந்த போது ஆகாசம் தெரியவில்லை.


திரும்ப வழியில்லாதவன் போல குனிந்து குழந்தைகள் தவழ்வது போல மண்ணில் முட்டி போட்டு வந்தவழியே நடக்கிறேன்.  சோளக்கதிர்கள் குனிந்து என் முன்னே வந்து சிரிப்பது போலிருக்கிறது. உடல் முழுவதும் சோளத்தட்டைகளிலிருந்து உதிரும் சிறு துணுக்குள், சருகுகள் ஒட்டிக் கொள்கின்றன. வழியில்லாதபடியே சோளம் அடைந்து கொள்கின்றன.


என் கைகால்களை உதறுகிறேன். ஏதோ சொல்ல முயல்கிறேன். சட்டென சோளம் விலகி முழிப்பது வந்துவிட்டது. படுக்கையை விட்டு எழுந்து அருகில் இருந்த தண்ணீரை குடித்தேன். என்ன கனவு இது. எதை நினைவூட்டுகிறது.
உண்மையில் சோளத்திடமிருந்து விலகி வந்து முப்பது வருசங்களுக்கும் மேலாகி இருக்கிறதே. அது என்ன சொல்ல விரும்புகிறது. ஒருவேளை நான் எழுத மறந்து இன்றும் என்னுள் புதைந்து போன கிராமிய காட்சிகளும், மனிதர்களும் தங்களை ஏன் எழுத்தில் பதிவு செய்யவில்லை என்று என்னை நினைவுபடுத்துகிறார்களா? சோளம் பற்றி என்ன எழுதியிருக்கிறேன். ஏன் எழுதாமல் போனேன்.


யோசிக்கையில் என் மனதில் அடியாழத்தில் கிராமுமம் விவசாய வாழ்வும் மௌனமான ஆறாக ஒடிக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எழுதினாலும் ஒரு கிராமத்தின் நினைவுகளை பாதி கூட பகிர்ந்து கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது.


சோளக்காட்டிற்குள் நிறைய கண்டிருக்கிறேன். ஒரு காலை நேரம். ஒரு குறவன் இரண்டு பூனைகடிள  அடித்து இறைச்சிக்காக அதை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். செத்து போன பூனையின் உடலை அன்று தான் முதன்முறையாக பார்க்கிறேன். அது எந்த நிமிசமும் எழுந்து நடந்து போய்விடும் என்றே தோன்றியது. குறவன் பூனைக்கறி வேணுமா என்று கேட்டான். வேண்டாம் என்று தலையாட்டினேன். அவன் பூனைப்பல்லை பாத்திருக்கியா என்று கேட்டபடியே முல்லை பூ போன்றிருந்த பூனையின் பல்லை  என்கையில் எடுத்து தந்தான். கையில் வாங்கவே பயமாக இருந்தது. பூனை உயிருடன் இருந்தால் இந்த பல்லை தொட விட்டிருக்காது.


பின்னொரு நாளின் மாலை நேரம். சூரியன் மேற்கில் ஊர்ந்து கொண்டிருந்தது. தனியே சோளத்தின் ஊடே நடந்து கொண்டிருக்கிறேன். இரண்டு ரகசிய குரல்கள். யாராக இருக்கும் என்று புரியாமல் மெதுவாக நடந்து போகிறேன். சோளத்தட்டையை விலக்கி பார்த்தால் முப்பது வயதை கடந்த இரண்டு ஆட்கள் பதுங்கி உட்கார்ந்திருந்தார்கள்.


யார் அவர்கள் எதற்காக இங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று புரியாமல் பார்த்தபயே இருந்தேன். அவர்களில் ஒருவன் என்னை பார்த்துவிட்டான். கண்களை உருட்டி முறைத்தபடியே சப்தமில்லாமல் போய்விடும்படியாக சைகை காட்டினான். நான் தயங்கி நின்று கொண்டிருந்தேன். அவன் மீன் வடிவத்தில் இருந்த மடக்கு கத்தியை விரித்து காட்டி போறயா.. குத்தவா என்று காட்டினான். நான் பயத்துடன் நடந்து வெளியே வந்தேன்.


மாடு திருட வந்தவர்களாக இருக்க கூடும் என்று நினைத்தபடியே சோளக்காட்டை விட்டு வெளியே வந்து கிழக்கிலிருந்த வேப்பமரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். அவர்கள் சோளக்காட்டிலிருந்து வெளி வரவேயில்லை. நான் நினைத்தது போலவே அவர்கள் மாடு திருட வந்தவர்கள். திருமால் நாயக்கர் வீட்டு மாடுகள் களவு போயிருந்தன. மறுநாள் ஊரே அவர்களை பற்றி பேசிக் கொண்டது. நான் அவர்களை அருகில் பார்த்த போதும் அடையாளம் சொல்லவில்லை.


துப்புக்கூலி கொடுத்து மாட்டை மீட்டு கொண்டு வந்தார்கள். அதே ஆட்களை இரு வாரங்களுக்கு பிறகு எங்கள் ஊரின் பெட்டிக்கடையில் பார்த்தேன். இப்போது வேறு மாட்டை திருட வேவு பார்க்க வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. என்னை பார்த்ததுமே அதில் ஒருவன் அடையாளம் கண்டுவிட்டான். அருகில் அழைத்து உட்கார வைத்து ஒரு முறுக்கு வாங்கி தந்து திங்க சொன்னான். வேண்டாம் என்றேன். அவன் பலத்த சிரிப்புடன் தின்னுடா என்று இழுத்து அருகில் உட்கார வைத்து கொண்டான். முறுக்கை தின்பது அச்சமூட்டுவதாக இருந்தது.


அவன் செல்லமாக என் முதுகில் அடித்தபடியே உன் பேரு என்னவென்று கேட்டான். நான் சொல்லவில்லை. திருடர்களிடம் பெயர் சொல்லக்கூடாது என்று வகுப்பு தோழன் சொல்லியிருந்தான். நான் அவர்களை பார்த்தபடியே இருந்தேன். காவியேறிய பற்கள். ஒருவனது இடது கையில் வெட்டு தழும்பு இருந்தது. எண்ணெய் வைக்காத தலைகள். திடமேறிய கைகால்கள். அவர்களில் ஒருவன் பீடி பற்ற வைத்து கொண்டபடியே என்னிடம் சோடா குடிக்கிறயா என்று கேட்டான்.


வேண்டாம் என்றபடியே அந்த கடையிலிருந்து வீட்டை நோக்கி ஒடினேன். அவர்கள் சிரித்துக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. வீடு வந்து சேர்ந்த போது யாருடைய மாட்டை அவர்கள் திருட போகிறார்கள் என்று யோசனையாக இருந்தது. ஏன் அவர்களிடம் பயமே இல்லை என்று ஆச்சரியமாகவும் இருந்தது. திரும்ப அவர்களை போய் பார்த்து கூடவே போனால் என்னவென்று தோன்றியது. அவசரமாக பெட்டி கடைக்கு திரும்ப ஒடினேன். அவர்கள் ஒரு சைக்கிளில் மேற்காக போய்விட்டார்கள் என்று கடைக்காரர் சொன்னார். அவர்கள் பெயர்கள் தெரியாது. அதன் பிறகு அவர்களை ஒரு போதும் பார்க்கவில்லை.


பிறகான நாட்களில் சோளம் காற்றில் அசைந்து சப்தமிடும் போதெல்லாம் அவர்கள் ஒளிந்திருப்பது போலவே இருக்கும். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லை. என் கனவில் வந்த சோளம் அவர்களை தான் நினைவுபடுத்தியதா?


நினைவுகள் விசித்திரமானவை. எங்கே புதைந்துகிடக்கின்றன. எப்போது பீறிடப்போகின்ற என்று யாரும் தெளிவாக அறிந்து கொள்ளவே முடியாது போலும்.


**

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: