எஹுதா அமிக்ஹாய்

சமகால உலகக்கவிஞர்களில் மிக முக்கியமானவர் எஹுதா அமிக்ஹாய் (Yehuda Amichai). இவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பை சமீபத்தில் வாசித்தேன். மனஎழுச்சியூட்டும் அற்புதமான தொகுப்பு.

இஸ்ரேலைச் சேர்ந்த அமிக்ஹாய் கவிதைகள் ஹீப்ரூ மொழியின் மரபான கவித்துவத்தையும் நவீனபார்வையையும் ஒன்று கலந்ததாகும். இவரது கவிதையின் தனித்துவமாக நான் கருதுவது உருவகங்கள். நவீன கவிதையுலகில் இவர் அளவிற்கு உருவகங்களைப் புதுமையாக கையாளும் ஒருவரை அறிந்ததில்லை.

தினசரி வாழ்க்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் சமய நம்பிக்கைகளிலிருந்தும் புராணீகத்திலிருந்தும் இவர் உருவாக்கும் உருவகங்கள் கவிதையின் மினுங்கும் கண்களைப் போலிருக்கின்றன. அவலச்சுவையும் மெல்லிய பகடியும் கலந்த இவரது கவிதைகள் அதன் பாடுபொருட்களின் வழியே புதிய அனுபவத்தை நமக்குள் உருவாக்குகின்றன.

அமிக்ஹாய் தனிமொழி (Monologue) போலவே கவிதைகள் எழுதுகிறார்கள். அதில் உபதேசமோ, அறிவுரைகளோ கிடையாது. மனதின் பெரும் கொந்தளிப்புகளே கவிதையாக உருமாறுகின்றன. இஸ்ரேலின் சமகால நெருக்கடிகளை, வரலாற்றை, போரின் அவலத்தைத் துயரத்துடன் விவரிக்கிறார். வாழ்வு குறித்த கேள்விகளைத் தன்னிடம் துவங்கி சமூகத்தின் கேள்வியாக உருமாற்றுகிறார். இருப்பின் வலியை இவரைப் போல நுண்மையாகப் பேசிய கவிஞர்கள் குறைவு.

1955ல் இவரது முதல்கவிதை தொகுதி வெளியாகியுள்ளது. 15க்கும் மேற்பட்ட கவிதைத்தொகுப்புகள், நாடகம். சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். ராணுவத்தில் சில காலம் பணியாற்றியிருக்கிறார். ஜெர்மனியில் பிறந்த இவர் தனது 11வது வயதில் பாலஸ்தீனத்திற்குத் தந்தையின் பணி காரணமாகக் குடியேறி ஹீப்ருமொழியின் மீதான பற்றின் காரணமாக Ludwig Pfeuffer என்ற தனது பெயரை எஹுதா அமிக்ஹாய் என மாற்றிக் கொண்டிருக்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் கலிபோர்னியா பல்கலைகழகத்தின் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது கவிதை ஒன்றில் காசுசெலுத்தி இயக்கும் இயந்திரம் திடீரெனத் தகர்ந்து உடைபட்டு அதிலிருந்த காசுகள் வெளியில் கொட்டுவது போல மனிதன் இறந்தவுடன் அவனுக்குள்ளிருந்த காதல் விடுதலையடைகிறது என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. மனிதன் காசு செலுத்தி இயக்கப்படும் இயந்திரம் போன்றவன் என்ற குறியீடு வியக்கவைக்கிறது.

கவிதை எழுதுவது என்பது மலையுடன் போரிடும் புல்டோஸர் இயந்திரத்தைப் போன்றது என்கிறது அமிக்ஹாயின் இன்னொரு வரி.

God has pity on kindergarten children.

He has less pity on school children.

And on grownups he has no pity at all,

he leaves them alone,

and sometimes they must crawl on all fours

in the burning sand

to reach the first-aid station

covered with blood.

எனத்துவங்குகிறது இன்னொரு கவிதை.

My pain is already a grandfather:

it has begotten two generations

of pains that look like it.

என்ற வரியில் வலி எப்படி உருமாறுகிறது பாருங்கள். இது போன்ற அற்புதமான கவிதை வரிகள் பிரமிக்க வைக்கின்றன

செஸ்லாவ் மிலோஸ் ,ஆக்டோவியா பாஸ், பாப்லோ நெரூதா, போன்ற உலகப்புகழ்பெற்ற கவிகளின் வரிசையில் கொண்டாடப்படும் அமிக்ஹாயின் கவிதைத் தொகுப்பு அவசியம் தமிழில் மொழிபெயர்க்கபட வேண்டும்.

**

August 19.2016

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: